புதன், 18 டிசம்பர், 2024

கோபக்காரன் என்பதற்கு இன்னொரு சொல்லாகும்...

 கோபம் என்பதற்குக் கதம் என்றும் இலக்கிய வழக்கில் ( பயன்பாட்டில்) வரும்.

இதன் மூலச்சொல் கடு என்பதுதான்,  கடுமை என்பது இம்மூலச்சொல்லின் பொருள்.  ஆகவே,  கடு> கடம்> கதம் என்று டகரம் தகரமாக ஒலிமாறித் திரிந்துள்ளது.

ஆனால்  கத்துதல் என்பதன் பகுதியாகிய கத்து( > கது> ) கதம் என்று அம் விகுதி பெற்றும் அமைந்திருத்தல் ஏற்புடையதே ஆதலின்,  இச்சொல் பல்பிறப்பி ஆகும். ஒன்றுக்கு மேற்பட்ட திரிபுகளில் உணர்த்தப்பெறுதல் காணலாம்.

இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட களனிலிருந்து வரவு காட்டும் சொற்கள் தமிழில் பலவாகும்.  தமிழில் இத்தகு வசதிகள் இருந்தமையால்தான் காளமேகப் புலவர் முதலானோர் சிலேடைப் பாக்கள் புனைந்து தம் திறனைப் பிறர்க்குத் தெளிவித்தனர்.  சில + எடு+ ஐ  > சிலேடை என்பது  சில வழிகளில் பொருள் எடுத்துக்கொள்ளக்கூடிய முறைமை.  இங்கு எடு என்ற வினை,  ஏடு என்று முதனிலை திரிந்து பெயராகிப் பின்,  சில+ ஏடு+ ஐ என்று மாறியபின் புணர்வதனால் இச்சொல்  சிலேடை என்றானது. எளிதாக உணர்வதற்கு எடு என்பதைப் பயன்படுத்தி விளக்குதல் நன்று.  சில என்ற பன்மைச்சொல் காட்டாமல் சில் என்பதையே காட்டினும் விளைவிலோர் மாற்றம் இலது,

கடம் கதமானதுபோல்.  மடு> மடம்> மதம் என்றும் வருதல் ஏற்புடையதே.  மடு என்பது ஒரு மாற்றம் குறிக்கும் சொல்.  இதில் இகரம் சேர்ந்து, மடி என்று வந்து,  மடிப்பு என்றாகிறது. இது சென்ற திசை மாறி மீண்டு வருதல் குறிக்கும். ஒரு துணியை இடமாக விரித்துப் பின் திருப்பி வலமாக இரட்டிப்பாய் வைத்தல் மடிப்பு.   மதம் என்ற சொல் சமயக் கோட்பாடு என்று பொருள்படுவதற்குக் காரணம் என்னவென்றால் ஒருவன் எண்ணம் இயற்கையாகச் சென்ற திசையில் செல்லாமல் மாறி பயிற்றுவிக்கப் பட்டதிசையில் எண்ணத் தொடங்குவதுதான்.  இயல்பான நிலையில் ஒருவனுக்குக் கடவுள் அறிவு இல்லை.  அவனை மடித்துத் திருப்பியே கடவுள் பற்றி அவன் அறிவிக்கப்படுகிறான்.  ஆகவே, மடு> மடி;  மடு> மது > மதம் என்று மடிப்புற்ற அல்லது மாறிய நிலையைக் காட்டுவதுதான் இதன் பொருள்.  ஆகவே, கடு> கது> கதம்  என்ற மாற்றமும் மடு> மது > மதம் என்ற மாற்றமும் ஒத்துச்செல்வதைக் காணலாம்.   மயங்குதல் என்ற சொல்லும் இவ்வாறு நிலை மாற்றத்தையே உணர்த்துகிறது. மயங்குவது> ( இடைக்குறைந்து) > மது என்றுமாகும்.  இவ்வாறின்றி அடிச்சொல்லிலிருந்தும் இதை விளக்கலாம். இதை இங்கு விரிக்கவில்லை.

கதம் என்பது கோபம் என்று பொருள்தருவதால்,  கதம் + அகன் >  கத + அகன்> (முதனிலை நீண்டு)  > காத + அகன் > காதகன் என்றுமாகி, காதகன் என்பது கோபக்காரன் என்றும் பொருள்தரும்.

இதனை முன் விரித்தெழுதவில்லை ஆதலின் இவண் கொஞ்சம் விளக்கினோம்.  இன்னும் உள்ளன,  இது போதுமானது.

''ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு" என்பதால், பல தீங்குகளும் விளைப்பான் என்பது அறிக,  அத்தீங்குகள் அவனைக்  காதகன் என்ற சொல்லுடன் பொருந்தியவன் ஆக்கிவிடும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின். 

 

கருத்துகள் இல்லை: