வியாழன், 12 டிசம்பர், 2024

பிருந்தாவனம் தமிழ் மூலமாக

 'பிருந்தாவன' என்ற சொல் 'விருந்தாவன' என்றும்  பகரம் - வகரமாகத் திரிபு அடையும்.  வகு (த்தல்)  எனற்பாலது பகு  (த்தல்)  என்றும் வருவதிலிருந்து இதனை நீங்கள் அறியலாம். பகரம் வகரம் ஒன்றுக்கு மற்றது ஈடாகச் சொல்லில் வருவது தமிழுக்கு மட்டும் உரியதன்று.  பலமொழிகளில் பகர வகரத் திரிபுகள் உள்ளன. ஆகவே ஒருமொழியமை   வரைச்சிறப்பு உடைய திரிபு இதுவன்று.  வரை எனின் எல்லை.

பிருந்தாவனமென்பது கண்ணன் விளையாடிய துளசிவனம் என்று நம்பப்படுகிறது. இந்தச்  செய்தியிலிருந்து பிருந்தா என்றால் என்ன பொருளென்று உடன் தெரியவில்லை. மேலும் வட இந்தியாவில் இவ்வனம்  ஒரு மிகப் பெரிய நிலப்பகுதி என்று தெரிகிறது. ஆனால் கண்ணன் பிறந்தது இவ் வனத்திலன்று. ஆதலின் "பிறந்த"  என்ற சொல் திரிந்து  பிருந்தா  என்று  மாறிவிட்டதாகத் தெரியவில்லை. 

இச்சொல் எவ்வாறு அமைந்தது என்பதைத் தீவிரமாக தேடத் தூண்டுகிறது  இந்நிலைமை.

இது பின்வருமாறு ஆய்ந்தால் தமிழாகி விடும்:

பிரிந்த -   ஏனை எல்லா வனங்களிலும் காடுகளிலும் இருந்து தனியாகப் பிரித்து அறியப்பட்ட  ----  என்று பொருள்  ( எபெ).

ஆ -  மாடுகள். ( எபெ) என்று பெயர்

இந்த ஆ என்னும் வகைப்பாட்டில்,  பெண் மாடு மட்டுமின்றி ஆண்மாடுளையும் அடக்கியே பொருள் கொள்ளவேண்டும்.  ஏனென்றால் ஆதவர்> யாதவர் என்ற சொல்லமைவுகள்கூட,  ஆண்மாடுகளையும் உள்ளடக்கியனவே  ஆவது காண்க.  பசுக்களை வளர்க்கும் ஒருவன்,  காளைகளையும் வளர்ப்பதில் தடை  அல்லது இயலாமை எதுவும் இல்லை.

வனம்:   காடு என்ற சொல்,  காத்தல் என்ற சொல்லினின்று தோன்றி,  டு என்ற விகுதி பெற்று, காடு என்னும் இச்சொல் அமைந்து, பல மரஞ்செடிகொடிகள் அடர்ந்து வளர்ந்த நிலப்பகுதியைக் குறித்ததாக ஆசிரியன்மார் சிலர் கருத்துரைப்பர்.

யாம் இதைக் கடுமை என்று பொருள்படும் "கடு"  என்பதிலிருந்து பிறந்ததாகக் கருதுகின்றோம்.  கடு என்பது முதல் நீண்டு கா என்று திரிந்து காடு என்றமைவு கண்டது. காவலும் மென் காவல், வன் காவல் என்று இருவகைப்படும்.  தொடக்கத்தில் கடிய காவல் இருந்த காடுகள், பின்னர் காவலிடும் தன்மையில் மென் காவல் உடையவாகவும் பின் காவலே இல்லாதனவாகவும் மாறியிருக்கலாம்.  இது சூழ்நிலைகள் பலவற்றைக் கொண்டு அமைவதாகும். காவலின் தன்மையும் வேறுபடற்குரித்தாம்.  ஆகவே காடு என்பது கடு என்ற சொல்லினின்று அமைந்தது என்று முடிப்போம்.  

இவ்வாறு முடிபு கொள்ளவே,  வல் > வன்> வனம் என்பதும் கடு என்பதற்கான வன்மை தெரிக்கும் சொல்லே ஆகும். இச்சொல் நாளடைவில், தன் வன்மைத் தன்மைப் பொருள் மறைந்து,  அழகு என்ற பொருளை மருவியிருத்தல் தெளிவு.  பிற்காலத்தில் வனப்பு என்ற சொல் அழகு என்றே பொருள்பட்டது.  நாறு என்ற சொல்  நன்மணம் என்பதிலிருந்து  தீயவீச்சம் எனப்பொருள் கொண்டதுபோல், பல சொற்கள் உள்ளன. இங்கு சொன்னவை போதும்.  உணர்ந்துகொள்க.

வன் என்பது உல் என்ற அடியிலிருந்து வந்தது. உகரம் அகரமாகத் திரியும்.

பின்பு வனப்பு என்பது அலங்காரம் ஆகி, ஓர் இலக்கணக் குறியீடாகவும் ஆகிவிட்டது.

எனவே பிரிந்து ஆ வனம் என்பது, " பிருந்தாவனம்" ---- மற்ற வனங்கள் காடுகள்----- இவைகளினின்று தனியாக விடப்பட்டவை அல்லது பாதுகாக்கப்பட்டவை.  மாடுகள் பல வாழ்ந்தவை.

ஆகவே பிருந்தாவனம் என்பது தமிழ்த் திரிபுச் சொல்.

இதிலுள்ள திரிபு - ரு என்பது ரி என்பதன் திரிபே ஆகும். ஓரெழுத்துத் திரிபு.

பொருள்: பிறவற்றிலிருந்து வேறான ஆக்கள் உள்ள வனம். காளைகள் அவற்றுக்குத் துணை.


மற்றவை பின்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்







கருத்துகள் இல்லை: