சனி, 19 செப்டம்பர், 2020

சரணாகதம்

 சரணாகதம் என்பது   அடைக்கலம் புகுதல், தஞ்சம் அடைதல் என்னும் பொருளில் ஆளப்படும் சொல்.

சரண் + ஆகு + அது + அம் = சரணாகதம்.

சரண்புகுதல்.

இனி, கதம் என்பதைத் தனிச்சொல்லாகக் கொண்டு:

கதம் -  அடைதல்.

சரண் +  கதம் >  சரணாகதம் எனினுமாம்.

சரண் + கதி > சரணாகதி என்பதுபோல்.

இடையில் வருவது  ஆ ; ஆதல் குறிக்கும் சொல். இடையில் ஆகதம்,  ஆகதி என்பவாய் வருதலின்,  இவை வினைத்தொகை.  வலிமிகாது. இவ்வாறும் விளக்கலாம்.

சரண் என்பதன் மூலம் அரண்.

அரண் > சரண்

சரண் என்பது முழுமையாய் " சரண்புகுதல் " என்பதே.

அரண்புகுதல் என்பதும் அது.

நாளடைவில் புகுதல் என்பது விடுபட்டு,  சரண் > சரணம் ஆயிற்று.

இன்னொரு காட்டு:  அமண் - சமண்.

அடு > சடு > சட்டி.   ( + இ).

இந்தப் பாடலில்   சரணாகரம் என்பது  ஆளப்பட்டுள்ளது.

" தாண்டவம் செய் தாமரை,  பூஞ்சரணாகரம்   நம்பும் யானும்

அடிமை அல்லவோ?  --  எனை

ஆண்டருள் ஜெகதம்பா யானுன்

அடிமை அல்லவோ".  (பாபநாசம் சிவன்)

பொருள் :  குளத்தில் ஆடும் தாமரை உன்னைப் பணிகிறது. 

உன்னிடம் அடைக்கலம் புகுகின்றது,  அதுபோல்  யானும் பணிகின்றேன். நான்

உன் அடிமை ஆவேன். (என்னைக் காப்பாற்று ) என்றபடி.

பூவினால் சொல்லப்படும் சரணம் பூஞ்சரணாகரம்


உங்கள் உசாவலுக்கு:

சாம்பிராணி  https://sivamaalaa.blogspot.com/2014/06/blog-post_2261.html

"உழிஞைத் திணை" https://sivamaalaa.blogspot.com/2014/10/blog-post_77.html

பரிகாரம்  https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_95.html

அரசன் அரட்டன் https://sivamaalaa.blogspot.com/2020/09/blog-post_10.html

அரசனும் அரணும் https://sivamaalaa.blogspot.com/2020/06/blog-post_11.html

சாம்பிராணி முதலிய பொருட்கள் https://sivamaalaa.blogspot.c

Pom/2018/09/blog-post_23.html

அரணும் சரணும் https://sivamaalaa.blogspot.com/2017/08/blog-post_31.html

அரணும் சரணும் https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_20.html

( இவற்றுள் தொடபற்றவற்றை புறக்கணித்துவிடுங்கள்.  நன்றி).


தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் சரிபார்க்கப்படும்.



வியாழன், 17 செப்டம்பர், 2020

குபேரன்

 குபேரன் யார் என்பது நீங்கள் அறிந்ததே. இச்சொல்லை அமைத்த விதம் நாமறிவோம்.

குவை என்ற சொல் குவியலைக் குறிக்கும் சொல்.  வேண்டிய பொருளோ வேண்டாத பொருளோ -  ஓரிடத்தில் குவிந்துவிட்டால் அது குவை. மணற் குவை "ஓங்கு மணற் குவை"  (புறநானூறு  24). பணம், செல்வங்கள் ஓரிடத்துக் குவிந்துவிடுகின்றன.  முற்றத் துறந்த முனிவருக்கு செல்வக்குவியல் தேவையற்றது. உணவுகூட மிகுதியாய் எடுத்துக்கொள்ளமாட்டார்.  மூச்சுப்பயிற்சிகள் செய்து பசி, தாகம் ( நீர்விடாய்) முதலிய அடக்கிக்கொள்வார்.  கிடைப்பன பிறர்க்களித்துவிடுவார்.  தேவர் சொன்ன " என்பும் உரியர் பிறர்க்கு" என்பதை எண்பிப்பவர் அவர்.  செல்வம் தேவை என்பவர், அவற்றைக் குவித்து வைத்துக்கொள்வர்.  இவர்போன்றோருள் " ஈதல் இசைபட வாழ்தல் " என்று இயன்ற மட்டும் ஈந்து வாழ்வாரும் சிலர் உலகில் உளர்.

குவை என்ற சொல் வகர பகரத் திரிபு விதிப்படி,  குபை என்று திரியும்.  ஆனால் குபை என்னும் சொல் கிட்டவில்லை..  மொழியில் மறைந்தொழிந்த சொற்கள் பல. அவற்றுள் இதுவும் ஒன்றாகலாம்.  அல்லது தனித்து இத்திரிபு இலங்கவில்லை என்பதாகவும் இருக்கலாம்.  இது நிற்க.

குவி > குவை > (குபை) > குப்பை ( வேண்டாத குவியல்) என்பது உள்ளது. பகர ஒற்று இரட்டிப்பு : காண்க. இவ்வாறு வடிவங் கொள்வது செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தோர்க்கு ஏற்புடைத்தென்று நாம் எண்ணலாம்.

ஏர் என்பது "உழவு ஏரைக்" குறித்தல் மட்டுமின்றிப் பிற பொருளும் உடையதே. அப்பொருள்களில் உயர்ச்சி ஒன்றாகும்.  ஏர்தல் என்ற வினைச்சொல்லும் உள்ளது.  ஏர்தல் - எழுதல். மேலெழுகை.

செல்வக் குவியலால் மேலெழுந்தவன் குவை + ஏர் + அன் =  குவேரன் > குபேரன் ஆவான்.  குபேரன் என்ற திரிசொல் நிலைவழக்கு உற்றபின், குவேரன் என்னும் இடை வடிவம் ஒழிதல் மொழியியல்பே.

அறிக. மகிழ்க


மெய்ப்பு பின் .



 

புதன், 16 செப்டம்பர், 2020

பொம்மலாட்டம்

 இச்சொல்லை அறிவோம்.

பொய்+ மெல் + ஆட்டம் >  பொய்ம்மெல்லாட்டம் > பொம்மலாட்டம்.

உலகைப் பொம்மலாட்டம் என்றே இரு;

வாழ்வைக் குடங்கவிழ் நீர் ஓட்டம் என்றே இரு!

இவை பட்டினத்தடிகள் தந்த பொன்மொழிகள்.

நிலநடுக்கம் முதலிய கடுமையான ஆட்டங்களுக்கு முன் மனிதன் ஆடும்  ஆட்டம்  ஒரு மெல்லாட்டம். 

எல்லா ஆட்டங்களும் உண்டாகும்; பின் ஒழியும்; இனியும் தொடங்கும்; பின் ஒழியும். இவ்வாறே உலகம் சென்றுகொண்டிருப்பது.

முகக்கவசம் அணிந்து

இடைத்தொலைவு கடைப்பிடித்து

உடல்நலம் போற்றுவீர்.


குறிப்பு:  பொருமலால் ( பொறாமையால் ) ஆடுதல் -  பொம்மலாட்டம்.பொருமல் > பொம்மல்.  எனலும் ஆம்.  ஆதலின் இத்திரிசொல்  ஓர் இருபிறப்பி. இடனறிந்து பொருள்கொளல்.  அழுதுவிடாமல் விம்முவதும் பொருமல்.  அச்சமும் பொருமல். பல்பொருளொருசொல் 

பொரு > பொம் என்றாகும்.

ஒ.நோ:  பெருமான் -  பெம்மான்.   பெரு> பெம் போன்ற திரிபு.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.

திருத்தம் : 17092020 செய்யப்பட்டது.