சஞ்சலம் என்ற சொல், மக்கள் மொழியில் மனச்சஞ்சலம் என்ற அடைபெற்று வழங்கிவந்தது. இவ்வாறு பேச்சில் வரும் இச்சொல்லை செவிவழி அறிந்துள்ளோம். இதை வேறு சொற்களால் விளக்குவதென்றால் மன அலைவு அல்லது மனத்து அலைவு என்று சொல்லலாம். அலைவு என்பது அலவு என்று கன்னடத்திலும் வழங்குவதே.
இச்சொல்லில் வரும் சம் என்ற முன்னொட்டு, தம் என்பதன் திரிபு. சம் எனற்பாலது சம் என்று வரும் சொற்கள் சிலவற்றை முன் வெளியிட்ட இடுகைகளில் குறித்துள்ளோம். தனி என்ற சொல் சனி என்று போந்தது போன்ற நிலையே இங்கு ஒப்பீடு ஆகிறது.
அடுத்து , சலம் என்று வரும்சொல் அலம் என்பதாகும். அலம் என்பதன் பொருளைத் தெரியக்காடுவது, அலம்புதல், அலசடி, அலப்புதல் ( நிலையற்ற பேச்சு), அலம்வருகை என்பன பல்வேறு வகை அலைதலைக் குறிக்கும். அலம் பின் ஓய்ந்த நிலையையும் குறிக்கும். புயலுக்குப்பின் அமைதி என்பதுபோல் அலைதல், ஓய்தல், அலைதல் என்பன தொடர்வருகை ஆதல் காண்க. இதை விரைவில் அறிய, அலை என்ற சொல்லிலிருந்து விகுதியாகிய ஐ என்பதை நீக்கிவிட்டால், அல் என்பது மிஞ்சும், அல் என்பதற்குப் பல்பொருள் உளவாயினும் ஓரிடத்து நில்லாமை, அங்குமிங்கும் செல்லுதல் என்பதும் ஒரு பொருளாகும், இப்பொருண்மை அலை என்பதிலும் உளதாகும். அல் என்ற அடி, சல் என்று திரியும்.
அல் என்பதற்கு அளவிற் குறைதல், நிலைபெறுதல் என்ற பொருண்மைகளும் உள்ளன. இது வேளாண் தொழிலரிடமிருந்து எழுந்த பொருண்மை. அரிசி, கருவாடு, வற்றல் முதலிய காய்ந்து சிறியவான பின்பே கூடுதலான காலத்திற்கு இருக்கும். பின்னர் இவ்வாறு சேமித்த பொருட்கள் இறுதியில் அழிந்து விடுதலின், அழிதல் என்ற பொருளும் இவ்வடிக்கு ஏற்பட்டுவிடுகிறது. அல் என்ற அடிக்கு இப்பொருள்களும் இவ்வாறே உணடாயின. இப்பொருண்மையும் மனமானது அலைவில் சிக்கி ஊக்கம் வற்றிவிடக் குறுகிவிடுதலையும் குறிக்க இயல்வதே.
அலம் சலமாகி இறுதியில் சஞ்சலம் என்ற சொல் பிறந்துவிடுகிறது. அமணர் - சமணர். ஆடு( தல்) > சாடு, என்பனவும் திரிபுக்கு உதாரணங்களே.
அஃகுதல், அல்குதல், அற்குதல், --- இவை ஒரே சொல்லமைப்பின் வெவ்வேறு வடிவங்கள்.
காயவைத்துக் காத்த பொருள் ஒருவித நீர்பயின்ற நாற்றமுடையதாகிவிட்டால் அது சலித்துவிட்டது என்று களையப்படும், ஆகவே கெடுதல், அழிவு என்பவை அல் , அலம் என்பவற்றின் இயல்பான பொருண்மைகளே.
ஒரு சொல்லுக்கு இத்தகு வெவ்வேறு பொருண்மைகளையும் காரணங்களையும் இவ்விடுகையின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
இதன்மூலம் சஞ்சலம் என்பது ஒரு திரிசொல் என்பதும் கண்டுகொள்க. தம் அலைவு என்ற இருசொற்களே சஞ்சலம் என்பதன் தாய்ச்சொற்கள்.
கொஞ்சி மகிழ்ந்து குழவியோ டுறைவாளேல்
சஞ்சலம் என்பது சாந்துணையும் மேவாதே!
என்பது எம் கவி.
இஃது தமிழிலக்கியத்திலும் உள்ளுற்ற சொல்தான். மற்றும், மனமேநீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய் என்ற பாகவதர் பாட்டில், சஞ்சலம் என்ற சொல் உள்ளுறையக் காண்கிறோம்
திரிசொற்களைக் குறைத்து இயற்சொற்களை மட்டும் அல்லது பெரிதும் கொண்டு எழுதினால் தமிழ் உரைநடை சிறக்க உருப்பெறும் என்பது அறிக. இயன்மொழி என்பதன் பொருள் அதுவே. ஆனால் திரிசொற்களும் தமிழின் உள்ளடக்கமே என்பது உணர்க. தமிழ் இயற் சொற்களைக் கொண்டு ஏற்பட்ட மொழி. திரிசொற்கள் என்பவை பிள்ளைகள் போன்றவை என்பது பொருத்தமான உணருரை ஆகும். பிள்ளைகள் குடும்பத்து உள்ளடக்கம்.
மேலும் படிக்க:
பாகவதர் சொல்லாக்கம் - https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_21.html
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக