வெள்ளி, 6 மார்ச், 2020

தொம் > தொந்தி

தொங்கு என்ற சொல்லில் தொம் என்பதே அடிச்சொல்.

தொம் + கு =  தொங்கு.

தொங்கு(தல்) வினைச்சொல்.   தல் என்னும் விகுதி பெற்றால் விகுதி ஒழிய முன்னிற்பது வினை. வினை என்பது செய்கை. தொங்குதல் என்பது வினைக்குப் பெயராகிறது, இதனைத் தொழிற்பெயர் என்று இலக்கணியர் சொல்வர்.

தொம்பல்

இது தொம் > தொம்(பு + அல்) = தொம்பல்   ஆனது.  பு  மற்றும் அல் என்பன விகுதிகள்.  இரு விகுதிகள் பெற்ற சொல் இதுவாகும்.  கலப்பையில் தொங்கிக்கொண்டிருக்கும் ( ஒட்டியிருக்கும்) மண் அல்லது சேறு.

(சேர்ந்துகொண்டிருப்பது சேர் > சேறு.   ( இது வீர் > வீறு போன்றமைந்த சொல்). வைரஸ் என்ற சொல்லின் அடியும் இதுவாகும். விரைவு என்பது ஓர் உள்ளாற்றலால் முடுகி அல்லது விரைந்து சென்றடைதலைக் குறிக்கும்.

இதைப்பின் தனியாக விளக்குவோம்.  இங்கு    விர் > வீறு என்பதை மட்டும் ஒப்பிட்டுக் கொள்க.) 

தொம் > தொம்பு > தொப்பு

தொப்பு தொப்பு என்று நனைந்துவிட்டோம் என்பது காண்க

தொப்பு - துணி நனைந்து தொங்கும்படியாக


தொப்பு > தொப்பை
தொப்பு > தொப்பி.  ஒரு நடுப்பகுதி வெளிவந்த தலையணி.
தொப்பு > தொப்பூழ்.

தொம் என்பதற்கு தொ என்பது அடிச்சொல்.  ஆகவே மூலம்.

தொ >  தொடு,   ப > படு  போல. இதைத் தனியாக விளக்கவேண்டும். தொடும்போது உங்கள் கை இருக்குமிடத்திலிருந்து நீட்டப்பெற்று எதையும் தொடுகிறது.  நீள்வது வெளிவருவதே போன்றது. இருக்குமிடம் விட்டு வெளிவருவது.

தொடு > தொடை.

உடலைவிட்டு நீண்டு கீழாக  வெளிவந்தது.


தொம் > தொம்தரவு. > தொந்தரவு.  ( விடாமல் தொங்கிக்கொண்டிருப்பதுபோல ஒன்றைச் செய்து வருத்துவது ),


தொந்தி   ( தொம் தி )   -  வெளித்தள்ளித் தொங்குவயிறு.


விளக்கும்பொருட்டு ஒன்றை ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களால் சொல்லநேரும்.  வெளித்தள்ளுதல் தொங்குதல் எல்லாம் அதே.

தொம்பைக்கூத்து, தொம்பைநாற்று  இவை கூட்டுச்சொற்கள்.


அறிக மகிழ்க.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின்.

செவ்வாய், 3 மார்ச், 2020

கபிலர் என்னும் புலவர்பெயர்.

எப்பொருளாயினும் அதை ஒளிவு மறைவின்றி எடுத்துரைப்பதற்கு ஒரு திடமான மனம் வேண்டும்.   ஒளிவு மறைவு என்பதற்கு மற்றொரு சொல் "கட்பு"  என்பதாகும்.

கட்பு என்ற சொல் எப்படி அமைந்தது என்பதை முதலில் பார்க்கலாம்,

கள்ளம் என்ற சொல் எதையும் ஒளிப்பதையும் பொய்மையையும் குறிக்கும்.  கள்ளர் என்பது திருடர் என்றும் பொருள்படுவது.  இச்சொல் கருப்புநிறத்தவர் என்றும் பொருள்தரும்.  கள்ளி என்பது திருடி அல்லது மறைத்தவள் என்றும் குறிப்பதுடன் கள்ளிச்செடி, கள்ளிப்பலகை முதலியவையையும் குறிக்கும். இவற்றின் அடிச்சொல் கள் என்பதுதான்.  கள் ஒரு குடிதேறலையும் குறிக்கும்.

கள் என்பது அடிச்சொல் என்றோம்.  இச்சொல்லுடன் ஒரு "பு" விகுதியைச் சேர்த்தால்  கள்+பு =  கட்பு என்ற சொல் உருவாகின்றது.

ஒளிவு மறைவோ அல்லது தீய  பண்புகளோ இல்லாதவர்,  அல்லது எதையும் வெளிப்படையாக அணுகி ஆய்பவர்  என்று பொருள்தரும் ஒரு பெயரை அமைப்பதற்கு:

கட்பு + இலர்  =  கட்பிலர் என்ற சொல் அமையும்.

இச்சொல் மெய் நீக்கப்பட்டால்  அல்லது நாளடைவில் இடைக்குறைந்தால்

கபிலர் என்றாகிவிடும்.

கபிலர் என்ற சொல்லுக்குத் தமிழிலும் சங்கதத்திலும் வேறு பொருள்பல கூறலாம் எனினும் அவற்றை இன்னோர் இடுகையில் காணலாம்.

இடைக்குறைச்சொற்கள் பல ஆய்ந்து முன் கூறியுள்ளோம். பழைய இடுகைகள் காண்க.   நகுலன் என்ற பெயரும் நற்குலன் என்ற சொல்லின் இடைக்குறையாகி நற்பொருளே தரும். வல்லவர் என்ற சொல்லும் வலவர் என்று வருமே. பல்லோர் என்பதும் அர் விகுதி ஏற்குங்கால் பலர் என வருதல் கண்கூடன்றோ? இவையனைத்தும் நீங்கள் ஒப்பிட்டு அறிதற்கானவை.

இதைக் கபி -  குரங்கு  என்று பொருள்படும் சொல்லினடித் தோன்றியதாகக் கொண்டு பொருளுரைப்பாருமுண்டு.   அதையும் பின் காண்போம்,

கபிலர் என்ற பெயருள்ள புலவர்கள் தமிழ்நாட்டில் இருந்துள்ளனர்.    சங்கப்புலவர் கபிலர் என்பவர் பத்துப்பாட்டில் ஒன்றாகிய "குறிஞ்சிப்பாட்டு" பாடியுள்ளமையால் இப்பெயர் முதன்மை பெறுவதாகிறது.

தட்டச்சுப் பிழைகள் திருத்தம் பின்


வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

ஆசிரமம் சொல்லில் இரட்டை விகுதி

ஆசு என்னும் சொல் பயின்று அமைந்த பல சொற்களை அவ்வப்போது சுட்டிக்காட்டியுள்ளோம்.  இந்தச் சொல் ஆதல் (ஆகுதல் ) என்ற வினையின் அடிப்படையில் அமைந்ததாகும்.

சு விகுதி வந்த சில சொற்களை இப்போது நினைவுகூர்தல் நலமாகும்.  பரிதல் என்பது அன்பு காட்டுதல் என்றும் பொருள்தரும். பரிவு, பரிந்துரை முதலிய சொற்களில் வரும் பரி என்னும் சொல்லை நீங்கள் மறந்திருத்தல் எவ்வாறு?
பரிசு என்ற சு விகுதி பெற்ற சொல்லும் பரிதல் வினையடிப்படையில் உண்டானதே.

சிசு என்ற சொல் தமிழ்ப் பேச்சு வழக்கில் உள்ள சிறுசு என்பதன் றுகரம் வீழ்ந்த இடைக்குறைச்சொல். சிலர் சிறிசு என்றும் சொல்வதுண்டு.


விகுதி என்பதற்கு இறுதிநிலை என்றும் சொல்வர்.  சொல்லை மிகுத்துப் பொருளைப் பெருக்கிக் காட்டுவதே  விகுதி.   மிகுதி - விகுதி : இதில் மி - வி போலி இருத்தலை உணரலாம்.  மிஞ்சு - விஞ்சு : போலியே இதுவும். மிகுதி என்ற சொல் பொதுப்பொருளில் வர, விகுதி என்பது சொல்லின் நீட்டத்துக்கு மட்டும் வழங்குவதாயிற்று.

இன்னொரு சு விகுதிச் சொல்:  காசு என்பது.   மனிதன் காத்துப் போற்றிப் பயன்பெறுவதனால்  கா(த்தல்) >  காசு ஆயிற்று.  சற்றுக் கரிய நிறம் குறிக்கும் மா என்ற சொல்லினின்று மா+சு  ( மாசு) என்ற சொல்லும் அமைந்தது காணலாம்.  " ு " வினையாக்க விகுதியாகவும் வரும்,  எடுத்துக்காட்டு:  கூசு (கூசுதல்),  பேசு  ( பேசுதல் ).

ஆசு  என்ற சொல் உள்ளமைந்த சொற்கள் பல. இதற்குப் பற்றுக்கோடு என்றும் பொருள். ஆசு எனின் பற்றிக்கொள்ளுதல் ஆகும்.

ஆசு + இரு + அம் + அம்.  =  ஆசிரமம்.

ஆசு -  இரு என்பவற்றின் ஈற்று உகரங்கள் கெட்டன.

இச்சொல் இரண்டு அம்  ஈற்றில் வந்து முற்றிற்று..  இடையில் உள்ள அம்  என்பதைச சொல்லாக்க இடைநிலை என்றும் சொல்லலாம். அன்றி, இரட்டை விகுதி எனினும் பேதமில்லை.

யாரும் பற்றி(க்கொண்டு)  இருக்கும் இடமே ஆசிரமம்.   அனாதை ஆசிரமம் என்பது காண்க.

இவ்வழக்குச் சொல் பிறமொழிகளிலும் வழங்கித் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது.

சொல்லவும் எழுதவும் பல உண்டு எனினும் சுருங்கச் சொல்லி முடித்தல் கருதி நிறுத்துவோம். அறிக மகிழ்க.

தட்டச்சு பிறழ்வுகள் பின் கவனம்பெறும்.