ஞாயிறு, 19 ஜூலை, 2020

நோய்தவிர்க்க எண்ணாத நம்மக்கள்.

நாட்டுக்கும் தீமை நலத்திற்கும் கேடுதான்
பாட்டுக் கவரவரும் கூடிநின்று ---- கேட்டினையே
வாவென்  றழைப்பார்போல் வாய்கிழிய வெற்றியை
வாவென்று கூவியழைத் தால்.

நோய்த்தொற்று நாட்டில் நுழைந்துவிட்ட இக்காலம்
பாயிட்டெல் லாரும் படுத்துறங்க ---- கோவிட்டும்
கொஞ்சம் மனமிரங்கும் கூட்டில் உயிர்தங்கும்
தஞ்சம் அகமாகும் தான்.



இது தேர்தல் அறிவிப்பைக் கொண்டாடக் கூடிநின்று
நோய்த்தொற்று வாய்ப்புகளை மறந்து, பேரிடர்க்குள்
மாட்டிக்கொள்ளும் நிலையில் தம்மைப் புகுத்திக்கொண்ட
மக்களை நினைந்து பாடியது. 

நலத்திற்கும் -  உடல் நலத்திற்கும்.பிற நலத்துக்கும்
இது நோய்த்தொற்று பற்றிய பாடலாதலின் உடல்நலம் முதன்மை.
பாடு - துன்பம் ( நேரும்படி)
கோவிட்டு - கொரனா நோய்
கூட்டில் - உடம்பில்
"கூடுவிட் டாவிதான் போயின்" என்ற ஔவையின்
பாட்டை நினைவுகொள்க.
தஞ்சம் -  புகலிடம்
அகம் - வீடு.
  

என்னைத் தழுவின் மழை (2008)

பூமிக் கொளிபாயும் கோமகள் கண்விழித்து;
பூவிற் கவள்முகம் மண்ணியதால் --- மேவுபனி; 
பல்லைத் துலக்கின் நுரையாம்் பரவைக்கே; 
என்னைத் தழுவின் மழை.


நண்பர் ் போட்டிருந்த சொற்களையே கூடுமான வரை
வைத்துக்கொண்டு இப்படி மாற்றினேன்்.


 கோதைகண் ஊடொளியால் இவ்வுலகு வெட்டமுற 
வாதை யிலாஅங்கை் நீர்கழுவ --- கூதை 
அதழில் பனிநீர் நுரைகடலாய் ஆழ்ந்தே 
இதழ்வாய் அணைக்கும் மழை. 

 வெட்டம் = வெளிச்சம்; ( ஒரு நண்பருக்காக எழுதிக் கொடுத்தது).

[ கண்டெடுத்த பழைய பாடல், சிதைந்துள்ளது. ]

இதன் முழு வடிவமும் உங்களிடம் இருந்தால்
தந்து உதவுங்கள்.

சனி, 18 ஜூலை, 2020

பிழைக்க வழி இல்லை.......

அழுக்கறியா மேலாடை கழுத்துக் கட்டாம்
ஆடையழ கோடுயர்ந்து வழக்கில் முட்டும்

வழக்கறிவு மேன்மக்கள் வாயிற் பாங்கில்
வாங்கிடுவீர் எனக்கூவி மாங்காய் தேங்காய்

கிழங்கினொடு கீரைஎனப் பலவும் விற்றார்
கேட்டுநிலை வந்ததிந்தக் கிருமித் தொற்றால்

முழங்கியவாய் முடங்கிற்றே இன்னும் என்ன
மூதுலகில் மூண்டிடுமோ    பன்னும் அன்னாய்!


செய்தி:-

வாசித்தால் துன்பமே.


கழுத்துக்கட்டு:  "டை" என்ற கழுத்தணி.
வழக்கறிவு மேன்மக்கள் -  வழக்கறிஞர்
முட்டும் - வாதங்களில் முட்டிக்கொள்கின்ற
பாங்கில் -  பக்கத்தில்
வாயில் - கட்டிட வாசல்
கேட்டு நிலை -  துன்ப நிலை
கிருமித் தொற்று - மகுடமுகி (கோவிட்19) 
கொரனா நோய்.
பன்னும் - தெளிவாகப் பேசும்
அன்னாய் -  அன்னையே.