சனி, 31 ஆகஸ்ட், 2024

செனித்தல், ஜனித்தல், ஜனனம் முதலான

 இந்தச் சொற்களைச் சிந்திப்போம்.

ஜனம் என்ற சொல்,  சமஸ்கிருதம் என்று அறியப்படுவது.  இதன் அம் விகுதி கெட்டு. இகரம் ஏறி வினைச்சொல்லாகும்.  இந்த விகுதி முதலியவை தமிழில் பயன்படுபவைதாம், இங்கு இகரமாக வருவது பிறமொழிகளிலும் வினையாக்கத்துக்கு வருகிறது. மலாய் மொழியில்  இ வினையாக்க விகுதி வந்து ஒட்டி,  செயப்பாட்டு வினையாகிறது.  ( di-perchaya-i) எனக் காண்க.  ஆங்கிலத்தில் இ- யுடன்  ise. ize வினையாக்கம் பெறும். ( conceptualize). தெரிந்ததுகொண்டு தெரியாததை விளக்குதலே போதிப்பு முறை.  வேறுசில இங்குத் தேவையில்லை.

செல்+ நிற்றல்>  செனித்தல்  என்று ஆகும். பிறத்தல் விந்து சென்று கருவறையில் நிற்பதால் மனிதன் உருவெடுத்துப் பிறக்கிறான். செனிற்றல்> செனித்தல் என்றும் ஆகும் ஆதலின், செனித்தல் என்பது ஒரு பல்பிறப்பிச் சொல். செல்நிற்றல்> செல்நித்தல்> செனித்தல் > சனித்தல்> ஜனித்தல்.

ஆனால் பிறத்தல் என்ற வினைச்சொல், தாயினின்று பிறிதாகுவதையே (பிறத்தல் என்று) குறிக்கிறது எனற்பாலதைக் கருத்தியலாகக் கொள்கிறோம்..  எனவே தாயினின்று நீங்குதலில் ஆவதுதான் பிறப்பு என்று கொண்டு,  ஜனித்தல் ஆயினும் பிறத்தலாயினும் இக்கருத்திலேதான் தோன்றிய சொற்கள் என்று முடிபு கொள்ளுதல் சரி. இது மரபாதிச் சிந்தனை.

தனித்தல் என்ற சொல், தனியாகுதல். இது பிறத்தலையும் பொதுவாகக் குறிக்கும். ஆனால் வழக்கில் இது இப்பொருளில் கையாளப்பெறுவதில்லை. இது வழக்கிலில்லை என்றாலும், இச்சொல் இன்னொரு பேச்சுமுறைக்குப் பயனாம் நேரம் வந்துற்ற காலை இது சொற்பிறப்புக்கு ஏற்கப்படுவதில் தடை ஏதும் விளைவதில்லை.  தனி என்பது சனி என்றும் திரிதற் குரிய தாகையினால் தனித்தல்- சனித்தல் என்பது மறுத்த லேறாத உண்மை.  இச்சொல் வந்து ஜ என்ற அயல்மெருகு ஏறி ஜனித்தல் என்றானது என்பதே சரி. தகரம் சகரமான திரிபுகள் பல முன் தரப்பட்டுள்ளன.

தகரச் சகரத் திரிபு:   கரணவாதனை என்ற சொல் கரணவாசனை என்றும் வரும்.

பூசைப் பாடகர்களிடையே  (பாணர்கள்)  தோன்றிய சமஸ்கிருதம் தமிழ்ப் பிறத்தல் என்ற சொல்லின் செயலொற்றுமைக் காரணியாக,  ஜனித்தல் என்ற சனித்தலான தனித்தலையே பிறத்தலுக்குப் பயன்படுத்திக்கொண்டதென்பது வெள்ளிடைமலையாகும். சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழியன்று. சமஸ்கிருதத்திலிருந்து அவர்கள் கடன்பெற்றனர். இது இந்திய மொழி.

இதன் மூலம் ஜனித்தலின் மூலம் அறியப்பட்டது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்/


வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

சமஸ்கிருதம் என்பதன் பொருள்.

 இன்று சமஸ்கிருதம் என்பதன் சொற்பொருளை அறிவோம்.

இதனை மோனியர் வில்லியம்சு என்னும் வெள்ளையர் தெரிந்துகொண்டபடி செல்லாமல். சொல்லின் பகவுகளை நன்கு கவனித்தறிந்து  காண்போமாக.

இச்சொல்லில் இருப்பது: சமம், கதம் என்ற இருபகவுகள்.

சமம் என்ற சொல், இது வேறொரு மொழிக்கு அல்லது பேச்சுமுறைக்கு ஒப்பான என்று பொருள்படும். இதனை இரண்டு விதமாக ஏற்புடைத்தாகக் கருத இடமுண்டு. தனக்கு அதாவது   " இந்த மொழிக்கு முன்னிருந்த நிலைகளுக்கு ஏற்புடைத்தான" என்று பொருள்கூறலாம்.  அவ்வாறாயின் முன்னிருந்த நிலைகள் யாவை என்ற கேள்வி எழும். அதற்குப் பதிலறிதலும் தேவையாகும். முன்னிருந்த நிலைகள் இம்மொழியின் தந்நிலைகள் அல்லது இதற்கு முன் இலங்கிய மொழிகள் என்னும் முடிபே இங்கு வெளிப்படுவதாம்.

இந்த மொழிக்கு முன் இருந்த நிலைக்குச் சந்தாசா என்று பெயர்.  சந்தாசா என்றால் சந்த அசைவுகள் அல்லது ஒலி அசைவுகள் என்று பொருள். சந்தாசா என்பது ஒரு மொழிப்பெயராகவே இருந்தது. சமஸ்கிருதம் என்பது பழங்காலச் சந்தாசா மொழியின் பண்பட்ட அல்லது வளர்ச்சியடைந்த நிலை. சந்தாசா என்பது இம்மொழி சந்தப் பாடல்களாகப் பாடப்பட்ட முன்னைய நிலை. பூசை மொழியாதலால் பூசை அல்லது அருச்சனைகளின் போது சந்தத்துடன் இம்மொழி பாடப்பட்டது. தாம் தம் தன தம் என்பன போல ஒலி போதருதலே சந்தம் ஆகும்.  தம் என்பது திரிந்து சம் ஆகும்.  அடுத்த அசையாகிய சம் என்பது திரியாமல் நின்றது. சம்+ தம் > சந்தம் என்ற சொல்லாய் அமைந்தது. இப்பெயர் இசைவடிவினையே கொணர்ந்து முன் நிறுத்துகிறது.

இந்தச் சந்தங்கள் ஐரோப்பாவில் ஏற்படவில்லை. அவர்களுக்குப் பூசைமொழியும் இல்லை.  

இம்மொழிக்கு வேண்டிய சந்தங்கள் தென் மாநிலங்களிலே படைக்கப்பட்டன.

சுனில்குமார் சாட்டர்ஜி என்ற மொழியறிஞர் சமஸ்கிருதம் என்பது தென்மாநிலங்களின் ஒலிமுறையைப் பின்பற்றி அமைந்த மொழி என்றார். சமஸ்கிருதம் பூசைகளின் போது பலுக்கப் படும் ஒலித் தொகுதியைச் செவிமடுத்து,   பிறமொழியினர், தமிழ் அல்லது தென்மாநில மொழிகள் போலவே ஒலிக்கின்றது என்று கூறியுள்ளனர்.

சமஸ்கிருதம் ஒரு தென்மொழி. அது வடக்கில் வழங்கும்போது புதிய சொற்களைப் பெற்றிருந்தாலும், அது தென்னொலியே இயைந்து வளர்ந்தது என்று அறிக. தென்மொழியின் ஒலிப்பட்டது என்றாலும் யாவருக்கும் உரியதே இதுவும் மற்றெந்த மொழியும். எந்த மொழியையும் யாரும் பேசலாம்.  எம்மொழியும் நம்மொழியே.  எல்லா மொழிகளும் மனித குலத்துக்குச் சொந்தமானவை.

தமிழின் இலக்கணத்துக்கும் ஒலியமைப்புக்கும் ஒட்டி அமைந்ததால், சம் அல்லது சம என்பது தமிழுக்குச் சமமானது என்று பொருள்படும். மற்ற தென்மொழிகட்கும் சமமானதே ஆகும். 

அடுத்து வரும் சொற்பகவு: கிருதம் என்பது.  கதம் என்ற சொல்லே கிருதம் என்று மாற்றொலி பெறுகிறது.  இது படி> பிரதி என்பதுபோலும் ஒப்பொலி ஆகும் . இன்னொரு சொல்: மகம். மக என்றால் பிறந்தது என்று பொருள். இது மகம்> ம்ருகம்> மிருகம் என்று மாற்றொலி பெறும். இன்னொன்று: கமம்> க்ரமம் என்பது. கிராமம் என்ற சொல்லும் கமம் என்பதன் திரிபுதான்.  பண்டை நாட்களில் குடியிருப்புகளும் மக்களின் நிலங்கட்கருகிலே அமைந்ததால், இச்சொல் சிற்றூர் என்று பொருட்பேறு எய்திற்று.

சமஸ்கிருதம் என்றால் தென்மொழிகட்குச் சம்மான ஒலியுடைய மொழி என்று பொருள். அது தன் முந்திய நிலையினின்று வளர்ச்சி அடைந்துவிட்ட படியால்தான் புதிய பெயர் பெற்றது என்பதால் அது தன் முந்திய  மொழி நிலையை இப்பெயர் மூலம் தெரிவித்தது என்பது பொருந்தவில்லை.  இவ்வளர்ச்சி இலக்கியங்களின் வளர்ச்சி என்பது தெளிவு,

சமஸ்கிருதம் என்பது நன்றாக இயன்ற மொழிதான். ஆனால் அதன் பெயர் இதனால் (மொழியின் தந்நிலைக் கட்டமைப்பு ம்)  உண்டானதன்று.  அவர்களின் பெயர்விளக்கம் சற்று வழுவினது ஆகும்.  பிராகிருதங்களிலிருந்து அல்லது பிறவழிகளில்  என்ன கட்டமைப்பினைப் புதுமையாய்ப் பெற்றதென்பதற்கு விளக்கம் இல்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


வியாழன், 29 ஆகஸ்ட், 2024

துர்க்கையம்மன் மலர் அழகுறுத்தம்


மலரா  லுன்னை  அழகுறுத்தின் ---- மகிழ்

மனமெங்கும்  இசைவானதே.

சில நொடி உன்றன்  தெரிசனமே---- எனில்

 சீர்உரு  அசலானதே.


அசல் -  அருகில் வருதல்.  இது   அயல் என்ற சொல்லின் திரிபு.

Fabricius,  a lexicographer,  also records this meaning.  See his dictionary page 6.

அழகுறுத்தின் - அலங்காரம் செய்தால்.

நிமையம் -  நிமிடம்.  இந்தச் சொல் தேவனேயப்பாவாணரால் அமைக்கப்பட்டது.  இதற்குப் பதிலாக நொடிகள் என்ற  சொல் இடப்பட்டது.

தெரிசனமே - அம்மன் சிலை  பற்றன் கண்ணுறுதல்.  இசைதல் -இயைதல்.

மனம் மகிழ்வில் இயைந்தது.

சில நிமிடங்களே தெரிசனம் செய்தாலும் அம்மை வந்து காவல் தருவார்கள். அயல் என்ற சொல் அசல் என்று ஆகி இப்பொருளை உணர்த்துகிறது.  அதாவது எழுந்தருளிவிடுவார்கள்.  பற்றன் உண்மையானவனாயின்.

நன்றி  கருஜி  அவர்கள்.

மெய்ப்பு பின்னர்


"lie" (லை) பொய் குறிக்கும் ஆங்கிலம்

 சாய்தல் கருத்திலிருந்து முன்வாழ்ந்த மக்கள் பல சொற்களை உண்டாக்கிப் பயன்படுத்தி உள்ளனர்.  எடுத்துக்காட்டு: சாத்தியம்,  அதாவது முடிக்கக் கூடியது என்று பொருள். இது மரம் சாய்தல் கருத்திலிருந்து வந்தது என்பதை நாம் முன்னர் இடுகைகளில் பதிவு செய்துள்ளோம். மரத்தைக் கவனத்துடன் சாய்க்க இயலாமையால் அது விழுந்து இறந்தவர் ஒருவரையாவது எமக்குத் தெரிந்திருந்தது. பெரிய மரத்தைச் சாய்க்கச் சிலராவது துணையாக வேண்டும்.  கயிறு அல்லது சங்கிலி முதலியவையும் தேவைப்படும் என்று தெரிகிறது.  ஆகவே இது காடுவாழ் மக்களிடமிருந்து நமக்கு வந்த சொல் என்று தெரிகிறது.


பூசைகளின்போது எதையும் சாய்க்க வேண்டியிருக்காது.


சாய் > சாய்த்தல்> சாய்த்தியம்,  இதில் யகர ஒற்றுக் குறைந்து,  சாத்தியம் என்றாகும்.  அதாவது,  இயல்வது என்று பொருள்.  இயல்வது என்பது இடப்பெயர்ச்சிக்குச் செய்ய முடிந்தது என்று பொருள்படும்.  இயல் என்ற சொல்லில் இ என்ற சுட்டும் அ என்ற சுட்டும் உள்ளன. ஒரு கனமுள்ள பொருளை இங்கிருந்து அங்கு கொண்டுசெல்வது.  ஆயுதம் இல்லாத பழங்காலக் கருத்து.


இங்கம்பென்ட் என்ற ஆங்கிலச் சொல்லில்கூடச் சாய்தல் கருத்து உள்ளதாக ஐரோப்பிய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.  "lie down," related to cubare "to lie" இலத்தீன் சொல்.


இது படுக்கையில் இடம்பிடிக்கும் செயலினின்று வந்த சொல். உமது படுக்கையில்தான் நீர் படுத்துறங்கலாம். மற்றவர்க்கு இடமில்லை.


lie ( falsity) என்பதற்குரிய அடிச்சொல்  இலத்தீன், கிரேக்கம் , சமஸ்கிருதம் முதலியவற்றில் இல்லை.  


இந்த மொழிகள் தமிழ்ச்சொற்களின் வாலிலிருந்து தமக்குரிய சொற்களை மேற்கொண்டன என்பது பலசொற்களிலிருந்து தெரிகிறது.  இல்லை என்ற சொல்லில் இ(ல்)கரத்தை வெட்டிவிட்டால், மீதம் லைதான்.  லை என்றால் எது இல்லையோ அதுதான் லை.


தமிழ் வால்பகுதிச் சொற்கள்  பிறமொழிகளில் உள்ளன.


லை ( இல்லை)  என்பதும் இவற்றுள் ஒன்று. இல் என்பதை விடுத்தனர்.


அறிக மகிழ்க.



மெய்ப்பு பின்னர்.




செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

சமேத எனற சம்ஸ்கிருதச் சொல்

 இன்று சமேத என்ற சொல்.

சமேத என்ற சொல்லில்  சம்+ ஏத  என்ற இரு பகவுகள் உள்ளன. 

இவற்றுள் ஏத என்ற சொல்லை முதலில் காண்போம். இங்கு தமிழ் அடிச்சொற்கள் மூலமாகவே விளக்குவோம்.

எய்த என்ற தமிழ்ச்சொல்லே ஏத என்று இங்கு வந்து துணைச்சொல்லாய் நிற்கிறது. செய்தி என்னும் சொல் சேதி என்று திரிந்தது போலவே எய்த என்ற சொல்லும் தலைநீண்டு ஏத என்றாக, நாம் பொருள்கூறுவோம்.

ஆனால் இது தமிழ் அகரவரிசைகளிலும் சங்கத அகரவரிசைகளிலும் காட்டப்பெறாது போன ஒரு சொல்.

இதை இன்னொரு வகையிலும் அறியலாம். ஏதாவது அல்லது  எதுவாயினும் என்பதே அது,  எதுவாயினும் என்றால் பொருளாக அல்லது நிலையாக என்று கொள்ளவேண்டும். ஏற்புடைய எதுவாகவும் என்று பொருள்.

தமிழிலிருந்து வேறுபட்டு நிற்க, இதுபோலும் உத்திகள் தேவை. ஏன் வேறுபட வேண்டுமெனின், தமிழ் பூசைமொழிக்கு மென்மை தராது என்ற எண்ணம்தான்.

இது நிற்க.

சம என்பது இன்னொரு சொல்.  சமன் என்பது தமிழிலும் பூசைமொழியிலும் ஒப்ப வழங்கும் சொல்.  இது தம்> சம் என்ற திரிபிலிருந்து எடுக்கப்படுகிறது. தம் என்பது ஒத்த தன்மையில் ஒன்றாய்க் கூடியிருத்தலை உணர்த்தும்.  தகரம் சகரமாய்த் திரியும்.

எனவே சம+எய்த  அல்லது சம+ ஏதாக என்பது சமேத என்று பூசைமொழியில் வருகிறது,  கூடியிருத்தல் என்ற நீண்ட சொல்லும் கருத்தும் இதன் மூலம் தடுக்கப்பட்டு மொழிமென்மை கிட்டுகிறது.

இப்போது வாக்கியத்தில்:

ராதா சமேதா கிருஷ்ணா.

ராதாவுடன் கூடியிருக்கும் கிருஷ்ணா.  அல்லது ஒன்றாய் நிற்கும் கிருஷ்ணா.

சமஸ்கிருதம் இங்கு இந்தியாவில் உண்டாக்கபட்ட மொழிதான். இதைத் தொடக்கத்தில் பூசைகட்குப் பயன்படுத்தினர். இது இந்தோ ஐரோப்பிய அல்லது ஆரிய மொழியன்று,  உள்நாட்டு உட்பற்றிய  (  உண்டான) மொழி.  இது உண்டான காலத்தில் ஐரோப்பியனுக்குச் சில ஒலிக்கோவைகள் இருந்திருக்கலாம். வரலாறு இல்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

புள்ளி பெறாத சொல்லின் எழுத்தில்

புள்ளி யிருந்தால் இது மென்பொருள்

கோளாறு ஆகும். புள்ளியை ஏற்ப விலக்கிப்

படித்தறிக. மீள்வருகையின்போது திருத்திக்

கொள்வோம். நன்றி.

மட்டுறுத்தாளர்.

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

முகரை என்ற சொல்லின் திரிபு வடிவம்.

 முகரை என்ற சொல்லில் முதலிரண்   டெழுத்துக்களும்  திரிதற்குரியவை.  இது எவ்வாறு என்றால்  பகுதி என்ற சொல்லின் முதலிரண்டு எழுத்துக்களும்  பகு> பா என்று திரிந்து பாதி என்றாகிவிடுவது போலுமே ஆகும். முக என்பது மோ என்று திரிந்துவிடும்.  அவ்வாறு திரிந்த பின்  இந்தத் திரிபு "ரை" என்ற கடைசி எழுத்தையும் மாறியமையச் செய்கிறது. இது ஒலிநூல் படியமைந்த திரிபுதான்.  என்ன ஆகிறது என்றால் மூன்றெழுத்தாய் இருந்த போது இடையின ஒலியாய் வந்த "ரை",  இரண்டெழுத்துச் சொல்லான பின்பு தன் வலிமையை இழந்துவிடுகிறது.  இந்தத் திரிபு  ஒலிநூல் முறைப்படியான மென்மைப்பாடே ஆகும்.

தமிழ் இலக்கண நூலுடையோர் பண்டை நாட்களில் பெரும் ஒலிநூல் சாம்பறிவர்களாக (ஜாம்பவான்களாக ) இருந்திருக்கின்றனர். வல்லினம் மெல்லினம் இடையினம் என்று ஒலிகளைப் பகுத்தறிந்தனர். கவிகளில் வண்ணங்களைப் பெய்தனர். நலிபு வண்ணம், மெலிபு வண்ணம் என்று வகுத்தனர். குறில் வண்ணம் நெடில் வண்ணம் என்றும் கூறுபடுத்தினர்.  இவற்றை எல்லாம் இத்துறை போகிய வல்லோரிடம் கேட்டறிந்து கொள்க.  சந்தசை என்ற பெயரை உடைய சமஸ்கிருத மொழியும் ஒலி நூல் நெறிமுறைகளை மந்திர  ஒலிப்புகளில் மிக்க நெறியில் கடைப்பிடித்துள்ளது.

முகரை என்ற சொல் மோறை என்று திரிந்ததும் இத்தன்மைத்தே அறிந்திடுவீர்.

சாறு என்ற சொல்லினின்றே  சாராயம் என்று சொல் பிறக்கிறது. அரிசி ஊறவைத்த நீரிலிருந்தும் சாராயம் செய்துள்ளனர். ஈரெழுத்துச் சொல்லாய் சாறு என்று இருந்த சொல் மூவெழுத்தாய்ச் சாராயம் என்று மிகுந்தவுடன் றா என்ற வல்லொலி  ரா என்று இடையினமாகி விடுகிறது.  வேர் அல்லது தானியத்தை ஊறவைத்துச் சாறு எடுத்த பின்னர் அது புளிப்பில் மதுவாகி விடும்.  அப்போது அது சாராயம் ஆகிவிடும்.  சாறாயம் என்று வராமல் சாராயம் என்று தான் சொல்லின் ஒலியில் மாற்றம் விளைகிறது.  சாராயம் என்பது முகரை மோறை என்பதை நோக்க எதிர்மாற்றுத் திரிபு ஆகும். இது பின்னும் திரிந்து மோரை என்றும் வரும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


 

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

இன்னலுக்கிரங்கும் பெருமாண்பர் மோடி

 முன் எழுதிய கவிதையின்  https://sivamaalaa.blogspot.com/2024/08/blog-post_68.html

 தொடர்ச்சி.


இன்னல் இடுக்கண் இருள்மாற்றி இவ்வுலகு

கன்னல் அமுதாக்கு காண்உலகு நட்புமுனி 

மோடி நெடுவாழ்வே ஆடிவரு நல்விளக்கு

தேடுலகில் தீங்ககலக் காண்.

இது இன்னிசை வெண்பா


இதன் பொருள்:

உரை: இவ்வுலகின் நட்பு முனிவர் அல்லது விசுவா மித்திரர் என்று ஒருவர் உள்ளார் என்றால் அவர் மோடிஜி அவர்களே. இன்னல், இடுக்கண்,  இருள் என்னும் அறியாமை ஆகியவைகளை அவர் நீக்குகிறார். .  அவர் கரும்பு போல் இனிய  அமுதினைத் தருகின்றார்.  எப்படி? பரத கண்டத்துக்கு நல்ல ஆட்சியைத் தந்துகொண்டு நன்மைகளை உலகுக்கும் செய்துகொண்டிருக்கிறார்.  அவருடைய நெடுவாழ்வு உலகுக்கு ஒரு நல் விளக்கு ஆகும்.  இந்நாளில் உலகின் தீங்குகள் நீங்கிவிடக் காண்க. 

காண் உலகு என்பது வினைத்தொகை. உலகுநட்புமுனி என்றால் விசுவாமித்திரர். காண் என்பது உலகுநட்புமுனி என்ற முழுத்தொடரையும் தழுவிநிற்கக் காண்க.  மோடி என்று பெயர் அடுத்து வந்து யார் அவர் என்பதைத் தெளிவு படுத்துகிறது. அடுத்த தொடருக்கும் மோடி என்ற சொல்லே நடுநாயகமாக நிற்கிறது. This is the fulcrum tactic. Try it in your own constructions.

இது இவ்வெண்பாவின் பொருள்.

[முன்வரும் தொடர்] (நடுநாயகம்)[பின்வரும் தொடர்]

முதலடி முற்றுமோனை ஆகிறது.

கடைசிக்கு முன் இரண்டடிகள் எதுகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

ஈற்றடி மோனையுடன் வருகிறது.

இன்னல்-  துன்பங்கள்

இடுக்கண் - இடைஞ்சல்கள் 

இருள்  -  அறியாமை.

கன்னல் - கரும்பு

அமுது -  இன்னுணவு

உலகு நட்பு முனி -  விசுவாமித்திரர்

ஆடிவரு நல்விளக்கு -  போகுமிடம் வந்து ஒளிகாட்டும் விளக்கு

மோடி நெடுவாழ்வு =  அவர் நீடுவாழ்க என்பதாகும்.

தேடுலகு - மாற்றம் தேடும் உலகம்

தீங்ககலக் காண் -  தீங்குகள் மறைந்துவிடும் காண்பீர்


அமைதி முய₹சிகள்வெற்றி பெற்று உயர்க.


சனி, 24 ஆகஸ்ட், 2024

பறவைக் கூட்டுக்கு மற்றொரு தமிழ்ச்சொல்.

 இங்குக் கூடு என்றது பறவைக்கூடு முதலியவற்றை. இதற்கு மற்றொரு சொல்லாய்த் தரப்படுவது: அங்குரகம் என்பது.

இது எளிமையான சொல்லே.  அங்கு உறு அகம் என்பதில்  உறு என்பது உரு என்று மாற்றம்பெறுதற்குக் காரணம், இச்சொல் இன்னொரு சொல்லாக்கத்திற்குப் பயன்படுவதால்,  உறு என்ற வல்லொலி இழந்து உரு என்றே வருகிறது  சொல்லுக்குள்ளே நிகழும் இந்த எழுத்துமாற்றத்தினால் பிழை எதுவும் விளைவதில்லை.

அங்கு உறு அகம் -  அங்கே வதியும் அல்லது கூடும் உள்ளிடம். இங்கு உறுதல் என்பது உறைதல் அல்லது குடியிருத்தல் என்ற பொருளில் வருகிறது. அங்கு என்பது பின்வருமாறு.

அங்கு என்பதை அண் கு என்று அறிக.  அண்மிச் சேர்ந்து என்று பொருள்.  வெறுமனே அவ்விடத்து என்று மட்டும் பொருள்படாது.

இப்போது இச்சொல்: அங்குரகம் என்றாகிவிடுகிறது.

இதன் சொல்லாக்கப் பகவுகள்: அண். கு,  உறு> உரு, அகம்.  புதுச்சொல் பொருள்: பறவைக்கூடு.

இது நல்ல சொல்லாக்க நெறியைப் போதிக்கும் சொல். ஒரு புதுச்சொல்லுக்கு உறு, உரு. உறை என்ற வேறுபாடுகள் மேல்வரும்படியான தொல்லைகள் தேவையில்லை. இதனால் தமிழில் மாற்றங்கள் எவையும் ஏற்படமாட்டா.

இதில் உங்கள் கருத்துகளை நீங்கள் பதிவிடலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

மீள்பார்வை செய்யப்பட்டது: 28062024 1013



வியாழன், 22 ஆகஸ்ட், 2024

உக்ரேன் அமைதிக்கு மோடிஜி முயற்சி வெல்லும்.[ கவிதை]

 நட்புலகு நாடுமுனி மோடி யாகம்

பொற்புறுக போர்நிறுத்தம் வேண்டி யுக்ரைன்

நெற்பயிராய்த் தான்-  தழைக்கச் செலவு கொண்டார்

கற்கரையும் மண்ணிலவர் எண்ணம் வெல்க.     [1]


புத்தினுக்கோ எத்திசையும் பொன்றா ஒண்மை

எத்துணையும் வெல்வகையில் மோடி நீட்டும்

அத்திலகம் ஏற்றணிந்து நாடும் நன்மை

முத்தனைய முனைப்போடும் மூட்டும்,  வெல்க.  [2]


போரின்மை வாராதோ என்றார்  ஆட

நேர்புலமே பின் காண்பீர்   ஞால நண்பர்

சேருதிசை யாதானும் ஊறும்  வென்றி

வாரிமடை  ஒன்றில்லை வையம் வெல்க.   [3]


----------------------------------------------------------------------------------------------

(1)

நட்புலகு -  உலகில் போர்கூடாது என்று  விரும்புகிறவர் மோடி

முனி -  முனிவர்

யாகம் -  அமைதி வேண்டும் என்று தன்னை யாத்து ( கட்டுப்போட்டு)க் கொண்டவர் மோடி.  யாகம் என்பதற்கு யாத்தல் ( கட்டுதல்) என்பதே மூலவடி.

பொற்புறுக -  அணிபெறுக.  அடைவுகொள்க.

நெற்பயிராய் -- பலகாலும் அவர் அமைதியையே பரிந்துரைத்தார்.  அது பயிர்போல் வளர்ந்து பயன் தரும் என்பது.

செலவு - பயணம்

கல் கரையும் - (கற்கரையும்) - எவ்வளவு கடினமானாலும் இளகி வெற்றியை

மோடி அடைவார்.

மண்ணில் -  இவ்வுலகில்.


[2]

புத்தின் -  இரசிய அதிபர்

பொன்றா -  முடிந்துவிடாத

எத்திசையும் -  ( புத்தினின் வெற்றி, திசைக்குத் திசை வேறுபடும்.  போரின் பரிமாணங்கள் பல பக்கங்கள் உள்ளதாகிறது.}  பன்முகத் தன்மை உள்ளது.

ஒண்மை -  உலக  அங்கீகாரம்

எத்திசையும் - எல்லா நாடுகளிலும்.

எத்துணையும் -  எந்த அளவு ஆயினும் அமைதியை நோக்கி.

துணை - அளவு.

அமைதி என்பதும் ஓர் அளவிடற்குரியது. இடம் காலம் நடப்பு என இவையே வெற்றியின் அளவைத் தீர்மானிக்கும்.

அணிந்து -  திலகத்தை அணிந்துகொண்டு.

முத்து -  இது உள்ளிருந்து முட்டிக்கொண்டு வெளியில் வருவது.

முனைப்பு என்பதும் அத்தகைமை உடையது. உள்ளிருந்து வருவதுதான்..

மூட்டும்  -  விரிசல்களை ஒன்றுபடுத்திச் சரியாக்கும். முன்வரவர மூட்டுவாய் ஒன்றாகும். வெற்றியாகும்.

நன்மை மூட்டும் என்று வினைமுற்றால் முடிக்க.


[3]


போரின்மை -  உலகமைதி

ஆட  -  களிக்க

பின் - நேர்ந்த பின். இறுதியில்.

ஞாலநண்பர் -  விசுவாமித்திரர் ஆகிய மோடி  ( பிரதமர்)

நேர்புலமே  -  நிகழும் இடமே

சேருதிசை - எங்கு சென்றாலும்

ஊறும் -  உண்டாவது  

வென்றி -  வெற்றி.

வாரிமடை - வெள்ளத்தடுப்பு

தொடர்ச்சி:https://sivamaalaa.blogspot.com/2024/08/blog-post_25.html




மந்திரி சொல். வேறு விளக்கங்கள்.

இதில் மற்ற பொருண்மைகள் காண்போம்.  முன் இடுகை: https://sivamaalaa.blogspot.com/2024/06/blog-post.html

மந்திரி என்பது பல்பிறப்பிச் சொல். இது தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளில் விளக்கப்படலாம். இத்தகைய சொல்லைத் தேர்ந்தெடுத்து அரசியற்குப் பயன்படுத்திக்கொண்டமையானது, தமிழரின் நுண்மாண் நுழைபுலத்தைக் காட்டுகிறது.

இவற்றில் ஒன்றைமட்டும் இப்போது முதலில் தருகிறோம். 

மன்றில் அரசருடன் பெரும்பாலான காலங்களில்  வீற்றிருந்து அவருக்கு ஆலோசனைகளை வழங்கும் அமைச்சரே மந்திரி ஆவார்.

மன்று என்பது அரசரும் பிறரும் கூடியிருக்கும் இடம் குறிக்கிறது.

மன்று + இரு + இ >  மன்றிரி > மந்திரி என்று திரியும்.

மன்று என்ற சொல் மன் என்ற அடியிலிருந்து  வருகிறது.  மக்கள் கூடியிருக்கும் இடம் மன்று,  மன்றம் என்று வரும்,  மன்+ து > மன்று.  து என்பது ஒரு விகுதி. விழுது என்ற சொல்லில் இந்த விகுதி உள்ளது  . இது பலசொற்களில் வரும் விகுதி. அந்தப் பட்டியலை யாம் இங்கு வைக்கவில்லை. மன்றில் அமரும் அதிகாரமுடையோன் மந்திரி.  இன்னும் பொருள் விரிக்கலாம்,

மன்+ து  என்பது மந்து என்றும் புணர்ந்து அமையும்.  மந்து எனற்பாலது அரசனையும் குறிக்கும், இடம் நோக்கிப் பொருள் உணர்க,  மந்து என்ற சொல்லில் இந்த விகுதி "து" சொல்லில் இருந்துவிட்டது. " று "  என்று மாறவில்லை. மந்து இரி என்பது மன்னனுடன் இருப்பவன் என்றும் பொருள்படும்,  மந்து இரு இ > மந்திரி.

மன் என்ற சொல்லே அன் விகுதி பெற்று மன்னன் என்றும்  அர் என்ற பன்மை அல்லது உயர்வுப் பன்மை விகுதி பெற்று மன்னர் என்றுமாகும்.  இது உங்களுக்கு நன்கு அறிமுகமான சொல்தான்.

மனிதன் என்ற சொல்லைப் பல ஆண்டுகட்கு முன்பே யாம் இடுகை இட்டுள்ளோம்,   நீங்கள் தேடிப் படித்தால், மன்+ இ+ து + அன் > மனிதன் என்று வருதலை அறிந்துகொள்ளலாம்.  நிலைபெற்று இப்புவியில் வாழும் ஓர் இனத்தான் என்பது இதன் பொருள்.   மன் = நிலைபெறுதல். மனிதன் நிலைபெறுதல் உடையவனே.  இறப்பின்பின் அவன் தந்த மக்கள் இருப்பர்.  ஆகவே நிலைபேறு மாறுவதில்லை.

இ என்றால் இங்கு.  து -  இருத்தல். (  அது என்றால் அங்கு இருக்கிறது என்பது). அன் என்பது ஆண்பால் விகுதி.  அவன் என்றும் பொருள்.

மன் என்ற சொல் மான் என்றும் திரியும்..  மான்+ து + அன் >  மாந்தன். இதுவும் மனிதன் என்னும் பொருளதே. நிலைபெற்றவன், பிறப்பு உடையன் என்றும் பொருள். மக > மா>  மான்.  இன்னொன்று:  மன்> மான் என்பதும்.   மான் என்ற விலங்குப் பொருள் தரும் சொல் வேறு.   தன் என்பது தான் என்றும் திரிதல் உடையதுபோல்.  அன் என்ற ஆண்பால் விகுதி ஆன் என்றுமாகும்.  கண்டனன், கண்டான் என்ற சொற்களில் அறிக.

இன்னொரு  பொருள்  :   மன் -  அரசில் நிலையான கட்டளைகள் அல்லது விதிகள். திரி = மாற்றம்.  அரசில் மன்னனுடன் அல்லது இல்லாத விடத்தும், செயல் திரிபுகளை நுழைக்கும் அதிகாரம் உள்ளவன் மன் திரி > மந்திரி.  இந்தச் சொல் மந்திரியார் என்று இருந்து பின் ஆர் விகுதி வழக்கில் வீழ்ந்தது அல்லது விடப்பட்டது,

மன்னனுடன் போகிறவன் என்றும் பொருள். திரிதல் =  அங்கும் இங்கும் போதல்.

மன் திரி > மந்திரி.  முன் தி> முந்தி போல. மன் + தி > மந்தி போல.  றி வராமலும் புணரும்.  இது வாக்கியத்தில் நிலைமொழி வருமொழிப் புணர்ச்சி அன்று. சொல்லாக்கம்,

முன் கூறியவற்றுடன் இவற்றையும் சேர்க்க, இது பல சாளரங்களின் வழி நோக்கினாலும் தமிழில் பல்வேறு ஆக்கங்களிலும்  தமிழ்ச்சொல்லே ஆகும்.

உங்களின் வீட்டை நாலு மூலைகளிலிருந்து நோக்கினாலும் உங்கள் வீடுதான். அதுபோல், இச்சொல்லும் தமிழ்தான்.

பேராசிரியர் வையாபுரியார் போன்றவர்கள் இதை நன்கு கவனிக்கவில்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்




செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

துர்க்கையம்மன் காய்கறி அலங்காரம்



காய்கறி அலங்காரத்தில் ---  அந்தக்

கனிவான முகம்தந்த அழகென்ன அழகுகாண்

ஆய்வறி வலவர்களும் ---  இந்த

அகிலத்தில் வேறெங்கும் காணாத அழகுமெய்

ஓய்வுறு நெடுநினைப்பில் --- அம்மையை

ஒருபோதும் நீங்குதல் இல்லாத இருப்பினில்

சேயென ஒடுங்கிடிலோ ---  நெஞ்சம்

சிந்திக்க உருத்தரும்  அன்னையின் ஒளிமுகம்  .


அருஞ்சொற்கள்:

காய்கறி -  உண்ணும் சைவப் பொருள்கள்.

கனிவான -  அன்பு மிளிரும் (முகம்)

ஆய்வறி - யோகமுறையில் இருந்து தேடுவது.  இருப்பு என்பதும் அது.

இதை ஆழ்வறி என்று மாற்றிவிடுவோம். பின்னர்.

அகிலம் -  உலகம்

வலவர் - வல்லமை உடையோர்.

மெய் -  உண்மை

இருப்பு -  யோக முறையில் அமர்தல்

நீங்குதல் இல்லாத -- எழுந்து போய்விடாமல் 

சேயென -  பிள்ளையாய்

ஒடுங்கிடில் -  ஓரிடம் சேர்ந்து நிட்டை செய்ய

உருத் தரும் ---  காட்சி கொடுக்கும்.

படம்: கருஜி.
 

கருப்பட்டி

 கருப்பட்டிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்றால் எளிதான   விடைதான். அது கருப்பாக இருப்பதால் என்று சொல்லிவிடலாம்.

கருப்பட்டி,  காய்ச்சிப் படிவித்து உண்டாக்கப் படுகிறது . அது படிவிக்கப் படும் வார்ப்பில் பின் தனக்கு  ஏற்ற ஊருவை அடை கிறது.

ஏன் பட்டி என்று வருகிறது?

கருப்பாகப் படிதல் என்பதில், படி என்பது பட்டி ஆகிப் பெயர்ச்  சொல் வடிவத்தினை அடைகிறது.  பட்டி என்பது படு+ இ. அல்லது படி + இ என்பது, இது  பட்டி ஆகும். இது டகர. இரட்டிப்பாம்.

கடி தடி என்பனவற்றில் இறுதி  இகர விகுதி

கடு +  இ >  கட்டி, > கடி

தடு + இ >   தட்டி. > தடி

மெய்யெழுத்து மறைதல் இடைக்குறை.

இவற்றில்  டகரம் இரட்டித்தன.  குடு என்பது குடு இ > குட்டி.  குடு + ஐ > குட்டை.  கண்டுகொள்க.

கவிதையில் குறுக்கம் வேண்டிச் சிறிதாக்கப்படும் சொல்லில் எழுத்துக்கள் மறைதல் தொகுத்தல் எனப்படும். இங்கு சொல்லாக்கம் ஆதலின் இவ்வாறு குறுகுதல் குறைச்சொல் என்போம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

இது மீள்வரைவு செய்யப்பட்டுள்ளது.  கள்ளமென்பொருள் கொண்டு மாற்றப்பட்டுள்ளதுபோல் தெரிகிறது. இப்போது சரி செய்யப்பட்டுள்ளது.


