புதன், 4 டிசம்பர், 2024

ஏரிக்குள் வந்த அயல் நீர். உலக ஒருமை

 வற்றிப்போன ஏரி ஒரு சுற்று, சுற்றி வந்து----மழை

வளம் தீண்டி நலம்  ஈண்டி நீர்நிறைந்ததே!

ஒட்டுமண்ணும் காய்ந்துகொட்டி

ஒருபயனும்  பெறாதிருந்து

கொட்டுமழைக் கூட்டத்தாலே

எட்டிப் பிடித்ததே உயிரைத் தொட்டுத்தளிர்த்ததே!


புயலும் வேணும் அயலில் தோன்றிப்

பெயலும் வேணும் நமது நாட்டில்

அயலதென்று அகறலாகாப்

பிறவும் வேணுமே. என்றும் பிறவும் வேணுமே!

உலகம் ஒண்ணு! காற்றும் ஒண்ணு!

தொடர்பில் இங்கு யாவும் ஒண்ணு

விலகிப் போயில் விளைச்சல் இல்லை

ஒழுகி இங்கு ஒன்று சேர்தல் பழகி வாழ்வமே.



பொருள்

இது ஓர் இசைக்கவி. இசை வெளியிடவில்லை.

ஒருசுற்று  ;  சுற்றிவந்து. இங்கு விட்டிசைப்பதால் வலி மிகாது

வைக்கப்பட்டது. மழைநீர் நிறைந்தபின் இந்த ஒரு சுற்று நிகழ்கிறது.

ஒரு சுற்று எனில் ஒரு சுற்றுதலை மேற்கொண்டு. இது சுற்றுக்களில் 

விடாது சுற்றுதலால் சுற்றுக்கள் பல என்றும் ஆகும்.  சுற்றில் விடுபாடு இல்லை.

வளம் தீண்டி -  வளத்தைத் தொட்டு அதை உண்டாக்கிக்கொண்டு

கூட்டத்தாலே -  சேர்ந்ததாலே

ஒரு பயனும் -  விளைச்சல் முதலியவற்றுக்குப் பயனில்லாமல்

ஈண்டி -  மிகுந்து

பெயல் -  மழை

அயலில் தோன்றி -  வேறு அடுத்த ஊர்த் திசையில் உண்டாகி அல்லது கடலில் உண்டாகி

அகறல் -  விலகிச் செல்லுதல்

ஆகா -  ஆகா(து)

பிற -  வேற்றுத் திசைகளிலிருந்து வருபவை.



கருத்துகள் இல்லை: