சனி, 18 மார்ச், 2017

அகர இகரச் சொற்கள் பொருள்நெருக்கம்

இன்று நாம் ஆய்ந்தறியவிருக்கும் சொற்கள் அகர  இகரச் சுட்டுச் சொற்கள். இவை ஒரு பொருளனவல்ல ஆயினும் இவற்றிடைப்  பொருள் நெருக்கம் உளவென்பதைச் சற்று விளக்குவோம்.

இடி :  அடி.

இடிப்பது வேறு; அடிப்பது வேறு. எனினும் இரண்டும் மோதுதலே. நுட்ப‌
வேறுபாட்டினவாம்.

இகலுதல் :  அகலுதல்.

இகலுதல் என்பது வேறுபடுதல். எனினும், பகையுணர்ச்சியால் அவ்வாறு வேறுபடல்.  அகலுதல், நீங்கிச் செல்லுதல், ஆனால் இதில்
பகையுணர்ச்சி இருந்தும் இல்லாமலும் இருக்கக்கூடும்.

இணைதல் : அணைதல்.

இரண்டும் ஒன்றுசேர்க்கையாகும். பெரும்பாலும் இரண்டு இணைதல் அல்லது சேர்தல். அணைதல், நீர் கரையை அணைதல்; காதலால்
ஒருவரை ஒருவர் அணைதல் அல்லது அணைத்தல் எனப்  பலவகை.

இடுதல் :  அடுதல்,

இடுதல் என்பது வைத்தல்; அடுதல் என்பது நெருப்புவைத்தல். அடுத்தல் என்பது நெருங்குதல். இவைமூன்றும் நெருங்கினாலே
செய்ய ஒண்ணுபவை.

இவற்றிலுள்ள பொருள் அண்மைநிலையைக் கருத்தில் கொண்டு
சில்,> சல் > சன் என்பவாகிய அடிச்சொற்களிலிருந்து பிறப்பிக்கப்பட்டுள்ள சொற்களை அடுத்து ஆய்வுசெய்வோம்.

தயாராகுங்கள்.


ஈட்டி (எறிதல்)

ஈட்டி என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

இதன் அடிச்சொல் இடு என்பது.  இது பலபொருளுடைய சொல். இதன்
பொருளாவன: அணிதல், (பிச்சை முதலியன ) ஈதல்,  எறிதல், சொரிதல், வைத்தல் என்பன.

"இட்டார் பெரியார்"  :    ஈதல் செய்தவரே பெரியோர்.
பொட்டு இட்டுக்கொண்டாள் :  இங்கு அணிதல் பொருள்.
இதைப் பெட்டியிலிட்டுப் பூட்டு:    வெறுமனே வைத்துப் பூட்டுக என்பது.

எறிதல் என்பதும் பொருளாதலின், இடு + இ = இட்டி என்றும்  ஈட்டி
என்றும் வரும். பின்னது முதனிலை திரிந்த தொழிற்பெயர். இகரம்
ஈகாரம் ஆனது.  கெடு > கேடு என்பதும் முதனிலை நீண்ட தொழிற்பெயர்.  கேடு + இ = கேடி என்று போக்கிரியைக் குறித்தது.


இட்டி என்பது உலக வழக்கில் இல்லை. செய்யுளில் வந்தவிடத்துக்
காண்க.  ஈட்டி என்பதே உலகவழக்குச் சொல்.

ஈட்டுதல்  (சம்பாதித்தல் ) என்பது வேறு சொல் .


யார்பிள்ளை ஆனாலும் யார்பேரன் ஆனாலும்

தென்கொரியாவின் அதிபர் மக்கள் ஆதரவினால் பதவிக்கு
வந்தவர். வழக்கின் காரணமாக பதவியை விட நேர்ந்தது.
இவர் முன்னைய  அதிபரின் மகள். மக்களாட்சியில் வேறு
யார் வருவதாயிருந்தாலும் மக்கள் ஆதரவு தேவையன்றோ?
அதுவே மக்களாட்சி.  ஓர் அதிபரின் மகள் என்பது அறிமுகத்துக்கும்
புகுமுகத்துக்கும் பயன்படுவது மட்டுமே.

யார்பிள்ளை ஆனாலும் யார்பேரன் ஆனாலும்
பார்தன்னில் ஆதரவு மக்களினால் ‍=== ஊரூராய்
என்னென்ன கூறினும் வாக்கில்லை என்றாலோ

பொன்னன்ன பூம்பதவி இல்.



பொன்னன்ன =  பொன் அன்ன :  பொன்னைப் போன்ற மதிப்புடைய.
பூம்பதவி ‍:  அழகிய பதவி; பூவான பதவி.  பூம் ‍=  புகும் என்றும்
இரட்டுறலாக வரும்.