சனி, 17 ஆகஸ்ட், 2024

அலட்சியம் புனைந்தவிதம்

 அடுத்துச் சென்றுதான் ஒன்றை அணுகிக் கவனிக்க முடியும். மிக்கத் தொலைவிலுள்ள ஒன்றை எவ்வளவு சிரத்தையுடன்  அணுகினாலும் நமக்கு அதனுடன்  நெருங்கி நிற்கும் உறவுணர்வு ஏற்படுதல் குறைவே.

பண்டைச் சொற்களில் அடுத்திருத்தல் எவ்வளவு முன்மையுள்ள நிலை என்பதைச் சொற்புனைவுகளில் கண்டுதெளியலாம்.  இதற்கு அலட்சியம் என்பது ஒரு சிறந்த உதாகரணம் ஆகும்.  அத்துடன் உதாகரணம் என்பதன் தமிழ் மூலங்களையும் இங்கேயே விளக்கிவிடலாம் என்று எண்ணுகிறோம். முதலில் இலட்சியம் அலட்சியம்.

அடுத்திருக்கும் நிலைக்கு ஒரு சொல் வேண்டுமாயின் அதை "அடுத்திரு" என்பதிலிருந்தே படைக்கலாம். 

அடு> அடுத்தல்> அடுத்திரு>  அடுத்திய(லுதல்)  >  இல்+ அட்சிய

இவற்றுள் இல் என்பது இடம்.  அடுத்திய> அட்திய > அட்சிய. என்பது புனைவு,

இல் அட்சியம் என்பது அடுத்திருந்து கவனித்தல்.

அல் அட்சியம் என்பது இடத்தில் அல்லாமல் பிற முறைகளில் கவனித்தல்.  ஆகவே இடத்திலின்மையால் கவனிக்காமை.

அடு என்பதில் டு என்பது கடின ஒலி.  அது குறைக்கப்பட்டது,  ட் என்ற ஒற்று மட்டுமே எஞ்சியது.  டு வல்லினம்,  நீக்கமுற்றது,

இதை அலடுச்சியம் என்றால் இன்னா ஓசைத்துமாகும். சொல்புனைவுக்கு இது ஆகாது,

உதாகரணம் என்பது  உது + ஆகு+  அரு + அண்+ அம்.

அரு என்பது எப்போதாவது இருத்தல்.

அண் என்பது நெருக்கம். 

ஆகவே உதாகரணம் எப்போதாவது ஒன்றுடன் அணுக்கமுடைத்தாதல்.

எடுத்துக்காட்டுகள் அடிக்கடி நிகழா இயன்மை உடையவை.,

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்,


வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

பண்டாரம் சொற்புனைவு

 பண்டாரம் என்பது பண்டு (,முற்காலம்) என்பதனோடு தொடர்புடையதாய்க் கருதப் பட்டதுண்டு. பண்டிதம் என்பதும் அதன் தொடர்புடையாதாய்ச் சிலர் கொள்வர்.

பண் + தரு+ அம் >.  ~ ( பண் தருவோன்) இதன் பொருளும்  இச்சொல்லின் பகவுகளும் ஆகும்.  இச் சொல் சரியாய்ப் புரிந்து கொள்ளப் படவில்லை.

தரு அம் > தாரம் என்றாகும். ண்+ தா என்ற எழுத்துக்களால் "டா" வந்துவிடும். 

இது ஒரு சாதியன்று.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.


செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

பண்தீட்டுவோர் PUNDITS Tamil word

 பண்ணைத் தீட்டுவார்: வழக்கம்போல இது குறுகிப் பண் திட்டு என்று அமைந்து பண் திட்> பண்டிட்   என்று குட்டைப் பட்டது.

ண் + திட் > டி ட் என்று தமிழ்ப் புணர்விலும் இவ்வாறே வரும். 

குறுகி அமைந்த  சொற்களைக் காண்க: 

வா> வந்தான். (வினைமுற்று) 

தோண்டு > தொண்டை. ( தொ பெ).

பாட்டு என்பது bhat என்றும் குறுகும். பட் என்ற குறுக்கம் தொழில்,  தொழிலோனைக் குறிக்க அயலில் வரும்

பட்டப்பெயர்கள் பல தமிழினின்று போந்தன.

இவர்கள் பாணர் வழியினர்.  PaNars were puNN (song)  composers of ancient times. Recently they existed in societies as teachers of ancient writings. Now they may be of any profession of reading and writing. 

No historian whom we have read seems to have known this derivation. So no quotes to offer. You may reject or accept. This is a discovery.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.




ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

காசியப்பர் என்ற சொல் ( காசியப் என்று அயலில்)

 காசியப்பர் என்ற பெயரை இன்று ஆய்வுசெய்வோம்.

காசியப்பர் என்பது திரிந்து அயலில் காசியப்ப, காசியப் என்றெல்லாம் வரலாம். பணிவுப்பன்மை விகுதியாகிய அர் தேய்வது என்பது தமிழல்லாத பிறவற்றில் இயல்பு ஆகும்.  காசியப்பர் என்றொரு முனிவர் முதலில் இருந்து அவர்  மன்பதைக்குள் ஏற்படுத்திய அதிர்வியக்கம் சற்று நீங்கிய பின் பிறரும் அப்பெயரைச் சூட்டிக்கொள்வது உலகியல்பு ஆகும்.

காசியின் கடவுள் சிவபெருமான் ஆவார். அவரின் பெரும்பற்றராயிருந்த ஒருவரே காசி அப்பர்> காசியப்பர்.  யகர உடம்படுமெய் வந்துள்ளது.  அவர் பாடியவாக உள்ள சில பாடல்கள் கிடைத்துள்ளன. காலக்கடப்பினால் வேறு சிலர் பாடிய சிலவும் அவற்றுடன் இணைவைத்து மதிப்புற்றிருத்தல் கூடும். முதலில் இருந்தவர் ஒருவரே. பின்னர் வந்தோர் அடியார்கள் அல்லது பின்பற்றாளர்கள் என்பதே அறியத்தக்கது. பண்டை இலக்கியங்களில் அடியார்களையும் இணைத்து மனைவியர் என்று சொல்வது கதைசொல்வோருக்குப் பழக்கமாய் இருதிருக்கிறது. பின்பற்றுவோர் மனைவியர் போலும் பற்றுடையார் என்று முதலில் தொடர்பின் திண்மையைக் காட்டிவிட்டு போகப்போக அவர்கள் மனைவியர் என்று கூறிவிடுதல் பழங்கதை சொல்வோருக்குப் பழக்கமாகி இருந்துள்ளது.   காசியப் என்பது காஷ்யப் என்று வருவது மெருகூட்டல் ஆகும்.

இறைவனின் ஐந்தொழில்களுள் காத்தல் என்பது ஆக்கத்துக்கும் அழிவுக்கும் இடைத்தலைமையாக வரும் செயலாம். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பெயரே காசி என்ற ஊர்ப்பெயர்.  கா-  காத்தல்.  சி என்பது சீர் என்பதன் குறுக்கமும் விகுதியுமாகும். காக்கும் சீர்பெறு நகரமே காசியாகும். இறைவன் சிவனின் காவலுற்ற நகரம் காசி.

பிரிந்த ஆரண்ய அகத்து உபநிடதத்தில் இவருடைய பாடல்கள் சில வந்துள்ளன.  ஆரண்யம் என்பது காடு.  பிரிந்த ஆரண்யம் என்பது பிற காடுகளிடமிருந்து வேறுபட்டு தனித்தன்மையுடன் விளங்கிய காடு. அரண்> அரணியம் > ஆரண்யம்.  அரிதாக அரசருக்கு வேண்டிய அண்மையில் அமைந்திருப்பது அரணியம் > ஆரண்யம்.  

காசி என்பது தமிழ்ச்சொல். காசி அப்பர் அங்கு வாழ்ந்து மறைந்த ஒரு முனிவர்.அல்லது இறையடியார்.  காசிக்கும் ஈரான், மெசொபோட்டேமியா முதலிய இடங்கட்கும் உள்ள தொடர்புகள் மிகக் குறைவு ஆகும்.  காசியப்பரைப் பற்றிய குறிப்புகள் ஏதும் பிற இடங்களிலிருந்து கிடைத்தில.

காசியப்பர் என்ற சொல் காசியப், காசியப்ப என்று வருதல் இயல்பான வாலிழப்பு ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின். 

சனி, 10 ஆகஸ்ட், 2024

நியாசம் என்ற சொல். (இறைத்தொடர்புநிலை)

 இச்சொல்லை ஆய்தல் செய்வோம்

நீ என்பது நீ என்றே தமிழிலுள்ளதுபோல் பொருள்கொள்க.

ஆசு  என்பது தொடர்பு அல்லது பற்றுக்கோடு.

அம் என்பது அமைப்பு குறிக்கும்  விகுதி.

ஆகவே நியாசம் என்பது உன்னை இறைவனுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் நிலை.

ஆசு அல்லது பற்றுக்கோடு என்பது பற்றிக்கொள்ளுதல் அல்லது இங்கு உணர்ந்து அறிதலாகும்.  இது ஆகுதல் அல்லது ஆதல் என்னும் சொல்லிலிருந்து வருகிறது.  ஆ என்பதே வினைச்சொல்..  ஆகு என்பதில் கு என்பது சேர்வு குறிக்கும் வினையாக்க விகுதி. மூழ்கு என்பதில் மூழ் என்பது வினையன்று.  கு எனற்பாலதை இணைத்தாலே வினை உருவாகும்.  (மூழ்கு).   ஆனால் ஆ என்பதே வினையாகவிருப்பதால்  ஆகு என்று கு வினையாக்கம் வந்தாலும் இல்லாவிட்டாலும் ஆ என்பதே வினையே ஆகும்.  ஆ> ஆனான்  இறந்தகால வினைமுற்று.

ஆகவே நியாசம் Nyāsa என்பது தமிழ்மூலங்களை உடைய சொல். 

நியாசத்தின் தன்மையை பிருந்தாரண்யகத்து உபநிடபத்தில் அறிக.  ( பிரிந்த ஆரண்யகத்து உபநிடதம்).


வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

சிதல் என்ற எறும்பு போன்ற பூச்சி

சிது  என்பது இதன் அடிச்சொல்

சிறிது என்ற சொல்,  றிகரம் குன்றினால் சிது என்றாகும்.

இதை இன்னொரு விதமாக,

சிது > சிதைவு,  சிதைதல்.  சிறிதாக உருவம் அடைதல்.

சிது அர் > சித்தர்.  (  சிறிய நிலையினரான துறவிகள்.)  மகாரிஷிகள் அல்லாதவர்கள்.

சிது >சித்து -  இவர்கள் செய்யும் வியக்கும் காட்சிகள்.  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

தினகரன் என்ற சொல்லின் ஆக்கம்

 தினகரன் என்ற சொல்லை இன்று அறிவோம்.

தினகரன் என்ற சொல்லைத்  தமிழினின்று நோக்கி ஆய்வதன் மூலம் நாம் சில விளக்கங்களை அடையமுடியும்.   சூரியனின் அருகில் தீ எரிந்துகொண்டிருக்கிறது என்பதைப் பண்டையரும் அறிந்திருந்தனர். அவர்கள் சொல்லை இப்படிப் படைத்தனர்:

தீ + இன் + அகு  + அரு + அன்.

தீயின்   அங்கு  அருகில் அவன் உள்ளான்.  

சொல்லின் பொருட் செலவை ஒட்டியே வாக்கியம் அமைக்கப்படுகிறது.

தீ என்பது தி என்று குறுகும். தா என்ற ஏவல் வினை வினைமுற்று ஆகின் தருகிறான் என்று குறுகுதல் காண்க. இன் என்பது இகரம் அ கு என்ற இரண்டில் கு என்பது அகரத்துடன் இணைந்து ககரம் ஆகும்.

இதுபோன்ற திரிபுகட்கு முன்னர் பெயருக்குப் பெயரே எடுத்துக்காட்டிக் குறுகுதல் நிலைநாட்டப் பட்டது என்றாலும் வினைச்சொற்களின் குறுக்கம் இதை இன்னும் தெளிவாக மக்களுக்குக் காட்டவல்லவை.

\சூரியன்<  சூடியன் ( சூட்டியன்)  என்பதும்  டகர ஒற்று இழந்து சூடியன் என்பதில் டி என்பது  ரி ஆகிற்று.

இஃது வாக்கிய நிலைமொழி வருமொழிகளின் ஏற்படும் புணர்ச்சி அன்றாதலின் டகர ஒற்று தோன்றுமா பின் மறையுமா என்பது தேவையற்றது என்பதே சரியாகும். இதில் டகர ஒற்று தோன்றவேண்டாம்.

நெருப்பும்  சூடும் சூரியனிலிருந்து வருபவை என்று பண்டை மக்கள் அறிந்திருந்தனர்.

எனவே தினம் என்பதும் தீ இன் அம் என்ற பகவுகளின்   புணர்வே ஆகும். இதைப் பிறரும் கூறியுள்ளனர்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்



அசுவம் என்ற குதிரை

 குதிரை என்ற சொல் அது குதித்துக் குதித்து முன்செல்லும் ஒரு விலங்கு என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அசுவம் என்பது இதே கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சொல்லே ஆகும்.

அசுவம் என்பதைப் பலவாறாகப் பிரித்துக் காட்டலாம் என்றாலும் , இப்போது அதைச் சுருக்கமாக இங்குக் காட்டுவோம்.

குதிரையின் அசைவு, குதித்து எழுதலும் பின் எழுநிலையினிAன்று விழுதலும் (கீழிறங்கி முன்னிருந்த மட்டத்திற்கு வருவதும் ) பின்னர் மீண்டும் எழுதலும் இவ்வாறு அது முன் செல்கிறது. இதைத்தான் குதி என்ற சொல்லும் காட்டுகிறது.

அசை, உ, அம் என்ற மூன்று சிறுசொற்கள் அசுவத்தில் உள்ளன.

அசு + ஐ > அசை.   அசு என்பது அடிச்சொல்.

அசை உ என்ற இரண்டு கூறாமல்  அ ஐ உ  என்றும் கூறிவிளக்கலாம். இதற்குக் காரணி,  அய் + உ  ( ஐ உ) இரண்டும் போதுமானது.

அய்  -  எழுந்து      உ  -  முன் செல்லுதல்.

எழுந்து என்றால் உடலை மேலே எழுப்பித்து என்பது.

அசு என்பது வந்தவுடன் அம் சேர்த்துச் சொல் அமைகிறது.

எப்படியெல்லாம் பார்த்தாலும், அசைந்து முன் செல்வதே குதிரை. அய் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டால்,   அய் உ > அயு> அசு என்று முன் சொல்லும் அடியே வந்துவிடும்.

அசுவம் என்பது தமிழ்ச் சுட்டடிகளைக் காட்டுவதால் சமஸ்கிருதம் என்ற பூசைமொழி தமிழ்ச்சொல்லமைபைப் பின்பற்றியது ஆகும்.

ய் என்பதை இயைதல் குறிக்கும்.  இ ய் ஐ . இது குறுக்கப்பெற்றது.

அசுவம் என்ற சொல் அச்சுவம் என்றும் வழங்கியதாக நூல்கள் சொல்லும்,

ஐ(அய்) என்பதே மூலவடியாக இருப்பதால் அச்சுவம் என்பதை இடைவிரியாகக் கொள்ளலாம். இதைப் பின் ஆய்வு செய்வோம்.

அஸ்வம் என்பது பின் விரிப்பு ஆகும். சு என்பது ஸ் என்று மெலிப்பு ஏற்றப்பட்டது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

மெட்டி இடுதல்

 மெட்டி இடுதல் என்ற இருசொற்களின் புணர்வில் யகர உடம்படுமெய் வந்து இருசொற்களும் ஒரு சொன்னீர்மை  எய்துதல் வேண்டும்.  இது "மெட்டியிடுதல்" என்று வரும்.  இது தமிழ்ப் புணரியலில் வரும் இயல்பான இலக்கண முடிபு ஆகும்.

மெட்டுதல் என்ற வினைச்சொல் எட்டி உதைத்தலைக் குறிக்கும்

மெட்டு-தல் meṭṭu-tal from University of Madras "Tamil lexicon" (p. 3335)

மெட்டு¹-தல் meṭṭu- , 5 v. tr. cf. நெட்டு-. [K. meṭṭu.] To spurn or push with the foot; காலால் தாக்குதல். நிகளத்தை மெட்டி மெட்டிப் பொடிபடுத்தி (பழனிப்பிள்ளைத். 12).


இந்தக் கால் தாக்குதலில் தாக்கப்படுவோனுக்கு  அதிக வலி ஏற்படுத்தற்பொருட்டே இரும்பு அல்லது பிற கனிமங்களால் செய்த வளையங்களைக் காலில் விரலில் அணிந்துகொண்டனர் என்பது தெளிவு. நாளடைவில் பெண்களின்  அணியாக  இது உருவெடுத்தது

மெட்டுதல் என்பதே வினைச்சொல் ஆதலின்,  இடுதல் என்பதை இச்சொல்லுடன் இணைக்கையில் மெட்டு(வினை)+ இடுதல் ?> மெட்டிடுதல்  என்று வருமென்பது முன்பிருந்த பேரகராதிப் பதிவு என்று தெரிகிறது. இதை இப்போது காணமுடியவில்லை. இப்போதுள்ள ஆசிரியர்கள் இதை  வழுவென்று கருதிவிட்டனர் போலும். இதைச் சிறிது ஆராயலாம், மெட்டு+ இ > மெட்டி என்பதால்,  மெட்டி இடுதல் என்பது உண்மையில் மெட்டுவதற்கு இடுதல் என்பதே. மெட்டுவதற்கு வளையம் ஓர் ஆயுதம். அதற்கு ஆயுதம் இடுதல் என்பதாம்.  மெடடி இடுதல் அல்லது மெட்டிடுதல் என்பன இச்சொல்லின் புணர்ச்சி.   இது ஒரு திரிபு  வரலாற்றினைக் காட்டவல்லது ஆகும்,

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


திங்கள், 5 ஆகஸ்ட், 2024

சிங்கப்பூர் தேசிய தின வாழ்த்துக்கள்

 சிங்கத்தின் பெயர்கொண்டு சீர்பலவும் பெற்று

சீர்மிக்க நடைபோடும் சிங்கப்பூர் நாடு

தங்கத்தின் ஒளிபெற்றுத் தகைமேலும்  உற்று

தணிவற்ற செழிப்புற்றுத் தாரணிமேல் ஓங்கி

எங்கணுமே யாவருமே  போற்றுநகர் ஆகி

இப்புவியில் எவ்வளமும் இயன்றோங்க வாழ்க.


ஒன்பதுடன் ஐம்பதுசேர் அகவைத்தே சிங்கை

ஒப்பில்லா உடல்நலமே உயர்மக்கள் பெற்றே

அன்பினிலே இணைந்தோராய் அகிலத்தார் ஏற்றி

ஆதரவால் பிணைப்போடும் ஆம்தனையும்  வாழப்

பண்புடனே பல்லாண்டு பகர்கின்றோம் செல்வப்

பயன்சிறந்த தேசியநாள் பார்புகழ வாழ்க.

பொருள் :

சீர்பலவும்.  காண்பொருள்,  காணாப்பொருள் ஆகிய பல்பொருள்.  இலாபம் என்பது வடிவம் இல்லாத பொருள். எண்ணிக்கையில் அறிவன. வீடுகள் வண்டிகள் என்பவை காண்பொருள்.

சீர்மிக்க நடை - இது அரசு இயக்கம், மக்கள் தொடர்பு என்பன போல் பிறவும்  இவை இயங்குதல்.

தணிவற்ற செழிப்பு -  பணவரவு, மற்ற பொருள் உணவுகள் வரவு.

ஆதரவு - பிறர் தரும் அரவணைப்பு

வளம் என்பது நன்மைகளின் மிகுதி

அகவை  நாட்டின் அகவை அல்லது வயது

செல்வப் பயன் -  செல்வம் வரவேண்டும்.  அது வீண்படாமல் பயனும் வரவேண்டும்.

மெய்ப்பு: 07082024 0637

அர் என்ற அடிச்சொல்லில் வந்த அருஞ்சொற்கள்

 அர் என்ற அடிச்சொல் நாம் அறிந்தின்புறத்

தக்க தமிழ் அடி ஆகும்.

இவ்வடியினின்று எழுந்த பழஞ்சொற்களை
முன்னர்க் காண்போம்.

அர் >  அரக்கு. இது கு விகுதி பெற்ற சொல்.அதை நீக்கிவிட்டால் அர் எஞ்சி நிற்கும். அரக்கு செம்மையாதலின் அர் என்பதும் செம்மைப் பொருளினது ஆகும்,

அர் > அரத்தை:  இது இஞ்சி போன்ற வடிவினது.    அர் + அ+தைஅல்லது அர்+ அத்து + ஐ என்ற துண்டுகள் இணைந்த சொல்.  இதுவும் செம்மை நிறத்தினை உடையது.  இதனாலும் அர் என்ற அடி செம்மை குறிப்பதே என்பது தெளிவாகிறது.

அர்+அத்து+ அம்= அரத்தம்.  இது குருதி என்னும் பொருளது. தன் தலையெழுத்தை இழந்து ரத்தம் என்று வழங்குவது. தமிழில் ரகரத்தில் சொல்
தொடங்காது என்று இலக்கணமிருப்பதால், திறம் மிகப்படைத்த நம் தமிழரால் இரத்தம் என்று இகரம் சேர்த்து எழுதப்படுவதுமாகும்.  இதுவும் சிவப்பு என்று நிறம்குறிக்க எழுந்த நல்ல தமிழ் ஆகும். தலையெழுத்தை இழந்து தலைதடுமாறச் செய்விக்கும் சொற்கள் மிகப்பல. முண்டமாக வரும் சொல்லை எந்தமொழி என்றறியாது அலமருவது கண்டு நீங்கள் ஆனந்தமடையலாம்.

அர் :> அரத்தி : செவ்வல்லியைக் குறிப்பது.

அர் > அர+ இன் +தம் =  அரவிந்தம்  : சிவந்த இனிய தாகிய  தாமரை.  தம் என்பது து+ அம். இன் உடமைப் பொருளெனினும் வெற்று இடைநிலை எனினும்
பெரிய வேறுபாடில்லை.

அர் > அரப்பொடி:  சிவப்பாகத் தோன்றும் இரும்புத் தூள்.  துருப்பிடித்தது சற்று செம்மை தோன்றும்.

அர் >   அரன்:  இது சிவனைக் குறிக்கும் சொல் ஆகும்.  சிவ என்பது சிவப்பு நிறம் குறித்தல்போலவே  அர் என்பது, அந்நிறமே குறித்தது. சிவ> சிவன்;  ஒற்றுமை உணர்க.  அரி+அன் என்று புணர்ந்து அரனாகி பாழ்வினைகளை அரித்தெடுப்போன் என்றும் கொளலாகும்.

அர் >  அருணன்:   இது சூரியனைக் குறிக்கும். அர்+ உண்+ அன் என்று பிரிக்க. உண் என்பதற்கு  "உளதாகிய"  என்று பொருள்கூறவேண்டும்.  உண் என்பது துணைவினையாகவும் வழங்கும். எடுத்துக்காட்டு: வெட்டுண்ட.  கட்டுண்ட என்பவை. உள் > உண்.  நாம் உண்பதும்  உள்ளிடுதலே ஆகும். விள் > விண் என்பதுபோல.  விள்> வெள் > வெளி.  சூரியன் செம்மை யாதலின்  அர் என்பதில் அமைந்தது. செங்கதிர் என்பது காண்க. (ஆனால் சூரியன் என்னும்  சொல் செம்மைப்பொருள் உள்ளதன்று. வெம்மை குறிக்கும் சூடு என்னும் சொல்லினின்று வருவது.  சூடு> சூர். சூடியன் > சூரியன்; அதாவது: மடி> மரி என்பது போல. மடிதலே மரித்தல்.  மடி என்பது ம(த்)தி என்று மலாய்
மொழியில் வரும். இவற்றைப் பின் ஆய்வோம்)

அர் > அரிணி.  செந்நிறத்ததான மான்.

அர் > அரிதம் : பொன் நிறம்.

அர் > அரிணம் : பொன். *( செம்மையுடன் உறவுடைய
நிறத்தது )


அருண+ ஆசலம் = அருணாசலம்; அருண+ உதயம் = அருணோதயம். செங்கதி ரோன் தோன்றும் மலை அருணாசலம். இது அருணகிரி அண்ணாமலை என வும் படும்.

அரக்கு என்பது சிவப்பு என்று பொருள்படுவதால், அரக்கர் செம்மை நிறத்தினர் ஆதல் வேண்டுமே, இதை நீங்கள் ஆய்ந்து எனக்கு அறிவியுங்கள்.

அறிக மகிழ்க
 
மெய்ப்பு பின்னர்

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

பண்டைக்காலத் தொழிற்கல்வி - அகமணமுறை அமலாக்கம்

 பண்டைக் காலத்தில் தொழிற்கல்வியைக் கற்பிக்கும் கூடங்கள் எவையும் இல்லை.  எடுத்துக்காட்டாக, பானை சட்டி செய்வதற்குப் போதுமான தொழிலறிவு உள்ள ஆள் தேவை என்றால், இன்னொரு குயவர் வீட்டிலிருந்துதான் அந்த நபரைப் பெறவேண்டும். தாமே தேவையான ஆள்பலத்தைக் குயவர்களே உண்டாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. அப்போதிருந்த முடியரசுக்கு இது வேலையன்று.  ஆகவே அரசு ஏன் ஆட்களைத் தயார்செய்து அளிக்கவில்லை என்று அரசரைக் கேட்க முடியாது. இந்தச் சிற்றூரில் உள்ள குயக் குடும்பம் அடுத்த ஊர்க் குயவர் குடும்பத்திலிருந்து பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுவந்தால், அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் குயவேலை தெரிந்திருக்கலாம். அப்படித் தெரியவில்லை என்றாலும் அவளுடைய அண்ணன் தம்பிகளுக்குத் தெரிந்திருக்கக் கூடும். அங்கிருந்த வேண்டிய ஆள்பலத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.  அதனால் சாதிக்குள் திருமணம் என்பது  தம் பிழைப்புக்குத் தேவையான ஒன்றாக இருந்தது.

அகமணம் புரியும் வழக்கம் இவ்வாறே ஒவ்வொரு சாதியாரிடையேயும் ஏற்பட்டது.  அதனால் அரசுகள் எந்தப் பயிற்சிக்கூடமும் யாருக்கும் கட்டிக்கொடுத்துப் பயிற்றுவிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டியதில்லை யாயிற்று. தங்களுக்குத் தேவையான தொழில் ஆள்பலத்தை மக்கள் தாமே உண்டாக்கிக் கொண்டனர். சாதியை விட்டுத் திருமணம் செய்யும் பழக்கம் இதனால் ஏற்படவில்லை.

அகமணம் அல்லது சாதிக்குள் திருமணம் என்பது இதனால் ஏற்பட்டு நாளடைவில் ஒரு விதியாக மாறிவிட்டது.  பூசாரி வருக்கத்தினர் யாரும் இதைச் செயல்படுத்தவில்லை. அவர்களுக்கு மற்ற சாதிகள் எவ்வாறு தங்கள் தேவைகளை நிறைவு செய்துகொண்டன  ரென்பது  அக்கறைக் குரியதன்று.

சாதிக்கு இன்றியமையாத அகமண முறை எந்த ஆரியனாலும் அல்லது பூசாரி வருக்கத்தினராலும் புகுத்தப்படவில்லை.

தங்கள் தொழிலில் அதிகம் சம்பாதித்தவர்கள் மேனிலை அடைந்ததனால்,  மதிப்புக் கூடியவர்கள் ஆயினர். அரசனின் படையில் வேலை செய்தவன் போருக்குப் பின் பல ஆதாயம் உள்ள பொருள்களைக் கொண்டுவந்த காரணத்தால் செல்வம் உடையனாய் பெருமதிப்பை அடைந்தான். செல்வமே பிழைப்புக்கு ஆதாரமானது,  அதுவே திருமகள் அவதாரம் என்று போற்றப்பட்டது.

பொருளியலால் விளைந்த ஏற்றத் தாழ்வுகளுக்கு  -  செல்வச் சேமிப்புக்கு மக்களிடையே இருந்த ஈட்டும் மதிப்பே காரணம் ஆகும். பூசாரிகள் பெரும்பாலும் தமக்குக் கிடைத்த தட்சிணைகளை வைத்தே பிழைத்தனர்.  தட்சிணை என்றால் தக்க இணை - தக்கிணை - தம் வேலைக்குத் தக்க ஊதியம். தக்கிணை என்பது: பக்கி என்பது பட்சி ஆனதுபோல ஒரு திரிபுச் சொல்தான்.   

அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் முன் நாட்களில் இல்லை.  அப்போது செய்திப் பரப்பலைப் பறையர் (பரையர்) களே செய்துகொண்டிருந்தனர். இதுபோலும் இவர்களாலும் இதைச் செய்திருக்க இயலாது. பூசாரி மணியடிப்பதை விட்டுவிட்டுச் சமுதாயக் கட்டமைப்புகளைச் செய்துகொண்டிருக்க வழியில்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

உலைதலும் விரிசலும். திரிபுகள்.

 நம் இடுகைகளில் தகர சகரத் திரிபுகள் பல முறை சுட்டிக் காட்டப்பெற்றுள்ளன. பெரும்பாலும் தனித்துவம் வாய்ந்த கிரகமாகச் சனிக்கிரகம் முன்வைக்கப்படும். அது தனி என்னும் சொல்லின் திரிபாகக் காட்டப்பெறும்.  சனி என்பதை தமிழல்லாத சொல்லாகக் கருதவில்லை யாதலால் இவ்வாறு காட்டுவோம். சனிக்கு மட்டுமே ஈசுவரப் பட்டம்.

மொழியிடைத் திரிபுகளில் வதிதல்  வசித்தல் என்பனவும் உள.  வதி> வசி.  வசி என்பதனுடன் தல் என்னும் தொழிற்பெயர் விகுதி சேருங்கால் தல் முன் இரட்டிக்கும்,  இதுபோல் புசித்தல் என்பதும் இரட்டித்தது.

இத்தகைய திரிபுகள் வழக்கில் பல.  எடுத்துக்காட்டு:  புதிது > புதுசு,  பெரிது > பெரிசு,

சிறுசு என்பது  சிசு என்றும் இடைக்குறைந்து,  சிறுகுழந்தை என்றும் பொருள்படும். சிசு என்பது பூசைமொழியில் சென்று வளமான வாழ்வு பெற்றுத் தனித்துவம் அடைந்தது,

இதையும் மனத்தில் இருத்துக.

உலைதல் >  உலைசல்.  

இன்னொன்று:   விரிதல் >விரிசல்.

குழுவினரிடை ஏற்பட்ட விரிதல்களை விரிசல் என்றே குறிப்பது வழக்கம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர். 

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

அந்தகாசுரர் என்ற சொல்லாக்கம். அறிபொருள்.

 இந்தச் சொல்லின் உள்ளுறை பகவுகளைத் (components  ) தமிழின் மூலமாக அறிந்துகொண்டு, மற்ற செய்திகளையும் கண்டு இன்புறுவோம்.

இவ்வாறு அறியுமுகத்தான்,  அந்தகம் என்பது முன்வந்து நிற்கின்றது. அந்தகம் என்பது பல்பொருள் ஒரு சொல்.  இருள், முடிவு,  அழிவு,  பார்வையிழத்தல், இன்னும் விளக்கெண்ணெய் செய்யும் ஒரு செடிவகையையும் குறிக்கும், இதற்கு ஆமணக்கு என்றும் சொல்வர்.  இந்தப் பெயரில் ஒருவகைக் காய்ச்சலும் இருந்தது என்பர். இன்னுமிருக்கலாம்.  இக்காய்ச்சலில் ஒரு வலிப்பும் ஏற்படும் என்கின்றனர். இதைச் சன்னி / ஜன்னி என்றும் சொல்வர் என்று தெரிகிறது. இதை மருத்துவ நண்பர் ஒருவரிடம் கேட்டறிக.

கோவிட் 19ம் இது போன்றது என்பர். இதை மகுடமுகி  என்று மொழிபெயர்த்துள்ளது நீங்கள் அறிந்தது.

அந்தகம் என்ற சொல்லில்,  அந்து மற்றும் அகம் என்ற பகவுகளும் உள.

அந்து என்பது அன்+ து என்று பிரியும்.  அன்று என்பதும் இவ்வடிச் சொற்களால் ஆனதுதான்.  இவ்விரு பகவுகளில்.  ஒன்று தமிழ்ப் புணரியயலின் படியான சந்தி ஆகும். மற் றொன்று சொல்லமைப்புகளில் காணப்படும் இன்னொரு வகைப் பகவு.  அதாவது:

அன் + து >  அந்து   ( இது முன்+ து > முந்து என்பது போன்றது).

அன்+ று >  அன்று  ( முடிந்துபோன ஒரு நாள்).

அன்றுதல் என்ற வினைச்சொல்:  பகைத்தல், கோபித்தல், மாறுபாடுதல் என்பன பொருள்.   இவை இருந்து நிலை முடிந்ததைக் காட்டுவதால்,  முடிந்துபோனதையே உட்பொருளாய்க் காட்டுகிறது.

அன், அண் என்பன நெருங்கிச் செல்லுதல் குறிக்கும் அடிச்சொற்கள். நெருங்கிச் செல்லுதல் மேலும் நெருங்க இயலாமையில் முடியும். சுவரை நெருங்குவோம். அப்பால் போக இடமில்லையில்லை என்றால் முடிதல் நிகழும்.

அன்: நெருங்கி இருப்பது அன்-பு  (அன்பு). அதே அடிச்சொல்தான்.

ஆகவே, அன்+ து + அ + கு என்னின்,  அந்தகு அம் > நெருங்கிச் சென்று அங்கு முடிதல் என்று கண்டுகொள்க.

அந்தகம் என்பது, மேற்கண்ட காரணத்தால், இறுதி முடிவு என்று பொருள்தரும்.

தமிழ், சமத்கிருதம் ( சமஸ்கிருதம்) பெரிதும்  ஒரே அடிப் பகவுகளையே உடைய மொழிகள் - சில வேறுபாடுகள் ஆங்காங்கு காணப்படலாம், அவ்வளவுதான்.

அன் து அ கு அ  ஆர் அம் - அந்தகாரம் என்பது இருள். பகலவனின் காய்தல் முடிந்த நிலை, இறுதியைக் காரம் என்றும் காட்டுவதுண்டு. இவ்விறுதி வசதியாக குறிக்குமாறு ஆகும். ஒவ்வொரு சிறு பகவுக்கும் பொருள் கொடுத்து வாக்கியமாக்கி அறிக.

அந்தகாசுரன்  ஓர் அசுரன், கங்கைத் தாயின் பற்றன் ( பக்தன்). கங்கையைக் கடத்தி  அதனால் பயன்பெற நினைத்தான்.  தனது ஆட்சிப் பகுதி அல்லாத நிலங்களுக்குத் தண்ணீர் தர மறுத்து, அதைத் தன் அரசுக்குரிய பகுதிகளில் பயன்படுத்திக் கொண்டான்.அந்தக் காலத்தில் வரலாற்றை எழுதியவர்கள் உண்மையான போர்வீரர்களையும் அவர்கள் வேண்டிச் சென்ற பலன் களையும் வெளிப்படையாகச் சொல்லாமல் மறைவாக வரைந்தனர். பெயர்களை நிகழ்ச்சிகளை விடுகதைபோல் மறைத்து எழுதினால் அதனால் தொல்லை விளையாது..  வாதங்களும் பதில் வாதங்களும் ஏற்படமாட்டா.  கங்கையைக் கடத்துவது என்றால் கங்கைத் தண்ணீரை ஓட்டத்தை மாற்றி எடுத்துக்கொள்ள நினைப்பது. இது ஒரு நீரோட்டத்தைப் பற்றிய தகராறு. இதைப் புரிந்துகொள்ளும் திறன் இல்லாதவர்கள் பலராவர். அசுரன் என்றால் கெட்ட அரசன். கெட்ட அரசன் என்னாமல் தொல்லை விளத்தவனை -   "முடித்துவிட நினைத்த"  என்ற பொருளில் அந்தக என்றும் தீயவன் என்ற அர்த்தத்தில் அசுரன் என்றும் எழுதினர்.

பலவித மறைத்தெழுது முறைகள் உலகில் உள்ளன. மோர்ஸ்கோடென்பதும் ஒரு மறைப்புமுறைதான்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

ஓர் ஐஸ் மூலிகை உணவு


 



நிறச்சீனி  சிவப்பாய்  நெருங்க ஊற்றி
உவப்புடன் உண்ணும் மூலிகை வேர்கள்
குளிர்க்கட்டி அரைத்துக் குழம்பிய வாறே
பளிக்குப் பச்சைமேற் செம்பவ  ழம்போல்



ஊற்றிப் பரப்பித் தாகம்  ஆற்றவும், 
மாற்றம் வேண்டாச் சுவையின தாகி
காற்றினிற் கரையினும் சுவைக்கனி தோற்க
ஊட்டும் கரண்டிகள் பாட்டென ஒலிக்க

செங்குதெங் கென்னும்  சீன உணவு
தங்கா தினியெனத் தானுண் டனமே. 
வேர்கள் இவையோ விளைத்திடும் நலமே
யார்க்கும் நலமென் றார்த்தனர் வைத்தியர்
ஆய்ந்தால் உமக்கும் நலமெனில்
பாய்ந்திவண் நண்ணிப் பருகுவிர் நீரே.


பொருள்:



நிறச்சீனி --- பல நிறங்களில் வரும் (நிறச்) சீனி

சிவப்பாய் -- சிவப்பாய்த் தேர்ந்தெடுத்த
 நெருங்க ஊற்றி -- அணுக்கமாகத் தோய்த்து, 
உவப்புடன் உண்ணும்  -- மகிழ்வுடன் சாப்பிடும்
மூலிகை வேர்கள்,  ( இவை சீன மூலிகை வேர்களின்  அரைப்பு)

குளிர்க்கட்டி அரைத்துக் குழம்பிய வாறே,
-
பளிக்குப் பச்சையின்மேல் ---- பளிங்கு போன்ற பச்சை நிறம்
செம்பவழம்   போல்  --  செம்பவழத்துடன் ஒப்பிடும்படியாக.

ஊற்றிப் பரப்பித் தாகம்  ஆற்றவும், 
மாற்றம் வேண்டாச் சுவையின தாகி - இதுவே போதும் என்ற சுவையுடன்,

காற்றினிற் கரையினும் சுவைக்கனி தோற்க --- குளிர்க்கட்டி கரைந்துவிட்டாலும்  பழத்தின் சுவைபோல,

ஊட்டும் கரண்டிகள் பாட்டென ஒலிக்க

செங்குதெங் கென்னும்  சீன உணவு
தங்கா தினியெனத் தானுண் டனமே. ----
மிச்சம் வைக்காமல் உண்டு முடித்தோம்.''

தான் என்பது அசை,

வேர்கள் இவையோ விளைத்திடும் நலமே
யார்க்கும் நலமென் றார்த்தனர் வைத்தியர்
ஆர்த்தனர் - கூறினர். ஒலித்தனர்
ஆய்ந்தால் உமக்கும் நலமெனில்
பாய்ந்திவண் நண்ணிப் பருகுவிர் நீரே.

இவண் -- இங்கு

நண்ணி - அருகில் வந்து

மெய்ப்பு  பின்னர்