ஞாயிறு, 18 மே, 2014

Terrorists arrested in Malaysia Targeted Indian cities

காவல்துறை  மலேசியா திறமை மிக்கோர்  ‍‍ --- எந்தக்
கள்ளனையும் கண்டுபிடி கடமைத் தக்கோர்.
மேவிடுவார்  வேலைனை செயல்முன் ஏவல்‍‍‍‍-- ‍‍‍‍‍‍‍ இந்த‌
மேதினியில் வேண்டாத மெய்ம்மை மேலோர்!

சென்னையிலே பெங்களூரு நகரந்  தன்னில் ‍‍---  வெடி
சிதறுகுண்டு வைப்பதற்குத்  திட்டம் பண்ணி,
உன்னிப்பாய் ஒளிந்திருந்தார் இரண்டு தீயர் ‍‍‍--- கைது
ஒருமிக்கச் செய்புகழால் உயர்ந்த காவல்!

அங்குமிங்கும் சேற்று நீர் உண்மை போல---- ‍‍ தீர்வு
அடையாத குற்றம்சில  இடையில் மேவும்;
எங்குமொரு குற்றச்செயல் இல்லா நாடு ‍‍‍ ---உலகம்
இனிக்காண வேண்டுவதே  இனிதே தேடு!

Source of news:  The Sun, (Malaysia).  May 16, 2014.

will edit for link etc later

வெள்ளி, 16 மே, 2014

"சருகு பிளகு"

சில நாட்களின் முன்பு, பாக்கு பற்றி எழுதியிருந்தேன். பகுக்கப் படுவதால் பாக்கு ஆயிற்றென்பதை விளக்கியிருந்தது அவ் இடுகை. மற்றொரு பெயர் கமுகு என்பதும் கண்டோம்.

வெற்றிலைக்கு வேறு பெயர் "சருகு" என்பதும் பின் ஓர் இடுகையில் சொல்லப்பட்டது.

வெற்றிலை பாக்குப் போடுவதை "சருகு பிளகு" போடுவது என்பதுண்டு. இப்போது இவ்வழக்கு இன்னும் உளதா என்பது தெரியவில்லை. இதில் பிளகு என்பது பாக்கைக் குறிக்கும்.  ஆனால், தமிழ்ப் பேரகராதிப் படி, பாக்குமர வேரைக் குறிப்பதே "பிளகு" என்னும் சொல். வேரை யாரும் போடுகிறார்களா என்று தெரியவில்லை. முன் போட்டதற்கான ஆதாரம் ஏதும் கிட்டவில்லை.

பகு என்பதிலிருந்து பாக்கு வருதல்போல். பிளத்தல் என்பதிலிருந்தே,  "கு" என்னும் விகுதி பெற்று பிளகு என்னும் சொல் அமைகிறது.பேச்சு வழக்கின்படி, பிளகு என்பது பாக்கையே குறிப்பதாகும்.  மலேசியாவில் பாக்கு விளைந்த இடங்கள் உண்டு. "பினாங்கு" என்றாலே பாக்குத்தான்.

இந்தோனேசியாவில் தஞ்சோங் பினாங் என்றோர் இடம் உண்டு. இந்த இடமும் பாக்கு விளைந்த பெருமை உடையதேயாம்.

பிளகு என்பது பிளத்தல் எனும் வினையடியாகப் பிறந்த சொல் என்பது காண்க.

Prime Minister மோடிக்கு வாழ்த்து!

ஆசியாவின் பண்பாட்டு மையமதில் ஒன்று
அரியபல நிகழ்வுகளால் தலை நிமிர்ந்து நின்று
மாசுறாத கலைகள்பல உலகினுக்கே தந்து
மாண்புறவே திகழ்பரதப் பெரு நாட்டின் முந்தும்

தலையமைச்சர் தகவுற்று வரலாற்றை ஆக்கி
நிலவுலகம் போற்றிடவே நேருயர்ந்த அண்ணல்
குலைவுறாத நெஞ்சுரத்தோன் மோடிக்கு வாழ்த்து!
கூட்டணியாய் வென்றுபுகழ் ஏற்றுநர்க்கும் வாழ்த்து.

உங்களின்முன் அச்சுறுத்தும் வேலைகளோர் குவியல்
தங்கமென ஒவ்வொன்றும் உருமாற்றம் அணிய,
பங்கமிலா விளைவுகளே பலகாலும் உலகும்
பார்க்குமொரு பாங்குடன்நல் அரசுமினி வளர்க!