ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

தவனம் ஆசை.

 இன்று தவனம் என்னும் சொல்லிலிருந்து சில அறிந்துகொள்வோம்.

முன்னுரை:  அயலோசையோ?

இச்சொல்லைப் பார்த்துவிட்டு அல்லது கேட்டுவிட்டு ஒலியின் காரணமாகத்  தமிழன்று என்பர் அறியார்.  ஆய்,  மாய் என்று வருவன சீனமொழிச் சொற்கள் போல் ஒலிக்கும்.   எல்லா வித ஒலிகளும் தமிழில் உள்ளன. ஒலிகளை மட்டும் மாற்றித் தமிழை இன்னொரு மொழிபோல் மாற்றிவிடலாம்.  இவ்வாறு வசதிகள் பல உடையது தமிழ்மொழி. பெரியசாமியை மிஸ்டர் பெரியாக்கி ( Mr Perry ) வெள்ளைக்காரனாக்கிவிடலாம். அப்புறம் அவர் பெரி சாம் தான். பார்லிமென்ட் என்பதைப் பாராளுமன்று என்று ஈடாகத் தந்து,  சொல்லாக்க நடிப்பினைக் காட்டலாம்.   பின்,  பார் -  நாட்டினை,  ஆளு -  ஆள்கின்ற,  மன்று -மன்றம் என்று பொருள்விரிக்கலாம்.  பார் என்பது உலகம் என்று பெரிதும் உணரப்பட்டாலும், நாடு என்ற பொருளும் உள்ளது.  ஆனாலும் இக்காலத்து உணர்பொருளைப் பின்பற்றி நாடாளுமன்றம் என்றும் கூறி மகிழலாம்.

ஒலியைக் கொண்டுமட்டும் மொழி எது ஏன்று தீர்மானிப்பது தவறாக முடிதலும் உண்டு.

தாவு என்னும் வினையிலிருந்து:

ஆசை மனத்து அசைவு.  மன உணர்ச்சி அசைவுற்று ஒரு பொருளின்பால் செல்கிறது.  சலனம் என்பதும் காண்க.   அசைதல் வினை.   அசை> ஆசை என முதனிலை நீண்ட தொழிற்பெயராகும்.

ஆசை அசைவு மட்டுமோ?  சும்மா வெறுமனே அசைதல் மட்டுமின்றி இன்னும் விரைவுற்றுத் தாவிச் செல்லுதலும் உண்டு.  இவையெல்லாம் அணியியல் முறையில் எழும் சொற்கள்.   தாவு >  தாவு+ அன் + அம் என்று கோவைப்பட்டு, தவனம் ஆகிவிடும். பற்றுதல் என்பது விரல்கள் கைகளால் பிடித்துக்கொள்வது போலும் ஆசை பற்றிக்கொள்கிறது.  அல்லது தீப்பற்றுதல் போலும் பற்றிக்கொள்கிறது.

இளிவே யிழவே யசைவே (தொல். பொ. 253).  அசைவு பல வகையன. தாவுதலு ஓர் அசைவே.

தாவு >  தாவு அன் அம் > தவனம் என்பதில் நெடில் முதல் எனத் தோன்றிக்  குறிலானது.   காண் என்ற வினை,  கா  என்பது குறுகிக் கண் என்று காணுறுப்பினைக் காட்டியது.    தோண்டியது போலும்  வாய்த்தொடர் குழாயை, தோண்டு + ஐ >  தொண்டை என்று முதனிலை நீட்சி குறுக்கி உறுப்பின் பெயராக்கியது. சா என்பது ச என்று குறுகி,  சா > சா+ வ் + அம்= சவம் ஆனது.  வ் இடைநிலை.  சாவு> சவம் எனக்காட்டினும் அதேயாம்.

உன் மனம் எனைக் கண்டு தவனம் செய்வதோ?  என்றால்,  என்பால்  ஆசை கொள்வதோ என்பதே பொருள்.

தவனங்கள் மூன்று:  மண்ணாசை, பொன்னாசை,  பெண்ணாசை.

தாவுவதால் மனமும் ஒரு குரங்கு  ஆனது.

எரியும் நெருப்பின் அனலும் தாவுவதாகச் சொல்வர்.  அனல் தாவி நெருப்பு பற்றிக்கொண்டது என்பதுண்டு. வெப்பமே இது.  இதிலும் தவனம் : தாவு+ அன் + அம் என்பதும் இன்னும் பொருள்தெரிய நிற்கின்றது.மருக்கொழுந்து மணமும் தாவுவதுதான். அதற்கும் இது பெயராகிறது.

திருப்புகழில் அருணகிரிநாதர்:   "அனலூடே தவனப்பட்டு " என்பதும் கவனிக்கவும்.  (308.50 )

வருத்தமும் இவ்வாறு தாவக்கூடியதே.  ஒரு துன்பத்தைக் கேள்விப்படுவோரெல்லாம்  வருத்தமடையக் கூடுமாதலால் அதுவும் தவனம் ஆகிறது.  எடின்பரோ கோமகனாரின் மறைவு கேட்டுப் பலர் தவனமடைந்தனர்.

உணவில் ஒன்றன் சுவை மற்றதில் தாவிக் கலக்கும்.  உப்பு, புளி, மிளகாய் இடித்து அதனால் தாவிக் கலந்தது தவனப்புளி ஆகிறது.

இங்கு ஆயுங்கால் ஓரிடத்திலிருந்து இன்னோரிடம் செல்லுதல் என்பதே தாவுதலென்பதன் அடிப்படைப் பண்டைப் பொருள் எனல் தெளிவு.

தவி - வினையிலிருந்து:

தண்ணீர் தவிக்கிறது என்பதுண்டு.   தவி+அன் + அம் =  தவனம் ஆகும்.  இது இன்னொரு வினைச்சொல்லிலிருந்து போந்து மேற்சொன்ன முடிபையே அடைவதான சொல்.  சில சொற்களில் வகரம் ககரமாகும்.  ஆகவே தவி > தகி ஆகும். தகிக்கிறது என்பர்.  தகி+ அம் = தாகம், முதனிலை நீண்ட திரிபுத் தொழிற்பெயர் ஆகுமிது.

கவனத்துக்குரிய திரிபுகள்:  

தாவு > தாவம் > தாபம்.  தாவம்> தாகம்:  (வ- க).

தவி > தகி > தாகம்.  (வ- க).

ஆகும் என்பதை ஆவும் என்பது பேச்சில்.  (வ-க).

அறிக மகிழ்க.

குறிப்புகள்:

தொடர்புடைய  இடுகைகள்:-

ஆசை https://sivamaalaa.blogspot.com/2014/06/blog-post_2465.html

காமினி https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_3.html

ஆகமங்கள் https://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post82.html

மெய்ப்பு  பின்னர்.


கருத்துகள் இல்லை: