வெள்ளி, 9 ஜூன், 2023

சாரங்கபாணி என்ற பெயர்.

 சாரங்கம் என்பது பல்பொருள் ஒருசொல்.

இச்சொல்லை  அறிந்துகொள்வோம்.

சாரங்கம் என்பது  எய்கூர்குச்சியைக் குறிக்கிறது. இதை அம்பு என்று கூறுகிறோம்.  தொடக்கத்தில் குச்சிகளை எய்திருப்பர்.  பின்னர் அது வளர்ச்சியடைந்து ஓர் உயர்நிலை நண்ணி "அம்பு"  ஆனதென்பது உண்மை.

மனிதன் தனக்கு வேண்டியவற்றைத் தானே பண்ணிக்கொண்டான். அம்பு செதுக்கிச் செய்யப்பட்டதால் அல்லது பண்ணப்பட்டதால்,   பண்(ணு) + அம்=பாணம் ஆனது,  தொலைவிலிருந்தே விலங்குகள் முதலியவற்றை வீழ்த்த அறிந்த அவன் மனமிக மகிழ்ந்து பண்ணி முடித்த பெருமையில் " பாணம்" என்றான். பாணம் என்பது முதனிலை நீண்டு அம் விகுதி பெற்ற தொழிற்பெயர். தொழிற்பெயர் என்பது ஒரு வினைச்சொல்லிலிருந்து பெறப்பட்ட பெயர்.  படு என்ற சொல் பாடு (தொ.பெ) என்று நீண்டு பெயரானது போன்றதே இது.  பண்ணப்பட்டவெல்லாமும் பாணம் ஆகாமையின்,  இது ஒரு காரண இடுகுறி ஆகும்.  பாணி -  பாணம் ஏந்தியோன்,

பாணம் என்பதற்கு வேறு சொல்லாக்கம் கூறப்பட்டிருப்பது காணினும், இதுவே அதன் சொல்லமைவு ஆகும்.

அங்கு இருக்கும் ஒன்றைச்  சாட வேண்டுமென்றால், எய்யும் செதுக்கிய கூர்குச்சிக்கு என்ன சொல்வது? அது "சாடு+ அங்கு+ பாணம்"  ஆயிற்று.  சாடு என்ற சொல்லின் டுகரம்  ருகரமாகும்,  சாரு ஆயிற்று.   சாரு அங்க பாணம் ஆனது.  மடி என்பது மரி  ஆனதுபோல்,  சாடு என்பது சாரு ஆனது.  இத்தகை திரிபுகள் பல உள. அடுத்து இருப்பது  அருகில் இருப்பது என்னும்போது டு ரு ஆனது காண்க.  முன் இடுகைகளில் பல காண்பீர்.  அங்கு என்பதில்  உகரம் கெட்டு  அங்க ஆனது. அங்கே  அல்லது அங்க  சென்று தாக்கும் பாணம்.

சேருதல்  சாருதல் என்பனவும் சேர்தல் கருத்தே ஆகும்,  இதன் மூலமும் இதை விளக்கலாம்,

ஒரு புதுக்கதையை அல்லது வரலாற்றை எழுதுகையில் புதிய சொற்களை அமைத்துக்கொள்ள பல உத்திகளைக் கையாளலாம். அறியாதவனைத் திக்குமுக்காடவும் செய்யலாம். எல்லாம் பண்டையர் திறமைதாம்,

அம்பு என்பதும் அங்கு சென்று புகுவது என்ற பொருள் உடைய சொல்தான். பு விகுதிக்கு  குறிப்புப் பொருளும் கூறலாம்,  சாரங்க பாணி என்பதிலும் இக்கருத்து உள்ளது.

அ என்பது அங்கு என்று பொருள்படும் சுட்டு.   அம்பு  -  பு என்பது விகுதியும் புகுதல் பொருளதான குறிப்பும் ஆகும். சொற்கள் சிலவற்றில் விகுதிகளும் பொருள் குறிப்பன. அன்பு என்பது அணுகி (  நெஞ்சில் ) புகுதல் என்று பொருளாக்கம் செய்துகொள்ளத் தக்கதே.  அன், அண் என்பன பொருளொன்றானவை.  அனுபந்தம் -  அணுக்கமாகப் பற்றியுள்ள  இணைப்பு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

கருத்துகள் இல்லை: