செவ்வாய், 25 மே, 2021

எதிலும் பண்பாட்டினை விடமுடியாது.

 பாடல்:

பிறந்தநாள் எதற்கென்று தத்தாசொன் னாலும்

பிள்ளைகளோ விடமாட்டோம் என்றார்திண் ணப்பம்

சிறந்தநிறப் பொலிவுடனே சீனிமுளை நிற்கச்

சேர்ந்துகொடு வெட்டென்றார் சீர்தட்டும் கைகள்!


இனிப்பென்றால் இக்காலம் பலருக்கும் ஏறா

தெட்டஓடி விடுகின்றார் இதுபுதுமைச் சார்பு.

பனிப்பாய்வு ஒக்கும்வளர் குளிர் அறையில் ஆடிப்

பாடுமிது இனிப்பாகும் பண்புதிகழ் அன்பே.

உரை:

திண்ணப்பம் - கேக் என்னும் மேலையர் பண்டம்.

(கேக் என்றால் திண்மையானது, கட்டி என்று பொருள்).

சீனி முளை நிற்க - சீனியை உருக்கி முளைத்துவருவது போல் அப்பத்தில்

மேற்பரப்பில் நிற்பித்தல்.

சேர்ந்துகொடு வெட்டு என்றார் - ஒன்றாக இணைந்து நின்று அப்பத்தை

வெட்டுங்கள என்றானர்.

சேர்ந்துகொடு - சேர்ந்துகொண்டு. இது ண் என்ற மெய் நீக்கிய தொகுப்பு.

(தொகுத்தல் விகாரம் ).

சீர் தட்டும் கைகள் - வணக்கம் வாழ்த்துடன் தட்டும் கைகள்.

சீர் - சீருடன்.

பலருக்கும் ஏறாது - இப்போது உணவில் சீனி முதலியவை

குறைக்கவேண்டும் என்ற மனத்திட்பம் குறிக்கிறது. எட்ட ஓடி

விடுகின்றார் என்பதும் அது.

புதுமைச் சார்பு - உணவு குறைத்து உடல்பருமன் குறைக்கும் புதுமையான

வேட்கை.

பனிப் பாய்வு ஒக்கும் - குளிரூட்டிய அறையில் பாயும் காற்று மேலைநாட்டு

தட்ப நிலையை ஒத்திருப்பது.

இனிப்பாகும் - இனிப்பை ஒத்ததாகும்

பண்பு திகழ் அன்பு - மூத்தோரை மதிக்கும் பண்பாட்டில் வரும் அன்பு.


கருத்து:   சீனியின் இனிப்பை விட்டுவிடலாகும்.  ஆனால்  அன்புடனும் பண்புடனும் நடந்துகொள்ளுவதில் வரும் இனிப்பு இருக்கிறது,  அதை விடமுடியாது.   அது பண்பாடு சார்ந்தது. இதை மறைவாகச் சுட்டுகிறது இவ்வரிகள்.



கருத்துகள் இல்லை: