செவ்வாய், 13 ஏப்ரல், 2021

பீதாம்பரம்

 பொன்னாடையைப் பீதாம்பரம் என்றனர் என  நூல்கள் உரைக்கின்றன. துணிக்கப் படுவது துணி என்றும் வெட்டப்பட்டுக் கட்டிக்கொள்ளப்படுவது வேட்டி என்றும், சிறிய அளவினதான துணி துண்டு  என்றும்,  இவ்வாறு சொற்கள் அணியும் ஆடைகளைப் பற்றி ஏற்பட்டிருப்பதால் பீதாம்பரம் என்ற சொல்லும் இவ்வாறு எளிதான முறையில் அமைந்த சொல்லென்று நாம் முடிக்கலாம்.  உடம்பின் தாழ் பகுதியில் அணியப்படுவது தாவணி ஆனது.    தாழ்வு+ அணி = தாழ்வணி > தாவணி என்று,   ழகர ஒற்று வீழ்ந்தது.  வாழ்த்திசைக் குழுவினர், வாத்தியம் வாசிப்போராயினர் என்பதை நோக்க, ழகர ஒற்று வீழ்ந்ததில் ஒரு வியப்பில்லை.

சிவபெருமானுக்கும் பீதாம்பர ஆடை சொல்லப்படவில்லை.  ஆனால் மேகவண்ணன் உயர்பொன்னாடை அணி பெற்றார். ஆதலின் விண்ணுளான் பின்னாளினன் என்று அறிகின்றோம்.  கடவுளென்ற முறையில் இவர்கள் காலம் கடந்தவர்கள்.  ஆனால் மனிதர் துதிக்கத் தொடங்கிய காலம்  முன்பின்னாக இருக்கக்கூடும்.

தாமரையில் கவர்ந்தது செந்தாமரை. இதன் நிறத்தினோடு அணுக்கமுடைமையால் தாமிரம் என்ற கனிமம்  தாமரை என்ற சொல்லை முன்னமைவாகக் கொண்டு பெறப்பட்ட சொல் என்பது தெளிவாகிறது. தாமரையின் செம்மைக்கும் தாமிரத்தின் செம்மைக்கும் வேற்றுமை சிறிது உண்டென்றாலும் பழங்காலத்தில் நிறங்கள் பற்றிய வரையறவு அத்துணை தெளிவை ஒன்றும் அடைந்துவிடவில்லை என்பதை நாம் மறந்துவிடலாகாது.  எடுத்துக்காட்டாக,  கண்ணன் நீலவண்ணன் என்றும் கருமை நிறத்தோன் என்றும் இவ்விரண்டுக்கும் இன்றுள்ள இடைவெளித் தெளிவு தோன்றாவண்ணமே வருணனை செய்யப்படுவது நம் இலக்கிய வழக்காகும் என்பதறிக.   இவ்வண்ணமே தாமிரத்துக்கும் தாமரைக்கும் இடைநின்ற நிற இடைவெளி அன்று கருதப்படவில்லை என்பதே உண்மை.   தாமிரத்துக்குச் செம்பு என்ற சொல் செம்மை நிற அடிப்படையில் ஏற்பட்டிருப்பதும் கருதத் தக்கதாகும்.

தாமிரம் என்பது தாம்பரம் என்ற சொல்வடிவாலும் குறிக்கப்படுதல் உண்மையால்,  பீ தாம்பாரம் என்பதன் கண் உள்ள தாம்பரம் நிறத்தைக் குறித்த சொல்லே என்று தீர்மானித்தல் சரியாகும்.   நிறம் தாம்பரமாக, அந்நிறத்துத் துணியும் அதே பெயரைப் பெற்றது,  ஒருவகை ஆகுபெயரே என்று முடிவுகொள்ளலும் சரியானதே.

இப்பீதாம்பரம் போர்த்திக்கொள்ளப்பட்டது   முன் நடுவில் விலகி நிற்கும்படியாக நிகழ்ந்தது என்பதும் தெளிவு.  பிய்தல் அல்லது விலகிநிற்றல் குறித்த சொல் "பீ" என்பதாகும்.   பிய் > பீ .  பிய்வு எனின் பிரிந்துநிற்றல்.  இவ்வாறு துணிநிற்றல் ஓர் அழகுமாகும்.  இது செய்> சே என்பதுபோலும் திரிபு. செய்ய தாமரை, சேவடி என்பவற்றில் செம்மைப் பொருள் கண்டுகொள்க.  அன்றேல், ஒரு பெருந்துணியில் பிய்த்துக் கட்டிக்கொண்ட அணி என்று பொருள் கொள்ளலாகும்.

இனி இன்னொரு வகையில் சொல்லமைப்புக் கண்டு, உணர்த்துதல் கூடும்.

பின் + தாழும் + பர + அம் >  பீதாம்பரம் ஆகும்.  தாழும் என்பது தாம் என்றாயது இடைக்குறை.  பர அம் என்பது துணி உடலிற் பரவப் போர்த்தியிருப்பதைக் குறிக்கும். பர என்பதில் அகரம் கெட்டது.  பின் என்பது னகர ஒற்றுத் தொலைந்து பீ என்று நீட்சி பெற்றது.   0ன் எழுத்து வீழ்வது தன்பின் > தம்பி என்பதிலும் நிகழ்ந்துள்ளது.  பிம்பம் என்பதில் பின்+பு+அம் எனற்பாலது ஒன்றித் திரிந்தது.

நெஞ்சிடைப் பிரிந்து தாழ்ந்து பரவ நிற்கும் ஆடை.  பிய் என்பதும்  பீ  என்று திரியும்.  மரி என்பது மா என்று திரிந்து மாரகம் என்ற சொல் அமைந்தது. கோபீனம் என்ற சொல்லில் ஏற்பட்டுள்ள திரிபும் பின் என்ற சொல் நீட்சி காட்டவல்லது.

ஆகவே பீதாம்பரம் என்பது இருபிறப்பிச் சொல் ஆகும்.

இது எவ்வாறு அணிந்துகொள்ளப்பட்ட துணியைக் குறித்தது என்பதைச் சொல் காட்டுகின்றது. தாமிர நிறத்துத் துணி என்பதும் தெளிவாய் உள்ளது.  இடுப்பிலே பீதாம்பரம் என்ற வரணனையும் உண்டாதலின், இது பொன்னாடை போலன்றி வேறுவகைகளிலும் அணியய்பட்டிருத்தல் கூடும்.

முன் காலத்தில் இந்தத் தாம்பர வண்ணத் துணிகள் பெரிதாக நெசவு செய்யப்பட்டு, பின் அணியுங்கால் அவற்றிலிருந்து பிய்த்து ( துண்டு அகற்றி) அணியப்பட்டமையே  பீ (பிய்வு)  என்ற முன்னடைவு வந்தமைக்குக் காரணமாதலும் பொருந்துவதே. பிய்தாம்பரம் > பீதாம்பரம்.  அல்லது முன் குறித்தபடி,  பின் தாழ் பர அம் >  பின் தாபரம் > பீதாம்பரம் எனினுமாம்.

தொய் + பு > தொய்ம்பு > தோம்பு என்பதில் மகர ஒற்று புணர்ச்சித் தோன்றல். அதுபோலுமே ஆகும்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்.


  

கருத்துகள் இல்லை: