திங்கள், 18 மே, 2015

thiAvuthal திராவுதல்

மடைப்பள்ளியில்  ஒருவர் மற்றவரிடம், "குழம்பைக்  கொஞ்சம் "திராவி"  விடு  என்றார்.  எனவே  எனக்குத் தெரியாத இந்தச் சொல்லை அகரவரிசைகளில் தேடினேன். திராவுதல் என்ற வினைச் சொல் கிடைக்கவில்லை.

இன்றைய நிலையில்,  அகரவரிசை என்பவை பெரும்பாலும்  பகர்ப்புகளே .(copies)  நிகண்டுகளிலோ முன் வெளியிடப் பட்ட அகரவரிசைகளிலோ இடம்பெறாத புதியவாகக் கேட்ட  சொற்களைத்  தேடிப் பிடித்துச்   சேர்ப்பது  அரிதேயாம்.

இப்போது வெளிவந்துள்ளவற்றில் இங்ஙனம் கண்டெடுத்துச் சேர்க்கப் பட்டனவாகக்  குறிக்கப்பட்ட சொற்கள்  எவற்றையும் காண முடியவில்லை.

வட்டாரப் பேச்சுகளில் திரிந்து வழங்கும்  சொற்களைச்  சில கல்லூரி ஆசிரியர்கள் திரட்டிப் பதிப்பித்துள்ளனர்.  இவற்றைக் கிளைமொழிச் சொற்கள் என்றனர். இத்திறத்தன சீரிய முயற்சிகளென்போம்.

திராவுதல் என்பது அகப்பையினால் குழம்பையோ அல்லது வேறு கீரைச்சாறு போன்றவற்றையோ சுற்றிக் கிண்டிவிடுதல் என்று தெரிகிறது.
திருப்பு,  திருகு,  திறம்பு, என்பவற்றுடன் இச்சொல் தொடர்பு பட்டதாகவே தோன்றுவதாலும், வேறுபாடு நுண்ணிதாகவே திகழ்வதாலும், இச்சொல் இருந்தது,   ஆனால்  அகராதிகளில் அகப்படாமல்  போயிற்று என்று முடித்தலே பொருத்தம் உடையதாம்.


கருத்துகள் இல்லை: