சிங்கமான பலசிங்கர் சிறப்பொடுவாழ் சிங்கைநகர்
தங்கநகர்த் தலைமைசேர் நல்அமைச்சர் வோங்கவரும்
பொங்கெழிலே பூத்திருக்கப் பொறுப்பேற்கும் நன்னாளில்
தங்குகசீர் மங்களமே தரணிப்பண் நிலைதருமே.
நிறைவான செல்வமெலாம் நித்தலுமே பெருகிவர
நிறைவானும் குன்றாத மழைபொழியச் செழிப்பாகத்
திறைபொருளின் வளம்கொழிக்கத் தேன்மொழியும் கலந்துவர
இறைவரமும் தொடர்தரவே இவராட்சி நிலைதருமே.
பல்லாண்டு நீள்நகரைப் பண்புடனே ஆண்டவர்நம்
தொல்குடியின் லீசியன்லுங் துவள்வில்லா வானம்போல்.
வல்கணமொன் றில்லாமல் வளமான ஆட்சிதந்தார்
நல்மணமே ஒன்றியன்று நலம்காக்க நிலைதருமே.
இவை மூன்றடுக்கிய தாழிசைப்பாக்கள்.
அரும்பொருள்:
திறை பொருள் - வரியும் பொருளியலும்
உம்மைத் தொகை.
நித்தல் - என்றும்
தரணிப்பண் - உலகம் ஒத்து இருந்து பாராட்டுதல்
சிங்கர் - சிங்கம்போன்ற மனிதர்கள் சிங்க( ம் ) + அர்> சிங்கர்
சிங்க(மவ)ர்> ( தொகுத்தல் விகாரம் என்றும் கொள்க)
இறைவரம் - கடவுள் கிருபை
தொல்குடி - முதல் தலையமைச்சரின் குடி
நீள்நகர் - பெருநகர்
வல்கணம் - கடினமான தன்மை
ஒன்றியன்று - ஒன்றாக இணைந்து
ஒன்று இயன்று - ஒன்றாய் இயன்று. ஆய் உருபு தொக்கது.
துவள்வில்லா - துவள்வு இல்லா - மடங்கிக்கெடுதல் இல்லாத.
வன் கணம் நன் கணம் என்று புணர்த்தாமல் நல் வல் என்றே எதுகைநோக்கி இருத்தப்பட்டன. ஆகவே நல்கணம், வல் கணம், வன் கணம் : வன்மை நிகழ்வின் திரட்சிகள்; நல் கணம் - நன்மை நிகழ்வின் திரட்சிகள் ( ஆட்சியில்) .
"நல் கணம்" என்பதைப் பயன் படுத்தாமல் நல் மணம் என்று பாடியுள்ளோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக