வியாழன், 15 ஜூன், 2023

சொல்லாய்வுத் தரவியல்-- உதயமும் உதையும்

 இன்று "தை" என்ற விகுதியையும் அதன் பயனையும் அறிந்துகொள்வோம்.

உதை என்ற சொல்லில்  தை என்பது விகுதி  ( வி- மி போலி,  எனவே  பகுதியின் மிகுந்து நின்ற ஒலி என்பதாம்).  உ என்பது ஒரு சொல்,  அதன் பொருள் முன்னிருப்பது என்பது.  தை என்பதற்குப் பொருள் உண்டு. விகுதிகளிற் சில பொருள் தரும்,  சில தாரா.  பொருளை நாம் கண்டுபிடித்துப் பொருந்துமாயின் அதன் பொருள் அதுவெனலாம். இன்றேல் அஃது வெற்று விகுதி எனல் வேண்டும்.

உதை என்ற பகுதி விகுதிப் புணர்ப்புச் சொல்லின் பொருள் காலால் தொடுதல், அல்லது தாக்குதல் எனலாம். தை என்பது தொடுதல், தடவுதல், இணைத்தல் என்றெல்லாம் பொருளுடைத்து ஆதலின்,  உதை எனின், கால் முன்சென்று தொடுதல் அல்லது இடித்தல் என்று பொருள்.  உயிரிகளை இயற்கை அழகுடன் இணைக்கும் மாதத்துக்கு " தை"  என்று சொல்லப்பட்டடதால்  அது பொருளுடையதே.  தை+ இல் + அம் =  தை( இ ) ல் + அம் =  தைலம்.  இது வாக்கியச் சொற்களின் புணர்ச்சி அன்று;  சொல் உருவாக்கப் புணர்ச்சி. இங்கு இ கெட்டது. பிற ஒன்றிப் பிணைந்து  ஒரு சொல்லானது. பொருள்: ஓரிடத்து * {உடலில்) தடவும் மருந்து என்பது . இங்கு தை என்பது பொருள் உடையது.  இடைநிலை "( ~ ல்) "  இடப்பொருளது.  அம்: பொருள் உள்ளதாகவோ இல்லாததாகவோ கொள்ளப்படலாம்.  எவ்வாறாயினும் அதனால் நட்டமொன்று மில்லை.   அம் = "அமைக்கப்பட்டது" எனினும் கொள்க.  (ஏற்கலாம்.)

உதை +  அம் =  உதையம்,   ஐகாரம் குறுகி, உதயம் எனின் பொருள்கண்டோம். அல்லது  உ+ து + ஐ + அம் =  உதையம் > உதயம் என்று குறுக்கினும் பெரிதும் வேறுபாடின்மை அறிக. இவ்வாறு செய்வதில் நன்மைகள் சில காணப்படினும், இது ஒவ்வொரு சொல்லிலும் எழுவதே ஆகும்.  நாய்க்குட்டி என்றாலும் குட்டிநாய் என்றாலும் இவை பேசுகிறவன் மாற்றிக்கொள்ளும் உரிமையிற் பட்ட மாற்றங்கள்.  இவை சொல்லியலில் பேசப் பயனற்றவை.  அவற்றுள் புகோம்.

எந்த மனிதக் கூட்டமும், பேசுகையில் அவர்கள் பேசும் பாணிக்கும் சொற்றொகுதிக்கும் பெயர் வைத்துக்கொண்டு பேசுவதில்லை.  காலப்போக்கில் பெயர்கள் ஏற்பட்டு இன்று பெயர்கள் மொழிகளுடன் ஒட்டிக்கொண்டன.  சில சொற்கள் இதற்குரியன என்றும் அதற்குரியன என்றும் அறியப்பட்டாலும் அதனால் நட்டமொன்றுமில்லை.  கடனும்  (  கட்டிமுடிக்கவேண்டியது)  ஒன்றும் இல்லை.

உதை என்பது காலோடு தொடர்புபட்ட பொருளுடையதாய் இருத்தலால் அதை  வேறு பாணியிற் காட்ட விழையலாம்.  உதை என்பதிலிருந்து உதயம் வந்தபின் நாம் காலை எண்ணிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.  மறவாச் சிந்தனை எழுமாயின் வேறுவிதமாகக் காட்டிக்கொள்ள,   பெரும்பாலான சொற்களில் வசதி உளவாதல் அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு: பின்னர்.






to note:

உதயபானு

கருத்துகள் இல்லை: