சனி, 12 செப்டம்பர், 2020

அருணாசலம் என்பது

 இனி, இன்னொரு சொல்லைக் கண்டு தெளிவோம். இச்சொல் அருணாசலம் என்பதாகும்.

இதைச் சொல்லத் தொடங்குமுன் ஆசலம் என்ற சொல்லைப்பற்றி சில கூறல் நலம்  ஆகும். 

இடச்செலவு நிகழ்த்துவோற்குக் கடினம் தந்து ஆதரவாய் நில்லாதது என்ற பொருளிலேதான் " ஆசலம்"  என்ற சொல் உருப்பெறுகிறது. ஆசு+ அல் + அம். ஆசு எனற்பாலது பற்றுக்கோடாக நிற்பது என்று பொருள்தரும்.  "ஆசிடையிட்ட எதுகை" என்ற யாப்பியற் குறியீட்டில் ஆசு என்ற சொல் நன்றாக வந்துள்ளது.

நாள் என்ற சொல் ஆங்கிலமொழியிற்போல பகல்நேரம் என்ற பொருளும் உடையது ஆகும்.  இச்சொல் " நாளங்காடி" என்ற சொற்றொடரில் வந்துள்ளது,

இமயம் போன்ற மலைப்பகுதிகளில் நாள் அல்லது பகல் நேரம் என்பது மிக்க அருமை உடையது ஆகும். கடுங்குளிர் சற்றுக் குறைவுறும். ஆகவே அருநாள் என்பதன் பொருள் அறிந்துகொள்ள எளிதானதே.  அருநாள் என்பது அருநா என்று குறையும். அருநா + ஆசலம் என்பது  அருணாசலம் ஆகிறது. இதன்பொருள் மிக்கத் தெளிவாகவே உள்ளது.

அருணாசலம் என்பதன் ஏனைப் பொருண்மை முன் விளக்கம் கண்டுள்ளன. அவற்றையும் அறிந்துகொள்க.

உங்கள் மேல் வாசிப்புக்கு: ( உசாத்துணைக்கு)

ஆசலம் என்பது:   https://sivamaalaa.blogspot.com/2017/01/blog-post_65.html .

கடத்தற்கு அரியவையும் கடுமையானவையும் https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_2.html

அருணன் அருணாசலம் அருணோதயம்  https://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_27.html

 

 குறிப்புகள்.

[ஒருசொல்லை ஒரே பொருளில்தான் கையாள வேண்டுமென்பதில்லை. சொல்லுக்கும் சொற்றொடருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளிருக்கலாம். இதை உணர்ந்தோர் பலர் எனினும், யாம் பெரிதும் போற்றுவது வழக்கறிஞர்களைத் தாம். எடுத்துக்காட்டாக, சிங்கை வழக்கறிஞர் திரு டேவிட் மார்ஷல் அவர்கள். Trafficking in drug is not the same as "possession of the drug  for the purpose of trafficking " என்பதை விரித்து வாதிட்டு, மரண தண்டனையிலிருந்து குற்றவாளியைக் காப்பாற்றியவர். மேலும் ejuisdem generis என்ற இலத்தீன் சொற்பொருள் விளக்க நெறியைத் தம் வழக்குரையில் பயன்படுத்தி வெற்றிபெற்றவர். அண்மையில் ஒரு தாளிகைக் கட்டுரையின்மேல் நடந்த விவாதத்தில் line of actual control என்பது தற்போது யார் எவ்விடத்தில் குறித்த காலத்து ஆள்கின்றாரோ  அவ்விடம் (அந்த நிலம்) அவர்வயம்  இருக்கிறது என்று  பொருள் என்பதை எடுத்துச்சொல்ல நேர்ந்தது. இலக்கியத்தில் மட்டுமின்றி வாழ்வின் எப்பகுதியிலும் எந்நிலையிலும் பொருள்விளக்கம் என்பது முன்னிற்கும் ஒரு தேவையாய் உள்ளது.

இதை எதற்காக இங்கு சொல்கிறோம் என்றால், யாம் முன்னொரு முறை சொல்லாமல் விட்ட பொருள், ஆங்கு இல்லை என்பதாகாது என்பதற்கே ஆகும்.

சுருக்கம் கருதியும் சில பொருண்மைகள் விடுபாடு கண்டிருக்கலாம். அது ஏன் விடுபட்டது என்பது யாம் வெளியிடாத ஒன்றே ஆகும்.]


மெய்ப்பு:  பின்னர்




துட்டன் (துஷ்டன்)

 துள் என்பது  ஒரு தமிழ் அடிச்சொல்.

இது பின்னர் துண் என்று திரிந்தது.

துண் என்ற திரிந்த நிலையில் அது சேர்ந்திருப்பு என்ற பொருளுடையதாயிருந்தது. பின் அதே துண் என்ற அடி பிரிவு, துண்டு படுதல் என்ற கருத்தையும் தழுவியது. இதற்கு இன்னோர் உதாரணம் தரலாம் என்று நினைக்கின்றோம், காண்க:

இல்   -  இடம்:    " கண்ணில் விழுந்த கரித்தூள்."   இங்கு இல் என்பது இடப்பொருள் தந்தது.  ( உருபு).

இல் -      இல்லை.  " அஃதொப்ப தில் "   உளதாகிய இடம் குறித்த இல் என்னும் சொல் ( உருபு,  இடைச்சொல் )  இங்கு இலதென்று இன்மைப்பொருள் தந்தமை ஒரு முரண் என்று கருதலாம்.

இல்  -   இல்வாழ்வான் மற்றோருக்கு நல்லாற்றில் நின்ற துணையாவான்.

இது இல் என்று வீடு குறித்தது.  உருபில்போல் இடமென்னும் பொதுப்பொருளில் வாராமல்  குறித்த இடமாகிய இல்லத்தையே சுட்டியது. ஒருவற்கு எல்லா இடனும் வீடாமோ?

உதாரணம் என்பது முன் நிறைவாய்ப் போன்றமைந்தது,  உது -   முன்னிற்பது. ( அது இது உது சுட்டடிச் சொற்கள்).  ஆர் (தல்) -  நிறைவு,  அண்+ அம் - விகுதி (  அணித்தான அமைவுப் பொருள் ). அணம் என்றும் ஒருவிகுதி என்று கொள்ளினும் அமையும்.  எனவே இல் என்பது உதாரணமாய்க் காட்டப்பெற்றது.  எடுத்துக்காட்டு,  காண்மானம் ( காமானம் என்பர் பேச்சில்.) எனவும் சொல்வர்.

இனி,  துட்டன் ( துஷ்டன்) என்ற சொல்லுக்கு வருவோம்.   துள் என்பது அடங்காமை குறிக்கும் அடிச்சொல். வேறு பொருளதுமாகும். " ரொம்பத் துள்ளுகிறான் என்பது வழக்கில் சொல்லப்படுவது. துள்ளுதல் பலவகை. மகிழ்வால் துள்ளுதல் ஒன்று.   அடங்காமல் துள்ளுதல் மற்றொன்று.  வேறு துள்ளுதல்களை வந்துழிக் காண்க. இந்தத் துள் என்ற அடி துடு என்று திரியும். ளகர ஒற்று டுகரமாதல் காண்க..பலவுள. ஒன்று:  பள் > படு > படுகை. இன்னொன்று: நள் > நடு.  நள்ளாறு = நடு ஆறு > நட்டாறு.

துடு >  துடு + கு =  துடுக்கு.  ( கு விகுதி ).

இன்னோர் எடுத்துக்காட்டு:   அடு >  அடுக்கு என்பது.  கு விகுதி.

பிடு > பிடுக்கு.

துடு  + அன் =  துட்டன்.  இங்கு டகரம் சொற்புனைவில் இரட்டித்தது.

துடு என்பது துடி என்று இகரம் இறுதியாகி மற்றொரு சொல்லாம்.கர்வம் (கருவம்), கோபம் என்/றும் பொருள்தரும்.

துடு > துடும்புதல் என்பது கூடுதல் ஆவது குறிக்கும்.

துடு > துடைக்குதல்  அழிவு செய்தல் பொருளதுமாம்.

துள் -  துட்குதல்,   வெருவுதல் என்பதுமாம்.

இவ்வழிச்சென்று துட்டகுணங்கள் அறிந்துகொள்க.  இக்குணங்கள் இவ்வுருவங்களில் படிந்துள்ளன.

இடு அம் இட்டமெனல்போல் துடு அம் துட்டமென இரட்டிப்பு ஆயிற்று,

துட்டம் துஷ்டமானது இட்டம் இஷ்டமானதுபோலுமே.  இட்டமாவது மனத்தை ஒன்றில் இடுவது,  இடு > இட்டம்.

"வடவெழு தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே" ( தொல்).


தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் திருத்தம்.



 





வியாழன், 10 செப்டம்பர், 2020

அரட்டுதல்: அரசனும் அரட்டனும்

 அரசன் என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பதை முன்னர் விளக்கியுள்ளேம். அதனை இங்குக் காண்க:

https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_12.html

அரட்டுதல் அல்லது கத்திக்கொண்டு கட்டளையிடும் முறையின் மூலமே பட்டாளத்திலும் "ஆட்சி" நடைபெறுகிறது. அணிவகுப்பு முதலியவைகளில் இதனை நீங்கள் காணலாம்.

அரசன் அரண் உடையவன்.  அரணன் ஆன அவனுக்கு அரணன் > ராணா  ( மகாராணா)  என்ற பெயர்களும் வழங்கியுள்ளன.

ஒருவன் அரட்டப்படுவது அச்சத்தை விளைக்கிறது.  அரள் > அரளுதல் என்பது அச்சமுறுதல். அன்புடன் பேசி பல்வேறு சலுகைகளையும் வழங்கி வேலைவாங்குவது என்பதெல்லாம் இக்காலத்து நெறி.   பண்டை நாட்களில் கத்திச் சவுக்காலடித்து அல்லது உதைத்து வேலைவாங்கினர்.

நாளடைவில் இந்த ஒலி எழுப்புதற் கருத்தும் அச்சக்கருத்தும் அரசன் என்ற சொல்லினின்று மறைந்துவிட்டது.   அர் என்ற அடிச்சொல் ஒலி குறிப்பது.

இதையும் வாசித்து அறியுங்கள்:

https://sivamaalaa.blogspot.com/2020/06/blog-post_11.html

அரசனிலும் சற்றுக் குறுகிய அதிகாரமுடைய ஆட்சியாளன் அரட்டன் என்று குறிக்கப்பட்டான். இச்சொல் நேரடியாக அரட்டு என்ற சொல்லினின்றே புனையப்பட்டது தெளிவு.  அரட்டு + அன் = அரட்டன்.   திவாகர நிகண்டு அரட்டனைக் குறுநிலமன்னன் என்று குறிக்கின்றது.

அரட்டிப் பிறரை அடக்கியாள்பவனே ஓரிடத்தை ஆளவும் தகுதி உடையோன் என்று பண்டையர் எண்ணினர் என்பது இச்சொற்கள் மூலம் தெளிவாகிறது.

அறிந்து மகிழ்வீர்.