திங்கள், 18 நவம்பர், 2019

உபயம் சொல் இருபிறப்பி.

கோவிலுக்குப் போனால் உபயம் என்ற சொல்லைக் கேட்கமுடிகிறது.

இன்று எல்லாத் தெய்வங்களுக்கும் பூசனைகள் செய்தற்குக் கோயில் பயன்பாட்டினை மொத்தமாக ஒருவர் மேற்கொண்டால் அதை உபயம் என்று சொல்வர்.

இச்சொல்லை இருவிதமாக ஆய்ந்து கூறலாம்.

உ + பயம் =  உபயம்.

இங்கு வந்த பயம் என்ற சொல் பயன் என்பதன் மறுவடிவமாகும்.   பயம் > பயன்.   அல்லது பயன் > பயம். இந்தப் பயம் என்பது அச்சம் அன்று. பயம் ஆவது பயன் தருதல் பயன் படுதல்.  இதற்குரிய வினைச்சொல்:  பயத்தல்.

"என்ன பயத்ததோ சால்பு" என்ற திருக்குறள் தொடரை நினைவுகூர்க.

இது போலும் இறும் வேறு சொற்கள்:  திறம்  >< திறன்;  அறம் ><  அறன்.

உ என்பது முன் என்று பொருள்தரும்.  இது சுட்டு.

உபயம் என்பதை வேறுவிதமாகச் சொல்வதானால்  "முற்பயன்பாடு" என்னலாம்.  பயன்பாட்டுக்கு முன்னரே இடம் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பது புரிந்துகொள்க.


இனி,  உ+ வை + அம் = உவையம்   இதில் ஐகாரம் குறுகி :  உவயம் >  உபயம் ஆகும்.  முன்னரே வைக்கப்பட்ட நிகழ்ச்சி.  வகர - பகரப் போலித் திரிபு.  போல இருப்பது போலி.

இச்சொல் இருவழிகளிலும் பொருள்தந்து ஒன்றே முடிபாய் நிற்றலின் இருபிறப்பி ஆயிற்று.

கருத்துகள் இல்லை: