சனி, 24 ஜனவரி, 2026

பிரளயம் இது பிறழ் வினையிலிருந்து.

 பிரளயம் என்ற சொல் சமஸ்கிருதமா?

பிரளயம் என்பது இயற்கை நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு, அழிவும் ஏற்படுவது ஆகும்.  பிரளயங்களில்,  தினப்பிரளயம் என்பது பிரம்மனின் ஆயுளில் ஒரு நாளின் முடிவில் ஏற்படுவது  ஆகும். தினந்தோறும் நிகழ்வதால் நித்தியப்பிரளயம் என்றும் கூறப்படுவதாகும். நைமித்திகப் பிரளயம் என்பது பகல் முடிந்ததும் நிகழ்வது.  அவனது வயதில் நூறாண்டுகட்கு ஒருமுறை ஏற்பட்டால் பிர்மப்பிரளயம் எனப்படும். அழிவுகள் ஏற்படும் முறைகளை அறிந்துகொள்ள மனிதன் முற்பட்டது மிக்கப் பாராட்டுக்குரியது என்று சொல்வோம்.  நமது பண்டை மக்கள், ஆய்வு மனப்பான்மை உடையவர்களாய் இருந்து இப்படிச்  சொற்களைப் படைத்திருப்பது நமக்கும் ஒருவழிகாட்டுதல் என்றே கருதவேண்டும்.

தற்போது நடைபெற்றுவரும் ஆய்வுகளில் முற்செலவை  இம்முறை கைக்கொண்டு அவற்றுக்குரிய சொற்களைப் படைக்கும் திறத்தை நாம் பெறுவது நிகழ்தல்,  இன்றியமையாது வேண்டப்படுவதென்க.

பின்றுதல் என்ற வினைச்சொல் பின் என்பதிலிருந்து வருகிறது. பின்றுதல் என்பதற்கும் பிறழ்தல் என்பதற்கும் பொருண்மைத் தொடர்பு மிக்குள்ளது என்று அறிக, உன் செலவுகள் பின்றாமல் பேணிக்கொள் என்றால் ''பிறழாமல் பேணிக்கொள்''  என்று பொருள்.

பிறழ்தல் என்பது புரள்தல் என்றும் வருவதுதான்.  இது பேச்சுவழக்கில் நன்கு வழங்குகிறது என்பது நீங்கள் அறிந்தது ஆகும்.

பிறழ் என்பது பிரள்(தல்) என்று மாகும்.   பிரளயம் என்ற சொல்,  பின் காட்டிய சொல்லினின்று வந்தது ஆகும்.  பிறழயம் என்று வருதல் இல்லை யாதலால்,  பிறழ் என்பது பிரள் என்று மாறிய பின்பே பிரளயம் என்ற சொல் உருவாகும் என்பதை அறிந்துகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


திங்கள், 19 ஜனவரி, 2026

புராணம் என்பதென்ன

 புராணம் என்பதென்ன என்று வினவிக்கொள்கிறோம். இதற்கு நாம் கண்டுபிடிக்கும் விடையிலிருந்து  புராணம் என்ற சொல்லுக்கு  அந்தச் சொல் புனைந்த காலத்தில் என்ன பொருளில் வழங்கியது என்று அறிந்துகொள்வோம்.

ஓர் இறைக்கதையை எடுத்துச் சொல்கிறவன்,  உரிய நிகழ்வினைக் கேட்டறிந்து கூறுகிறவனாகில், தான் அறியாமற் கழிந்தவை போக எஞ்சியவற்றைக் காதில் வாங்கிக்கொண்டு,  அந்தக் கதையைப் புனைந்து உரைப்பவனாகிறான்.  

புனைதல் என்பதென்ன?  புனையரணம் புராணம்.இந்தச் சொல்,  னை என்னுமெழுத்தும் யகரமும்  கெட்ட ( அல்லது நீக்கப்பட்ட) சொல்லாகும்.  இந்தச் சொல்லும் புனைவுச்சொல்லே. அல்லது தானே மக்களிடம் திரிந்த சொல்லெனினும் அதுவும் கூடுவதே. பு(னைய)ரணம்>> புரணம்>  புராணம்  ஆனது.  இது இரண்டு எழுத்துக்கள் மறைந்த இடைக்குறைச் சொல். எழுத்துக்கள் வேண்டுமென்றே விடுக்கப்பட்டிருந்தால் அதனைத் தொகை என்பர்.  மூவுழக்காழாக்குத் தினைதந்தாள் என்றதை மூழாக்காழாக்கு  என்று திரித்தால், அது தொகை ஆகும். இவ்வாறு சொல்லின் முழுமையும் அறிந்தோர் தமிழரே. பிறர் சொற்பர் ஆவர்.

இனி இன்னொரு பிறப்பும் இச்சொல்லுக்குக் கூறலாம்.  இலக்கியத்தை, கவிதையை, இறைவரலாற்றை, நடந்தனவற்றை உள்ளபடி காத்து வைப்பதற்கு ஆனவற்றை  எழுதிவைக்க ,  புர+ அணம் >  புராணம் என்று சொல்லமைந்தது என்னில்,  அதுவும் கூடுவதே.  

இச்சொல்லை முன்னரே  ஆய்ந்தோ ஆயாமலோ, அமைப்புக் கூறினவர்களும் உள்ளனர். அவர்கள் பழையன காத்தல் என்ற பொருளில் புராணம் ஆகும் என்றனர்.  அதையும்  சிந்தித்துக்கொண்டால்,  இச்சொல் ஒரு பலபிறப்பி என்று கொள்ளவேண்டும். பிற கூறினோரும் உளர். அவற்றை அவர்தம் நூலிற் காண்க.

புராணம் என்றால் பழமையானது, பொய்யுரை என்ற பொருளில் இங்கு எதுவும் கூறப்படவில்லை என்பதறிக.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



வெள்ளி, 16 ஜனவரி, 2026

மூலியம், மூலிகை ( அவன் மூலியமாய்....) சிறு அலசல்.


கதிர்வேலுப் பிள்ளை என்பவர் ஒரு சிறந்த அகரவரிசைத் தொகுப்பாளர். அவரை நினைவு கூர்வோம்.

========================================================================
தமிழர் நாகரிகத்தின் பழமையான சான்றுகள் இப்போது தமிழ்நாட்டில் அகழ்வாய்வின் மூலமாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

சொல்:  முல் > முன்.  சொல்லாக்கங்கள்:

முல் >  முலை  (முன்னிருப்பது)

முல் > முன் ( லகர னகரப் போலி)  

முன் >  முனை ( முன்னிருப்பது). 


சொல்லின் முதல் நீளுதல்:

முல் >  மூல் > மூலம்.    மூலம் என்பதில்  அம் விகுதி வந்தது.  பழு> பழம் என்பது போலும்.

மூல் >  மூலிகை.  ( இ, கை).

மூல் > மூலியம் ( பேச்சு வழக்குச் சொல்). வழக்கு என்றால் பயன்பாடு.

(மூலியம் -  வழியாக, மூலமாக என்று பயன்பாட்டுப் பொருள்)

இது பலபொருட் சொல்.  through, means, price, payment  (see dictionary). etc.

மூலிகன் -  செடி. ( தவசி).

இப்போது மூலிகை என்ற சொல் மட்டும் வழங்குகிறது.  மூலிக்கை என்ற சொல்லும் உள்ளது. இது மருந்து மூலிகைகளைக் குறிப்பது.

மூல்+ இ+ அம் என்பவற்றில் இ - இடைநிலை, அம் - இறுதிநிலை;  இறுதிநிலையாவது விகுதி.   மிகுதி =  விகுதி  ( மி - வி  திரிபு).

விகு - விகுத்தல் என்ற சொல் இருக்கலாம் என்றாலும் பழைய நூல்களிக் கண்டுபிடிக்க முடியவில்லை.  விஞ்சு > < மிஞ்சு திரிபு எனில் அமையும்.

வியாழன், 15 ஜனவரி, 2026

அகஸ்துமாத்து, அல்லது அகஸ்மாத்து

 காரணம் இல்லாமல்  என்பதை அகஸ்துமாத்தாக அல்லது அகஸ்மாத்தாக  என்பர்.

ஒரு காரணம் என்பது  எப்போதும் மனத்தில் இருப்பது.  அந்தக் காரணத்தை,  காரியத்தைச் செய்பவன் அல்லது காரியத்தினால் பாதிப்புற்றவன் வெளியில் சொன்னால்தான் பிறரும் அதை அறிந்துகொள்ளவேண்டிவரும்.  நடப்பிலிருந்து ஊகித்துக் கொள்வதாய் இருந்தாலும் ஊகித்தவன் வெளியிட்டாலன்றி பிறர் அறிதல் கடினம்தான்.

இந்தச் சொல்லில் மாற்று என்பது  மாத்து என்று வந்தது,  மக்கள் பயன்படுத்தும் முறையில் சொல்லமைந்ததைக் காட்டுகிறது. காரணம் இருக்கும் என்னும் மனத்தினருக்கு அதற்கு மாறாக சம்பவம் நடந்ததையே இது காட்டுகிறது.

அகத்து -  உள்ளமைந்த காரணம் உண்டென்று எதிர்பார்ப்பவருக்கு,  மாத்து =  மாற்றமாக  ( நடந்தது  என்பது_.

அகத்து என்பதே அகஸ்து என்று வந்துள்ளது. பேச்சுத் திரிபு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை

ஞாயிறு, 11 ஜனவரி, 2026

துவைத்தல் ஏசுதல் இரண்டையும் வைத்து ஒரு சொல் புனையமுடியுமா?

 சொல்புனை  பயிற்சி ஒன்றை இப்போது நடாத்தி, தமிழை மேலும் அறிந்துகொள்வோம்.

துவைத்தல் என்பதொரு சொல். இதைச் சொன்னவுடன் துணியைத்  துவைத்தலென்பதே நினைவுக்கு வருகிறது.  இந்தச் சொல் ஒலி எழுப்புதல் என்பதையும் குறிக்கும்.   ஒலி எழுப்புதலைக் குறிக்க மட்டும்  ஐம்பதுக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன. அவற்றுடன் துவைத்தல் என்பதும் சேர்ந்து தமிழ் வளம் காட்டுகின்றது. உலகில் மிகப் பழைய மொழி,  உலகின் மிக்கச் செழுமையான மொழி என்பதில் எந்த ஐயப்படுமில்லை.

ஒலித்தல் - அரற்றல், அரம்பல், அலறல், அழுங்கல், அர்த்தல், ஆலல், இசைத் தல், இடுத்தல், இமிர்தல், இமிழ்தல், இயம்பல், இரங்கல், இரட்டல், இரைத்தல், இணைத்தல், உறற்றல், உறைத்தல், உலம்பல், உழம்பல், உளைத்தல், ஏங்கல், கதித்தல், கரைதல், கலித்தல், கறங்கல், களைத்தல், குமுறல், குரைத்தல், குளிறல், சலித்தல், சிதைத்தல், சிம்பல், சிரத்துதல், சிலம்பல். சிலும்பல், சிலைத்தல், ஞெள்ளல், தழங்கல் , துவைத்தல், தெவிட்டல், தெழித்தல், தொளித்தல், நரலல், நரற்றல், பயிறல், பிளிறல், பிறங்கல், புலம்பல், முரவல், முரற்றல், முழங்கல், விம்மல்.

மொழியைப் பண்படுத்தி வளமாக்கி வைத்துக்கொள்வதற்கு வேண்டிய அரசியல் நிலைத்தன்மையும் ஆட்சி ஒழுங்கும் தமிழ்மக்களுக்கு இல்லாதிருந்தால் இந்த வளத்தை எட்டிப் பிடித்திருக்க இயலாது.

அரட்டுதல் என்ற சொல் ஒலிஎழுப்புதலுடன் அதை அதிகாரத்துடன் செய்தலையும் குறித்ததால்,  ஆட்சியாளனைக் குறிக்கும் அரசன் என்ற சொல் அதிலிருந்து வந்தது.  அரட்டன் என்பது அரசனுக்குத் தமிழில் பழைய பெயர். அதிலிருந்து உலகின் பல மொழிகளில் அரசனுக்கான பெயர்கள் அமைந்தன. ரெக்ஸ் என்ற இலத்தீன் சொல் இதிலிருந்து வந்தது.   ராணா,  ராணி என்பவையும் இதிலிருந்தே வந்தன.  ராவ் என்ற பட்டப்பெயருக்கும் இதுவே அடிப்படை. ராவ் என்பதும் ராய் என்பதும் இவற்றினின்று புறப்பட்டன.

சரியான தண்டனை போல ஒருவனைப் புடைத்து ஒன்றைத் தெளிவாக்கினால் வெளுத்துக் கட்டிவிட்டார் என்று சொல்வது வழக்கமாய் உள்ளது. துவைத்தல் என்பதும் இப்படி ஒருவனைத் தண்டிப்பது போல் அறிவுறுத்துவதைக் குறிக்கும்.  ஆனால் அத்துடன் அவனை ஏசவும் செய்தால், அதற்கு இன்ன்னொரு சொல் வருகிறது.  துவேசித்தல் என்பது அது.  ஏசித்தல் என்பதை ஏச்சினையும் சேர்ப்பித்துக்கொள்வதைக் குறிக்கும்.  துவை+ ஏசித்தல் > துவேசித்தல் என்ற சொல் இதற்கு வருகிறது..  இச்சொல் சமஸ்கிருத ஒலியமைப்பில் நன்கு ஒளிசெய்கின்றது என்பதைக் காணலாம்.

துவை + ஏசுதல் >  துவை+ ஏசித்தல் > துவேசித்தல்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

வெள்ளி, 9 ஜனவரி, 2026

அதிசயம் என்பது தமிழ்?

 அதிசயம் என்னும் சொல்லை ஆய்வு செய்வோம்.

பொருள்கள் உலகில் தோற்றமளிப்பது மூலப்பொருள்கள்  அல்லது ஆக்குவதற்குரிய பொருள்கள் இசைந்து அல்லது இணந்து  சிறத்தலாலேதாம்.

தண்ணீரில் தீ எரிவது ஓர் அதிசயம்  ஆகலாம். அது நடைபெறுவதற்கு எவ்வெப் பொருள்கள் சேர்ந்தன அல்லது கலந்தன என்பதே கேள்வி ஆகும்.

அதி + இசை(வு) +  அம் >   அதி + இசை+ அம் >  அதிசயம்  ( திரிபுச்சொல்).

அதி +  சை + அம் >  அதிசயம்  ஆகும்.

அதி இசை என்பதில் உள்ள இகரம்  ஒழிந்தது.

சை என்பது ச என்றானது ஐகாரக் குறுக்கம்.

அதிகம் என்ற சொல்லும் தமிழ்தான்.   அது இகத்தல்  என்றால் அது மீறுதல் அல்லது  கூடுவது.   மிகுதியாவது.  அது இக >  அதிக.

இது குறைச்சொல்லாய்  அதி என்று முன்னொட்டாகும்.   சொற்களிலும் வரும்.

தமிழ் இயன் மொழி.  மிக்கத் திரிசொற்களை  சமஸ்கிருதத்துக்குக் கொடுத்துவிடுவது இயன்மொழிக்கு உயர்வு தரும் என்ற கருத்து ஒரு காலத்தில் இருந்தது.  ஆனாலும் தொல்காப்பியர் காலத்திலே திரிசொற்கள் புகுந்துவிட்டன. 

இயற்சொற்கள் மட்டுமே கொண்டு மொழி நடைபெறுமானால் அஃது நல்லதுதான்.  தனித்தமிழ்   இனிமை மேலோங்கும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உள்ளது.


செவ்வாய், 6 ஜனவரி, 2026

குஞ்சு, கிராமம், சமஸ்கிருதத் தொடர்புகள்.

 தலைப்பில் கண்ட ''குஞ்சு''  என்ற சொல்.

ஓரெழுத்து ஒருசொல் என்று யாம் இங்குக் குறிக்க விரும்பும் சொற்கள் பெரும்பாலும் நெடில்  ஆனவை.   வா,  தா , போ முதலிய ஓரெழுத்துச் சொற்கள் இவற்றுள் அடங்கும்.  நாம் குறித்தவை.  நீ என்ற சொல்லும் இத்தகு சொல்லே எனினும், இது வினையன்று.  பதிற்பெயர் ( pronoun )  ஆகும்.  முன்னிலைப் பதிற்பெயர் என்றும் கூறுதற் குரியது இச்சொல். நான் என்பது ஒரு பதிற்பெயர் என்றாலும் இரண்டு எழுத்துக்கள் உண்மையால், அதைத் தனியாகச் சொன்னோம். நான் என்பது இப்போது பேச்சில் மூக்கொலியாக வந்து, ஓரெழுத்துச் சொல் போலவே ஒலிக்கும்.

சங்கதத்தில் பதில் என்பது  தன் இறுதி மெய்யை இழந்து,  பதி என்றாகி,  முதலெழுத்தாகிய ''ப''  என்பது  ''ப்ர''  என்றாகும்.  இறுதியில் ''ப்ரதி''  என்றாகும்.  இதைத் தமிழாக்க விழைந்தால் பிரதி என்னலாம். படி என்பதுதான் ப்ரதி என்றானது என்றும் சொல்வதுண்டு. எனவே ப்ரதி என்ற சங்கதம், சமவொலிச்சொல்.

சங்கதம் அல்லது சமஸ்கிருதம் என்பது சமவொலிச்சொல் என்றால்,  அது ஒரு தனிமொழிச் சொல்  என்பது பொய்மையே. ஆகவே பண்டிருந்தவர்கள், இதை ஒரு வேற்றினத்தவரின் பேச்சு என்று கருதவில்லை. ஒரே இனத்தாரின் வெவ்வேறு வகையான ஒலிப்பு முறை என்று கருதினர் என்பது தெளிவு. ஆகவே சமஸ்கிருதம் எனபது வெளியாரின் மொழி அன்று. அது வெளியாரின் மொழி என்பது வெள்ளைக்காரன் ஆட்சியில் இருந்தபோது அவிழ்த்துவிட்ட புளுகல். இதை நம்பியே மறைமலையடிகள்,  தேவனேயப் பாவாணர் முதலானோர் தங்கள் வரலாற்று ஓட்டத்து உரைகளை அமைத்திருந்தனர். அப்போது அவர்கள் இருந்த நிலையில் வெள்ளைக்காரன் புளுகிலிருந்து மேலெழுந்து  உரைபகர அவர்களாலும் இயல்வில்லை.  அவர்கள் நிலையில் நாமிருந்திருந்தால் நாமும் அந்தக் கதையில் தான் ஆழ்ந்திருந்திருப்போம்.

ஓரெழுத்து ஒருசொல்,  பல நெடிலானவை.  தனிக்குறில்களும் ஓரெழுத்தாகவே நின்று,  தனிப்பொருள் தரும்.  எடுத்துக்காட்டாக இங்கு கு எனற்பாலதைக் காண்போம்.  கு என்பது குறுக்கம் என்று பொருள்படும்.  கு என்பது சமஒலிச் சொல்லாக ( சங்கதம் அல்லது சமஸ்கிருதம்)  குறுக்கம் என்று கூறினோம் அல்லோமோ?  குக்கிராமம் என்ற சொல்லின் கு என்பது  ஒரு முன்னொட்டாக நின்று '' மிக்கச்சிறிய'' சிற்றூர்  என்று பொருள்படும்.  கிராமம் என்பது பழந்தமிழில் கமம் என்று வரும். கமம் என்பது பல்பொருளொரு சொல். தற்போது கமம் என்பது வேறுசில மொழிகளில் எவ்வாறு வருகிறது என்பதைப் பிற்பாடு கூறுகிறோம்.  கமம் ஒன்றிருந்தால் விளைநிலங்கள் நடந்து சென்றடையும் தொலைவில் அருகிலே இருக்கும். மலாய்மொழியில் கம்-போங் என்ற சொல்லில் கம் - கமம் உள்ளது. கம் என்ற ஆங்கில முன்னொட்டில் கமத்தின் தாக்கம் உள்ளதா?

குன்று என்ற சொல்லிலும் இந்தக் குறுக்கம் உள்ளது.   குன்> குனி என்பதிலும் இந்தக் குறுக்கம் உள்ளது  (குனிதல்).

குன்> குன்+சு >  குஞ்சு  வயதுக் குறுக்கம். உடற்குறுக்கம்.

விரிந்து நில்லாமல் கூடி நின்றாலும் இதுவும் ஒரு குறுக்கம்தான்.  கும் > கும்மி.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உள்ளது.













சனி, 3 ஜனவரி, 2026

உற்பத்தி :

 உற்பத்தி என்னும் சொல்.

இயற்கையில்,  ஒரு கரு தாயின் கருப்பையில்  '' உள் பற்றி'' யபின்  வளரத் தொடங்குகிறது.   இதனை ஆய்ந்துணராமல்,  உற்பத்தி என்பது தமிழன்று என்று மயங்கியோரும் உளர். சரியான சிந்தனை செய்யாமையே காரணம் ஆகும்.  உற்பத்தி என்பது இந்த இயற்கை விதியை அறிந்த சிற்றூரான் அமைத்து வழங்கிய சொல். 

இதையும் படித்து அறிந்துகொள்ளுங்கள். https://sivamaalaa.blogspot.com/2013/11/blog-post_20.html.

இதற்கு வேறு வகைகளிலும் அமைப்பு அறிவிப்பாருண்டு.  எனினும் இதுவே இதன் உண்மைப் பொருளை நன்கு  அறிவிக்கும் விளக்கமாகும்.

விதைகள் கொட்டைகளிலும் உள் பற்றிய பின்புதான் வளர்ச்சி உண்டாகிறது.

சிலர் வெளியில் பற்றியபின் வளர்வனவும் உண்டு என்னலாம்.   சில நுண்மிகள் ஒன்றன் வெளியில் பற்றியபின் வளர்கின்றன என்னலாம்.  வழக்கில் வெளியில் பற்றுதலும் உற்பத்தியில் அடங்கும். இதைத் தனியாக விளக்கவேண்டின் ''வெளிவளரி''  என்று ஒன்று வழங்கிக்கொள்ளலாம்.  ஏற்புழி அவ்வாறு நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.







புதன், 31 டிசம்பர், 2025

புத்தாண்டே வருக வருக.

புரண்டுவரும் செல்வங்கள் பொன்னும் மணியும்

இரண்டா  யிரத்திருபத் தாறில் ----- திரண்டுவரும்

இம்மா நிலம்படைத்த    இன்தெய்வம் ஆசிதர

நன்மா நிலம்செழிக்கும்  நாள்.


இது புத்தாண்டை வரவேற்கும்  நேரிசை வெண்பா .

பொன்னும் மணியும் புரண்டுவரும் செல்வங்களும்  இந்த 26-ம்  ஆண்டில்

செறிந்து வரும் என்று இப்பாடல் வாழ்த்துகிறது.  இதற்கான  ஆசிகளை  

கடவுள் கொடுப்பார். குற்றம் முதலிய மிக்கில்லாத நாடுகள் தமக்கு இந்த 

புத்தாண்டு நாள் வளம் தருவதாகும். புத்தாண்டு நாளையும் சிறப்பித்தவாறு. 


சிவமாலா.

திங்கள், 29 டிசம்பர், 2025

இலாயக்கு

தமிழர் நாகரிகத்தில் இல்லமும் அதனுடன் தொடர்புபட்ட பொருள்களும்  முதன்மை வாய்ந்தன ஆகும்.  புறத்தனவாய் வாழ்வில் இணைவனவினும்  அகத்தனவாய் மிளிர்வனவே மிக்க விரிவுடையன  ஆகும். சங்கத் தொகை நூல்களில்  அகவொழுக்கமே மிக்க விரிவாக விளக்கப்படுகிறது. காதலித்து மணம் புரிந்துகொண்டு வீட்டுடன் வாழும் வாழ்வே தமிழன் விரும்பிய முழுமையான வாழ்வு ஆகும்.  புறவாழ்வின் வெற்றியும் விரிவேகமும் அகவாழ்வினை அமைத்துக்கொள்ள உதவினவே  ஆகும்.

இலாயக்கு என்ற பேச்சுவழக்குச் சொல்.  அகவாழ்வில் அவன் அடைந்த அமைதியினை நன்கு உணர்ந்துகொள்ள உதவிடும் வழக்குச் சொற்களில் சிறந்த ஒன்றாகும். இலாயக்கு என்பதைப் பிரித்துப் பார்த்தால்.  அகவாழ்வுக்கு உடையவை என்ற  கருத்து  மேலெழுந்து நிற்பதனை அறியமுடிகிறது.

இலாயக்கு என்ற  சொல் இன்று தலையிழந்து,  லாயக்கு என்றே வழங்குகிறது. இந்தச் சொல்  மூன்று பகவுகளை உடையதாய் உள்ளது.  இந்தப் பகவுகளை ஒவ்வொன்றாக அறிந்து இன்புறுவோம்.  இல்,  ஆய்,  அ, அக்கு என்பன இவை. இல்லத்துக்கு ஆன உரிமையை அடையாதவை,  ஒன்றுக்கும் தகுதி இல்லாதவை  ஆகும். ஆகவே உரிமை உடையவை என்பதைக் குறிக்க '' இலாயக்கு'' என்ற சொல் வழங்குகிறது.

இக்காலத்தில் உதவாதவற்றைக் குறிக்கவரும்போதுதான்  தகுதி என்ற பொருளில் லாயக்கு என்பது வழங்குகிறது.  '' இ--லாயக்கு இல்லை'' என்று இச்சொல் வந்துவிடுகிறது.

