வியாழன், 24 மார்ச், 2016

அ+பாய danger

அபாயம் என்ற சொல்லுக்குப் பொருள் எப்படிக் கூறுவது?   அதை அ+ பாயம் அல்லது அ+பாய என்று பிரித்து,  அ ‍  ஒரு முன்னொட்டு, பாய என்பது என்ன என்று ஆழ்ந்து எண்ணிப்பார்த்து முடிவை வெளியிடுதல் ஒரு வழியாகும்.

 பய  என்ற  "அச்சம்  விளைப்பது "  என்ற சொல் வேறாகும்..

அப்படியானால்  அபாயம் என்பதில் முன் நின்ற அகரத்தினால் பொருள் ஏதும் போந்ததாகக் கூறுதற்கில்லை . இந்தச் சொல் மலாய் மொழியிலும் வழங்குகிறது.  அங்கும் "பஹய "  என்றே வந்து  இடர்ப் பொருள் தருகிறது.

பாய எனின் பரவ  என்ற பொருளும்  தரப்படுகிறது.  அது வேறு.

இது பற்றி இங்குக் காண்க. More at:

http://sivamaalaa.blogspot.sg/2014/02/blog-post_1422.html


ஆ பாயும்  என்ற்பாலது திரியாமல் இருந்திருந்தால்  அது   (பசு)  மாடு பாயும் ஒரு குறித்த கட்டத்து நிகழ்வுக்கே பயன்படும் வாக்கியமாய் இருந்திருக்கும்.  வேறு கட்டங்களில் பயன்படுத்தத் தக்க   "இடர்தருவது" என்ற   பொதுப்பொருளில்  அது   பயன்பாடு கண்டிருக்க இயலாததாய்க்  கிடந்திருக்கும்.
அபாயம் என்று திருந்தி அமைந்தது மொழி வளர்ச்சிக்கு உதவுவதாய்க்  கனிந்துவிட்டது ..







எவனோ விதைத்த பயிருக்கு.......

"அல் நீயன்" விளைத்த போரிலே
நீ ஏன்  கலந்து மீறினாய்?
எவனோ விதைத்த பயிருக்கு
ஏனோ நீர் நீ ஊற்றினாய்?
பணமோ வந்த பய   முறுத்தலோ?
பயன்சேர் கொள்கை உறுத்தலோ?
குடும்பம் குழந்தை உனனுடமை
விரும்பிப் போற்றுதல் உன்கடமை.
உயிருக் குலைசெய் நடப்புகளில்
அயர்வில் இணைதல் தவிர்த்திடுவாய்.
குண்டுகள் புதைத்து வெடிகிளப்பி
வென்றிடில் உனக்குச் சொர்க்கமில்லை.
மண்டுகள் மொழியில் நிலைகுழம்பி
மாயையில் சிக்கி அழிந்திடுதல்!.

நின்று நிலவும் நலம்படு கொள்கை
என்றும் எண்ணி 'அறிதல்
நன்றெனக் கடைப்பிடி நானிலம் உய்யவே.

புதன், 23 மார்ச், 2016

வச்சிர. . வஜ்ஜிர.

வல் என்ற  அடிச்சொல் பல்  என்று திரியும்.   இந்தப் பல் வேறு, பல என்று பன்மை குறிக்கும் பல் வேறு. இங்கு வல்> பல் என்பதை மட்டும் விளக்குவோம்.

வல் ‍ பல். இது ப>வ திரிபு.  இதை முன் பன்முறை இடுகைகளில் ஆங்காங்கு விரித்துரைத்துள்ளோம்.

வல் > வலம்.  (வலிமை)
வல் > பல் > பலம் (வலிமை).

இவற்றை விரிக்காமல், அடுத்து  வல் அடிச்சொல்லில் விளைந்த ஒரு திரிபைத் தெரிந்துகொள்வோம்.

வல் > வல்லூறு.  ஒரு பறவை.
(வலிமையான பறவை).

வல் ‍  வல்லுறு =  வலிமையாகு.   உறு ‍   உறுதல்.

வல் ‍  வல்லுற.  ( வலிமைப் பட).

வல்லுற >  வஜ்ஜிர.

இங்கு லகரம் ஜ‍வாக மாற்றப்பட்டது. இதற்கு   வேறொரு சொல் வடிவு உந்துதலாகியது


சு என்பது சொற்கள் பலவற்றில் வரும் விகுதி ஆகும்.  எ-டு :  பரிசு .

வல் > வற்சு .> வற்சு + இரு + அம்  > வற்சிரம் >  வச்சிரம்

வலிமையாக இருத்தல் என்பது பொருள். சு என்பது  இடை நிலை ஆனது.

"வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள் "  புறம் 241


வஜ்ஜிர என்பது அழகான படைப்பு.

==================================================================

குறிப்புகள்:

வல் > வல் + ம்+  அம்  =  வன்மம்
வல் >  வறு >  வறுமம் =  வன்மம் .
வல் > வற்பு >  வற்பம் =  வன்மம்
வன் >  வன்பு . =  வன்மம்





தானமும் தவமும் தமிழரும்

வேள்வி செய்தல் (யாகம் ​)  -  தமிழர்  செய்யவில்லை என்பது உண்மையன்று. இறை வணக்கத்திற்கு வேள்வி செய்வது அவர்களுக்குப் பிடித்தமானதாய் இருக்கவில்லை.  தானமும் தவமும் தமிழருக்குப் பிடித்தவை.  யாகம் பிடிக்காத காரணம் அது ஓர் உயிரைக் கொன்று இயற்றுவதாய்  இருந்தமைதான் . " அவி  சொரிந்து ஆயிரம் வேட்டலின் ....."  என்ற குறள் இதைக் காட்டுகிறது.    ஆனால் மழை இல்லாமல் போனால் தானமும் தவமும் இயற்ற முடியாவே என்று வள்ளுவர் கவலைப்படுவதாகவே  எமக்குத் தெரிகிறது  .  " வானம் வழங்கா தெனின் "  இவை தங்கா என்று வள்ளுவர் கூறுகிறார்,

தானம் என்ற சொல்  தா என்ற ஏவல் வினையடியே தோன்றியது.  இது பல மொழிகளிலும் பரவி விட்ட சொல்தான்

தா + இன் + ஆம்  =  தானம்  ஆகும்.

இன் என்பது உரிமை/ /  உடைமை  குறிக்கும் இடைச்சொல். 1.தருதற் குரியது ;-  2. தருதல் ஆகிய செய்கை;.

தருங்கால்  பிறர்க்குரிய தாவதே  தானம்.  இங்கு இன் மிக்கப் பொருத்தமாயுள்ளது.  உரிமை பிறர்க்கு மாறுவதைக் குறிப்பால் உணர்த்துகிறது. மிக்க ஆழ்ந்த பொருண்மை மிளிரச் சொல் உருவாக்கப் பட்டுள்ளது.

இன் என்பதில் இப்பொருளைக் காணார் பலர்.

எ-டு : உரிமை உடைமைப் பொருளில் இன்:

இந்தக் காய்ச்சல் ஒரு நோய் நுண்மத்தின் (virus )   வேலை என்று மருத்துவர் கூறுகிறார். 

சொல் அமைகையில் இது  தன்  தலையெழுத்தை  இழந்து  "ன்"  என்று மட்டும் நிற்கும்.  இல்லையென்றால்  "தாயினம் "   என்று போந்து வேறு சொல்லுடன் மயங்கிப்     பயன்படுத்துவோரைக் குழப்பும் . தானம் என்பதே சரியான அமைப்பு.

ஆங்கில dOnation வரை பரவி உலகச்  சேவை செய்யும் இத் தமிழ்ச்சொல்லை வாழ்த்துவோம்.

இன்னும் இதுபற்றி எழுதவேண்டும் என்று தோன்றினும் இத்துடன் அமைவோம்.  அடுத்துத் தவம்  எனற்பாலதான சொல்லை நாடுவோம். 

.

ஞாயிறு, 20 மார்ச், 2016

சாணக்கியனும் சாணாரும்


Continue reading from http://sivamaalaa.blogspot.sg/2016/03/chanakya-was-probably-tamil.html

சாணான் என்போன் கள்ளிறக்கும் ஒரு தொழிலுடையான். இவன் (chANakkiyaan )  இத்தொழிலுடையாரைச் சேர்ந்தவன் என்று கருதினாருமுண்டு. வேதவியாசன் மீனவப் புலவன் ; வால்மீகி வேட்டுவன்;  பாணினி பாணரினத்தான்; வள்ளுவன் வள்ளுவக் குலத்தோன்;  கம்பன் ஓதுவார் வழிவந்தோன் எனும் நெடுந்தொடரில்,  இத்திறத்தினரெல்லாம் பண்டை மேனிலையில் நின்றமையையே ஆய்வுகள் காட்டுகின்றன. சாணானாயிருந்து நூலாக்கியமையால்
சாண் ஆக்கியன் > சாணாக்கியன், சாணக்கியன் என வந்தது எனினுமாம். இன்று கீழ் நிலையர் பலர் முன் மேனிலையராய் இருந்தனர் என்பது  அறிஞர் M .  சீனிவாச ஐயங்காரும் கூறுவதாகும்.
சாணாக்குடி ( சாணார் குடி), சாணாக்கிக்கீரை  முதலான பதங்களை
நோக்கின்  சாணா+ ஆக்கியன்  என்பது பொருந்துகிறது.  ஆகாரங்களில் ("ஆ" ) இரண்டில் ஒன்று கெட்டுப் புணர்ந்து சொல் உருவாகும். பிரமத்தை உணர்ந்தவன் பிராமணன் என்பதால் இவன் பின் பிராமணன் ஆயினன்.

சாணா  ஆக்கியன் =  சாணாக்கியன் > சாணக்கியன் : சாணா(ர் )  வகுப்பு ஆசிரியன்  என்பதும்  ஆகும்..

சாணா +  ஆக்கி + யா என்று சங்கதத்தில் இது  மேற்கொள்ளப்பட்டது.  அன் ஆண்பால் விகுதி அங்கில்லை. அது தமிழுக்கே உரியது.  அது தமிழில் இலங்கும் காலை  சாணா  (அல்லது    சாண  ) + ஆக்கி+  அன்  என்று   யகர உடம்படு மெய்யும் இணைந்து சாணக்கியன்  என்று இறுதியில் முடியும்.

வேறு சொல் முடிபுகளை ஈண்டு துருவா தொழிவோம்.

இவனைத் "திரமிள "  இனத்தவன் (திராவிடன்)  என வடநூல் உரைக்கும். இதைப்  புறந்தள்ளக் காரணம் யாதுமில்லை.

---------------------------------------------------

Note:

சாண்+  நாக்கு+ இயன்=  சாணாக்கியன் >  சாணக்கியன்,
ஒரு சாண் நாக்கு உடையவன்;  என்றால்,  எல்லாவற்றிலும் இடையிற் புகுந்து நீளப் பேசுபவன் என்றும் பொருள்.  மற்றப் பொருள் தரவுகளை தொடர்புடைய ஏனை இடுகைகளில் காண்க.



சனி, 19 மார்ச், 2016

Chanakya was probably a Tamil.

சாணக்கியன் வடதிசைச்  சென்று பணிபுரிந்த 
தென்னாட்டுப் பிராமணன் என்ப.. சோழ நாட்டினன் 
என்றும்  சொல்லப்படுகிறது. இப்போது இவன்
பெயரை ஆராய்வோம்.
இவன் நுண்மாண் நுழைபுலம் உடையவன். 
எத்தகு நுண்ணிய பொருளாயினும்
அதில் உள் நுழைந்து அறிந்து வந்து விளக்கும் 
வல்லமையே  நுண்மாண் நுழைபுலம்
என்று தமிழில் சொல்லப்படும்.

 
ஐந்தடிக்கு மேல் வளர்ந்து நலமுடன் திகழ்ந்த அவன், 
எந்த விடயத்திலாவது புகுந்து உண்மை 
காணவிழைந்தால் ஒரு சாணாகக்  குறைந்து உள் 
நுழைந்து மறைந்திருக்கும் உண்மையைக் 
கண்டுபிடித்துவிடுவான் என்று மக்கள் நம்பினார். 
இந்த நம்பிக்கை தமிழ் மரபில் சொல்லப்படும்
நுண்மாண் நுழை திறனைப் படியொளிர்வதாக உள்ளது.  
சாண்  ஒரு சாணாக;
1அக்குதல் : குறைதல்.
இஅ  இஅன் என்பன சொல்லிறுதிகள்.

சாணக்கியன்   விடையத்தை அறிய சாணாகக்
 குறைகின்றவன்.

ஆகவே இது காரணப் பெயராகிறது. 
 இவனுக்கு வேறு பெயர்களும் உள 
-------------------------------------------------------------------------------------------------------------------

1அஃகுதல்  ‍  குறைதல். 


Some historians have claimed Chanakya to be a fiction
 and such a person never existed. Others said his alleged
 written output were by other  (several )  writers composing
 their material under that name. Also that events ascribed
 to him were allegedly too good to be true.


வெள்ளி, 18 மார்ச், 2016

இடக்கினிலே மாட்டி...................

விடக்குண்ணும் ஆசையினால் இடக்கினிலே மாட்டி
விட்டிடுதல் நன்றாமோ  வீணாய் நும் உயிரை?
தடைக்கற்கள் யாதுமிலை தகுசைவப் பாதை
தரணியிலே மேற்கொள்ள! தனுவிலுயிர் நிலவும்
இடைக்காலம் இன்பமுடன் எழில்பெறுகை  வேண்டும்!
இதற்கான பயிற்சிசெயல் இன்னாஊண் விலக்கல்
கடைக்காலம் தள்ளிவைத்தல் கண்டுணர்க  யாண்டும்
கசடிறவிப் பயம்நீங்கிக்  கனிந்தகவை  இலக்கே .

Hope with this help below you can decipher the poem.Also learn some new words.


விடக்கு :  ஊன்.  இறைச்சி.
இடக்கு :  துன்பம். இடர்.
தகு :  தகுந்த,
தனு:  தன் உடல்.  த = தன்; உ = உடல்.
இன்னா ஊண்  = துன்பம் தரும் உணவு வகைகள்.
கடைக்காலம் :  மரண காலம்.
யாண்டும் :  எக்காலத்தும்.

கசடிறவிப் பயம் :  மரணம் பயக்கும் கசடு. அல்லது மரண பயமாகிய கசடு, கசடு:  குற்றம். இறவி = மரணம்.

கனிந்தகவை :  கனிந்த அகவை. பழுத்த வயது.

இலக்கு : அடையவேண்டியது.

வியாழன், 17 மார்ச், 2016

தமிழும் சகரமும்

பிற்காலத்துத் தமிழில் பல சகர வருக்கத்துச் சொற்கள் திரிபுகளின் காரணமாக வளர்ச்சி பெற்று மொழியில் இடம்பிடித்தன.. இத்தகைய பல திரிபுகளை முன்னர் எடுத்துக்காட்டியதுண்டு, ஆனால் சிலர்க்கு அவை மனத்துள் பதிவுறாமலோ மறதியாகவோ இருத்தல் கூடும். ஆகையால் மீண்டும் எழுதுகிறோம்.இந்தச் சொற்கள் இலக்கணக் கதிரவனாகிய தொல்காப்பியரின் காலத்திலும்  இருந்து அவர் அவற்றை
ஏற்றுக்கொள்ளமுடியாத திரிபுகளாய் ஒதுக்கியிருக்கலாம். ஏன்?  சகர முதலாகச் சொற்கள் வரா என்று அவர் பாடியதாய்க் கருதப்படுதலால்.
அவர் பாடினாரா, பிற்காலத்து ஏடெழுதினவர்கள் குருட்டுத்தனமாகப் பகர்ப்புச் செய்துவிட்டனரா என்பதை ஆய்தல் வேண்டும். எழுத்துக்காரனும் தவறக்கூடும். இவர்கள் கடவுள்கள் அல்லர்.

நன்னூலாரும் மயிலை நாதரும் இலக்கணப் பெரும்புலிகள். இவர்கள் சகர முதலாய்ச் சொல் தொடங்காது என்ற கருத்தைச் சொல்லவில்லை.  அவர்கள் படித்த தொல்காப்பியச் சுவடியில் அத்தகைய விதி இல்லாமல் இருந்திருக்கலாம்.  இருந்து அதை ஒதுக்கியுமிருக்கலாம்,

இதன்  தொடர்பான தொல்காப்பிய நூற்பாவிலும் பாடவேறுபாடுகள்
உள்ளன. அதனாலும் சகரமுதலாகச் சொல் அமையாது என்ற கருத்து ஒதுக்கப்படவேண்டியதாகிறது. காரணங்கள் இன்னும் பல.

