வெள்ளி, 14 ஜனவரி, 2022

சிலமுறை திருத்திய கொரனாக் கவிதை

 கொரனாத் தொற்று ஏற்படுத்திய இன்னலை விவரித்துச் சில வரிகள் எழுதலாம் என்று நினைத்தேன்.  அதன் தொடக்கத்திலே "கொரனா" என்ற சொல் வந்துவிட்டது. எழுதிமுடித்தபின் மனநிறைவில்லாமல், திருத்தங்கள் செய்தேன். பின்வந்தது இங்கு இரண்டாவதாகத் தரப்பட்டுள்ளது  . எதுநன்று, பிடிக்கிறது என்பதைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்:


கொரனாவின் பிடியினிலே விடியல் இன்றி, 

கொலைப்பட்ட பெருமக்கள் தொகையைக் கூற,

ஒருநாளில்  இயலாதே சரியாய் நாமும்

ஒளிந்தாளும் முறையன்றி வேறொன் றில்லை.

திருநாளும் வேண்டாத தியாகம் செய்து

தினந்தோறும் சேவைசெயும் தாதி மாரை

அருஞ்செயற்குப் போற்றுதலே அன்றி வேறே

பெரிதென்று நாமவர்க்குச் செய்வ தென்னே.


கொரனா என்பதையும் சில பிறவும் அகற்றி எழுதியது இப்படி:


முடிநோயின் பிடியினிலே விடியல் இன்றி

முடிந்தோய்ந்த பெருமக்கள் தொகையைக் கூற,

முடியாதே ஒருநாளும் சரியாய் நாம்காண்

மூடறைவாழ்  முறையன்றி முன்னொன் றில்லை! 

விடுநாட்கள் வேண்டாத  வெல்லீ    கத்தால்

வேறுபடாச் சேவைசெயும் தாதி மாரை

அருஞ்செயற்குப் போற்றுதலே அன்றி வேறே

ஆனபெரி தவர்க்கேநாம் செயலும் யாதோ.


எது பிடிக்கிறது என்பதைப் பின்னூட்டம் செய்து தெரிவியுங்கள்.


அருஞ்சொற்பொருள் பின் வெளியிடுவோம்.


வெளியிடப்பட்டது. பொருளை காண இங்குச் சொடுக்கவும்

https://sivamaalaa.blogspot.com/2022/01/blog-post_51.html 


மெய்ப்பு பின்.


வியாழன், 13 ஜனவரி, 2022

தூரம் என்று சொல்லின் இன்னொரு

 தூரம் என்னும் சொல்லின் புலத்தை  ஆய்ந்தபோது பல்வேறு பொருண்மைகளை நாம் சுட்டிகாட்டியுள்ளோம். எனினும் துர > தூரம் என்பதையே சிறப்பாக எடுத்துக்காட்டினோம்.  ஆயினும்,  வேறுவகைகளிலும் இச்சொல் ஆய்தற்கு வாய்ப்பளிக்கும் என்பதைக் கோடிகாட்டியிருந்தோம்..

தூரமென்பதை இன்னொரு கோணத்திலிருந்து காண்போம். எனினும் மூலச்சொல்லில் மாற்றம் இருப்பதற்கில்லை.

துரு ( துருவம்) , (துருவுதல்) எனற்பாலதே  மூலம்.

துருவம் என்பது ஒன்றன் இறுதிநிலை என்று பொருள்படும்.

நிலக்கோளத்தின் துருவம்:   இஃது  நடுநிலப் பகுதியிலிருந்து வெகுதொலைவில் கடைக்கோடியில் உள்ளது என்பது நீங்கள் அறிந்ததே.  அதனால் இச்சொல்லுக்கு வெகுதொலைவு என்ற பொருட்சாயல் ஏற்பட்டது.

துரு என்பதை அடியாகக் கொண்டு:

துரு + அம் >  தூர் + அம் > தூரம் என்றுமாகி, இடைத்தொலைவைக் குறிக்கும். அதாவது ஒரு புள்ளிக்கும் இன்னொரு புள்ளிக்கும் இடையிலுள்ள தொலைவு. எனவே, இதிற்போந்த பொருள் " தொலைவு" என்பதே.

துரு என்பது தூர் என்று திரிந்ததற்கு உதாரணங்கள்:

பருத்தல்:   பரு + வதி >  பார்வதி.

கரு என்ற நிறம்குறிக்கும் அடிச்சொல்லும் கருத்தல் என்ற வினைச்சொல்லும்:

கரு + முகில் >  கார்முகில்.

இரு என்ற எண்ணுப் பெயர்:

இரு + ஆறு + கரம் >  ஈராறுகரம்.

பெரு  + ஊர் >  பேரூர்.

துர - துரத்து என்ற சொல்லும் துரு என்ற அடிச்சொல்லுடன் பிறவித்தொடர்பு உடையதே ஆகும்.

முன் விளக்கம் இங்கு:

https://sivamaalaa.blogspot.com/2020/10/blog-post_7.html

இவ்விளக்கம் மூலம் அடிகளைப் பற்றிய அறிவை விரிவாக்கம் செய்யும் என்று நம்புகிறோம். தூரம் என்பதன் இன்னொரு பரிமிதி இதுவாகும்.

பரிமிதி -  அதிக இடம் எடுத்து அடிவைத்தல் - அதாவது  மேற்கொள்ளும் அளவு

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



 

பொங்கல் வாழ்த்து

 மங்கலமே தங்கிடுக பொங்கல்  தன்னில்,

மண்மீது  வறுமைபசி  பிணிகள் நீங்கிப்

பங்குபெற வேண்டும்வரு இனிமை வாழ்வில்

பைந்தமிழர் உலகமக்கள் தம்மோ டொன்றாய்!

தொங்குநிலைப் பணிகளெலாம் தொடர்ந்து சென்று

துய்யநிலை எய்திடுமே  வையம் யாண்டும்

பொங்கிவரும் அன்பினிலே தோய்ந்து நின்று

பொலிந்தவுடன் பிறப்புகளாய் வாழ்க நாமே.