வியாழன், 22 ஆகஸ்ட், 2024

மந்திரி சொல். வேறு விளக்கங்கள்.

இதில் மற்ற பொருண்மைகள் காண்போம்.  முன் இடுகை: https://sivamaalaa.blogspot.com/2024/06/blog-post.html

மந்திரி என்பது பல்பிறப்பிச் சொல். இது தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளில் விளக்கப்படலாம். இத்தகைய சொல்லைத் தேர்ந்தெடுத்து அரசியற்குப் பயன்படுத்திக்கொண்டமையானது, தமிழரின் நுண்மாண் நுழைபுலத்தைக் காட்டுகிறது.

இவற்றில் ஒன்றைமட்டும் இப்போது முதலில் தருகிறோம். 

மன்றில் அரசருடன் பெரும்பாலான காலங்களில்  வீற்றிருந்து அவருக்கு ஆலோசனைகளை வழங்கும் அமைச்சரே மந்திரி ஆவார்.

மன்று என்பது அரசரும் பிறரும் கூடியிருக்கும் இடம் குறிக்கிறது.

மன்று + இரு + இ >  மன்றிரி > மந்திரி என்று திரியும்.

மன்று என்ற சொல் மன் என்ற அடியிலிருந்து  வருகிறது.  மக்கள் கூடியிருக்கும் இடம் மன்று,  மன்றம் என்று வரும்,  மன்+ து > மன்று.  து என்பது ஒரு விகுதி. விழுது என்ற சொல்லில் இந்த விகுதி உள்ளது  . இது பலசொற்களில் வரும் விகுதி. அந்தப் பட்டியலை யாம் இங்கு வைக்கவில்லை. மன்றில் அமரும் அதிகாரமுடையோன் மந்திரி.  இன்னும் பொருள் விரிக்கலாம்,

மன்+ து  என்பது மந்து என்றும் புணர்ந்து அமையும்.  மந்து எனற்பாலது அரசனையும் குறிக்கும், இடம் நோக்கிப் பொருள் உணர்க,  மந்து என்ற சொல்லில் இந்த விகுதி "து" சொல்லில் இருந்துவிட்டது. " று "  என்று மாறவில்லை. மந்து இரி என்பது மன்னனுடன் இருப்பவன் என்றும் பொருள்படும்,  மந்து இரு இ > மந்திரி.

மன் என்ற சொல்லே அன் விகுதி பெற்று மன்னன் என்றும்  அர் என்ற பன்மை அல்லது உயர்வுப் பன்மை விகுதி பெற்று மன்னர் என்றுமாகும்.  இது உங்களுக்கு நன்கு அறிமுகமான சொல்தான்.

மனிதன் என்ற சொல்லைப் பல ஆண்டுகட்கு முன்பே யாம் இடுகை இட்டுள்ளோம்,   நீங்கள் தேடிப் படித்தால், மன்+ இ+ து + அன் > மனிதன் என்று வருதலை அறிந்துகொள்ளலாம்.  நிலைபெற்று இப்புவியில் வாழும் ஓர் இனத்தான் என்பது இதன் பொருள்.   மன் = நிலைபெறுதல். மனிதன் நிலைபெறுதல் உடையவனே.  இறப்பின்பின் அவன் தந்த மக்கள் இருப்பர்.  ஆகவே நிலைபேறு மாறுவதில்லை.

இ என்றால் இங்கு.  து -  இருத்தல். (  அது என்றால் அங்கு இருக்கிறது என்பது). அன் என்பது ஆண்பால் விகுதி.  அவன் என்றும் பொருள்.

மன் என்ற சொல் மான் என்றும் திரியும்..  மான்+ து + அன் >  மாந்தன். இதுவும் மனிதன் என்னும் பொருளதே. நிலைபெற்றவன், பிறப்பு உடையன் என்றும் பொருள். மக > மா>  மான்.  இன்னொன்று:  மன்> மான் என்பதும்.   மான் என்ற விலங்குப் பொருள் தரும் சொல் வேறு.   தன் என்பது தான் என்றும் திரிதல் உடையதுபோல்.  அன் என்ற ஆண்பால் விகுதி ஆன் என்றுமாகும்.  கண்டனன், கண்டான் என்ற சொற்களில் அறிக.

இன்னொரு  பொருள்  :   மன் -  அரசில் நிலையான கட்டளைகள் அல்லது விதிகள். திரி = மாற்றம்.  அரசில் மன்னனுடன் அல்லது இல்லாத விடத்தும், செயல் திரிபுகளை நுழைக்கும் அதிகாரம் உள்ளவன் மன் திரி > மந்திரி.  இந்தச் சொல் மந்திரியார் என்று இருந்து பின் ஆர் விகுதி வழக்கில் வீழ்ந்தது அல்லது விடப்பட்டது,

மன்னனுடன் போகிறவன் என்றும் பொருள். திரிதல் =  அங்கும் இங்கும் போதல்.

மன் திரி > மந்திரி.  முன் தி> முந்தி போல. மன் + தி > மந்தி போல.  றி வராமலும் புணரும்.  இது வாக்கியத்தில் நிலைமொழி வருமொழிப் புணர்ச்சி அன்று. சொல்லாக்கம்,

முன் கூறியவற்றுடன் இவற்றையும் சேர்க்க, இது பல சாளரங்களின் வழி நோக்கினாலும் தமிழில் பல்வேறு ஆக்கங்களிலும்  தமிழ்ச்சொல்லே ஆகும்.

உங்களின் வீட்டை நாலு மூலைகளிலிருந்து நோக்கினாலும் உங்கள் வீடுதான். அதுபோல், இச்சொல்லும் தமிழ்தான்.

பேராசிரியர் வையாபுரியார் போன்றவர்கள் இதை நன்கு கவனிக்கவில்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்




கருத்துகள் இல்லை: