சனி, 9 மார்ச், 2024

கூர்மம் (ஆமை ) என்ற சொல்.

 கூர்ம  என்பது  ஆமையைக் குறிக்கும் சொல். இறைவன் உலகையும் அதில் காணப்படும் எல்லாப் பொருட்களையும் உயிர்களையும் படைத்தவர். இறைவன் படைப்பை இயற்றியபின்,  சில உயிரினங்களாகவும் அவ்வப்போது தோன்றினார். நம் நூல்களில் சில உயிரினங்கள் கூறப்பட்டுள. அவர் தோற்றமெடுத்தவற்றுள்  ஆமையும் ஒன்று.


அவம்+ தாரம் என்பது கூட்டுச்சொல். அவம் = அழிவு.  தாரம்  ( தரு+ அம்> ) தருதல், அதாவது மீண்டும் தோற்றம் தருதல்.  மீண்டும் என்பது வருவிக்கப்பட்டமையின், இது காரண இடுகுறிப் பெயர். அவிதல் : அழிதல். கெடுதல். அவி அம் - இதில் வி என்பதில் இகரம் குன்றியது.  நாற்காலி என்பதில் இருக்கை என்பது வருவிக்கப்பட்டது போலுமே இது.  "நான்கு காலதான இருக்கை".


இப்போது கூர்ம என்ற சொல்லைக் காண்போம்.  கூர் என்ற சொல்லும் குறு என்ற சொல்லும் தொடர்புடையவை.  ஒன்று குறுகும் போது,  அதன் தொடக்கம் விரிவாகவே இருக்கும்.   விரிவிடம் தொடங்கிக் குன்றுவதே கூர் என்பதாகும்,  வெவ்வேறு பொருட்களில் ஒன்று மற்றதை நோக்கக் குறுகி நிற்கும். ஆமை என்ற உயிரி,  தன் உடலை ஒரு கூட்டுக்குள் குறுக்கிக் கொள்வது.  அதனால் குறு+ மா ஆனது.  மா என்றால் விலங்கு.   குறுமா என்பதே கூர்மா என்று திரிக்கப்பட்டு,  ஆமையைக் குறித்தது.  கூர்ம என்ற சொல்லமைந்தபின், குறுமா என்ற தமிழ்மூலம் தேவையில்லையாயிற்று.  கூர்ம என்ற சொல்லின் மூலம் மறைவாய் இருப்பது, கூர்மா என்பதை மக்கள் ஏற்க நின்ற தடையுணர்ச்சி ஒழியக் காரணமாயிற்று. கூர்மா எனற்பாலது பூசைமொழிக்கு இனிய சொல்லானது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

வெள்ளி, 8 மார்ச், 2024

கருவி சொல்.

கல் என்பது ஒரு பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் தமிழில் உள்ளது. பெயர்ச்சொல் என்பதில் பொருட்பெயரும் அடங்கும்.  கல்லுதல் என்பதில் கல்   ( அல்லது கல்லு) என்பது  ஏவல்வினை. (command).

மனிதன் ஒரு வேலையைச் செய்வதற்கு மரம், கல், இரும்பு, ஏனைக் கனிமங்கள் எனப் பலவற்றைப் பயன்படுத்திக்கொண்டான். ஓர் இரும்புத் தக்கைமுறுக்கியைக் ( screwdriver ) கொண்டு இரு பலகைகளை இணைக்கும்போது அவ்வாயுதம் இன்றி அதைச் செய்வது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை எனற்பாலதை உணர்கிறோம் .  தக்கைமுறுக்கியை ஒரு கருவி என்கின்றோம். கருவிகள் செயல்முறைகளை எளிதாக்கித் தருகின்றன.

மரத்தாலான கருவியை மட்டுமே பயன்படுத்திவந்த மனிதன்,  கல்லாலான கருவியையும் செய்து பயன் கண்ட போது,  அவன் வாழ்க்கை மேம்படத் தொடங்கியது. மரப்பிசினிலிருந்து ரப்பர் என்னும் தேய்வையைச் செய்யக் கற்றுக்கொண்டபின், ஓசை குன்றிய சக்கரங்களைச் செய்து, இன்னும் முன்னேறிவிட்டான்.  இன்று கருவிச் செய்பொருட்கள் பல்கிவிட்டன.

பெரிதும் கற்கருவிகளை  மனிதன் புழங்கத் தொடங்கிய வரலாற்றுக் காலம் "கற்காலம்" எனப்படுகிறது.  தமிழில் கற்காலத்தில் பயன்பாட்டுக்கு வந்த சொல்லே " கருவி"   என்று இன்று நம்மிடை வழங்குகிறது.

ஒவ்வொரு முறையும் புதிய கருவியை உருவாக்கிக்கொண்ட மனிதன், அவ்வந் நிகழ்வின்போது மனம் மிக மகிழ்ந்துகொண்டான்.  இதனால், கலி என்ற சொல்லுக்கு மகிழ்வு என்ற அடிநிலைப் பொருள் ஏற்பட்டது.  கல் + இ என்றால்  கல்லினை உடைய நிலை" என்று பொருள்.  இலக்கிய முறையில் சொல்லாமல் சுட்டடி வளர்ச்சி முறையில் சொல்வதானால்,  " கல் இங்கு"  என்று சொல்லவேண்டும்.

கலி என்ற சொல், தமிழ் யாப்பு இலக்கணத்தில் துள்ளலோசையைக் குறிக்கிறது.  கல்லினால் கருவிசெய்ய இயல்வதறிந்த மனிதன் துள்ளலில்  ஈடுபட்ட அந்தச் சென்றுவிட்ட காலத்தையே  இது நன்கு நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.  கலி என்பது துள்ளல் என்று தமிழ் அகரவரிசையால் இன்று பொருள்கூற இயலாவிட்டாலும், கலியோசை என்பது சரியாகத் துள்ளலையே புலப்படுத்தும். செழிப்பு,  தழைப்பு முதலியவை மகிழ்வு தருவன.  கல்லினால் துன்பமும் ஏற்படக் காரணங்கள் இருந்தன. மரவேலை மண்வேலைக்காரர்களின் வாழ்க்கை பாதிப்படைந்திருக்க வேண்டும். முன்னேற்றம்  வந்த போது  சில சாரார்க்குத் துன்பம் நேர்வதுண்டு.  கலி எனபது துன்பமும் குறித்தது.

கல்லுக்கு அடுத்து வந்தது இரும்புக் காலம்.

கல்லுதல் என்பது  கற்றறிவு  என்பதற்கு  அடிச்சொல் ஆயிற்று. கல்வி என்ற சொல் இதுநாள் வரை வழங்கிவந்துள்ளது.

யுகம் என்பது உகம் என்பதன் திரிபுதான்..   முன்னேற்றக் காலத்தை மனிதன் உகந்து போற்றினான்.   ஆனை > யானை என்றதுபோல்,  உகமே  யுகமாயிற்று. கலியுகம் என்பது துள்ளிமகிழ்ந்த,  மகிழ்ந்துகொண்டுள்ள யுகமாகும். காலம் என்பது நீட்சி என்பதன் அடிப்படையில் எழுந்த சொல். உகம் அல்லது யுகம் என்பது உகப்பு என்ற அடிப்படையில் எழுந்தது ஆகும்.

இனி, சுருக்கி முடிப்போம்.  கல் என்ற சொல்லிலிருந்தே  கரு என்ற அடிச்சொல் தோன்றியது.  வி என்னும் விகுதி சேர்ந்து ,  கருவி என்ற சொல் அமைந்தது.  கருவி என்ற சொல் தமிழிற் பிறந்தது கற்காலத்தில் என்பதில் ஐயமில்லை.

அதனால்தான் "கல்தோன்றி" என்றான்.

மேலும் வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2019/04/blog-post_3.html   :  கலியாணம் (கல்யாணம்)

தமிழிற் பலவகையாய் விளக்குதற் கியலும் சொல். 

https://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_16.html  கல்யாணம்.

https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_82.html   கத்தி   (கல்+தி)

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

சனி, 2 மார்ச், 2024

வேசி விபசாரி இன்னும் சில



வேசி என்ற சொல்கூட, வேய்ந்துகொண்டவள் என்ற பொருளில்தான் அமைந்தது. யகர சகரப் போலியில், வேயி என்றபாலது வேசி என்றானது.. ஒப்பனைகள் பல செய்து, அரிய சேலை முதலிய துணிகளை அணிந்துகொண்டிருப்பவள் தான் வேசி. அவ்வாறு அணிந்துகொண்டிருந்த பெண்டிரை, தவறாகக் கருதி, விலைமாது என்று எண்ணி, வேசி என்றனர் என்பது தெளிவு. இப்போது அந்தப் பொருளில்தான் வழங்கி வருகிறது.  தமிழில் விபசாரி என்ற சொல்லும் . விரிந்தும் (வி ) பரந்து ம் ( ப) ஒழுகி, ஆடவர்களைச் சார்ந்து வாழ்பவள் என்ற ( சார் + இ ) பொருளில் இச்சொல் வரும்..

சாரி என்ற இறுதியைக் கண்டவுடன் மற்றவை தெளிவாகியிருக்கவேண்டும், விரிதல். பரத்தல் என்னும் கருத்துகள் மீமிசை  , ஒருவகையில் கூறியது கூறலும் ஆகலாம்.  அல்லது பொருள்திட்பத்தின் பொருட்டுத்  தரப்பட்ட அழுத்தம் என்று ஒப்பவும் கூடும்

அதனால்தான் தொல்காப்பிய முனிவர் சொன்னார் : "மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா " என்று; அவர் கவனமாகவே நூற்பா இயற்றினார். சொல் நூலும் மொழிநூலும் அறியாமல் எளிதில் "விளங்காது" என்றுதான் இதற்குப் பொருள். .

வாயி என்பது வாசி எனத் திரிந்தமை போலவே, வேயி என்பதும் வேசி ஆனது.

வாய் என்றால் இடம். இடத்திலிருப்போன் வாயி. அது வாசி ஆயிற்று. ஆகவே, சென்னைவாசி என்றால், சென்னையாகிய இடத்தவன் என்பதுதான். தோன்றும் வாய் என்றால் அது தோற்றுவாய். தோன்றும் இடம். ஆரம்பம். தொடக்கம்.

தோய்த்த மாவில் சுடும் அப்பம் தோய் > தோயை > தோசை. யகர சகரப் போலி.
 கல்லில் அப்பிச் சுடுவது அப்பம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.