வெள்ளி, 16 ஜூன், 2023

உதாசீனம் ---- சொல்லின் மூலங்கள்.

இது மதிப்பீடு வகைகள் பற்றிய சொல். 

நட்பு, உதாசீனம், பகை என்று மூன்று பகுப்புகள் கூறுவர். இவற்றுக்கு முன்,  நட்பு பகை என்ற இரண்டே பெரிதும்  கருதினர்.  ஒரு குற்றமுங் கூறாமல் ஒன்றை  ஏற்றல்,  அப்பொருளின் சிறப்பைக் காட்டும்.  ஒன்றை எதிர்கொண்ட மாத்திரத்தில் இது சரியில்லை,  அது அப்படி இருக்கவேண்டும். இது மட்டும் ஏற்கலாம் என்று பல்வேறு பகுப்புகள் செய்து பேசினால்,  அது  பகை ஆகும்.   பகு +ஐ =  பகை, அதனுட் புகுந்து பகுத்து உரைத்து இறுதியில் வேண்டாமை. இவை இரண்டே அல்லாமல்,  மூன்றாவதொன்றும் தோன்றியது.  அதுவே உதாசீனம்.

உதாசீனம் என்பதைச் சிறுமைப்படுத்தல் என்போம். உங்கள் முன் தோன்றிய ஒன்றைப்  பெரிதென்று கொள்ளாமை.  இந்தச் சொல் எவ்வாறு வந்ததென்பதைக் காண்போம்.

உது  :  அது, இது  உது  என்ற மூன்றிலும்  உது என்பது முன்னிடத்தில் வந்துற்றது ஆகும். உன் என்ற சொல்லில்,  இந்த முன்மை இருப்பதை அறிந்துகொள்ளலாம். உம், உங்கள் என்பவை பன்மை வடிவங்கள்.  உது என்பதில் து என்பது அஃறிணை விகுதியாக இன்றும் நம் மொழியில் உள்ளது. சுட்டுச்சொல் உ என்பதே.

ஆ =  ஆன என்பது

சீனம் என்பது சீன நாடு குறிக்கவில்லை.   சின் + அம் >  சீனம் ஆகும். இது முன்னிருப்பது,    ஆனால் சிறிய மதிப்புடையது,  அல்லது இருக்குமிடத்திற்கு ஏற்ற உயர்வு இல்லாதது என்று ஒதுக்கப்படுதல் ஏற்பட்டு வீழ்வது என்று பொருள். சீனம் என்பது முதனிலை நீண்டு அம் விகுதி ஏற்ற சொல்.

இது  " முன்னிருக்கலாம்  ஆனால்  முன்மை உடையதாகக் கருதத்தக்கதன்று"  -சிறியது  என்னும் பொருளினதால்,  உதாசீனம்  ஆயிற்று.

சின்னம் என்ற சொல்  இயல்பான உருவினின்று சிறிதாகச் செய்யப்பட்டது  என்பதைப் பொருளாய் உடைய சொல்.   சின்னம் என்பது இயல்பாய் நின்ற முதனிலை உடையது.  ஆனாற்  சீனி என்பது  சின்+ இ என்ற மூலங்கள் உள்ளதாய்,  சீனி என்று நீண்டு,   சிறிய துகள்களான இனிப்பரிகளைக் குறிக்கிறது.  சீனா நாட்டினின்று வருவிக்கப்பட்டதால், சீனி எனப்பட்டதென்பாருமுளர்.  சீனா என்பதன் அடிச்சொல்லான சின் என்பதும் சீன் என்றே நீண்டு நாட்டுப்பெயரானமை கண்டுகொள்க.  சின் > சீனா.ஆகவே இத்தகு நீட்சித் திரிபுகள் பிறமொழிகளிலும் வரும். [ not language-specific ]

சீனை என்ற ஒரு மூலிகை,  சிறிய வடிவினதானதனால் அப்பெயர் பெற்றது.  இங்கும் சின் என்பது சீன் என்றாகி ஐ விகுதி பெற்றது.  சீக்கல் என்பது சிறுகல்வகையைக் குறிப்பது,  பெரும்பாலும் இரும்புமண் கலந்து இயற்கையில் கிட்டுவது.   இங்கெல்லாம்  சிறு > சீர் > சீ  என்று திரிந்துள்ளது.  சீழ் வடிவது சிறு நீரினும் அருவருப்புக்குரியது,   சிறு > சீ > சீழ்.  மனித உடலின் சிறுமை காட்டும் புண்ணின் வடிநீர். சினை என்பது உறுப்பு என்னும் பொருளுடைத்து.  ஓர் உயிரிக்குள் இருக்கும் சிறிய உயிரி அல்லது விலங்கின் கரு.  இஃது இலக்கணக் குறியீடுமாகும் (. சினைப்பெயர்.)

சில் கல் >  சிற்கல் >  சிக்கல் என்பதும் கொள்க.

சில் என்பது  சின் என்பதன் அடிச்சொல்.   சில்> சீலை> சீலைவாளை.  ஒரு சிறிய வாளை வகை.  இது சொட்டை வாளை எனவும் படும்.  நம் மீனவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்க.   ( சேலை   என்பதும் சீலை ஆகுமெனினும் குழப்பம் தவிர்க ).

சில்லு என்பது ஒரு பெரிய பாறையிலிருந்து பிரிந்து பறந்துவிழும் கல் துண்டு.

சீன என்ற சொல்லுடன் தொடர்புடைய சிறுமைக் கருத்துக்கள் இங்கு விளக்கப்பட்டன.  இங்கு,   சிறுமை, சிற்றுரு,  சிறுமெய்.

நட்பே யுதாசீ னம்பகை யென்னும்

ஒப்புடைக் குறிப்பி னொருமூன் றாகும். 56

------பன்னிருபாட்டியல் ( இலக்கணநூல் ).

இது எட்டாம் நூற்றாண்டு  நூல் என்பர்

அறிக மகிழ்க

மெய்ப்பு: பின்னர் செய்வோம்,

கருத்துகள் இல்லை: