சனி, 1 பிப்ரவரி, 2020

அறிவியல் வளர்ச்சியும் நோய்களும்

அறிவியல் முன்னேற நோய்கள் அனை த்தும்
முறிவுறும்  என்றே  முகில்மேல்  ---  பறலானேன்;
கண்டதோ நோயாற் கவிழ்வதாய்;  கார்மழையோ
அண்டுமோ நம்மை நலம் ?

முறிவுறும் -  தீர்ந்துவிடும்
முகில்மேல் -  மேகத்தில்
பறல் -  பறவை;  பற + அல் =  பறல். (அகரம் கெட்டது.)
(பறந்தேன்)
கார்மழையோ -  துன்பகாலமோ
நலம் அண்டுமோ  - நோய்கள் நீங்குமோ நலம் வருமோ என்றபடி.

வியாழன், 30 ஜனவரி, 2020

நித்தம் > நித்தல் > நிச்சம்.

நித்தம்நித்தம்  என் சிங்காரச் செல்வத்துக்கு
முத்தமொன்று தந்துமகிழ்வேன்---- உன்
அத்தை வருவாள் மெத்தையி லிருந்துனை
மெல்லவே அள்ளியணைப்பாள்


என்று ஒரு கவிதையன்று,   ஒரு கவிதைபோலும் வாக்கியத்தைப் படைப்போமானால் அதில் நித்தம் என்ற சொல் கேட்க நன்றாகவே இருக்கும். நித்தம் என்பது எப்படி அமைந்த சொல்?


மாற்றம் ஏதுமின்றி ஒவ்வொரு நாளும் இருக்குமானால் அதை நித்தம் உள்ளதெனலாம்.. அது ஓடிவிடவில்லை. என்றும் நின்று நிலவுகிறது. நிலவுதல் என்ற சொல்லிலும் நில் என்பதே அடி.  நிறுத்து என்பதிலும் அதுவே ஆகும் அடிச்சொல்.  நில்> நிறு > நிறுத்து.  நில்> நிலை (  நில் + ஐ = நிலை.)..நில்+ ஐ + அம் = நிலையம்.

நில் என்ற அடியிற் பிறந்த சொற்கள் பற்பல. வேறுவகையில் சொல்வதானால் அனந்தம்.  என்ன அனந்தம்?   அன் + அந்தம்:  அதாவது அந்தம் / முடிவு இல்லாதவை.  அல்> அன்.  முடிவு இருந்தாலும் கற்பனையிற் பறந்து முடிவற்றதாக மிகுத்துச் சொல்வதுண்டு.   நிற்க.

நில் + தல் - நிற்றல்.  நில் + தம் > நிற்றம்.   நித்தம்.  ற்று > த்து என்று பேச்சு மொழியில் மாறும்.         நில் > நிற்று > நித்து > நித்து + இ + அம் = நித்தியம். ( நிற்பது,  மாறாதது. ) இவ்வாறே நில் என்ற இயல்புவழக்குச் சொல் பல சொற்களுக்குத் தாயாக இருந்துள்ளது காணலாம்.

இவற்றை அறிஞர் பிறரும் முன் விளக்கி யதுண்டு.

நித்தம் > நித்தல் ( அம் விகுதிக்குப் பதிலாகவோ மாற்றமாகவோ அல் வந்துள்ளது. ) ;  நித்தம் > நிச்சம்  ( த > ச திரிபு).

இதேபோல் திரிந்த இன்னொரு சொல்:  அத்தன் >  (அப்பன்) > அச்சன் எனக்காண்க.  மாறாமை உடைய அல்லது பெயரில்லாத எந்தப் பொருளுக்கும் பெயர் வைக்கவேண்டுமானால்  நிப்பம் என்று பெயர் வைத்துவிடுங்கள்.

இத்துடன் நிறுத்தி இளைப்பாறுவோம்.  மகிழ்க.




தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் சரிசெய்யப்படும்








புதன், 29 ஜனவரி, 2020

எலிப்புத்தாண்டும் வியாதிகளும்.

எலிதரு புத்தாண் டியற்றிற்று  யாதோ
நலிதரு கொள்ளைமுன்  நாளில் ------ பலியுறு
மூச்சுத் திணறுசளி மூண்டதுவே இந்நாளில் 
பேச்சிலுமே அச்சம் தரும்.


எலிதரு புத்தாண்டு -  சீனப் புத்தாண்டு எலியாண்டு.
இயற்றிற்று யாதோ -  முடித்தது எதுவோ? ( தந்த பலன் என்ன?)
நலிதரு கொள்ளை  =  கொள்ளை நோய்.(  நலி - நோய்.) நலிவு.
பலியுறு  -  உயிர்ப்பலி மிகுந்த.
மூச்சுத் திணறுசளி -  நிமோனியா.
மூண்டதுவே - தொடங்கியதே.
பேச்சிலுமே -  அதைப் பேசினாலும்.

விய என்பதினின்று வரும் சொல் வியாதி.  விய  +  ஆ (  ஆதல் ) + தி (விகுதி).
வியாதி என்பது பரவுகிற நோய் அல்லது தொற்று. நாளடைவில் அது
தன் நுண்பொருள் இழந்தது,   பொதுவாக நோய் என்ற பொருள்பெற்றது.

விர் > விரி.  விர் > விய்-  விய.  வியன் உலகு - விரிந்த உலகம்..

இந்த எலியாண்டில் நிமோனியா வந்துள்ளது.   முன்னாளில் எலிகடிக் கொள்ளை நோய் எலியாண்டில் வந்ததோ?  (தெரியவில்லை). இது எலியாண்டின் பலனோ?  எ-று.

மறுபார்வை:  தட்டச்சுப் பிறழ்வுகள்.