திங்கள், 20 ஜூலை, 2015

Speech Tamil and some considerations.

குமரி கண்டத்துத் தமிழர் எங்ஙனம் தமிழைப் பேசினரோ,  நம் எழுத்துத் தமிழ் அங்ஙனம் அமையப்பெற்றிருந்தாலும் நம்  பேச்சுத் தமிழ் அப்படி இல்லை. ஒருவேளை இற்றைத் தமிழர் குமரிக்குப் புறத்தே உள்ள நிலப்பகுதிகளில் வாழ்ந்த மக்களின்  வழியினரோ என்று எண்ணத் தோன்றுகிறது. உலகின் பல மொழிகளில் பேச்சும் எழுத்தும் ஒரு மாதிரியாய் இருக்க, தமிழில் மட்டும் ஏன் பேச்சு மொழி வேறுபடுகிறது? ஆறு, மலை, தொலைவு  இவைகளாற்  பிரிவுண்டு கிடந்ததனால் இங்ஙனம் வேறுபாடுகள் முளைத்துவிட்டன என்னலாம்.இது குமரிக்குப் புறத்து வாழ்ந்தோருக்கும் பொருந்திவரும் காரணமேயாகும்.

கடல்கோளில் பாண்டியனும் சிலருமே பிழைத்தனர் என்பர். தொன்னுல்கள் பலவும் அழிந்தன. அவற்றுள் அடங்கிய பொருள்களின் சுருக்கம் தேவைப்பட்டதனாலேயே தொன்மை காக்க தொல்காப்பியம் இயற்றப்பட்டது  என்பது பொருந்திவரும் காரணமாகும்.  தொல்+காப்பு+ இயம் என்பதும் பொருத்தமான பெயர்.  வரலாற்றைச் சுட்டுகிறது.

இழவு என்பதை எழவு, எளவு என்பதுதான் பேச்சுத் தமிழ். குமரித் தமிழர் இழவு என்றே பேசியிருப்பர். எளவு ஏதும் அவர்கள் அறியாததே.

இழவுஎன்பது இழ+ வு என்று பிரியும்.   இது இயல்பாய்ப் புணர்ந்த பகுதியும் விகுதியும் ஆம்.    ஆனால் உழவு என்பதை இப்படிப் பிரிக்க முடிவதில்லை.  உழ என்பது சொல்லின் பகுதியன்று.  உழு என்பதே பகுதி.  உழு+ வு = உழவு.  இதில் ழு  என்பதில் உள்ள உ கெட்டு (மறைந்து)  அதற்குப் பதிலாக ஓர்  அ தோன்றியது. ஆகவே கெடுதலும் தோன்றலும் ஆகிய விகாரங்கள் அல்லது திரிபுகள் இதில் உள்ளன. விழவு (விழா) என்ற சொல்லிலோ,  ஐகாரம் கெட்டு அகரம் தோன்றியது.  விழை> (விழ்+ ஐ )>  (விழ்+அ) > விழ+வு, ( விகுதி ) >   விழவு என்று காட்டலும்  ஆம் .  எனினும் விழ் என்பது பகுதியன்று. அது தெளிவித்தற்பொருட்டுக் காட்டப்பெறும் புனைப்பகுதியாகும்.
இதை விழை> விழைவு> விழவு   ( ஐகாரக் குறுக்கம்) என்றும் உரைக்கலாம்.  விழா என்பதிலும் விழை> விழா என்க.  ஆ என்பது விகுதி.  கல்+ ஆ = கலா. (கற்றல் கருத்து இது).  கல்> கலை.  

நல்லன கற்றல்போல் தீயனவும் கற்றுக்கொள்வது காண்கிறோம்.   கல்+ இ = கால்+இ =  காலி.  கல் என்ற வினைப்பகுதி,  முதனிலை நீண்டு கால் ஆகி, இகர விகுதி பெற்றுக் காலி ஆயிற்று. தீயன கற்றுக்கொண்டவன் என்பது.
இதையும் காலாடி என்பதையும்  "காலாடு போழ்தில்" என்ற நாலடி மூலம்,  விளக்கலாம்.  எப்படிப் பார்த்தாலும் இவை தமிழ்ச்சொற்களே. 

கருத்துகள் இல்லை: