திங்கள், 24 பிப்ரவரி, 2020

மகுடமுகித் தொற்று (கொரனாவைரஸ்)

2003 வாக்கில் saars என்னும் பெயரிய சளி மூச்சுத்திணறல்
நோய்நுண்மம் பரவியது.  ஏறத்தாழ் 8000
மக்கள் பாதிப்பு உற்றனர்.  பாவம் 774 பேர் இறந்தனர். அதனினும்
மிக்க பாதிப்பே மீண்டும் மகுடமுகி 1 நோய்நுண்மிகளால் இன்றும்
வந்துள்ளது. பாதிப்பு இப்போது கடுமையானது: 78000+  பேர்
நோய்வாய்ப் பட்டுள்ளனர்.

வரலாற்றில் வந்ததுவே மீண்டும் வந்தது. அந்த உண்மையை
இந்தச் சில வரிகள் தெரிவிக்கின்றன.



வரலாற்றில் வந்ததுவே வருமே மீண்டும்;
வாழ்க்கையிலே தோன்றியதே தோன்றும் யாண்டும்;


உரலுற்ற நெல்லதுவே பொருளாம் பின்னும்
உலகியலில் உண்மையிதே உணர்வீர் உள்ளீர்
 

விரலுற்ற புண்ணிடமே புண்ணாம் இன்னும்:
வேறுபடல் அrரிதென்பார்   விரிவ றிந்தோர். 


குறிப்புகள் History repeats itself

( a saying in English )


1  மற்ற பெயர்கள்:  முடியுருவினி,  மகுடத்தோற்றினி

2 சிங்கப்பூரிலும் தொற்றியுள்ளது.  ஆனால் பெரும்பாலும்
வெளியார் ஆவர்.

அரும்பொருள்

யாண்டும் -  எப்போதும்.
உரலுற்ற - உரலில் குத்துவதற்கு இட்ட
பொருளாம் மீண்டும் -  குத்துதலுக்குப் பொருளாகும் இன்னொரு
முறையும்.
உலகியலில் - உலக நடப்பில்
உள்ளீர் - மக்களே
விரலுற்ற - விரலில் பட்ட
புண்ணிடமே - புண் பட்ட இடமே
புண்ணாம் இன்னும் - மீண்டும் காயப்பட்டுப் புண்ணாகும்
வேறுபடல் -  மாறிவருதல்
அரிது - மிகக் குறைவு
விரிவு - விளக்கம்.

மாற்றி வாசிப்பு:

வரலாற்றில் வந்ததுவே வருமே மீண்டும்;  என்பதை
வருமே மீண்டும்  வரலாற்றில் வந்ததுவே  என்று மாற்றியும்
இப்படியே ஆறு வரிகளையும் மாற்றி வாசித்தாலும்
பொருள்மாறாமல் வேறு சந்தம் தரும் வரிகள் இவை.






வியாழன், 20 பிப்ரவரி, 2020

முடியுருவினி ( கொரனா வைரஸ்)

கொரனா வைரஸ் பற்றி எழுதவேண்டுமென்று எண்ணவில்லை. ஆனாலும் அவ்வப்போது சில கவிதை வரிகள் தலைக்குள்ளும் இதழ்களிலும் தவழ்ந்து வெளிவரும்.  வசதியான சமயங்களில் எழுதிவைப்பேம். நள்ளிரவின்பின் உறக்கத்தின்போது வரிகள் சொரிவுறுமாயின் அவை விழித்தபின் பெரும்பாலும் நிலைத்திருப்பதில்லை.  அப்படி வந்து உறுத்திய வரிகளில் ஒரு பா இங்கு இடம்பெறுகிறது.

கொரனா  வைரஸ் என்பதைத் தமிழாக்கவேண்டும்,  காரணம் அது கவிதைக்குள் வருகிறபடியினால்.  தமிழ்க் கவியில் பிற மொழிச்சொற்களைப் பெய்து வரைதல் மரபு அன்று,  ஆதலினால்.

அதற்காக யாம் ஆக்கிக்கொண்ட சொல்தான் முடியுருவினி என்பது. முடி அல்லது மணிமுடி போலும் உருவினதாதலின்  "முடியுருவினி" என்றே இவண் வருகிறது.  மகுடமுகி என்றும் சுட்டியிருக்கலாம். மகுடத்தோற்றினி என்றும் இருக்கலாம். இவை பாடலுக்குள் பொருந்தாமை சொல்லாமற் புரிவது.

கவிதை:

முடியுருவினி நோய்நுண்மி அடியெடுத்து வைத்து
கடிநகரிது சிங்கைக்குள் வருதலுக்கென் துணிவே?

உலகிதனிலே தூய்மைக்குப் பெயர்பெறும்அம் மட்டோ?
உடல்நலத் துறை  ஓங்கிற்றே ஒருநகரும் நிகரோ?

பலசாதனைகள் பெற்றிட்டும் ஒருசோதனைமுகர் வைக்க
நிலமகள்தான் இசைவுறுதல்  நிகழாதென்(று) இனி உழைப்பீர். 

அருஞ்சொல்லுரை:

முடியுருவினி = கொரனாவைரஸ்
நோய்நுண்மி  -  வைரஸ்
கடிநகர் -  காவல்மிக்க நகரம்
வருதலுக்கென் -  வருவதற்கென்ன
அம்மட்டோ -  அதுமட்டுமோ
உடல் நலத்துறை =  சுகாதாரத் துறை
முகர்+ =  ( தோல்வி என்று ) முத்திரையிட
முகர ( தோல்வியின் வீச்சினை முகர்ந்து (மோந்துபார்க்க)
என்பதும் பொருந்துமாயினும் சிறப்பில்லை என்று தோன்றுகிறது.

தாழிசை
நிகழாதுழைப் பாயே என்று முடித்தலுமாம். 
 



திங்கள், 17 பிப்ரவரி, 2020

அலாதி

அலாதி என்று நாம் பேச்சில் எதிர்கொள்ளும் சொல்லை இன்று அறிந்துகொள்வோம்.

அல்லாதன,  அல்லாதவை என்பன அலாதன  அலாதவை என்று கவிதைகளில் தொகுந்து வருதலை நீங்கள் அறிந்திருக்கலாம்.  இடையில் லகர ஒற்று மறைவு.

அல் :  அன்மை குறிக்கும் அடிச்சொல்.    அல்+ மை =  அன்மை.
ஆதி :  முன் அல்லது ஆக்க நாட்களில் உள்ளது. தொடக்ககாலத்தது.

ஆதல் : உண்டாகுதல்.  ஆதல் என்பது   ஆ >  ஆகு > ஆகுதல் என்றும் வரும்.  வே > வேகு > வேகுதல் போல.  வே > வேக்காளம்.  வே> வேது > வேதுபிடித்தல்.   வே> வெயில் ( முதனிலைக் குறுக்கம்).

அல் ஆதி > அலாதி என்றால் முன்னில்லாதது. முன் காலத்தில் இல்லாதது. முன்னது அல்லாத ஒன்று.

முன் அதுபோல் இல்லாததென்றால்  அது தனித்தது என்று பொருள்.

அலாதி மகிழ்ச்சி என்றால்  முன் அறிந்திராத மகிழ்ச்சி.

அலாதி என்பதில்  லகர ஒற்று இரட்டிக்கவில்லை.  அல்லாதி என்று சொல்லக்கூடாது.   அலாதி  தான்.

அனாதை என்ற சொல்லில்  அல் என்பது அன் என்று திரிந்தது.  ஆதி + ஐ என்பது  ஈற்று இகரமிழந்து     ஆத் + ஐ  என நின்று ஆதை ஆனது.  ஆகவே அனாதை முன்வரலாறு அல்லது முன்னோர் யாரும் அறியப்படாதவன். இது பெண்பாலுக்கும் ஆகும்.

அன் + ஆதி=  அனாதி.   ஆதியற்றோன். கடவுள்.  நாதி என்பது   அகரமிழந்து நாதி என்றொரு சொல் அமைந்தது. இது பிறழ்பிரிப்புச் சொல்.

அறிவோம் மகிழ்வோம்,

பிழைத்திருத்தம் பின்.