புதன், 30 டிசம்பர், 2015

விவேகமும் வெண்டைக்குழம்பும்.

ஒருவர் ஒரு புதுவிதமான வெண்டைக் குழம்பு வைத்தார். அதைச் சாப்பிட்டுப் பார்த்தவர்கள் மிக நன்றாக,  சுவையாக இருப்பதாகப் பாராட்டினார்கள். பாராட்டியது மட்டுமா? ,  நாலைந்து முறை வந்து சாப்பிட்டுவிட்டுப்  போனார்கள். அதற்குப் பணம் கொடுக்காமல் போனவர்களும் அங்கு வந்து சாப்பிட்டோர் பட்டியலில் இருந்தார்கள்.

அவர்களில் ஒரு மனிதர் அந்த வெண்டைக் குழம்பு எப்படி வைப்பது என்பதை நன்கு உசாவி அறிந்துகொண்டார். சில நாட்களின் பின்னர்,ஓரிடத்தில் குழம்பு வைக்கும் வேலை அவருக்குக் கிட்டியது. அங்கு அந்த வெண்டைக் குழம்பை வைத்துப் பெரும்புகழ் எய்தினார்.

அவர் வேலை பார்த்த நிறுவனத்தில்  அவருக்குப் பதவி உயர்வு கிடைத்து, நல்ல சம்பளமும் கிடைத்தது. சமையற்கலைமணி என்ற பட்டமும் அவர்க்கு வந்து சேர்ந்தது.

முதல் முதல் அந்த மாதிரி வெண்டைக் குழம்பு வைத்தவர், பாவம்.
அவர் எந்தச் சிறப்பையும் அடையாமல் ஒதுக்கப்பட்டுக் கிடந்தார்; வெண்டைக் குழம்பு வேண்டியவர்கள்  எல்லாம் அந்த இரண்டாமவரிடமே போய்ச் சாப்பிட்டார்கள்.

நான் தான் முதன்முதலாக இப்படிக் குழம்பு வைத்தேன் என்று ஒருசிலரிடம் சொல்லிப் பார்த்தார். கேட்டவர்கள்  யாரும் நம்பவில்லை. இவன் பார்த்துச் செய்கிறான் என்று திட்டினார்கள்.

வழக்குப் போட்டுப் பார்த்தார்.  அது ஆதாரமற்றதாகக் கருதப்பட்டுத் தள்ளுபடியில் முடிந்ததுடன்,  செலவு தொகை வேறு கட்டும்படியான தீர்ப்பு விளைந்தது. இவர் நொடித்துப் போனார்.

அந்த ஊர்ப் பள்ளியில் ஒரு வகுப்பில் வாத்தியார் பிள்ளைகளிடம் பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார். " பிள்ளைகளே, நீங்கள் எதையும்  கண்டுபிடித்தால்  தேசிய விருது பெறலாம். ஆகையால் கடினமாக உழையுங்கள் "  என்றார்.

வெண்டைக் குழம்புக்குக் கிடைத்த வெகுமதி என்னவென்று அவருக்குத் தெரிந்திருந்தால்தானே?  உலகம் திருட்டு உலகமென்று வகுப்பில் சொல்லமுடியாமா என்ன?

வேலைக்கென்றே சிலர் பிறந்திருக்கிறார்கள்.   புகழுக்கென்றே வேறு சிலர்  அமைந்திருக்கிறார்கள். இதை மாற்றிவிட முடிவதில்லை.


கருத்துகள் இல்லை: