புதன், 8 மே, 2024

தச்சுப் பொருட்கள் காத்து உலகுகாப்பீர்.







எழுசீர் விருத்தம் 


அச்சுப் புரைய அழகைச் தெளித்தார் அருகினில்  வைத்தார்  நமக்குநல்ல

தச்சுப் பொருட்கள் சளிநோய்க் கடுங்கட்  டுகளால் கெடுதல் அடைந்துபின்னே

வச்சுப் பயன்கொள் தரமே இலாமல் எடுத்தே எறிய  முனைந்தகாலை,

எச்சம் இவற்றை  அழகாய் உருப்படுத்  தித்தரு வேனே எனத்துணிந்தார்.


துணிந்தநற் றச்சரும் சின்னாள் அவற்றை இழைத்தார் அழகுத்  திரவமிட்டார்

அணிந்த திலகத் தரிவை நிகர்த்த பொலிவோ டிவற்றைச்  செய்துதந்தார்.

பணிந்தே இவைதமை எம்மிடம் சேர்த்தார் படத்தினில் காண்பிரோ எம்முடனே

இணைந்தே செயல்பட வாரீர் மரந்தமைக் காப்பீர் திருந்தும்  எழுமுலகே.


அச்சுப் புரைய --   அச்சுப்  போன்ற;  அழகைத் தெளித்தார் -  காட்சிக்கினிமையை உண்டாக்கினார்;  அருகினில்  வைத்தார் -  எம்மெதிரில் எடுத்து வைத்துக் காட்டினார்;   நமக்குநல்லதச்சுப் பொருட்கள் - இவை நமக்கு நல்ல மரவேலைப் பொருட்கள் ஆயின;    சளிநோய்க் கடுங்கட்  டுகளால் கெடுதல் அடைந்துபின்னே -  சளி நோய் காரணமாக கவனிக்க முடியாமல் கெட்டுவிட்ட பிற்காலத்து; வச்சுப் பயன்கொள் தரமே இலாமல் எடுத்தே எறிய  முனைந்தகாலை--- பயன்பட முடியாமல் போய் அப்புறப்படுத்த வேண்டிய நிலை வந்துற்ற காலத்தில் ; எச்சம் இவற்றை  அழகாய் உருபபடுத்  தித்தரு வேனே எனத்துணிந்தார்.-  எடுத்தெறிந்தவை போக இவற்றை அழகுபடுத்தி எமக்களிப்பேம் என்று துணிவு கொண்டார்.

துணிந்தநற் றச்சரும் சின்னாள் அவற்றை இழைத்தார் ---- அழகு படுத்தத் துணிந்த அவரும் சில நாட்களில் அவற்றை அழகு படுத்தினார்; அழகுத்  திரவமிட்டார் -- அழகிய திரவப் பூச்சு செய்தார்; அணிந்த திலகத் தரிவை நிகர்த்த பொலிவோ டிவற்றைச்  செய்துதந்தார். -  ஒரு பொட்டு அணிந்த பெண்ணைப் பார்த்த அழகைப் போல இவற்றை கவினாக்கினார்; பணிந்தே இவைதமைஎம்மிடம் சேர்த்தார் -  மிக்கப் பணிவுடன் இவற்றை எம்மிடம் முன்னிலைப் படுத்தினார்;  படத்தினில் காண்பிரோ ---  படத்தில் பாருங்கள் ; எம்முடனே இணைந்தே செயல்பட வாரீர் -  நீங்களும் எம்முடன் சேர்ந்து கொள்ளுங்கள்;  மரந்தமைக் காப்பீர் -  இயற்கையில் வளரும் மரங்களைக் காப்பாற்றவேண்டும்;   திருந்தும்  எழுமுலகே.- அப்போது உலகம் திருந்தும்.

எச்சம் -  எறிந்தன போக மிஞ்சியவை. வச்சு - வைத்து, பேச்சுவழக்குச் சொல். காண்பீரோ என்பது காண்பிரோ என்று குறுகிற்று.

புதிய புதிய மரச்சாமான்கள் வாங்கிவைத்தால் அவற்றைச் செய்ய பல மரங்கள் தேவைப்பட்டு, காடுகள் அழியும். காடுகளைக் காக்க முனையவேண்டும். அதுவே கவிதையின் செய்தி.







அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

சாமான் கள் என்று கள்ளைத் தனியாகத்
தான் எழுதமுடிகிறது. உடனே திருத்தினால்
அது சாமாங்கள் என்று தானே திருந்திக்கொள்கிறது.
(தன்திருத்தம்), ஒருநாள் கழித்து இவற்றை ஒன்று சேர்த்தல்:
அப்போது இந்தத் தொல்லை வரவில்லை.

திருத்தங்கள் உடன் நடைபெறா என்று உணர்க.

கருத்துகள் இல்லை: