சனி, 18 அக்டோபர், 2014

"உழிஞைத் திணை"

புறப்பொருள் இலக்கணம் பற்றிச் சிலவற்றை முன் இடுகைகளில் கண்டோம். தொடர்ந்து "உழிஞைத் திணை" என்பதை இப்போது கண்டு இன்புறுவோம்.

தமிழ் அரசர்கள் ஆண்ட காலம் போய்விட்டது. பெரிதும் போர்பற்றிப் பேசும் புறப்பொருள் இலக்கணத்தின் இத்தகைய உள்ளீடுகள், அறிதற்குப் பயன்படுமன்றிப் புரிதற்குப் பயன்படாதவை.  புரிதல் = செய்தல்.  செயல்.


முடிமிசை உழிஞை சூடி ஒன்னார்
கொடி நுடங்கு ஆர் எயில் கொளக்கருதின்று.

என்பது கொளு.

 முடி ‍ : மகுடம். மிசை: மேல். உழிஞை : ஒரு பூ; அதனாலான மாலை.  சூடி ‍-- புனைந்து.  ஒன்னார் - ‍ பகைவர்.  கொடி-  ‍ அரசின்கொடி.  நுடங்கு : அசைதல்.* ஆர்  :   நிறைவு. ( நிறைந்த) .    எயில் ‍--  அரண்.   கொள : கைப்பற்ற.

பகை அரசனின் கோட்டையைக் கைப்பற்ற நினைத்து முயற்சியில் இறங்கிய ஒரு வேந்தன்,  உழிஞைப் பூமாலையைச் சூடிக் கொள்வான்.

இம்முயற்சியைப் பாடும் பாடல், உழிஞைத் திணையைச் சேர்ந்தது.

உழிஞை ஒரு வகைக் கொடி. (படரும் கொடி வகை).  இதற்குச் சிற்றூர்களில் கொற்றான் கொடி என்று சொல்வர் என்று தெரிகிறது.


இத்தகைய மரபுகளெல்லாம் தோன்றித்  தமிழர் வாழ்வில் நிலைத்துத் திகழ்ந்ததற்கு,  தமிழரும் தமிழும் மிக்க நெடுங்காலம் தொடர்ந்து நின்றதே காரணம்.  தமிழின் தொன்மை அறிக.

--------------

* நுடங்கெரி  -  அசைந்தபடி எரியும் நெருப்பு


1uzijnai1. balloon vine, , cardiospermum halicacabum ; 2. a common wayside weed, aerua lanata ; 3. chaplet, balloon vine garland worn by soldiers when storming a fort
.

கருத்துகள் இல்லை: