சல்லுதல் என்ற வினைச்சொல் , அதாவது சல்லு என்ற ஏவல்வினை, இப்போது வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை. அந்தப் பாத்திரத்து நீரைக் கொஞ்சம் எங்கும் சல்லிவிடு என்று சொல்லிக் கேட்கவில்லை. இப்போது ஆங்கிலக் கல்வி மிகுந்துவிட்ட படியால், பலரும் தெளிப்பதை ஆங்கிலத்தில் "ஸ்பிங்கில்" என்றுதான் சொல்கிறார்கள்.
பல சிறு துளைகள் உள்ள தூவு துளைத்தட்டினைக் கொண்டு தூளாய் உள்ள தானியம் எதையும் மாவு வேறாகவும் சற்றுப் பெரிய துண்டுகள் வேறாகவும் பிரிக்கச் சலித்தல் என்று சொல்கிறோம். சல் ( வினைச்சொல்) அப்போது சலி என்று மாறுவதை அறியலாகும். இது தமிழில் சொல்லமைபிற்கு உடன்பாடான திரிபுதான், அடு> அடி என்று மாறுவதைப் போன்ற திரிபுதான் இது. நாம் ஆராய்தறிந்த விதிகட்கு இயைந்த திரிபு என்பதில் தெளிவுள்ளது. அடுத்துச் சென்றாலே அடித்தல் இயலும். நிலத்தைக் கால்கள் அடுத்தாலே அடி என்பதை வைக்கமுடிகிறது. இதை விளக்கும் பொருட்டு இங்குச் சற்று விரித்தோம்.
சல்லடை என்பது சல்லும் துணைக்கருவி ஆகும். சல்லும் துளைகள் அடைவாக இருத்தலான் அது சல்லடை எனப்பட்டது, ஆதலின் சல் என்ற வினைச்சொல் முற்றும் தொலைந்துவிடவில்லை. இன்னுமிருப்பதும் உள்ளாய்வதற்கு வசதி தருவதும் நம் நற்பேறுதான்.
சல்லடை என்பது கல்லடை என்று திரிந்திருப்பதால் சகர ககர மாற்றீடு மீண்டும் மேல்வரக் காண்கின்றோம். இதைச் சேரலம் - கேரளம் என்ற திரிபில் கண்டிருக்கிறோம். இவ்வாறு திரிதலுற்றவை பலவாகும்.
சல்லு என்பதன் மூல அடி துல் ஆகும். அதை இங்கு யாம் விளக்கவில்லை.
இயன்ற அளவு தமிழில் உள்ள வினைச்சொற்களைப் பயன்படுத்துங்கள்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக