வியாழன், 13 ஏப்ரல், 2017

The British united non-C& M as Hindus

இந்துமதம் ஒன்றுபட வெள்ளைக் காரன்
என்னஒரு நற்செயலைச் செய்து விட்டான்!
அந்தமணில் சிவப்பற்றர் விட்ணு பற்றர்
அழகம்மைப் பற்றரென ஆறு பல்கி
நொந்துபல சண்டைகளில் உந்தப் பட்டு
நோப்பிரிவால் உழன்றாரை ஒன்றாய் ஆக்கி
சந்துகளை அடைத்தொன்றாய்ச் சாலை உய்த்தான்;
சால்பினரும் செயலறியா மேன்மை வைத்தான்.

மணில் = மண்ணில்;
பற்றர் = பக்தர்கள்;
விட்ணு = விஷ்ணு;
அழகம்மை : அழகுடைய தேவி;
நோப் பிரிவு = துன்பம் தரும் பாகுபாடுகள்;
சந்து = வழி;
சாலை = யாவரும் கூடும் இடம்
சால்பினர் = நாட்டில் நம் உயர்ந்தோர்.


புதன், 12 ஏப்ரல், 2017

சாமி நாத அய்யரும் சமயக் காழ்ப்புணர்வும்

இப்போதெல்லாம், இந்துக் கோயில்களில் சிவனுக்கு உபயம் செய்கிறவரே
விட்ணுவுக்கும் மாலை அணிவித்து வணங்குவதைக் காண்கிறோம். இவர்
சிவ வணக்கம் செய்பவர், இவர் விட்ணு வணக்கம் செய்பவர் என்று பேதப்படுத்துவதில்லை. (பெயர்தல்> பே> பேதம்).

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பேதம் தலைதெறிக்க எழுந்து நின்றது. சிவனைப் பாராட்டிய வாழ்த்து நூல் தொடக்கத்திலிருந்தால், அதை
நீக்கிவிட்டு, விட்ணு பாடல் எழுதி நூலை அச்சிட்டனர். பழம்பாடலை வீசுவதால், அதிலுள்ள சொல்வளம் அறியாதவர்கள் ஆவோம்; வரலாறு தொலையும்; உண்மை அறியார் ஆவோம் என்று நினைத்தனரில்லை. புதுப்பாடலைப் பழம்பாடல் போல் முன்வைப்பது ஓர் ஏமாற்று என்பதையும் அவர்கள் உணர்ந்தனரில்லை. ஆசிரியர்களும் வேறு மதத்தாருக்குப் பாடம் ஓத மறுத்தனர்.

இப்படியேதான், சாமிநாத ஐயருக்கு, மீனாட்சி சுந்தரனார் பாடம்சொல்ல‌
மறுத்துவிட்டார். அப்புறம் வெங்கட்ராமன் என்ற அவருடைய வைணவப்
பெயரைச் சாமிநாதன் என்று மாற்றி, சிவமதத்தவரானபின், முறைப்படி
மாணவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இல்லாததனால், பல நூல்களும் கைவிடப்
பட்டன. அவை அழிந்தன.

இவை நிகழாமல் இருந்திருந்தால், நமக்கு இப்போது பல சான்றுகளும்
கிடைத்து நம் ஆய்வுகள் உயர்ந்து நிற்கும் என்பது காண்க.

சாமி நாத அய்யரும்  சமயக் காழ்ப்புணர்வும்

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

மூச்சிருத்தல்

மூர்ச்சை என்ற வழக்கில் உள்ளதாகும். இப்போதெல்லாம் இதற்கு
ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

ஒரு மனிதன் தன் நினைவிழந்து சாய்ந்தபின், மூச்சு இருக்கிறதா
என்று பார்ப்பார்கள்.மூச்சிருந்தால், அவன் மரணமடையவில்லை, வெறும் நினைவிழப்புத்தான் என்று  அறிந்துகொள்வர்.

மூச்சிருத்தல் என்பது மூர்ச்சித்தல் என்று மாறியமைந்தது. இதில்
நிகழ்ந்த மாற்றம்,  ருகரம் ரகர ஒற்றாகி, மூகாரத்துக்கு அடுத்து
வந்ததுதான்.  மூச்சிருத்தல் > மூருச்சித்தல் > மூர்ச்சித்தல்..
இது ஒலி இடமாற்றுத் திரிபு ஆகும். நாவொலிக்க நயமானது
காணலாம்.

இப்படித் தமிழுக்கொரு புதிய சொல் கிட்டிற்ற்று.