அக்கு என்பது சொல்லின் இறுதிப் பகவு  ஆகும்.  அக்கு என்றால் உரிமை.  இந்தச் சொல் நெடுங்காலமாக ஓர் இணைத் தொடரில் பொதிந்துள்ளதைக் காணலாம்.  இச்சொல்லுக்கு உரிமை என்ற பொருள் எவ்வாறு வந்துற்றதென்பதை கண்டுகொள்வோம்.   அக்கு என்ற சொல்லில் இரண்டு மிக்கப் பழந்தமிழ்ச் சொற்கள் உள்ளன. எவை எனில்   ''அ'' (அவை) என்னும் சுட்டுச்சொல்லும் கு என்ற சேர்வு குறிக்கும் சொல்லுமாகும்.  சென்னைக்குச் சென்றான் என்ற வாக்கியத்தில் வரும் கு என்னும் சொல் சேர்தலைக் குறிக்கும் சொல். அக்கு என்பதில்   இவை இரண்டும் அதற்குச் சேர்ந்தது என்ற பொருள்தரவே,  ''உரிமை'' என்ற பொருள்  போதருகிறது.  அக்கு வேறு ஆணிவேறாகக் கழன்றது என்ற வாக்கியத்தில்,  உரியன வேறு,  அல்லாதன வேறாகக் கழன்றுவிட்டது  என்ற் பொருள் கிட்டுகிறது. புல்லுக் கட்டில்,  உரியவை  புல்லும் தழையும்.  கயிறு  மாட்டுக்கு உணவாகாத வெளிப்பொருள் ஆகும்.

இல் -  இல்லிற்கு என்று பொருள்தரும். ஆய் -  ஆக என்று பொருள்.  அ -  சேர்ந்தன என்று பொருள்.  

இலாயக்கு என்றால்  இல்லாத்திற்கான உரிமை என்று பொருள்.

இச்சொல் முன்னாளில் வீட்டுக்குத் தேவை என்பது குறித்து, பின் இல்லாதவை என்ற சொல்லால் அவ்வுரிமை இல்லாதவை என்று பொருள் தந்தது.

இது அரபிச்சொல் என்று கொள்ளப்பட்டிருப்பினும் தமிழில்  இருந்த இந்த வழக்குச்சொல்,  பின்னர் அரபியர்களால் பெரிதும் கொள்ளப்பட்டிருக்கவேண்டும் என்று தெரிகிறது.  .  சில தமிழ்ச்சொற்கள் வெளிநாட்டினரால்  விரும்பி வழங்கப்படுகின்றது..  கடித்துக்கொள்வதற்கான உணவு என்ற பொருள்தரும் ''கறி''.  இன்று உலகப்புகழ் பெற்ற சொல்லாகி விட்டது

இலாயக்கு என்பது தமிழாகவும்  ''லாயக்''  என்பது தொடர்பற்ற சொல்லாகவும் ஓர் உடனிகழ்வு  காரணமாக (coincidence)  ஒலியொற்றுமை உடையனவாக இருக்கின்றன என்பதாகவுக் கூறலாம்.  ''லாயக்'' என்பதன் அடிச்சொற்கள் அரபியில் ஆய்வுக்குரியது ஆகும். இலாயக்கு என்பது தமிழ் என்பதில் ஐயமில்லை.

அரபியில் லாயக்  என்றால் பொருத்தமானது. தமிழில் இலாயக்கு என்றால் இல்லத்துக்கு உரிமையானது அல்லது வேண்டப்படுவது என்பது. பொருள்வேற்றுமை சிறிது உள்ளது.  அடிச்சொற்கள் அரபியில் வேறு. (عدم اللّياقة)

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

.பகிர்வுரிமை





அக்கு -  உரிமை.

இல் -   இல்லலம்  உரி

ஆய்  ஆய் - உரிமை



வெள்ளி, 26 டிசம்பர், 2025

சூடு இயல்விக்கும் விண்கருவி சூரியன் ஆன தமிழ்மொழிப்பண்பு

 அடு மற்றும் அரு என்ற இருசொற்களையும் முதலில் எடுத்துக்கொள்வோம். அடுத்தல் என்றால் அருகிற் செல்லுதல்.  அருகுவைத்தல் என்றால் சூடு ஏற்றும்  ஒரு சட்டியையோ மற்ற வெப்பமேற்றியையோ அடுத்து வைத்தல் என்று பொருள்.  குழந்தைக்கு இசிவு வரும்போது இது செய்யப்படுகிறது. இதுபோழ்து இதற்கு மின்னாற்றலால் இயங்கும் கருவிகள் ஏற்பட்டுவிட்டன. அருகுவைத்தல் என்பது இப்போது யாருக்கும் நினைவிலிருக்கும் என்று யாம் நினைக்கவில்லை. அதற்கான ஆங்கில மருத்துவச்சொல் வழங்கிக்கொண்டிருக்கும். சூரியன் எத்துணைக்கல் தொலைவி லிருந்தாலும். அருகிலிருப்பவன் போல் நமக்கு வெப்பமளிப்பதால்,  அவனுக்கு ''அருக்கர்''  என்ற பெயரும் ஏற்பட்டிருக்கிறது.  அருகு+ அர்>  அருக்கர் என்ற பெயர் உள்ளது.. சிலம்பு+ அதிகாரம் >  சில்ப்பதிகாரம் என்று பெயர் ஏற்பட்டதுபோல் இது ஒரு வலித்தல் விகாரம். மிகு+ ஆர்+ அம் > விகாரம் என்றாகும்.  மிஞ்சு> விஞ்சு என்று திரிதல்போல் விகாரம் இது.. 

உடு - உரு என்ற இணையும் இத்தகு பொருளணுக்கத்தை முன்நிறுத்தும்.  சொற்கள் வெவ்வேறு விகுதிகளைப் பெற்றுச் சொல்லமைந்தாலும்,  பகுதிகளையே ஒப்புநோக்கி இதை உணர்ந்துகொள்க. உடு > உடல்,  உரு- உருவம் என்பன காண்க. பொருள் சற்று வேறுபடுதல்,  ஒப்புமை எவ்வாறு எழுமென்பதைத் தெளிவாக்குகிறது. மனிதன் உருவிற்கு உடை அணிவிக்கப்படுகிறது.  உரு என்பது உடலின் புறக்காட்சி;  உடை என்பதும் புறக்காட்சிக்கு உதவுவதே  ஆகும்.  தமிழ்மொழிக்கு ஒரு சொல்லாக்கப் பண்பு மேவுவது  இதன்மூலம் தெளிவுபடுத்தப் படுகிறது.

மடி - மரி என்பன டகர ரகர திரிபியலுக்கு எடுத்துக்காட்டப் பெறும் ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.  இவை பொருத்தமான விகுதிகளைப் பெறும்,  மடிதல், மரித்தல் என்பவற்றில் ஒன்றில் வலிமிகாதும் இன்னொன்றில் வலிமிக்கும் வரும்.  மரிதல் என்ற சொல் அமையவில்லை போலும்.  அதற்குப் பதிலாக, மருவுதல் என்ற வினைச்சொல் அமைந்துள்ளது. மடிதல், மரித்தல் இன்னும் மருவுதல் ஆகிய எல்லாம் மாறுதல் கருத்துக்கள் என்ற அளவில் ஒருமைப்பாடு உடையவை. இங்கு நாம் இத்துணை சொல்லமைப்புப் பண்புகளை எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. இவற்றுக்குள் செல்லாமலே,  ஒரு சொல் திரிபைக் காட்டிவிட்டு,  சூடியன் - சூரியன் என்பதைக் காட்டலாம்.  அது போதுமானதாகவே இருக்கும் என்றாலும்,  சிறிது அதிகச் சர்க்கரையை இங்கு தந்துள்ளோம்.

சூடு தருவதே சூரியனின் வேலை.  இது ஒரு நாட்டுப்புற வழக்கி லிருந்து வந்த ஒரு சொல்.  வெப்பி என்று பெயரைக் கூட வைத்திருக்கலாம்.  வழக்குப் பெற்றுவிடுமாயில் மொழியில் இடம்பெற்றுவிடும். சூடு கொளுத்தினும்  கொளுத்தி என்றும் அமையவில்லை. கொளுக்கி என்ற பெயர் கொளுவிக்கு அமைந்தது.   கொளுக்கி என்பது இடைக்குறையாய் கொக்கி என்று வந்தது.  இவை வேறு பொருட்களுக்கு அமைந்தன.

சூரியனுக்கு அமைந்த பெயர்கள் பல.  அவை நீங்கள் அறிந்தவை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை














சிப்பந்தி

 பலர் உண்ணும்  அமர்வூட்டு முறையை,  பந்தி என்று சொல்கிறோம்.  இந்தப்  பந்தி என்ற சொல்லினை,  நம் பவணந்தியாரின் முறையைக் கையாண்டு பிரித்துப் பார்த்தால்,  எளிதிற் பொருள்கண்டு மகிழ்வினை எய்தலாம்.  சொல்லினை ஆய்வுசெய்கையில் மகிழ்வு அடைந்துகொள்வது,  மனப்பதிவு ஆய்வு முறைக்கு வித்திடும் என்று எதிர்க்கலாகாது.. எதைச் செய்தாலும் செய்வதில் மகிழ்வு கொள்ளுதல் என்பது ஒரு பங்காற்று முறையாகும்.  

பன்மை+ தி >  பன்+தி >  பந்தி என்று எளிதாக அமைத்துக் காண்க.  மைவிகுதி இணைத்து விலக்கிப் புணர்த்துவது பவணந்தியார் பண்புப்பெயர்கள் அமைவதற்குச் சொன்ன முறை.  இங்கு எளிதிலுணர்தல் என்ற பெறுதல்முறைக்காக இதைப் பரிந்துரை செய்கிறோம்.

பல வேலைத் தலங்களில் ஊழியர் பலர் இந்நாளில் வேலையிலிருப்பர்.  இவர்கள் பெரும்பாலும் பலராயிருக்கும் சிறிய வேலைக்காரர்கள் தாம். சிறு வேலைக்காரர்கள் என்பது தோன்றும் வண்ணம் சிறு என்பதை முன்னில் இட்டு,  சிறுப்பந்தி என்று இணைத்தால் சிறுவேலைப் பலர் என்று பொருந்தும். சிறுப்பந்தி என்பதற்கு  சிற்பந்தி என்று போட்டு,  இன்னும் எளிமையாக்கி, சிப்பந்தி என்று ஆக்கிவிட்டால் என்ன?  வேலை எளிதில் முடிந்து ஒரு புதுச்சொல்லும் கிட்டிவிட்டது.

இயற்றமிழின் இனிமை கண்ட புலவர்-- இதனை ---பகுதிச் சொல்லை மிக்கக் கடிய முறையில் வெட்டி எடுத்துச் சொல்லை இயற்றுவதை,-------  இயற்றமிழ்ப் புலவர்கள் விரும்பார். அவர்களுக்கும் எரிச்சலின்றிச் சொல்லாக்குதல் கடனாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை












செவ்வாய், 23 டிசம்பர், 2025

தனயன் என்பதும் மற்றும் சமஸ்கிருத மொழிப்பண்பும்

 ஐகாரம் இடையில் வந்த சொற்கள் சில,  அந்த ஐகாரம் அகரமாக மாறிவரும். இது ஒரு குறுக்கம்.   சொல்லாக்கத்தில் மட்டுமன்று,  கவிதையிலும் இத்தகு குறுக்கங்கள் வரும்.  இன்னும் பேச்சு வழக்கிலும் ஐகாரம் இடையில் நிற்கும் சொற்கள் அந்த ஐகாரம் அகரமாகத் திரியும்.  வடையில் எண்ணெய் அதிகம் என்பது வடயில் எண்ணெய் என்பதுபோல் ஒலிக்கும்.  டை என்பது ட ஆயினும்  கெடுதல் இல்லாமல் தோன்றும்.

தனையன் என்ற சொல்  தன் ஐயன் என்ற இருசொற்கள் புணர்ந்து ஏற்பட்டிருந்தாலும்  தனயன் என்பதுபோல் ஒலித்து.  சம ஒலியாகத் திகழும். தனையன் என்ற சொல்லும் தனயன் என்று திரித்து எழுதப்பெறுவதும் நடைபெறும்.

தனயன் என்பது சமஸ்கிருதமா என்றால்,  ஆம் என்று சொல்லலாம்.  ஏன் என்றால் இவ்விரண்டு வடிவங்களும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லாதவையாகவே  தோன்றுகின்றன.  பேச்சில் இவ்வாறு  திரிந்து ஒலித்தால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.  பேசுகிறவன் ஐகாரத்துக்கு உள்ளது ஒலிக்கும் நேரத்தில் குறுக்கம் விளைந்ததை அறியாமலேகூடப் பேசுகிறான்.  நெடுங்காலமாக் இப்படித் திரிந்து வழங்குவதால் தனயன் என்பதே சரி,  தனையன் அதன் திரிபு என்றுகூடத் துணிந்துவிடுகிறான்.

சங்கதம் என்பது சமஸ்கிருதத்துக்கு மற்றொரு பெயர்.   கதம் என்ற இரண்டாவது பகவு,  கத்து என்பதிலிருந்து வருகிறது.  கத்துதல்  என்றால் ஒலி செய்தல். கத்து என்ற பகுதி  கது என்று ஆனபின்,  அம் விகுதி பெற்றுக் கதம் ஆகிறது. சங்கதம் என்றால்  சமமான ஒலி என்று பொருள்.  இப்போது இந்தப் பொருள் மிகச் சரியானதாக உள்ளது என்பதை நீங்கள் அறிந்து இன்புறலாம். இம்மொழிக்குச் சரியாகவே பெயர் வைத்திருக்கிறார்கள். ''சமஸ்`¬ கிருதம்'' என்பதற்கும் அதுவே பொருள். ஆனால் வெள்ளைக்கர ஆய்வாளன் '' நன்றாகச் செய்யப்பட்டது'' என்று பொருள் கூறினான்.

தன் ஐயன் என்பதே தனயன் ஆகிவிட்டது. மகனை அப்பா என்று அழைக்கிறவர்களும் உள்ளனர். அப்பாகவே இல்லாத ஒருவனை '' அட என்னப்பா இது''  என்று குறித்துப் பேசுவதும் காணலாம். பல மலைகள் ஏறித் தவமிருந்து பெற்ற மகனை மிக்க அன்புடன்  ஐயன் என்று சொல்வோரும் உளர்.  அண்ணனை ஐயன் என்போரும் உள்ளனர். தனையன் என்பது அன்பினால் அமைந்த சொல் ஆகும்.  ஐயன் என்றால் தலைவன் என்பதே பொருள் ஆகும். ஐயா என்பது இன்று பெரியோரைக் குறித்த போதும்  அது ஐயன் என்ற சொல்லின் விளிவடிவம்தான்.

சமஸ்கிருதம் என்பது வெளிநாட்டிலிருந்து வந்த மொழியன்று.  உள்நாட்டில் தோன்றிச் செறிந்து வழங்கிய மொழிதான். ஆதலால் தனயன் என்பது தமிழ்தான்.  சமஸ்கிருதமும்  ஆகலாம். சம ஒலி மொழிச் சொல். நாளடைவில் சமஸ்கிருதம் என்ற பொருள் மறையும்படி  விரிந்து வளமடைந்தது.  பலசொற்கள் இன்று சம ஒலி  அல்லாதனவாய்த் தோன்றலாம்.  அஃது பிற்பாடு விளைந்த மாயை ஆகும். இந்தோ ஐரோப்பியம் என்பது வெள்ளைக்காரன் பிற்பாடு ஏற்படுத்திய இன்னொரு மாயை.  

தன் + ஐயன் >  தன்னையன் >  தனையன் > தனயன்> தநயன்.

இன்னொரு வகையில்:

தன் + நயம்>  தன் நயன்> தநயன்> தனயன்

அப்பன் பெரிதும் விரும்புவதால் மகன் நயமுடையவனாகிறான்.

தனக்கு நயம் சேர்ப்பவன் மகன்.

மகனை உயரியோனாய் அப்பன் போற்றுவான் என்பதும் காண்க.

துவட்டா ஈன்ற தனயன் ( திருவிளையாடற்புராணம். இந்திரன்பழி.8)

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது











வெள்ளி, 19 டிசம்பர், 2025

கணம் (சொல்), வெகுளி என்பவை

 இதனை வாருங்கள் ஆராய்வோம்..

''குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி 

கணமேயும் காத்தல் அரிது''  

என்பது குறள். வெகுளி என்ற சொல்,  சொல்லாய்வில் ஓர் ஆய்வுக்கு அருமையான சொல்லுமாகும்.  இதன் மூல வினைச்சொல்  வேகுதல் என்பது.  வேகு> வெகு> வெகுள்>  வெகுளி என்று அமைந்துற்ற சொல்லாகும். உள் என்ற விகுதி வினையாக்கத்திலும் வருமென்பதை இதனால் அறிந்துகொள்ளலாம். கடத்தல் (தாண்டிச்செல்லுதல் என்று பொருள்படும் வினை) என்பதிலிருந்து,  கடவுள் என்ற சொல் உள் விகுதிபெற்று அமைந்துள்ளதைக் காணலாம். வெகுள் என்பது ஒரு வினையிலிருந்து இன்னொரு வினை உண்டாக உதவுகிறது. இது வெகு+ உள்> வெகுள் என்று அமைந்தது.  சுரு என்ற அடிச்சொல்லிலிருந்து  சுருங்கு,  சுருள் என்ற வினைகள் உண்டாயின.  இவற்றில் சுரு+ உள் > சுருள் ஆகும். சுர்> சுரு.  சுர் என்பதே மூல அடி ஆகும்.  சுரிதல் என்ற வினையும் உள்ளது. சுரிதலாவது சுருங்கி உள்வாங்குதல் என்று விளக்கலாம். சுரிந்தோடும் நாகம் என்று ஒரு கவிதையில் எழுதியது நினைவுக்கு வருகிறது.

வெகுளி என்பது கோபம் ஆகும். வெகுளிக்காரன், வெகுளிப்பெண் என்ற சொற்பயன்பாடுகளும் உள.  கள்ளம் கபடு இல்லாத குணத்தினர் என்ற பொருளில் இவை வரும்.

