திங்கள், 19 அக்டோபர், 2020

இராணுவம் தமிழ்

 "இராணுவம்"  - சொல்லினாக்கம் அறிவோம்.

ராணுவம் என்பது இகரம் இயைத்து இராணுவம் என்றும் எழுதப்பெறும் என்றாலும் அது தமிழில் ரகர வரிசையில் சொல் தொடங்கலாகாது என்பதற்காகவே ஆகும். எனவே ராணுவமென்பது தமிழ் என்று காணாது முடிப்பாரும் உளர்.

பல ரகர வருக்கத்துச் சொற்கள் தமிழில் தலையிழந்தவை.  அரங்கசாமி என்பது ரங்கசாமி என வருதல் போலுமே அது.  ஆற்றிடை நிலத்து அமைந்துள்ள கோயில் ஓர் அரங்கில் அமைந்துள்ளது போல்வதே ஆதலின்,  அரங்கசாமி என அத்தெய்வம் பெயர்பெற்றது.  ராணுவம் என்ற சொல் தமிழில் பேச்சு வழக்கில் உள்ளதே.  இதுபோது தாளிகைகளிலும் பயன்பாடு காண்கிறது.

ஓர் அரணினுள் தங்கவைக்கப்பட்டுப் போருக்கு அணியமாய்1 உள்ள படையைக் குறிப்பதே ராணுவமென்பது.  இப்போது அரண் அல்லது கோட்டைக்குளில்லாமல் வேறிடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படைகளும் இராணுவம் என்றே சொல்லப்படுகிறது.

அரண் > அரணுவம் > ராணுவமென்பதே இச்சொல்லின் பிறப்பு ஆகும். அர் என்பதே இதன் அடிச்சொல்.   அர் > அரண்;  அர் > அரசன்;  அர்> அரசி எனக்காண்க. இதனை விளக்கும் இடுகைகளைக் கீழே தந்துள்ளேம்.

அரணில் தங்காமல் ஒரு படுதாப் பந்தலில் தங்கினாலும் இற்றை நாளில் ஒரு படையணி  -   ராணுவமே.  இச்சொல் பொதுப்பொருண்மை அடைந்துவிட்டது.

அரணம் என்ற இன்னொரு சொல்லும் காவல், கவசம் என்னும் பொருளது. கோட்டை, மதில் என்பவும் பொருள்.

அரண் உவப்பது படையணிகளையே.  ஆதலின் அரண் + உவ + அம் = அரணுவம் என்பது படையணிகளைக் குறிக்கும். ராணுவம் என்பது தலையிழந்த  திரிபு. ராணுவம் என்பது படை நிறுவாகம் என்றும் பொருதரும்.

அரண்+ உ + அம் = அரணுவம் என்று முடிப்பினும், உகரம் இடைநிலை என்று கொள்ளினும் இழுக்கில்லை.

தமிழில் நிகண்டுகள் முதலியன பல சொற்களைப் பாதுகாத்து வைத்துள்ளன. தமிழில் நூல்கள் பல போற்றுவாரற்று ஒழிந்தன.  அவற்றில் நம்மை வந்தடையாத சொற்கள் பல இருந்திருக்கக்கூடும்.  அரணுவம் என்ற சொல்லும் அத்தகைத்தாகும்.

அரணி = ராணி என்பதும் கருதுக.

அரசன் வாழ்மனை அரண்மனை எனப்படுதலும் காண்க.  அரமனை என்ற பேச்சுவழக்குச் சொல் அர் -  அர என்ற அடிச்சொல்லுடன் இணைந்துநிற்றலின் சொல்லியலில் ஒரு போற்றற்குரிய வடிவம் எனின் மிகையாகாது.. அரண் என்ற சொல்லும்  அர் + அண் என்று இணைந்து,  அரசு நடாத்துவோர் அண்மி வாழும் இடம் என்று பொருண்மை பெறுதலும் கண்டுகொள்க.

அர் >  அர > அரசு.

அர் > அரசு >  அரசன்

அர் > அரசு > அரசி

அர் > அரை > அரையர்.   ( அர் + ஐ + அர் ). அரசுத் தலைவர்.  ஐ = தலைமை.

ஐ விகுதி எனலும் இழுக்கிலது.

அரை > ராய் ( தலையிழந்த அயல்வடிவம்).

ராஜ் ( அயல்வடிவம்)  ரெக்ஸ் - இலத்தீன் திரிபு)

ரெஜினா -  அரசி. ( அயல்வடிவம்.)

அரள், அரட்டு, மூல முழுவடிவங்கள். 

சில தமிழ்ச்சொற்கள் தமிழில் வழக்கிழந்து இனமொழிகளில் வழங்கி வீடுதிரும்பி அறியப்படுதலும் உண்டு. இவ்வாறு அயல் எட்டிய சொற்கள் பெரும்பாலும் திரிந்துவிடுதல் இயல்பு.  ஆய்வின்மூலம் இவற்றை அறிந்துகொள்ளுதல் இயல்வதே என்றறிக. 

குறிப்புகள்:

நிறுவாகம் : நிறுவப்பெற்ற ஆட்சியமைப்பு.  (  நிருவாகம் என்பது சரியன்று).

அரசன் முதலிய சொற்கள்: https://sivamaalaa.blogspot.com/2020/09/blog-post_10.html

மற்றும் https://sivamaalaa.blogspot.com/2020/06/blog-post_11.html

1  அணியமாய் -  தயாராய்

அர் > அரமன் > ராமன்.

அர =  ஆளும்;  மன் > மன்னன் என்றலும் நுணுக்கமாய் அணுகத் தக்க வடிவமே.

இர் > இர் ஆம் மன் : இருள் நிறத்து மன்னன். ( நீல நிறத்து மன்னன் ).  ஆகும்> ஆம்.


தட்டச்சுப் பிழைகள் பின் திருத்தம் பெறும்.

சில திருத்தங்கள்  20.10.2020


 


ஞாயிறு, 18 அக்டோபர், 2020

சீர்கரித்தல் சீகரித்தல்

 கரித்தல் என்ற இறுதியாய் முடியும் பல சொற்கள் உள்ளன. இவ்வாறு முடியும் சொற்களில் ~கரித்தல் என்பது ஓர் துணைவினையாய் முடிவதாகும். 1* இதைக் கொஞ்சம் விவரிக்கலாம் ( "விரி- வரிக்கலாம்").

உப்புக் கரித்தல் -  இங்கு கரித்தல் என்பது துணைவினையன்று.  பொருண்முடிபு காட்டுவதால்.

சேகரித்தல் -  இதில் கரித்தல் என்பது ஒரு துணைவினை.  கரித்தல் என்பது " வர" என்று பொருள்படும்.  "கரித்தல்" எனற்பாலது,   ஆதலின் ஒரு துணைவினை.

சேகரித்தல் என்பதில் சே என்பது சேர் என்பதன் கடைக்குறை.

அருகுதல் என்பது குறைதல் என்னும் பொருள் உடையது.  இன்று செப்புக்காசுகள் அருகியே உலகில் வழக்கத்தில் உள்ளன.  இவ்வாக்கியத்தில் அருகி என்பது மிகக்குறைந்து என்ற பொருளைத் தரும்.

அரு என்ற உரிச்சொல்,  அருகு(தல்),  அரி(த்தல்)  என்று வினைச்சொற்களாகும்.

அருகுதல் என்பதில் போல,  அரித்தல் என்பதிலும்  குறைதல் என்பதே அடிப்படைப் பொருள்.  ஏனெனில் நீங்கள் ஓர் ஆற்றங்கரையில் உட்கார்ந்துகொண்டு, எதிரில் நீரில் உள்ள செடிகொடிகளை  அரித்தெடுக்கும்போது,  கைக்கெட்டிய தூரம் வரை உள்ள அவற்றை உங்களுக்கு வேண்டிய அளவு அருகில் (கிட்டக்)  கொண்டுவந்துகொள்கிறீர்கள்.

அப்படிக் கொணர்ந்து அவற்றை எடுத்துக்கொள்கிறீர்கள். இதனைக் காண்பவர், கொடிகளை அரித்து எடுத்தார் என்பர். விரலால் எடுத்திருக்கலாம். அல்லது ஓர் இரும்பு வரட்டியால் எடுத்துமிருக்கலாம். ஒரு முனைவளை குச்சியால் எடுத்து இருக்கலாம்.  எப்படியோ காரியம் ஆயிற்று.

மீண்டும் சொல்வது  அரு > அரி > அரித்தல் ( அருகிற் கொணர்தல்) என்பதே.

எனவே, சேகரித்தல் என்பது சேர்+ கு+ அரித்தல் >  சேகரித்தல் ஆகி உருவான சொல்.

கு என்பது சொல்லாக்க இடைநிலை. சேர்தலிடம் குறிக்கும்.

