மறதியும்ஓர் ஆற்றலாமோ
புகழ்தல் நன்றோ ---- அதனை
இறுதியான கருத்தென்று
கோடல் உண்டோ. ..... 1
கோடல் - கொள்ளுதல்.
இனிமைதரும் பண்புமதோ
மகிழ்வேன் எண்ணி --- என்றன்
தனிமைதரும் துன்பினையே
தாண்டற் காகும். ..... 2
துன்பினை - துன்பத்தினை
தாண்டற்கு - வெற்றிகொள்வதற்கு.
ஆகும் - பயன்படும்.
உலகமைதி உடைந்துவரும்
நேரம் இன்றே ---- துன்பம்
உற்றுமடி கின்றவர்பால்
உள்ளம் செல்லும். ..... 3
பால் - பக்கம்
பலமடியாய்த் துயர்படுவோர்
மீளும் ஆக்கம் ---- இந்த
பரந்துபடு உலகுபெற
இறைப ணிந்தோம். .... 4
மடி - அடுக்கு(கள்)
பரந்துபடு - பரந்த, விரிந்த
இறை - கடவுள்.
ஒருவருக்கு ஒன்று எழுதிக்கொடுப்பதாகக் கூறியிருந்தேன். மறந்துவிட்டேன். அன்றைத் தினம்
அவரும் அவர் அம்மாவை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லவேண்டி ஏற்பட்டுவிட்டது.
அதனால் அவரும் வரவில்லை. நான் மறந்துவிட்டதற்காக வருந்திய அவ்வேளையில் அவர்
அதை ஓர் ஆற்றல் ( பவர் ) என்று புகழ்ந்தார். நமக்கெல்லாம் அத்தகைய ஆற்றல் இருக்கின்றது
என்பதற்காக மகிழவேண்டும் என்றார். கோவிட் காரணமாக வீட்டிலே அடைபட்டுக்
கிடப்பதால் இப்படிப் புகழ்ந்து என் துன்பத்தை விலக்குகிறீரோ என்று வினவினேன். அதை
மறந்த நேரத்தில் எதை நினைத்துக்கொண்டிருந்தேன் என்பதை மூன்றாவது பாடல் வரிகள்
விளக்குகின்றன. இறுதி வரிகள் நம் வேண்டுதல் பற்றியது ஆகும்.
கவிதை நன்றாயின் வாசித்து மகிழ்க.
1640 04082021
சில தட்டச்சுப் பிறழ்வுகள் திருத்தம் பெற்றன.