செவ்வாய், 29 செப்டம்பர், 2020

தியானித்தல், தியாகம் இன்னும் சொற்கள் சில

முன் நாட்களில் தியானம் செய்தவர்கள், பெரும்பாலும் ஒரு விளக்கின் முன் அமர்ந்து தியானித்தனர். அது பின்னர் நிலவு ஒளியில் தியானம் செய்தலாக வளர்ச்சி அடைந்தது. இப்போது வெளியில் அமர்ந்து தியானிப்பது என்பது மிகவும் குறைந்துவிட்டது.  கொசுத்தொல்லை, மற்றும் திருடர்கள் தொல்லை, வழிப்போக்கர் தொல்லை என்று பலவிதத்தொல்லைகள் வருதல் கூடுமாதலின்.

இன்னுமே, தீயானியைத்தல் ( அதாவது தீயால் மனவுணர்வுகளை நிலைநிறுத்தி இயைத்தல் ) என்பதே பெரிதும் ஏற்புடைத்தாகிறது.  தீ என்ற சொல்.,  விளக்கு, தீபம், நெய்விளக்கு என்று பலவகைப்படும் ஒளிதாரிகளையும் உள்ளடக்கும்.

தீயானியைத்தல் என்பதில் யை குன்றியதாலும் தீயா என்ற முதல் தியா என்று குறுகியதாலும்  தியானித்தல் ஆனதெனபது உணரற்பாலது. முதனிலை குறுகித் திரிந்து இடைக்குறைந்த சொல்

தியாகம் என்பதும் தீயின் தொடர்பானதுதான்.  ஆகுதல் என்ற சொல் முடிதலையும் குறிக்கும்.  குழம்பு ஆகிவிட்டது என்று சொல்வதை அறிந்திருக்கலாம்.  எனின், குழம்பு தீர்ந்துவிட்டது என்பதே பொருள்.  ஆகுதல், ஆதல் என்பவை தொடக்கம் குறிப்பவை. இங்கு முடிவு குறிக்க வந்தது இடக்கர் அடக்கல். எதுவும் முற்றுப்பெற்று இருந்தாலும், முடிந்தது என்று சொல்லாமல் மாற்றமாகவே சொல்லுதல் யாதிலும் நலமே காணும் உயர்பண்பு ஆகும்.  கெடுதலையும் தொடுதலையாகக் கொள்ளுதல் வேண்டும்.  தொடுதல் - தோண்டுதல், தொடங்குதல் குறிக்கும் சொல்.

எ-டு: 

தொட்டதெல்லாம் பொன்.

தொட்டனைத்தூறும் மணற்கேணி.


தீ + ஆகு + அம் =  தியாகம் ,   இது சா > சவம் என்பதுபோல் முதல் குறுகிற்று.

தீயில் புகுந்து உயிர்விடுதல் ஓர் உயர்வகை ஈகமாகக் கருதப்பட்டது,  முன்னாட்களில்


ஊழ்குதல் என்பதும் தியானித்தலாம்.  ஆயல் என்ற சொல்லும் இதையே

விளக்குவதாகும்.

அறிக மகிழ்க.


தட்டச்சுப் பார்வை பின்.










 https://sivamaalaa.blogspot.com/2017/02/blog-post_10.html

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

பாட்டுக் கலைமேதை பாலசுப்ரமணியம் மறைவு

 பாட்டினால் மனங்கவர் பண்பாளர் அவரில்லை

வீட்டினில் இருப்பதும் பாட்டின்றி வீண்படுமே

கூட்டுவார் குழைவினைச் செவிகளில் நறவெழுகும்

நாட்டினுள் பாலையே பாலசுப்ரர் மறைவாலே. 

சனி, 19 செப்டம்பர், 2020

சரணாகதம்

 சரணாகதம் என்பது   அடைக்கலம் புகுதல், தஞ்சம் அடைதல் என்னும் பொருளில் ஆளப்படும் சொல்.

சரண் + ஆகு + அது + அம் = சரணாகதம்.

சரண்புகுதல்.

இனி, கதம் என்பதைத் தனிச்சொல்லாகக் கொண்டு:

கதம் -  அடைதல்.

சரண் +  கதம் >  சரணாகதம் எனினுமாம்.

சரண் + கதி > சரணாகதி என்பதுபோல்.

இடையில் வருவது  ஆ ; ஆதல் குறிக்கும் சொல். இடையில் ஆகதம்,  ஆகதி என்பவாய் வருதலின்,  இவை வினைத்தொகை.  வலிமிகாது. இவ்வாறும் விளக்கலாம்.

சரண் என்பதன் மூலம் அரண்.

அரண் > சரண்

சரண் என்பது முழுமையாய் " சரண்புகுதல் " என்பதே.

அரண்புகுதல் என்பதும் அது.

நாளடைவில் புகுதல் என்பது விடுபட்டு,  சரண் > சரணம் ஆயிற்று.

இன்னொரு காட்டு:  அமண் - சமண்.

அடு > சடு > சட்டி.   ( + இ).

இந்தப் பாடலில்   சரணாகரம் என்பது  ஆளப்பட்டுள்ளது.

" தாண்டவம் செய் தாமரை,  பூஞ்சரணாகரம்   நம்பும் யானும்

அடிமை அல்லவோ?  --  எனை

ஆண்டருள் ஜெகதம்பா யானுன்

அடிமை அல்லவோ".  (பாபநாசம் சிவன்)

பொருள் :  குளத்தில் ஆடும் தாமரை உன்னைப் பணிகிறது. 

உன்னிடம் அடைக்கலம் புகுகின்றது,  அதுபோல்  யானும் பணிகின்றேன். நான்

உன் அடிமை ஆவேன். (என்னைக் காப்பாற்று ) என்றபடி.

பூவினால் சொல்லப்படும் சரணம் பூஞ்சரணாகரம்


உங்கள் உசாவலுக்கு:

சாம்பிராணி  https://sivamaalaa.blogspot.com/2014/06/blog-post_2261.html

"உழிஞைத் திணை" https://sivamaalaa.blogspot.com/2014/10/blog-post_77.html

பரிகாரம்  https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_95.html

அரசன் அரட்டன் https://sivamaalaa.blogspot.com/2020/09/blog-post_10.html

அரசனும் அரணும் https://sivamaalaa.blogspot.com/2020/06/blog-post_11.html

சாம்பிராணி முதலிய பொருட்கள் https://sivamaalaa.blogspot.c

Pom/2018/09/blog-post_23.html

அரணும் சரணும் https://sivamaalaa.blogspot.com/2017/08/blog-post_31.html

அரணும் சரணும் https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_20.html

( இவற்றுள் தொடபற்றவற்றை புறக்கணித்துவிடுங்கள்.  நன்றி).


தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் சரிபார்க்கப்படும்.