இருட்டு நேரத்தில் கலங்கள் அல்லது கப்பல்கள் கரைக்கு வருமானால், கரையில் எவ்விடத்தில் அணைய வேண்டும், அல்லது அருகில் எங்கு நங்கூரம் இடவேண்டும் என்று கப்பலோட்டிக்குத் தெரியவேண்டும். மின் ஆற்றல் பெரிதும் இல்லாத காலத்தில், மின்விளக்கும் இதற்குப் பயன்படுத்தப் படவில்லை. கரையில் ஓரிடத்தில் தீயை மூட்டி, கப்பலோட்டி அறியும்படி எரித்தார்கள். கப்பலோட்டியும் கவனமுடன் வந்து கரையை அடைந்தான்.
எரித்து அறிக்கை செய்தபடியினால், அது எரித்த அறிக்கை ஆனது. பின் திரிந்து எரிச்ச அறிக்கை > எச்சரிக்கை என்றானது.
எரிச்சறிக்கை > எச்சரிக்கை. ஆனது. ரிகரம் இடைக்குறை. ஒரு பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு எழுதிய ஒப்பந்த அறிக்கை, முடிச்ச அறிக்கை > முடிச்சரிக்கை > முச்சரிக்கை ஆனது போலுமாம்.
தொடக்கத்தில் "எச்சறிக்கை" என்று எழுதியவர்கள், அதன் வரலாறு உணராமையால், றி என்னுமெழுத்தை ரி ஆக்கிவிடினும், இது மொழியில் பயன்பாடு கண்டபின், இப்போது இதனை மாற்றுவதற்கில்லை. இது பிற்கால நூல்களில் கண்டவாறே எழுதவேண்டியுள்ளது. இது திரிபு என்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும், ஒரு முழுச்சொல்லின் பகுதியாய் வரும் றி, தன் வன்மை இழந்து ரி என்று ஒலித்தமையும் காரணமாகலாம். அவ்வாறாயின் இத்திரிபு ஒலிநூல் முறைப்படி அமைந்தது கண்டு மகிழ்வெய்தலாம். எதற்கும் மகிழ்ந்திருப்பதே இப்பிறவியின் தலையாய நோக்கமாகலாம்.
இவை பன்மடித் திரிபுச் சொற்கள். இவற்றுள் அறிக்கை > அரிக்கை என்று மாறிற்று என்பது தலையாயது ஆகும்.
ஆரியர் என்ற சொல் அறிவாளிகள் எனற் பொருட்டு என்பர். இதிலும் அறிந்தோர் என்ற றிகரம் திரிபில் (ர்) ரிகரம் ஆனதாகக் காட்சியுறுதல் காண்க. இவ்வாறுஎழும் திரிபுகள் பற்றி முன் உரைத்துள்ளோம்.
அறி > ஆர் ( அறிவாளிகள் ஆர் விகுதி பெற்றனர்). இதன் தொடர்பற்றி விளக்கம் தேவைப்பட்டால், பின்னூட்டம் செய்க.
இவை பின் பொருள் விரிந்து எல்லாவித முன்னறிவிப்புக்கும் அல்லது எதையும் செய்யுமுன் கவனமில்லையேல் ஏற்படும் இடர்முன்னறிவுப்புக்கும் பயன்படுத்தப் பட்டன.
இவை பற்றி மேலும் சில விளக்கங்கள் உண்டு. அவற்றை இங்கு எழுதவில்லை.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக