சனி, 19 ஜூலை, 2014

அச்சாரம்

அச்சாரம்  என்ற பேச்சு வழக்குச் சொல்லை இப்போது காண்போம்.

இதன் முந்து வடிவம் அச்சகாரம் என்பது ;  ஆகையால் அதனை முதலில் ஆய்தல் தக்கது.

ஒரு மாட்டை விலை பேசுகிறவன், பேசிய விலையில் இணக்கம் உண்டானபின்  நாளை காசோடு வருவேன் என்பான். அவன் நாளை வருவானோ மாட்டானோ? அ வன் கொஞ்சம் கூடுதலாகத் தருகிறேன் என்று சொன்னதை நம்பி, வாங்குவோம் என்று தெரிவித்த வேறு  ந(ண்)பர்களிடம் மாட்டுக்காரன் ஏதும் வாக்குக் கொடுக்காத நிலையில் அவன் வரவில்லை என்றால் என்னாவது?  அ வன் அப்பால் நகர்ந்த பின் இன்னொருவன் வந்து சற்று கூடின விலைக்குக் கேட்டால்,  முதல் வந்து பேசியவன் நிலை என்னவாகும்?  வணிகத்தில் இத்தகைய குழப்பங்க்கள் ஏற்படாமல் மாட்டுக்காரனும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்; பேசியவனும் மாடு எனது என்ற நம்பிக்கையுடன் உறங்கவேண்டும். சண்டை ஏற்படாமலும் புரிந்துணர்வோடும் வணிகம் ஒப்புடன் நடைபெறுதல் இன்றியமையாதது.

இதில் உள்ள ஒருவித அச்சத்தின் காரணமாக, அச்சகாரம் கொடுத்தலும் பெறுதலும் ஏற்படலாயிற்று.   இதையே முன் நிற்கும் "அச்ச(ம்)" என்ற சொல் காட்டுகிறது.

காரம் என்பது பொற்காசுகளுக்கு அல்லது பொன்னுக்கு உள்ள பெயர்களில் ஒன்று. இந்த அச்சம் தவிர்த்தல் பொருட்டு, வாங்குபவன் விற்பவனிடம்  நிறுநயம்  செய்த தொகையில் ஒரு பகுதி  பொற்காசுகளைக் கொடுத்தான்.

இது அச்சகாரம் எனப்பட்டது. பின்  அச்சாரம் ஆயிற்று. (மரூஉ ).

பொன்னுக்குக்  "காரம் " எனும் பெயர் ஏற்பட்டது,  அணிவது தவிர  பொன் சேமிப்புகளை எங்காவது வீட்டுக்குள் புதைத்தோ வேறு முறைகளில் மறைத்தோ வைத்ததனால்தான்.  கரத்தல் - மறைத்துவைத்தல். கர+ அம் =  காரம்;  முதனிலை  திரிந்த தொழிற்பெயர்.  க > கா  என்று   நீண்டது. ரகரத்தில் உள்ள அகரம்  கெட்டது,  அம்  விகுதி  பெற்றது,    புதைத்து வைத்ததனால் "புதையல்"  என்ற சொல் வந்தது போன்றே, மறைத்து வைத்தது "காரம்"  ஆனது.

Singapore : சிவன் சிலை நிலைக்குமா??

புகழ்ப்பெற்ற போத்தம்பா சீர்பெறு கோயில் 
அகழ்ந்துடைத் தாகும் புதிதாய்,  ----  நிகழ்வில்  
பளிங்கிற் சிவன்மேல்;  இலங்கிஇனி  நிற்கக் 
கலங்கும் உளங்கள் பல.

சிங்கை நகரில் உள்ள பொத்தோங் பாசீர் கோவிலில் முகப்பு மேல்ததளத்தில் 
பளிங்கினாலான சிவன் சிலை இருக்கின்றது,  புத்தாக்கம் பெறும் கோவிலில் இதற்கு இடமிருக்காது .என்று கேள்வி. உடைபடாமல் அகற்றி  மறு நிறுவல் செய்ய  இயலாது  என்று சொல்லப்படுகிறது.  பாவம்  சிவன் . வட இந்திய பாணியில் அமைந்த சிவன்   என்ன  ஆகுமோ. அதுபற்றிய சில  வரிகள் மேலே. 

  நிகழ்வில் =  நிகழ்காலத்தில் ; இப்போது.

அகழ்ந்துடைத் தாகும்  =   அகழ்ந்து  உடைத்து   ஆகும்.

புதிதாய்  : ( மீண்டும் எடுத்துக் கட்டி ,  குடுமுழுக்கு  (மகா கும்பாபிஷேகம் )  செய்ய  உள்ளனர் )


பணம்பண்ணும் வித்தை

பணம்பண்ணும் வித்தைபுகழ்  பரப்பி விட்டோன் 
பண்பு நலம்  என்பதிலோ     பாதா   ளத்தில்  
குணம் என்னும்  குன்றுண்டு தொலைவில்!  இன்றோ 
கூவுவன எல்லாமும் இசைப்ப தில்லை.