கணம் என்ற சொல் கண்ணிமைக்கும் பெழுது அல்லது நேரம் என்று பொருள்படும்.  கண்ணிமைப் பொழுது ஆதலால்,  கண்+ அம் > கணம் என்றானது இந்தச் சொல்.  கண் இமைத்தலால் அமையும் நேரம் ஆதலின்  கண் அம் என்பவற்றால் ஆயிற்று இச்சொல்.  அம் என்பது அமைத்தல் என்பதன்  அடிச்சொல். இங்கு இது விகுதியாக வந்து  அமைத்தலை உணர்த்துகிறது.

சிலவிடத்து, விகுதி பொருளோடு இலங்குதலும் உளது.  பொருளில்லாத விகுதிகளும் உள.

ககரத் தொடக்கத்துச் சொல்,  சகரத் தொடக்கமாகவும் வரும். கணம்>  சணம் ஆனது ககர சகரத் திரிபு.   சேரல்>  சேரலம் > கேரளம் என்பதில் இவ்வாறே  ஆனது.

கணம்> சணம் என்பது பின்னும் முன்னேறி,  க்ஷணம் என்றுமானது. கணமென்பது மூலத் தமிழ்ச்சொல்  ஆகும்.  

சமஸ்கிருதம் என்பதன் பொருள்.

(க்ஷணம் என்னும் சமஸ்கிருதம்)

சமஸ்கிருதம் என்ற சொல்லில் சமம், கதம் என்ற சொற்பகவுகள் உள்ளன.  கதம் என்பது ஒலி.  கத்> கதம். கத்> கத்து என்பதில் ஒலி எழுப்புதல் பொருள். கத்> கதறு என்பதிலும் ஒலியே முன்மை அல்லது முதன்மை பெற்றது. கத்> கது> காது என்று முதனிலை திரிந்து சொல்லமையும்.  காதால் கேட்டறியும் நிகழ்வு கூறுதல் கதை ஆனது.  இது பின் முதல் நீண்டு காதை ஆனது.  காதை என்பது கீதை ஆனது  செவிக்கதை என்று பொருள்தரும்.  இது சொல்லாக்க மூலப் பொருள். கதம் என்பது கிருதம் என்று திரியும்..  சமஸ்கிருதம் என்றால் மூலத்துடன் சமமான ஒலி உடையதாகிய மொழி என்று பொருள். இதற்கு வெள்ளைக்காரன் ''நன்றாகப் புனையப்பட்டது'' என்று பொருள் சொல்லுவான்.  எதுவும் கெடுதலாகப் புனையப்படவில்லை,  எல்லாம் நன்றாகவே செய்யப்பட்டுள்ளது.  கணம் என்பது க்ஷணம் ஆனதில் ஒலிமேம்பாடு,  பிற தேயத்தாருக்கு உரியபடி செய்யப்பட்டுள்ளது. ஒலி மேம்பாட்டினால் சமஸ்கிருதமான சொல் க்ஷணம் என்ற சொல் ஆகுமென உணர்க.  இதனால் கண் என்ற மூலச்சொல்லுக்கு எந்தக் குறைவும் இல்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை உடையது.




https://r.search.yahoo.com/_ylt=Awr1Te0riUZpJgIAFisj4gt.;_ylu=Y29sbwNzZzMEcG9zAzQEdnRpZAMEc2VjA3Ny/RV=2/RE=1767439916/RO=10/RU=https%3a%2f%2fwww.lexilogos.com%2fenglish%2fsanskrit_dictionary.htm/RK=2/RS=R8a0L2BoRel.nB5KCNvPw811C0s-









செவ்வாய், 16 டிசம்பர், 2025

மத்தியம் என்ற சொல்.

 இந்தச் சொல்,  எவ்வாறு அமைகிறது?  

தமிழில் இதற்குப் பல சொற்கள் வழங்குகின்றன.  நடு என்பது சுற்றிலும் ஒத்த தொலைவுடைய இடமே  ஆகும்.  இதற்குக் கேந்திரம் என்ற சொல்லும் வழங்குகின்றது. 

நடுவான ஓரிடத்திலிருந்து ஒலி எழுப்பினால்  ( கத்தினால்),  அஃது ஏறத்தாழச் சுற்றுவட்டத்தில் உள்ளவர்களுக்கு நன்கு கேட்கும். உறவினர்கள், தொலைவில் இல்லாமல் ( அருகில் ) இருப்பவர்கள். நடு என்பதன் முன்னுள்ள வடிவம் நள் என்பது.  இதுவும் அருகிலுள்ளோர் என்பதைக் காட்டும். கேள் என்ற சொல்லும் உறவினரைக் குறிக்கும்.  கேளிர் என்றால் உறவினர்.  ஆதலால் ஒலி சென்றடையும் தொலைவும் உறவினரும் ஒப்பிட்டு உணரப்பட்டனர்.  நடு என்ற பொருள் உள்ள நள்,  நண்-,  நண்பு,  நண்பர் என்றெல்லாம் அமைவதைக் காணலாம். நண்பு என்ற மெல்லினம் வந்த சொல்,  வல்லினம் வந்த நட்பு என்ற படி  வந்து  அண்மையில் இருந்து அன்புகொள்வோர் என்பதைக் காட்டுகிறது.

நள்தல்,  நளுதல், நள்ளுதல் மற்றும் நடுதல் என்ற சொல் வடிவங்களையும் காண்க.

கேளிர் உறவால் அருகிலிருப்போர்.  இது ஓர் உவமையால் அமைவது.  கேள், கேண்-,  கேண்திறம்>  கேந்திரம் என்பது இதனால்தான் நடுவைக் குறித்தது.  கேந்திரம் என்பது திரிசொல். திரிசொற்களை முழுமையாகத் தவிர்த்துவிடுதல் இயலாது.  கூடுமானவரை இயற்சொற்களால பாடல்கள் அமைவதை விரும்பியவர்கள் தமிழர்.  தமிழை இயன்மொழி என்று பெருமிதம் கொண்டவர்கள் தமிழர். 

பந்து என்று பொருள்படும் கேள்> கேண்டு என்ற சொல்லிலும் இந்தச் சுற்றுப்பொருள் உள்ளது.   கேள்> கேண்> கேண்+து > கேண்டு  ஆகிறது. தமிழர் சுற்று, வட்ட,ம், நடு என்பவற்றை நன்கு உணர்ந்திருந்தனர்.

முற்காலத்தில் நடுவாக ஒரு முடி அல்லது முடிச்சை வைத்துச் சுற்றிலும்  கயிறு அல்லது அழுத்தமான நூல் சுற்றிப் பந்துகள் அமைக்கப்பட்டன. நடுவைப் பற்றி அல்லது சுற்றிச் செல்லுமாறு வைத்துப் பந்துகள் அமைவுற்றதால் பல்> பன்>பன்+து> பந்து என்று சொல் அமைந்தது.   இதைச் சுருக்கமாகப்  பல்+து > பந்து என்னலாம்.  பல்+து> பற்று என்றும் வரும்.   நம் வாயிலுள்ள பற்கள், ஈறுகளைப் பற்றி நிற்பனவாதலால் ''பல்''  என்று பெயர்பெற்றன. பழங்காலத்து,  தேய்வகப்  ( rubber)  பந்துகள் இல்லை. இதை அறியாதான், பந்து என்பது தமிழ்ச்சொல் என்று அறியான்.

நடு என்பது சுற்றுவட்டதைத் தழுவி நிற்கிறது. தழுவி நிற்றலாவது, மருவி நிற்றல்.  இரண்டிற்கும் பொருண்மை ஒன்றாககவே பொலியக் காணலாம். ஆகவே மத்தியம் என்ற சொல் இவ்வாறு அமைந்தது.

மரு> மருத்து> (இடைக்குறைந்து) > மத்து.  நடுவில் வைத்துச் சிலுப்பித் தயிர் கடைவர்.  பருப்பும் கடைவர்.  ( சுற்றுவட்டம் அனைத்தையும் நடுவிலது தழுவி நிற்கிறது, அல்லது மருவி நிற்கிறது.)

சுற்றுவட்டத்தை மருவி நிற்பது நடுதான்,  மருத்து> மத்து > மத்தியம். ( சுற்று வட்டத்தை மருவி இயல்வது என்று பொருள்.

மத்தியம் என்ற சொல் தமிழிலும் வழங்குகிறது,  சமஸ்கிருதத்துக்கு  ( இம்மொழிக்குச் சங்கதம் என்றும் பெயர்) உரிய சொல்  மத்தியம்..

சமஸ்கிருதத்தில் இன்னும் சுருக்கி, ''மத்ய''  என்று அமைத்தனர்.

மத்திய என்றால் சுற்றினை மருவி இயன்ற நடு என்று விரிக்க.

மரு என்பது ( மருவு - வினைச்சொல்),  சுற்றுவட்டத்தினை சமதொலைவில் மருவி நிற்பதான நடுவினது ஆகும்.

மத்தியம் என்பதன் தமிழினை அறிந்தீர்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

பகிர்வுரிமை












சனி, 13 டிசம்பர், 2025

''துவஜம்'' என்ற வடசொல்லின் தமிழ்மூலம். ( ''கொடி'')

 துவசம்  ( துவஜம்) என்பது கொடி என்று பொருள்தரும்.  ஒரு மரத்தண்டில் கட்டி ஏற்றிப் பறக்கவிடுவதற்கான சீலையே  கொடி அல்லது துவஜம் என்று சொல்லப்படுகிறது. 

காற்று  வீசுகையில் அங்குமிங்கும் மடங்கி மடங்கி யாடுவதைக் காற்றில் துவளுதல் என்று சொல்வர்.  துவளுதல் என்பது வளைதற்கருத்து.

கொடிகள் பலவகை.  வெற்றியின்போது ஏற்றப்படுவது  வெற்றிக்கொடி.   அன்ன சத்திரத்தில் ஏற்றி  அறிவுறுத்துவதற்காக வைக்கப்படுவது  அன்னக்கொடி ஆகும்.  பசித்தோர் அங்குச் சென்று உணவு பெற்றுக்கொள்ளுவர். பெரும்பாலும் விலையின்றிப் பெறும் உணவு அதுவாகும்.

அழுக்குத் துணியைக் கழுவுவதற்கு அல்லது துவைப்பதற்கு ,  துவைத்தல் அல்லது தோய்த்தல் என்பதுண்டு.  சலத்தில் (ஜலத்தில்) வைத்துத் தூய்மை செய்வதால்  ''சலவை''  என்பதுண்டு.  சலசல என்ற ஒலியுடன் ஓடுவதால் சலம் என்ற தண்ணீரின் இன்னொரு பெயர்.. இது பின் ஜலம் ஆனது.    சலம் அல்லது ஜலம் என்பது ஒலிக்குறிப்பு  ஆதிய சொல். (ஓலிக்குறிபை ஆதியாக உடைய சொல்.  சலக்கிரீடை  ( ஜலக்கு இரு இடை) என்பது நீரின் இடையில் இருப்பது என்பதுதான்,   ஜலக்கு = ஜலத்திற்கு.  ( ஜலம்+ கு =  ஜலத்து + இல்+ கு), இங்கு அத்துச் சாரியையும், இல் என்னும் இடப்பொருட் சொல்லும் ( உருபு) ஜலக்கு என்பதில் விடுபாடு ஆகும்.  பின் கு+ இரு+ இடை என்பவை பிரிந்து தனியாயின. தலைக்கு வைப்பது தலைக்கிரீடம்.  தலைக்கு+ இரு+ இடம்= தலைக்கிரீடம்,  இது முதற்குறைந்து கிரீடம் ஆனது.

கிரீடம் என்பது ஒரு METANALYSIS.  பிறழ்பிரிப்பு.   இச்சொல் பின் தனிச்சொல் ஆனது.  மொழி இப்படியும் வளரும்.  இதை எவரும் உணர்ந்து எழுதியிருக்கவில்லை யானறிந்தமட்டும்.

துவளும் இயல்பினதான கொடி,  துவசம் என்றே வழங்கியது.  பின்னர் அது துவஜம் ஆயிற்று.  துணி என்ற சொல்,  அது துணித்துப் பயன் கொள்ளப்படுதலால் வந்த பெயர்.   துணித்தல் என்றால் வெட்டுதல்.  வேட்டி என்பது வெட்டு என்ற சொல்லால் உணடானதே.  முதனிலைத்  திரிபு.

துவஜம் என்பதற்கு மற்றுமொரு பெயர் வேண்டின்,  காற்றாடுசீலை என்று தனித்தமிழில் சொல்லலாம்.  அது துவசம் ( துவசு+அம்) என்பதே.சு  என்பதுவும் ஒரு தொழிற்பெயர் விகுதியே. பரிசு என்பதிற்போல.  பொருளின் வரவைப் பெறுவோன் வாரிசு.  வரு+ இ+ சு> வாரிசு.  இது ஒன்றும் உருது அல்ல..  உருது அதைத் தமிழிலிருந்து பெற்றுள்ளது.   மூலச்சசொற்கள் தமிழில் உள்ளவை.  வரு என்பது வாரி என்று வந்தது வியப்பில்லை.   வரு> வாரீர் என்று அமைவது காண்க. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை



செவ்வாய், 9 டிசம்பர், 2025

யுத்தம் என்ற சொல்லில் தமிழ்ச் சொல்லாக்கப் பண்பு.

 யுத்தம் என்ற சொல் தொன்று தொட்டுத் தமிழில் வழங்கிவந்துள்ளது.  இது சங்க இலக்கியத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்,  தமிழ் மூலத்தை உடைய சொல்லே

ஒருவனை அடிப்பதென்றால்  அவனுக்கு அடுத்து நில்லாமல் அவனை அடிக்க இயலாது.  இக்காலத்தில் 11000 கல்தொலைவுக்கு அப்பாலிருந்தும் ஓர் ஊரை அடித்துத் தூளாக்கலாம் என்று சொல்கிறோம்.  இத்தகைய கருத்துக்களும் அதற்கான ஆயுதங்களும் பண்டை இருக்கவில்லை. அடுத்துச் சென்றுதான் கையாலடித்து வலியை உண்டாக்குவது சொல் உண்டான காலத்தில் இருந்தது. ஆகவே தமிழை ஆயுங்கால் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும். 

ஒருவனுடன் சண்டை செய்வதென்றாலும் அண்மிச் சென்றுதான் பெரும்பாலும் சண்டை இட்டார்கள்.  வில்லால்  தாக்குவதானாலும்,  ஓரளவுக்கு அண்மையில் இருக்கவே வேண்டும்.   சண்டை என்ற சொல்,  அண் என்ற அடிச்ச்சொல்லினின்று வருகிறது.  அண்> சண்> சண்டு> சண்டை என்று இச்சொல்  அமையும்.   அடி என்ற சொல்லில் இருக்கும் அடு> அடி என்பதிலுள்ள கருத்தே இங்கும் உள்ளது.  

இனி யுத்தம் என்ற சொல்லைப் பார்ப்போம்.  உத்தம் என்பதே இதன் முன் வடிவம் ஆகும்.  உ என்பது முன்னுறல் காட்டும் தமிழ்ச் சுட்டெழுத்து.  இது உன், உம் என்ற பதிற்சொல் திரிபுகளுடன் தொடர்புடையதாகும்.  தமிழை நன் கு கற்றிருந்தால் இது வாத்தியார் சொல்லிக்கொடுக்காமலே புரியக்கூடியது ஆகும். அகர  வருக்கங்கள் சகர வருக்கங்களாகும்,  இதுவும் அண்டை> சண்டை என்பது போலவேதான்.   எப்போதும் காட்டும் எளிதான உதாரணம்  அமணர் > சமணர் என்பது.  ஊகம் > யூகம் > வியூகம் என்பவும் காண்பீர்.  ஆனை > யானை என்பதில்,  அகர வருக்கங்கள் யகர வருக்கங்கள் ஆதல் கண்டுகொள்க.  முன்னுறலாகிய உத்தம் என்பதிலிருந்து யுத்தம் என்று திரிந்து  முன்னுறலையே சொல் காட்டுகிறது. முன்னுறல் என்பதும் அடுத்துச் செல்லுதலின் வேறன்று.

யாம் காண்பது இங்கு யாதெனின்,  அடுத்துறல் என்ற கருத்திலேதான் இச்சொற்கள் அமைந்துள்ளன.   உத்தம் என்பது தமிழ் மூலம் தான்.  சமஸ்கிருதத்திலும் இச்சொல் உள்ளது.  இரண்டும் சகோதர மொழிகள்.  எனவே,  இவை சொல்லாக்கத்தில் உள்ள பொதுப்பண்பை ஒட்டி அமைந்த சொற்களாகும்.

சமஸ்கிருதம் ஆரிய மொழி என்றால்  அது வெள்ளைக்காரன் மொழியன்று.  அறிவுடையோர்,  இறைபோற்றுவோர் ஆனவர்கள் பயன்படுத்தி வந்த மொழி. தமிழும் பல இறைப்பற்று இலக்கியங்கள் உள்ள மொழிதான். மணிமேகலை என்ற புத்தமத இலக்கியம் தமிழில்தான் உள்ளது.  அதன் இறுதி நான்கு காதைகளில் பல்வேறு சமயக் கருத்துகள் சொல்லப்படுகின்றன.  இதில் கூறப்படும் சில கருத்துகள் மகாயன புத்தம் கூறும் பாலியிலும் சீனத்திலும் இல்லை என்று கூறப்படுகிறது. மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சாத்தனார், தமிழ் சமஸ்கிருதம் இரண்டிலும் வல்லுநர்.  புத்தமத நூல் தெளிவினர்.   

பிற்கால வெள்ளையர் முயன்று சமஸ்கிருத  ஒளியில்  தாங்கள் மின்னிட நினைத்தனர்.  

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை உடையது.


சனி, 6 டிசம்பர், 2025

பதாகை என்பது.

 பதாகை என்னும் சொல்லை அறிவோம்.

பதாகை என்னும் சொல்லின் அடிப்படை வினைச்சொல்  பதிதல் என்பது. பதி + ஆகு+ ஐ > பதாகை.  

விருதுக்கொடி,  பெருங்கொடி, தேர்க்கொடி முதலியனவையும் இப்பெயர் பெறும். எழுத்துகள் எழுதப்பெற்றுக் கொடியாய் வைக்கப்படுவதும் இவ்வாறு சுட்டப்பெறுகிறது. 

நாட்டியத்தில் கையினால் காட்டபெறும் ஒருவகை அபிநயமும் பதாகை என்பர், எனவே இதைப் பல்பொருள் ஒருசொல் என்னலாம்.

பதி + ஆகு + ஐ >  பதாகை.   பதி என்பதன் இகரம் விடுபாடு கண்டது, ( கெட்டது). பின், பத் + ஆகு + ஐ > பதாகை ஆயிற்று.  த்+ஆ> தா ஆகிவிடும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை



திங்கள், 1 டிசம்பர், 2025

கோபம் என்ற தமிழ்ச்சொல்.

 இன்று கோவம் என்ற தமிழ்ச்சொல்லை அறிந்தின்புறுகிறோம்.

ஒரு நல்ல நிகழ்வு நடந்துவிட்டால், நம் மனம் மலர்கிறது.  மனமென்பது ஒரு மலருக்கு ஒப்புமையாகும் ஓர் உறுப்பு.  இது இருதயம் அல்லது இதயமாகுமென்று சொல்வர்.  ஆனால் இதை அறிவியலார் ஒத்துக்கொள்வதில்லை. எண்ணங்கள் மூளையிலிருந்தே உண்டாவதாகச் சொல்வர். கோபம் என்பது  மனம் குவிதல் அடிப்படையில் உண்டான சொல்லே.  அறிவியல் கருத்துக்கு ஒப்ப அமையவில்லை.

குவிதல், வினை.

குவி > கோவி >  கோவித்தல்,  ககர ஒற்றின்மேல் உகரம் ஏறியது,  ஓகாரமாக மாறும் திரிபு.

இவற்றைக் கவனத்தில் கொள்க.

ஊ-  ஊது,   ஓ> ஓது.  காற்றினால் எழும் ஒலிகள்.

ஊடு >  ஓடு.  ஓடுவது காற்றினூடு விலக்கிக்கொண்டு ஓடுவதானன்றோ.

பேச்சில் உகரம் ஒகரமாக ஒலிப்பதுண்டு.    உக்காரு - ஒக்காரு என்று பேசுவது கவனித்துள்ளோம்.

உச்சரி என்பது , உ- உச்சு  ( முன்வருதல்,  ஒலி முனவருதல்;  அரு+ இ>  அருகில், இவண் என்னும் கருத்துகள்,   அரு இ >  அரி.  அருகில் இங்குவருதல். உச்சு என்பதில் முன்வரவு முதலெழுத்திலும் ஈற்றிலும் வந்து  அழுத்தம் தருகிறது. உச்சி என்ற சொல்லிலும் உகரம் முன்வரவையும் இகரம் அண்மையையும் தெரிவிக்கிறது. நிற்கையில் முன்னிருப்பது உச்சி.

குவி என்பதில் குறுக்கத்தைக் குறிப்பது குகரம்.  இகரம் இங்கென்னும் பொருளது.  குறுகி இங்குத் தெரிகிறது குவிதல் என்னும் நிகழ்வு.

கோவம் என்ற முதல் வடிவம், கோபம் ஆவது வகர பகரப்  போலி  அல்லது திரிபு.  வகு> பகு என்பதைப்  போல்.

சமஸ்கிருதம்.

சமஸ்கிருதம் இந்திய மொழியே ஆதலால்,  தமிழுக்குச் சொல்வது சமஸ்கிருதத்துக்கும் ஒப்பதே.  சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழி என்பது பிற்கால ஐரோப்பியர் ஆராய்ச்சி. சீனமொழியுடன் ஐரோப்பிய மொழிகளை உறவு கற்பிக்க முயன்று தடுமாறி இறுதியில் சமஸ்கிருதத்தை எடுத்துக்கொண்டனர். இந்தக் கற்பனை மொழியுறவு, ஐரோப்பியர் ஆசியாவுக்கும் உரியவர் என்ற கருத்தை நிலைப்படுத்தவே. இதனால் ஐரோப்பிய மொழிகள் வளம்பெற்றன.  இந்தோ ஐரோப்பிய மூலமொழி என்பது கற்பனை.

திறவிடம் என்பது தென்னிந்தியாவின் திறந்த ( கடலினை எதிர்கொண்ட்)  இடம்.  திரவிடம் என்பதன் மூலமும் திற இடம் தாம். கடல்சூழ் இடத்தை எதிர்கொண்டு வாழ்ந்த பிராமணர்  திரவிடப் பார்ப்பனர்.  றகரம் சொல்லாக்கத்தில் வந்தால் ரகரமாகிவிடும்.   திறவிடம் > திரவிடம். மூலச்சொல் தமிழ் அடிப்படை. ஆனால் தமிழுக்காக உண்டானதன்று.  இடப்பெயர்.  கடலால் சூழ்ந்து திறந்த இடம் திற இடம் > திரவிடம். 

குவி (௳னம் குவிதல்,  மலர்ச்சிக்கு எதிர்).

குவி அம் >  கோவம். குவி கோவி திரிபு.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

















சனி, 29 நவம்பர், 2025

திவ்வியம் என்பதன் தமிழ் மூலச்சொல்.

 திவ்வியம் என்ற இனிய சொல்லைக் காண்போம்.

திவ்வியம் என்றால் என்ன என்று கேட்டால்,  கேட்டவனுக்கு  திவ்வியமான ஒன்று என்ற பதில்வருமானால்,  முன்னினும் தானறிந்து கொண்டது ஒன்றுமில்லை என்றுதான் கேட்டவன் நினைப்பான். இப்போது  தி + இயம் >  திவ்வியம் என்று புணர்த்திச் சொல்லை உருவாக்கிக்  காட்டினாலும்,  தி என்பது எதைக் குறிக்கிறது மீண்டும் கேட்கத் தோன்றும்.

தித்தி என்ற சொல்லில் தி  என்பது இனியது என்னும் பொருளதாய் உள்ளது. இதைத் தீந்தமிழ்  என்ற சொல்லின்மூலம்  அறிந்துகொள்வோம்.  தீம்பூ என்ற சொல்லில்  பூ என்றால் வினைப்பகுதியாக வந்து முதனிலைத் தொழிற்பெயராக நின்று  '' தோன்றிய ஒன்று''  என்று பொருடரும். (பொருள்தரும்).  பூ என்பது நறுமணத் தொடர்புடையது என்பதால் தீம்பூ என்பதற்கு  வாசனை என்று பொருள் சொல்லவேண்டும். தீந்தமிழ் என்றால் இனிய தமிழ் என்பது பொருள்.  இதைத் தீத்தமிழ் எனலாகாது. வலிமிகின் கெடுபொருண்மை உடையதாகிறது.

ஆனால் தீம்பு என்பது  தீமை என்று பொருள்படுகிறது.  ஆகவே இங்குக் கவனம் தேவையாகிறது.  தீயது என்பது இனியது என்றும் பொருள்தருவது.  ஆனால் இற்றை வழக்கில் கெட்டது என்று பொருள்கொள்ளவேண்டும்.  தீயம் என்றால் இனிமை உடையது என்பதாகும்.  தீயம் என்பது இடைக்குறைந்து தீம் என்று வருகிறபோது இனிது என்பதே பொருள்.

தீவிய என்றால் இனியது என்பதே.  இது குறுகி,  திவ்விய என்றால் அதுவே பொருள். இனிமைப் பொருளதான தீயளி என்பது பசுங்காய் என்றாகும். தீவு என்பது நன்மைப் பொருள் தந்து , தீவாம் வாழ்வு என்றால் இனிய வாழ்வு என்றுதான் பொருள்.

இப்ப்டி முயன்று பொருளறிந்து கொள்வதினும்,  சுருக்கமாகத் திவ்வியம் என்பதை அறிந்துகொண்டுவிடலாம்.

திருவியம் ( திரு+ இயம் ) >   திருவியம்> தி( ரு )வியம் > திவ்வியம்.

திருவமைந்து நிற்பது,  இனிமையானது,  மிக்க உயர்வானது. இடைக்குறைச் சொல்.

மூலச்சொல் எது என்பது தானே புரிந்துகொள்ளத் தக்க விளக்கம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.