சீர்கரித்தல் என்பது சீர்மிகும்படியாகவும் வருமாறும்  தன்னிடத்து அடைவுகொள்ளுதல்.  

சீர்கரித்தல் > சீகரித்தல் > ( ஸ்ரீகரித்தல்) [ என்றும் வழங்கும்].

தமிழில் அருகியும் ஏனை இனமொழிகளில் மிக்கும் வழங்கும். 


குறிப்புகள்

1*    ~கரித்தல் என்று முடியும்  சொற்கள் சில:

அலங்கரித்தல் 

கொக்கரித்தல்

சங்கரித்தல்

அபகரித்தல்

பரிகரித்தல்


கடைக்குறை:

சீர் > சீ.  சீர் + தனம்.  > சீதனம்.  சீர்> ஸ்ரீ.  ஸ்ரீதனம்.

சீர் கொண்டுவந்தால் உடன்பிறப்பு.  (சகோதரி.)  பழமொழி.


இவற்றுள்  அறிந்தன பின்னூட்டமிட்டுப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

சீகரித்தல் -    சில அகராதிகளில் இது கிட்டுவதன்று.

மெய்ப்பு ( பின்னர்.)





புதன், 14 அக்டோபர், 2020

கண்ணும் கடைக்கணித்தலும்.

 ஒவ்வொரு சொல்லையும் தனித்தனியாக எதிர்கொண்டு  தேடிப்பிடித்து அறிந்துகொள்ளலாம். ஆனால் இவ்வாறு செல்வதாயின், அதிக முயற்சியும் காலமும் தேவைப்படும்.  குறைந்த கால அளவில் மிகுந்த எண்ணிக்கையிலான சொற்களை உணர்தல் விழைந்தால்,  சொற்களின் அமைப்புகளையும் மூலங்களையும் அறிந்துகொள்வது பெரிதும் உதவும் என்று ஆசிரியன்மார் சொல்வர். எடுத்துக்காட்டாக, பூ என்ற சொல்லுக்கு உள்ள பொருள்களில் தோன்றுதல்( உண்டாதல் )  என்பதும் ஒன்றாம்.

இவ்வுலகம் உண்டான ஒன்று என்று மக்கள் நினைத்தனர். ஆகையால் உலகிற்கு ஏற்பட்ட பெயர்கள் சிலவற்றில் இப்பொருளைக் கண்டு மகிழலாம்.

பூமி. -- "பூத்த இவ்வுலகம்." --   தோன்றிய இவ்வுலகம்.   இச்சொல்லை வாக்கிய வடிவில் தருவதானால்,  பூத்திருக்கும்  இது என்ற கருத்துதான்   --- சுருங்கி  பூ-ம்-இ என்று என்று அமைந்தது.  பூம் = பூத்திருக்கும்   > பூ~ம்.  இ - இது.

இப்புவியும் அழகியது.  ஓர் பூவனம்.  தோன்றிய வனம்.  இது சுருங்கிப் புவனம் ஆனது.

பூ இ - பூத்த இது >  பூவி ( முதல் சுருங்கி )  புவி,  அதே பொருள்.


இவ்வாறே கண் என்ற சொல்லினின்று அமைந்த சொற்கள் பல.  பழங்கால மனிதன் கண்ணால் கவனமாக எண்ணித்தான் கணிக்க அறிந்துகொண்டான்.

ஆகையால் கண் என்ற சொல்லினின்று கணித்தல் என்ற சொல்லும் வந்தது.

கண் > கணக்கு

கண் > கணிதம்.

கண் > கணி

கண் > கணியன் ( சோதிடன்)

கண்ணை மூடிக்கொண்டும் கணிக்கலாமே என்பீர். எனினும் அஃது இயல்பன்று.

இவ்வாறு அறிக.

மேலும் அறிய:  https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_9.html

குணமென்னும் சொல்:   https://sivamaalaa.blogspot.com/2019/07/blog-post_18.html

நம் குறைகளைச் சொல்லி இறைவனிடம் / இறைவியிடம் கண்கலங்கினால்

நம்மைக் கடைக்கண்ணால் சிறிது பார்த்து அவ் இறை அருளுமாம்.  இதற்கு

கடைக்கணித்தல் என்ற சொல் உருவானது. கடைக்கண்ணால் நோக்கி அருளுதல்.

அறிவீர். மகிழ்வீர்.


தட்டச்சு பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.

மெய்ப்பு:  15.10.2020.