புதன், 20 மே, 2015

போர் குறுகிவிட்டதைக் குறிப்பதே குறுவஞ்சி

குறுவஞ்சி என்பது புறப்பொருளில் ஒரு துறை ஆகும். இது வஞ்சித் திணையில் வரும்.

போருக்குச் செல்பவன் வஞ்சி மன்னன். வஞ்சி மாலையைத் தலையில் மலைந்துகொண்டு புறப்படுவான்.  கூடார்தம் மண்ணினைக் கொள்வேன் என்று முழங்கிக்கொண்டு செல்வோன். கூடார் எனில் பகைவர். அப்படிப் புறப்பட்டு வந்த மன்னனுடன் போர் செய்யப் பின்வாங்கியவனாய், அவனுக்குக் கப்பம் கட்டித் தன் மண்ணையும் குடிகளையும் காத்துக்கொள்ளுதலே  குறுவஞ்சி என்ற துறை. இப்படிப் பணிந்துபோய்த் திறைசெலுத்தியதைப் பாடும் பாடலை, வஞ்சித்திணை, குறுவஞ்சித் துறை என்று பகுத்துரைப்பர்.

விலை யுயர்ந்த யானைகள்,  அழகிய குதிரைகள் என்று தன்பால் உள்ள ஏற்கத்தக்க   எப்பொருளையும் முன்வைக்கலாம்.   வணங்கி இறைஞ்சலாம்.

வீரம் பேசிப் பலரைக் கொல்வதினும் இது நல்லதென்றே தெரிகிறது. ஆனால் தமிழ் மன்னர்கள் இதனை விரும்பியதாகத் தெரியவில்லை.

மடுத்தெழுந்த மறவேந்தர்க்குக்
கொடுத்தளித்துக் குடியோம்பின்று

என்பது கொளு.

கனல் கக்கும் போர் குறுகிவிட்டதைக் குறிப்பதே "குறு" என்ற அடைமொழி.

குறுவஞ்சி வேறு;   குறவஞ்சி வேறு.


கருத்துகள் இல்லை: