அழகாகப் பலரும் அமைதியாகக் கூடி யிருக்கும் இடந்தான் அம்பலம். இறை நம்பும் ஒருவனுக்கு அவ்விறைவன் மறைதிருப்பதுபோன்ற மாய்தன்மை மேலிட்டு நெஞ்சில் நின்றாலும் அவன் எழுந்தருளியிருக்கின்றான் என்றே எண்ணிக் கும்பிடுதல் நோக்கி இச்சொல்லை வேறுவிதமாக அமைத்திருக்கலாம். அப்படி அமைக்கவில்லை. அதற்குக் காரணம், அவன் அங்கு உள்ளானா இல்லையா என்ற ஐயுறவு சொல் அமைத்தவன் உள்ளத்தில் தோன்றவில்லை என்றே நாம் கருதுதல் பொருந்தும். அன்றியும் இறைவனோ எங்கும் நிறைந்தவன். எனவே அவ்வாறு அமைத்தல் தேவையற்றதுமாகும். அம்பலம் என்பது இறைவனை உள்ளத்திருத்திப் பலரும் கூடுமிடம் என்ற கருத்தில், " பலரும் அழகுடன் கூடுமிடும்: " என்பதை மட்டுமே முன்வைத்து அம்பலம் என்ற சொல்லை அவன் உருவாக்கினான். "அம்பலத்தே ஆடுகின்றஆனந்தத் தெய்வம் : ஆடுதலாவது பற்றுநர் உள்ளத்து ஆடுதல்.
அம் - அழகு.
பல் - பலர்.
அம் - அமைப்பு குறிக்கும் ஒரு பழங்கால விகுதி. அறம் பொருள் இன்பம் என்ற மூன்று அழகிய சொற்களிலும் அறம் (அறு + அம்), இன்பம் ( இன் +பு+ அம் ) என்ற இரண்டிலும் அம் விகுதி வந்துள்ளது காண்க. அமைப்பு என்பதின் அடிச்சொல்லான அம் என்பது தமிழில் மிக்கப் பழைமையான விகுதி என்று அறிவான் ஆய்வறிஞன். வீட்டில் பயன்படுத்தும் முறம் என்பதிலும் அம் விகுதி உள்ளது. சொளகு என்ற சொல்லில் கு விகுதி உள்ளது. இவை பழங்கால விகுதிகள். திறம் என்பதிலும் அம் விகுதி. இவற்றுள் சில வினைப்பகுதிகள். சில பிறவாகும்.
ஆகவே, அம் பல் அம் - அழகாகப் பலர் கூடுமிடம். "அம்பலம்" ஆகிறது.
தொல்காப்பியனார் , செய்யுளழகு கூறுவார், "'அம்மை அழகு தொன்மை தோலே விருந்தே இயைபே புலனே இழைபு" எனப் பொருந்தக் கூறியவை எட்டென்பர். எட்டும் ஒவ்வொரு வகை அழகு ஆயினும் அவை யாவும் செய்யுட்குள் அழகே ஆகும். அழகு என்ற சொல்லும் அழகுகளில் ஒரு வகையையும், பொதுவாக அழகையும் குறிக்கும் சொல். அதை நுண்பொருள் நோக்கி எடுத்துக்கொள்வதா அல்லது பொதுப்பொருள் நோக்கி மேற்கொள்வதா என்பதை வாக்கியத்தில் வரும் இடமும் எந்தத் தலைப்பில் வருகிறது என்ற நிலையும் உணர்ந்து போற்றிக்கொள்க. இச்சொற்கள் இலக்கணத்தில் இலக்கணக் குறியீடுகள். அல்லாதவிடத்து மொழியில் பொதுச்சொற்கள்.
பொதுச்சொல்லாகச் சொல்லமைப்பில் வருங்கால் அது (அம்மை) கவர்தன்மை உடைத்து என்றே பொருள்படும். அம்மை என்பது தோன்றும்போதே உள்ள அழகு. மூல அழகு அதுவாம். மூலமாவது மூளும் நிலை. முன்மை, முதன்மை.
அம் பல் அம் என்பதில் பல் என்பது ஆன்மா பலவாதல்.
அம்பலம் என்பது சொல்லமைப்பால் தமிழினழகும் காட்டும் சொல்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக