செவ்வாய், 24 டிசம்பர், 2024

சீர்பலவும் நேருமாறு விளங்கிய வசிட்டமுனி. பெயரமைப்பு

இராமகாதையில் பல தமிழ்ச்சொற்களின் பிறழ்வடிவங்கள் சங்கதமாகத் தரப்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கலாம். பல ஆண்டுகட்கு முன்னே சில இராமகாதைப் பெயர்களை ஆய்ந்து அவற்றின் தமிழ் வடிவங்களைத் தந்தோம். தமிழ் மொழி முழுமையு முள்ள பல சொற்களையும் ஆராய எண்ணம் கொண்டதால், இராம காதை, கண்ணன் காதை என்ற இவற்றோடு நில்லாமல் பல சொற்களையும் விளக்கி வெளியிட்டுள்ளோம்.  இவற்றில் பலவற்றை விரும்பாதவர்கள் அழித்துவிட்டனர். அதனால் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

விழுமிய பீடு உடையவன் என்பதே விபீடணன் என்பதன் பொருள் என்பது முன் யாம் வெளியிட்டது ஆகும். விபீஷண  என்பது விழு பீடு அண் அ என்பதன் திரிபே ஆகும். இதுபோல்வன  இயற்பெயர்கள் அல்ல, காரணப் பெயர்கள். இர் என்ற இருள் குறிக்கும் அடிச்சொல்லிலிருந்தே  இராமன், இராவணன் முதலிய சொற்கள் உண்டாயின. அனு மன் என்பது மனிதனை அணுகியவன் அல்லது அண்மையானவன் என்பது. பழைய இடுகைகளில் சிலவற்றில் இருக்கலாம்.  தேடிப் பிடித்துக் கண்டுகொள்க.

இன்று, சீர்பலவும் நேருமாறு வாழ்ந்தவர் வஷிஷ்டர் என்பதே அவ் ஆய்வு ஆகும். இச்சொல் வர்சீர்த்தர் என்பதுதான்.   வரு+சீர்+ து + .அர் என்பதே வசிஷ்டர் ஆயிற்று. சீரனைத்தும் வருமாறு வாழ்ந்தவர். சொல்லமைப்பில் ஏதும் கடினம் இல்லை. வடவெழுத்து என்பவை ஒரு மயங்குநிலையை விளைவித்துவிட்டன.

இராமபிரானின் அறிவுக்கு வழியமைத்த ஆசிரியர் என்ற பொருளில் "வழியிட்ட(வ)ர்" என்ற சொல்லும் குறுக்கி "வழிட்டர்" என்று வந்து பின்னர் வசிஷ்டர் என்றாகிவிடும்.கடுமை என்ற சொல்லில் பிறந்த கட்டம் என்ற சொல் இன்று கஷ்டம் என்று திரிந்துவழங்குதல் காண்க.

பாஞ்சாலி தொடர்பானவை சில முன் விளக்கப்பட்டன. அகலியை என்பதும் முன் விரித்துணர்த்தப் பட்டதேயாகும்

தமிழிலிருந்த முன்னைய இராமகாதை மூலம் அழிந்திருக்கவேண்டும்.  வால்மிகி என்பதும் தூய்மை மிக்கோன் எனல் பொருட்டாகும் தமிழ்ப் பெயரே. வாலறிவன் என்ற குறள்தொடர் அறிக.

இராம காதையின் முதன்மை நிகழ்வுகள் தமிழ்நாட்டுக்கு அருகில் நடந்தவை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்


கருத்துகள் இல்லை: