ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

தடு என்ற சொல்லடித் தோன்றிய வடிவங்கள்.

 இன்று  தரம், தடம், தடவை முதலிய சொல்வடிவங்களைக் காண்போம்.

தடைபட்டுத் தடைபட்டுத் தொடங்கும் நிகழ்வில் ஒவ்வொரு தடைபாட்டினையும் ஒரு தடவை என்று சொல்வோம்.   தடு+ வை > தடவை ஆகும்.  டுகரத்தில் உள்ள உகரம் கெட்டு, அகரம் ஏறி வை என்ற இறுதிநிலையுடன் இணைகின்ற  செயல்   இதற்கு ஓர் எடுத்துக்காட்டு:  அறம் என்ற சொல்.   அறு +  அம் =  அறம் ஆவது போல. இங்கும் உகரம் கெட்டது காணலாம். இவ்விரண்டு துண்டுகளும் சேர்ந்து அற்றம் என்றும் இன்னொரு சொல்லுமாகும்.

தடம் என்ற சொல்லும்  டுகரத்தின் இறுதி உகரம் கெட்டது.  இதுவும் பின் அம் விகுதி பெற்று தடம் என்றாகும்.  தடம் என்பதற்கு வாட்டி அல்லது தடவை என்று பொருளில்லை.  வாட்டி: ஒரு வாட்டி, இரண்டு வாட்டி எனவரும்.

தடம் என்பதிலிருந்து திரிந்த தரம் என்ற சொல்லுக்கும் மேற்  சொன்ன பொருள் உள்ளது.  அது தடவை என்றும் பொருள் தரும்.  ஒரு தரம், இரண்டு தரம் என்று ஏலத்தில் கூவப்படுதல் கேட்டிருக்கலாம்.

தடம் > தரம் என்னும் திரிபு  மடி > மரி என்னும் திரிபு போன்றது ஆகும்.  சில உணவு வகைகளை விட்டு நோன்பு கடைப்பிடித்தலை  விடு>( விடதம்) > விரதம் என்று கூறுதல் காண்க.  இதுவும் ட - ர திரிபுவகைதான். அவனொடு, அதனொடு என்று வரும் ஒடு என்னும் வேற்றுமை உருபு,  ஒரு> ஒருங்கு என்பதனோடு பொருளொற்றுமை உடைத்தாதல் கவனித்தல் வேண்டும். இடு என்பதும் இரு என்பதும் அணுக்கப்பொருள் உடையன.  இட்ட பொருள் இட்ட இடத்தில் இருக்கும் என்பதை கூர்த்துணர்க.  இடு> <இரு.   தரம் என்பது தடம் என்பதனோடு பிறப்பியல் உறவுடைய சொல்.  இதனுடன் தடவை என்பதில் வரும் தடத்தையும் ஆழ்ந்து சிந்தித்துணர்க.

விடி என்பது ஒளிப்பகுதிகளின் விரிவேயன்றி வேறில்லை.  விடி> விரி என்பதறிக.  நுண்பொருள் வேறுபாட்டுச் சொல்லமைப்பு இதுவாகும்.  கடி> கொறி என்பதும் அன்னது.

தரமென்பதை தரு என்பதிலிருந்து கொள்ளுதல் கூடுமாதலின்,  இஃது ஓர் இருபிறப்பிச் சொல் என்னலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.





கருத்துகள் இல்லை: