செவ்வாய், 5 ஏப்ரல், 2022

விசை விசையன்

 இன்று "விசையன்"  என்ற சொல்லைக் கவனிக்குமுன்,  விசை என்ற சொல்லையும் கவனித்து,  தொடர்புடைய சில அலசியறிவோம்.

விரிதற் குறிக்கும் சொல்லே பின் விசை என்றுமானது.   மனிதனின் அறிவே விரிவடைந்து,   தானியங்கியாக இடப்பெயர்ச்சி செய்யுமளவுக்கு உலகின்கண் மாறியுள்ளது. உயர்ந்த நிலப்பகுதியினின்று தாழ்வான பகுதிக்கு ஒன்றை உருட்டிவிட்டால்,  மனித ஆற்றலுடன் புவியின் ஈர்ப்பாற்றலும் இணைந்து உருட்டிவிட்ட பொருள் ஓடுகின்றது. உருளும் பொருட்கு ஊட்டப்பெற்ற விசை தீருமளவு ஓடிப் பின் அது நின்று போகிறது.  இனியும் தூண்டினாலன்றி அது மேலியக்கம்  பெறுவதில்லை.

விர் என்பதை இப்போது அடிச்சொல்லாக வைத்துப் பிற அறிந்துகொள்வோம்.

விர் > விய்.   இது கர் > கை என்பதுபோன்றது.

அடிப்படைக் கருத்து விர் > விரிவு என்பதே.  

விர் > விய்   விய் > வியன். (விரிவு).

விய் + ஐ > வியை  (விரிவு).

வியை >  விசை.  

முதன்முதல் மனிதன் கண்டுகொண்ட விசை,  கையின் அசைவினால் உண்டாக்கிய விசைதான்.  விசை என்பதற்கு அடிப்படைப் பொருண்மை விரிவு என்பதுதான்.  ஓர் உந்துவண்டியைப்பார்த்தாலும்,  அது அவன் கையாற்றலின் விரிவுதான்.  முன் கையினால் சுற்றிக்கொண்டிருந்திருக்கலாம்.  பின்னர், சுற்றிக்கொண்டிருந்தால் அயர்ந்துவிடுவானாதலின்,  தான் சுற்றவேன்டியதின்றித் தானே அது  சுற்றும்படி ஏற்பாடு செய்துகொண்டான்.. இதன்மூலம் அவனுக்கு வேண்டிய ஓய்தல் கிட்டிற்று.

சோம்பலினால் விரிவு உண்டானமை போலவே, உழைப்பாலும் விரிவு ஏற்பட்டது. இப்போது விரிய உழைத்துப் பின் ஓய்வு கொள்ளலாம் ( சோம்பல்)  என்பதாக இருக்கும்.  ஓய்வு சோம்பலன்று,  ஆனால் சோம்பலில் ஒருசார் ஒற்றுமை உள்ளது. இரண்டிலும் இயக்கமின்மை உள்ளது.

விசை என்ற இயங்காற்றல் குறிக்கும் சொல்,  விரிவு என்று பொருள்பட்டதே.

உலகில் அரைத்தானியக்கமாகவும் முழுத் தானியக்கமு  மாகவும் காணப்படுவன அனைத்துப் பொருளும் கையாற்றலின் விரிவு என்பதே  ஆகும்.

கைப்பொருள்கள் விரிவு பட்டன என்பதன்றி,  பிறவும் விரிவு அடைந்தன.  மனிதன் தானுமே இவ்வாறு விரிவு கொண்டான்.  இவ்விரிவுகளிலெல்லாம் விரிவின் தன்மைகள் வேறுபடலாம்.  ஆனால் விரிவினைச் சிந்தித்து அறியவேண்டும்.

மனிதன் தானும் இவ்வாறு விரிந்துகொண்டான்.  அவன் ஆட்சி,  அரசு, ஆதிக்கம் என எல்லாமும் விரிந்தன.  அவன் நடையும் இயக்கமும் ஆற்றலும் விரிவு எய்தின.

இருப்பது எதுவும் இடம்கொண்டு விரியும்.  இவ்விரிவு பக்கவாட்டில் விரிதலும் நெட்டுவாக்கில் விரிதலும்  மேனோக்கி விரிதலும்  யாவும் இதனில் அடங்கும்.

விசை>  விசையன் > விசயன்>  விஜய.  ( விரிந்தோன்).

விசை:  இது ஆற்றலின் விரிவு.

விஜயன் தன் ஆதிக்கத்தை விரித்துக்கொண்டோன்.

இதில் "ஜ"  என்பது வெறும் மெருகூட்டலே.  உயர்த்தி, உசத்தி, ஒஸ்தி  ஆனதுபோல் மெருகுச்சொல்.  இதில் "வடவெழுத்து" என்பதைக் களைந்துவிட்டால் அது (மீதமுள்ள)  எழுத்தொடு புணர்ந்த சொல்லாகிவிடும். (தொல்.)

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

குறிப்பு:

மீள்பார்வை 07042022 0412

தலைப்பு மாறியுள்ளது. ஏனென்று தெரியவில்லை. 


 



கருத்துகள் இல்லை: