ஒரு மூதாட்டி அட்டைகள் சேகரித்து அவற்றைப் பழைய சாமான்கள் கடையில் கொண்டுபோய்க் கொடுத்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு தம் குடும்பத்தை நடத்திவருபவர். தம் அடுக்கு மாடி வீட்டின் முன் அட்டைகளைச் சேர்த்துவைத்திருப்பார். பாவம் இவர்மேல் பக்கத்து வீட்டுக்காரர்கள் அனுப்பிய புகார்கள் பலவாம். அண்டை வீட்டினர் எதாவது கொடுத்து உதவி இருக்கலாம். அல்லது அட்டைகளை அடுக்கி வைக்க உதவி இருக்கலாம். சமுதாயத்தில் கருணையும் வசதி இல்லார்பால் உதவும் நோக்கும் குறைந்து வருவதையே இது காட்டுகிறது. இதை அறிந்த அமைச்சர் கிரேஸ் ஃபூ " கொஞ்சம் கருணையுடன் கவனியுங்கள்" என்று இவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். இவர்போலும் ஏழைகள் மேல் சட்டத்தை எடுத்துவீசியா பரிகாரம் தேடிக்கொள்வது?
இதைப் பற்றிய இரண்டு பாடல்கள் இங்கு:-
இன்றுநம் பாங்கில் இருப்பது செல்வநிலை
என்றிறு மாந்தெளி யோருக்கோர் ----- நன்றுசெய
என்றும் மறவாதீர் ஒன்றுபெரி தாமிரக்கம்
என்றுமதே வாழ்வின் ஒளி.
அட்டை பொறுக்கி அதுகொண்டு வாழ்கின்றாள்
மொட்டைக் கடிதங்கள் மொட்டித்துக் --- கெட்டிமனம்
காட்டலும் நன்றன்று கண்ணில் துளியின்றித்
தீட்டற்க திட்டும் மடல்.
பாங்கு - பக்கம்
எளியோருக்கோர் : இங்கு ஒரு என்பது ஓர் என்று வராவிடில்
யாப்பில் வழு.
ஒளி - சிறப்புக்குரியது.
மொட்டித்து -( அனுப்பிக்) குவித்து.
கெட்டி மனம் : கடுமையான மனம்
துளி -துளி கருணை, கண்ணீர் எனினுமாம்.
தீட்டற்க - எழுதவேண்டாம்
திட்டும் - வசைபாடும்
Click to read:
News on the above: https://theindependent.sg/grace-fu-calls-for-tolerance-compassion-for-elderly-woman-after-jurong-residents-complain-about-cardboard-boxes/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக