பச்சையாக நடத்தல், பச்சையாகப் பேசுதல்.


பச்சை, பாசி, பாசம் (பாசம் பிடித்திருப்பது). பாசிலை, பச்சூன், பச்சிலை, பச்சோலை, பச்சைப்பெருமாள், பச்செனல், பாசிமணி, பாசிப்பயறு, பசுத்தல், பைங்கிளி, பசுங்கிளி, பசும்பால் (பச்சைப் பால்), பசலை -- என்று பச்சை குறிக்கும் அல்லது நிறத்தோடு தொடர்புகொண்ட சொற்கள் பல

பகரத் தொடக்கத்துச் சொல், பா என்று நீண்டும், பசு-, பை- என்று திரிந்தும் நிற்பதை மேலே கண்டுகொள்ளலாம்.

இடக்கரானவற்றைப் பேசுங்கால், அவற்றை அடக்கிப் பேசாதவன், "பச்சையாகப் பேசுகிறான்" என்பது வழக்கு.

பாசம் என்பது பச்சை குறித்தது.

இனி, பாசம் என்பது ஆபாசம் என்று ஆகாரம் பெற்று பச்சையாகப் பேசுதலை, அல்லது நடந்துகொள்ளுதலைக் குறிக்கும்.

தொல்காப்பியர் காலத்தில் வானைக் குறிக்கும் காயம் என்பது, ஆகாயம் என்றும் ஆகாசம் என்றும் திரிந்தாற்போல.

ஆகாயம் - காயம் ஆவது.

ஆபாசம் - இடக்கரடக்கல் இல்லாதது. பச்சை ஆவது.

ஆபாசம் குறிக்கும் சமஸ்கிருதச் சொற்கள், அனார்ய, அசப்த என்பன.