அடுதல் =  நெருப்பிலிடுதல்.

அடு+ இ =  அட்டி.
அட்டி > சட்டி.

அமணர் >  சமணர்.

அடுத்துச் சென்றாலே ஒருவனை அடிக்கலாம். அல்லாமல் அடித்தல்
இயலாது. ஆகவே அடுத்தற் கருத்தில் அடித்தல் கருத்து தோன்றியது.

அடு >  அடி.

அடு>  (சடு)*  >  சாடு.  சாடுதல்.  ( சொல்லடித்தல்). (மலையாளத்தில்  அடித்தல் ).

(சடு) > சடுகுடு. (அடுத்துச் சென்று பிடிக்கும் விளையாட்டு).

அடு >  அண்டு >  (சண்டு)*  >  சண்டை.
சண்டமாருதம் = வந்து மோதும் காற்று.
சண்டப்பிரசங்கம் =  இடிசொற்பொழிவு.  மோதல்பேச்சு

அண் >  சண் >  சண்ணுதல்  (தாக்குதல் , புணர்தல் )
அண் >  சண் >   சண்ணித்தல் ( ஒருவனை அல்லது ஒன்றைச் சார்பாககக் கொள்தல் )

*சில இடைத்தோற்றச் சொற்கள் (பிறைக்கோடுகளில் ) மொழியில் தாமே நிற்கும் வலுவிழந்து கூட்டுச் சொற்களுடனேயே வாழ்தல் மொழியியல்பு.

வெட்டவெளிச்சம்: இதில் வெட்டம் என்ற சொல் மலையாளத்தில் தனிவாழ்வும் தமிழில் கூட்டுச்சொல் வரவுடையதாயும் உள்ளது.

அடுத்தல் கருத்தில் சில கூறினோம்.  பிற பல.


இப்படி ஏராளமாக இருத்தலால்  பல  சகர முதல் சொற்கள் அகர முதலில் இருந்து திரிந்தவை என்பது மிக்கத் தெளிவாகிறது.

விரித்து எழுதினால் நீண்டுவிடும். மற்றவை இனி

தமிழும் சகரமும் 

க >ய திரிபு.

க >ய  திரிபு.

முன் ககரம் யகரமாகத் திரியும் என்பதை விளக்கினோம். மகன் என்பதை மயன் என்று திரித்துப் பேசுவதைச் சுட்டிக் காட்டினோம்.

கோலிகன் என்ற சொல் கோலியன் என்று திரிகிறது.

ககரம் யகரமாதற்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு.

நாகர் என்பதே  நாயர் ஆயிற்று என்ற கருத்தும் நீடிக்கிறது.  க -  ய ,

ஆகி என்ற எச்ச வினை ஆய்   என்பதற்கு ஈடாக நிற்றலும் கருதவேண்டியுள்ளது.

சீர்காழி  -   சிலர் சீயாழி  என்பதும் குறித்துக்கொள்ளத் தக்கதே.

புதன், 16 மார்ச், 2016

அதுவும் இதுவும் வந்த சொற்கள் - 2

இங்கிருந்து தொடர்கிறோம்.

இடையில் நின்ற அதுவும் இதுவும்
http://sivamaalaa.blogspot.sg/2016/03/blog-post_7.html 


அது என்ற இடைபடு சொல் வந்த சொற்களைக் கண்டோம்.

இப்போது இது என்பது  நடு நின்ற சொற்கள் சில  காண்போம்.


மன் + இது+  அன் =  மனிதன்.

புன்  + இது + அன் =   புனிதன்.           ( நீரால் கழுவப்பட்டவன், குளித்தவன்,  --தூயோன்  )


கணி  + (இ ) து  +  அம்  =  கணிதம்.  (பகுதி:  கணித்தல் )


புனிதன் என்ற சொல் புனல் என்ற சொல்லின் அடிச்சொல்லினின்று தோன்றியதென்பது மறைமலையடிகளாரின்  முடிபு ஆகும்,  புனல் என்பதன் அடி  புன்  என்பது. அதுவே புனிதன் என்ற சொல்லுக்கும்  அடிச்சொல்.

புன் >  புனல்.\
புன்  > புனிதம்.

தூய்மை என்பது நீரால் அமைந்தது.  தூய்மை ஆக்கும் பிற பொருள்கள் அனைத்தும் பின்பு பயன்பாடு கண்டவை.  மனிதகுலம் முன் அறிந்தது நீரைத்தான்  என்பதுணர்க .புறத்தூய்மை நீரான் அமையும் என்கிறது குறள். புறத்தூய்மை  அறிந்தபின் மனித நாகரிகம் அகத்தூய்மை அறிந்தது. ஆகவே புனிதம் புனலில் தோன்றிய கருத்தென்பது மாந்த வளர்ச்சி நூலுக்கும் ஏற்புடைத்தே  ஆம்

பலி    -   பலித்தல்
பலி  -  பலிதம்   (பலி+ இது+அம் )2

பாணி <  பாண்
பாணிதம்  ((பாணி +இது+ அம்)    கருப்பஞ் சாறு
சுரோணிதம்   (சுர + ஒண் +இது + அம் )   சுரக்கும் ஒளி பொருந்திய  நீர். என்பது  சொல்லமைப்புப் பொருள்.
பாசிதம் (பிரிவு )   பாகு > பாகிதம் > பாசிதம்  கி- சி திரிபு.
 பாகு= பாகுபடுதல் .
 புதிய சொற்களை அமைக்க இந்த முறையைப் பின்பற்றலாமே.





செவ்வாய், 15 மார்ச், 2016

நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் ?

நாம் நினைக்கின்றவை   ,பல  வானத்து  மீன்களிலும் பல,  நாலடியாரில் "வானத்து மீனிற் பல"  என்று வரும்  தொடரை நினைவிற்குக் கொண்டுவாருங்கள்.

அவற்றுள் சில நடைபெறுவன.  பல நடைபெறா தொழிவன ஆகும் .

எல்லாம் நடைபெற்றுவிட்டால்  எல்லாவற்றையும் நீங்களே தீர்மானித்துவிட்டீர்கள்  யாவும் உங்களாலேயே நடைபெறுகின்றன என்று பொருள். மன்னிய  ( நிஜமான )  மனித  வாழ்வில் இப்படி நடைபெறுவதில்லை.

நடைபெறாப் பொழுதில் நீங்கள்  துவண்டுபோவது உங்கட்கே தெரியும் 

நினைப்பவை பலவாயினும் அவற்றையெல்லாம் ஒரு மூட்டையில் போட்டுக் கட்டி ஒருமையில்  சுட்டிப் பாடியுள்ளார்   கவியரசர். எல்லாம் என்ற சொல் நினைத்தவை பல என்று தெளிவாக்குகிறது.

நீங்கள்  போட்ட திட்டங்களைத் தீர்மானிப்பது வேறோர் ஆற்றல். நடவாப் பொழுதில் அவற்றை restraining forces என்கிறார்கள். கவியரசர் அதைத் தெய்வம் என்று ஒருமைப்படுத்திப்  பாடுகிறார்.

Restraining  forces   என்பவற்றை  ஒன்றாக்கி  உருவகப்படுத்திச்  சில வேளைகளில் கணபதி  என்பதுண்டு.  சிவனின் தேரினது  அச்சையே பொடிசெய்த  அதிதீரன் என்று நம் இலக்கியங்கள் அவனப் புகழ்கின்றன. கணபதியாரை உங்கள் மனத்துள் தீவிரமாக எண்ணித் , தடைகளை மாற்று மாற்று மாற்று என்று திரும்பத் திரும்பச் சொன்னால்   (இதைத்தான் மந்திரம் என்கிறோம் )   அந்தத்  தடைகளைத் தாண்டுவதற்குக்  கதவுகள் திறக்கும்.(தட்டுங்கள் திறக்கப்படும் என்றார்  ஏசு நாதர் ).  அது திறக்குமோ இல்லையோ  நீங்கள்  திண்மை பெறுவீர்கள்.  அப்புறம் என்ன நடக்கும்?

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

என்பது குறள். தெய்வத்தான்  ஆகாது எனினும்  மெய்வருத்தக் கூலியாவது கிடைக்குமே!

மெய்வருத்தக் கூலிக்காகவாவது கணபதியைக்  கும்பிடுங்கள். அல்லது உங்கள் இட்ட தெய்வம்  (நீங்கள் மனத்துள் இட்டுவைத்துள்ள* தெய்வம் )  எதுவோ அதைக் கும்பிடுங்கள்.   திண்ணியர் ஆவீர்.

----------------------------------------------------
*As you are now with me reading this,  also learn etymology on the fly.

saraswathy in sangam period?

பேச்சாயியும் சரசுவதியும்

சரசு்வதி என்னும் தெய்வம் நாவை ஆள்பவள்; கல்வி தருபவள். அவளை வணங்கி கல்வி மேன்மை அடையலாம் என்பதே இந்து மதம் நமக்குக் கற்பிப்பது.

சரசுவதி தொன்றுதொட்டுத் தமிழர்களால் வணங்கப்பட்டு வருபவள். காலமாறுதலால், சில பெயர்கள் "நாகரிகம் " குறைந்தவையாய்க் கருதப்பட்டு ஒதுக்கப்படலாம். எனினும் இத்தகைய இனிமை குன்றியவையாய்க் கருதப்படும் பெயர்களையும் நாகரிகப் பெயர்களையும் ஒப்பாய்வு செய்தால், அவற்றின் தொடர்பு நாகரிகப் பெயர்களுடன் நன்கு இயைந்திருத்தலைக் காணலாம்.

பேச்சாயி என்பது நாகரிகமும் இனிமையும் குன்றிய பெயர் என்று சிலர் சொல்வர், இப்போது யாரும் தம் பெண் குழந்தைகளுக்கு இப்பெயர் இட்டதாகத் தெரியவில்லை.

பேச்சு நாவினின்று வருவது. அதற்கு ஆயி (தாய்), யார்? சரசுவதி!.

பேச்சாயி என்ற சிற்றூர் வழக்குப் பெயர், சங்க இலக்கியத்தில் இல்லாமல் இருக்கலாம்.(இருக்கிறதா என்று நான் தேடிப் பார்க்கவில்லை). பேச்சு ஆயி தமிழ் தான். சங்க இலக்கியங்கள் என்று எந்த இலக்கியமும் இல்லாத மொழிகளில், ஒரு சொல் ஒரு மொழிக்குச் சொந்தமானதா இல்லையா என்பதை எந்த முறையில் தீர்மானிப்பது? அம்முறை கொண்டுதான் இதையும் தீர்மானிக்க வேண்டும்.

இது வேறு மொழியில் இல்லாத பெயராதலால், தமிழ்தான்! மேலும்் தமிழர் தொன்றுதொட்டுச் சரஸ்வதியை வணங்கிவந்தனர் என்பது தெளிவு. பெயரை மாற்றிவிட்டால், ஆள் வேறு என்று கூற முடியாதல்லவா?

(உசாவிய நூல்: ஸ்றீ பரமாச்சாரியாரின் இந்துமத விளக்கங்கள்,(2006) Edited by Dr K K Ramalingam நர்மதா பதிப்பகம்)

திங்கள், 14 மார்ச், 2016

சினவத்திரா‍‍‍‍


அரிசிதனைப் பரிசுதந்த சினவத்திரா‍‍‍‍===கண்ட‌
தரிசடைந்து போன நல்ல அரசியற்களம்.
எரிசுடராய் மாறிடாமல் வனம்தழைக்கவே=== ஒரு
சிறிசெனவே முயல்வதோடிக் குறைகளையவே.

நிறைசுரந்து நிமிர்ந்து நின்ற அரசுபின்னிட === இன்று
நிலைதளர்ந்து பலஉழந்த பாவமென்னவோ?
கறை சுரந்து முகத்து வீசும் காலம் வந்ததோ===== அற
முறைவளர்ந்து மலையினுச்சி நிலையின்மீளுமோ

நை, நே நோ

நைந்து போவது என்றால் நசுங்கி  நார் நாராக வெளிப்பட்டு உருக்குலைந்து இல்ல்லாமலே  போய்விடுவது.

பொருள் நைந்துவிடின் முன் உரு இருக்காது.

ஆகவே  நை என்பதற்கு  வட இந்திய மொழிகளிலும் இல்லை என்ற பொருள் ஏற்பட்டது .

நை, நே  நோ என்றெல்லாம்  வெள்ளையன் மொழியிலும் புகுந்தது.

நை - நைதல் என்பதற்கு  இல்லை என்பது  வடிகட்டிய அர்த்தமே  அன்றி  கருவிலமைந்த திருவார்ந்த   பொருள் அன்று.

நை என்பதிலிருந்து நசி  போந்தது,

நசி  +  அம்  =  நாசம்   முதனிலை நீண்டு விகுதி பெற்றது.

நசி  >  நசித்தல்.

stay tuned to me for more.

written this before but it is missing. will restore.

puthalvar meaning one's children


புதல்வர்

புதல்வர் என்பதற்கு நேரான தமிழ்ச்சொல் மக்கள் என்பது. புதல்வர் தமிழன்று என்பர் தமிழாசான்மார்.

புதல்வர் என்பதன் அடிச்சொல் புது என்பதே. முன் பிறந்து வாழ்ந்துகொண்டிருப்போரை நோக்க, புதுவரவுகளாகிய புதல்வர் புதியவர்களே ஆவர். இச்சொல்லை இப்படிப் பிரிக்கலாம்.

புது +  அல் + வ்+ அர்  =  புதல்வர்

அல் என்பது பல சொற்களில் விகுதியாய்ப் பயன்படுவதே. மத்தியக் கிழக்கு மொழிகளில் இது சொல்லின் முன் நிற்கும்.  உதாரணம்:   அல் கைதா.  அல் காதிப்.  அல் கிதாப்.  (al is like  "the" in English)

தமிழில்  பெரும்பாலும் தொழிற்பெயர்  விகுதியாய் வரும்.  காட்டாக: காணல், ஆகல்.

புதல்வர்  என்பதற்கு  நேராக,  தாய் தந்தையரைக் குறிக்கப்  "பழல்வர்"  என்ற சொல் அமையவில்லை.

---------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு : -  அல் சொல்லீ்று  ஆங்கிலத்திலும் உள்ளது:  committal, acquittal. நம் விகுதிகள்  அல்லது  சொல்லீறுகள் பல 

ஞாயிறு, 13 மார்ச், 2016

உடல் தணுப்பினால்....சிலேத்துமம்

சிலேத்துமம் என்ற சொல்லை ஆராய்வோம்.

இதன் அழகை நன்கு சுவைத்தபின் சில ஆண்டுகட்குமுன் நான் ஓர் ஆய்வு எழுதியிருந்தேன்,  அந்த வலைப்பூ மூடப்பட்டுவிட்டது. அதில் எழுதியவை அழிவுற்றனவாய்  என்னிடம் இருந்த பதிவுகளும் மீட்டெடுக்க முடியா நிலையில் உள.  அவற்றை மீட்க மிகப் பழைய சவள்வட்டு  ஓடிகள் (Floppy Drive)  தேவைப்படுகின்றன.

இனிச் சுருக்கமாகச் சொல்லைப் பார்க்கலாம்.

சளி  >   ஸ்லே.

தும்மல் .  தும்மம்.   >துமம்


ஆக, சளியும் தும்மலும்  வருநிலைதாம்   மொத்தத்தில்  சிலேத்துமம் ஆகும்

மருத்துவ நூல்களில் உடல் தணுப்பினால் வரும் நோய்கள் கூறப்படுகின்றன என்ப.  சிலேத்துமம் என்பது இதனைக் குறிப்பது.

இச்சொல் மலாய் மொழியில் ஸெலஸெம  என்று வழங்குகிறது. சளியைக் குறிக்கும்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய  மூன்று.    (திருக்குறள் ).
  

தத்துவம் என்ற சொல்லை............

இன்று தத்துவம் என்ற சொல்லை அலசுவோம்.

இது தத் + துவம் என்று பிரித்தற்குரியது போல் தோன்றுகிறது. என்றாலும் உண்மை அதுவன்று.

இதில் தத் என்பது தன் என்பதன்  (புணர்ச்சித்)  திரிபு.

தன் என்பது கடைக்குறைந்தால் த என்று  னகர ஒற்று இழந்தியலும்.

ஆகவே த = தன் என்றுணரற்பாற்று.

அத்து என்பது சாரியை. இந்தச் சாரியை, தன் தலையை இழக்க து என்று மட்டும் மிஞ்சி நிற்கும். அன்றி அஃறிணை  ஒன்றன்பால் விகுதியும் இதுவாகும்.  அது இது என்பன வந்த சொற்களை முன்பு
விளக்கியிருந்தோம்.  அத்து என்பது உண்மையில் அது என்பதில் து
இரட்டித்த நிலையே.  அது > அத்து.   சாரியையாய் உருவெடுத்த அத்து அது என்பதனின்று தோன்றியதே.

இறுதி நிலை  ‍அம் என்பது.  இஃது விகுதி.

த + து + அம் = தத்துவம் ஆயிற்று.

தத்துவமாவது பிற சார்பின்றித் தானே நின்றியலும் ஒரு கொள்கை,வரைவு, உள்ளீடு, தன்மை, பொருளின் தன்மை


தன் என்ற சொல்லடிப் பிறந்ததால்,  இது எளிதின் உண‌ரற்பாலதே.

சி- போதத்தின் 7ம் பாடலைப் பொருளுணர்.......

இனி சிவ ஞான போதத்தின் 7ம்  பாடலைப்  பொருளுணர்ந்து கொள்வோம். 



யாவையும் சூன்யம் சத்தெதிர் ஆகலின்
சத்தே அறியா தசத்தில தறியா
திருதிறன் அறிவுள திரண்டலா ஆன்மா.


சத்து எதிர் ‍: சிவத்தின் முன்னிலையில் (சன்னிதானத்தில்)

யாவையும் சூன்யம் : எல்லாமும் ஒன்றுமின்மையே.

சத்தே அறியாது : ஆகவே சிவம் எதையும் அறியாது.
அதாவது, சிவம் அறிந்துகொள்வதற்கு சிவத்தின் முன்னிலையில் எதுவுமே இல்லை.( சூன்யமான நிலை)

நாம் அறியவேண்டியது :   சிவம் உலகைப் படைக்குமுன் ஒன்றுமில்லை ஆதலால் சிவம்   அறிதற்குப்  பொருள்   எதுவும் இல்லை.

அசத்து அறியாது: சிவத்தின் வேறான இவ்வுலகமும் சடமாதலின்
சிவத்தால் படைக்கப்படினும் சிவத்தை அறித   லாகாது;

இலது: இவ்வுலகிற்கு அறிவு என்பது இல்லாததனால்.

உலகில் படைக்கப்பட்டவை சடம்; சிவத்தை  அறியாது;
ஆன்மாவின் நீங்கிய மனித உடலும் சடமே: அதுவும் சிவத்தை அறிய முடியாது.
மாயையும் சடமே: அதுவும் சிவத்தை அறியாது.
சடமென்பது அறிதிறம் அற்ற ஒன்று என்பதாகும்.

இரண்டலா ஆன்மா: சிவமும் உலகமும் ஆகிய இரண்டும் அல்லாத மூன்றாவதாகிய ஆன்மாவானது;

இரு திறன் அறிவு உளது : சிவமும் உலகமும் ஆகிய திறத்தன இரண்டையும் அறியும் அறிவாற்ற‌ல் உள்ளதாகும்.

ஆண் பெண் என்னும் பாலியல் வேறுபாடு மனித உடலுக்கும் விலங்குகட்கும் வேறு உயிரினங்கள் சிலவற்றுக்குமே ஆதலின்,
சிவம் என்பதே இங்கு ஏற்ற சொல்வடிவம் என்க. சிவன் சிவை
என்பன மொழிமரபு காரணமாக புழங்கும் வடிவங்கள். அல்லா, God -the usual pronoun being He with a capital H, என்பன போலும் பிறமொழிச் சொற்களும் அவ்வம் மொழிமரபுகளால் அறியப்படுவன என்பதுணர்க.

சிவத்தை ஆணாக  (சிவனாக) வழிபடினும் பெண்ணாக  ( பார்வதி ,துர்க்கை . சிவை ​ ....  இன்ன பிற ​ ) வழிபடினும் ஒன்றுதான். காரணம் சிவம் ஆணுமில்லை, பெண்ணுமில்லை.  உயிரினங்களுள்  இனப்பெருக்கத்துக்காக ஏற்பட்டவை இப் பாகுபாடுகள். இறைமைக்கு இனப்பெருக்கமில்லை. இறை தனித்திருந்து இலங்கும் தவமணி.   இங்கு தவமாவது இயல்பில் தீமை இலாமை.  சிவஞான  போதம்  சிவத்துக்கு  ஆண்பால் விகுதியோ  பெண்பால் விகுதியோ கொடுத்துப் பாடவில்லை.  "ஞானம்"    என்று  வரும்போது இதில் கவனமாக  இருந்துள்ளனர் பண்டை  ஞானாசிரியன்மார் 

பொருள் அறிக  ; இன்புறுக .

will edit later.







சனி, 12 மார்ச், 2016

சி- போதத்தின் ஏழாம் சூத்திரம்

தன்னிகரற்றுத் தானேயாய் நிலைத்தியங்கும் சிவமானது,  எதையும் நோக்கிச் செல்லாது. அது என்றும் இருந்தபடி இருப்பது.

உலகம் என்பது அச்சிவத்தினால் படைக்கப்பட்டது.  ஆனால் சடம். அதற்கு அறிவு ஏதும் இல்லை. அதுவும் எதையும் நோக்கிச் செல்வதற்குரியதன்று. அதுவும் இறைவனால் அழிவுறுங் காலம்வரை  இருப்பதுதான்.

மூன்றாவதாக உள்ளது மற்றொன்று.  அதுவே ஆன்மா. அதற்கு அறிவு உள்ளது. உலகிற்கு ‍ அதாவது உலகமெனும் சடத்துக்கு அறிவு இல்லை. ஆகவே ஆன்மா அறிவுடைமையால் சிவத்தை நோக்கிச் செல்லும் தகுதி படைத்தது. இருந்தவாறிருப்பதில்லை. மாறிச் சிவத்தை நோக்கிச் செல்வதாகும். ஆன்மா அன்றி வேறு படைப்பு எதற்கும்  அத் தகைமை இல்லை என்பது உணர்க.

ஆன்மா தவிர்த்த அனைத்துப் படைப்பும் உலகம் என்பதில் அடக்கிக் கூறப்பட்டது.

யாவையும் சூன்யம் சத்தெதிர் ஆகலின் 
சத்தே அறியா   தசத்தில  தறியா  
திருதிறன் அறிவுள  திரண்டலா ஆத்மா.


இது சிவஞான போதத்தின் ஏழாம் சூத்திரம் ஆகும். மேல் முன்னுரைத்தது பொதிந்த இந்தப் பாடலை அடுத்துப் பொருளுணர்ந்து கொள்வோம்.

வெள்ளி, 11 மார்ச், 2016

"சிவகவி' யில் சமய விளக்கம்

எம். கே  தியாகராஜ பாகவதர் உச்ச நிலை நட்சத்திரமாக விளங்கிய காலத்தில் ஒரு   நாள் அவர் கல்விக் கடலாகத் திகழ்ந்த  அருள்மொழி அரசர் திருமுருக கிருபானந்த வாரியாரை மிக்கப் பணிவுடனும் அடக்கத்துடனும் அணுகினாராம்.   எப்படி ?    வாரியார் அடிகள் சொற்பொழிவு நடாத்திக்கொண்டிருந்த  மேடைக்கே சென்று அவர் காலடிகளை வணங்கினாராம்.    இப்படி அவரை அணுகியதன் பயனாக  பாகவதருக்கு  ஒரு கதை  கிடைத்தது.  அந்தக் கதையே பிற்காலத்தில் " சிவகவி " என்ற திரைச் சித்திரமாக வெளிவந்து  அதில் நடித்த யாவரின் புகழையும் உயர்த்தியது.
தம் பெயரைப் படத்தில் காட்டவேண்டாம் ,  கதையை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று வாரியார் அடிகள் பாகவதரைப் பணித்தாராம்.

பெயர் சிவகவி என்றிருந்தாலும் உண்மையில்  அது முருகனைப் பாடமாட்டேன் சிவம் ஒன்றையே பாடுவேன்  என்று அடம் பிடித்த பொய்யா மொழிப் புலவரின் கதை .

இதை மக்களிடம் கொண்டு செல்ல   பாபநாசம் சிவன் எழுதிய

வள்ளலைப் பாடும் வாயால்   ---- அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ -----
வெள்ளிமலை வள்ளலைப் பாடும் வாயால்  -----   அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ ------    என் தன்
சாமியைப் பாடும் வாயால்  -------  தகப்பன்
சாமியைப் பாடுவேனோ ?

அப்பனைப் பாடும் வாயால்-------ஆண்டிச்
சுப்பனைப் பாடுவேனோ? ------ என் தன்  அம்மை
அப்பனைப் பாடும் வாயால்  ------  பழனியாண்டிச்
சுப்பனைப் பாடுவேனோ?

வள்ளியின் கண்வலை வீழ் சிலை வேடன்
கள்ளனைப் பாடுவேனோ ?


அம்பிகை பாகன் எனும் -----  அகண்ட
சுயம்புவைப் பாடும் வாயால்
தும்பிக்கையான் துணையால் -----  மணம்பெறும்
தம்பியைப் பாடுவேனோ?

என்பது படத்தில் காட்சிக்கேற்ற  சிறந்த பாடலாய் அமைந்துவிட்டது .

 புலவரின் தருக்கை அடக்க முருகனே  வேடனாக வந்து புலவரின் பாடலில் பொருட்குற்றம் கண்டு பொன் பற்றினின்றும் அவரை விடுத்துத்   தன்  அருள் வடிவு தெளியக்காட்டி  ஆட்கொள்ளுகின்றான்.
அப்போது பாகவதர் பாடும் :  சொப்பன வாழ்வில் மகிழ்ந்து  சுப்ரமணிய சுவாமி  உனைமறந்தார்  என்ற பாட்டு மிகவும் புகழ்ப்பெற்ற இனிய பாடல்.

சிவமும் யாமே  முருகனும் யாமே  பிற கடவுளர்களும் யாமே,  யாம் ஒருவரே ---- என்ற   இறை ஒருமையைப்  படம் விளக்கிச்  செல்கிறது.

இந்து மதத்தின் கடவுட் கொள்கை  அதுவேயாம் .இதை இராமகிருஷ்ணரும்  விவேகாநந்தரும் நன்கு நிலைநிறுத்தி யுள்ளனர்.   நம் சைவத் திருமுறைகளும்  பறைசாற்றுவதும் வேறன்று.

முருகு என்றாலே அழகு என்று பொருள். இயற்கை அனைத்தும் அழகன்றிப் பிறிதில்லை .முருகன் இவ்வியற்கை அழகின் அம்சம் அல்லது அமைப்பு என்பதை உணரவேண்டும் .சிவஞான போதம் இவ்வுலகை  -  இயற்கையை  இறைவனின் சான்றாக எடுத்துரைக்கிறது,

The lyrics amount to excellent poetry.  After all William Shakespeare was also a stage poet.




   

வியாழன், 10 மார்ச், 2016

ஏவும் அணியில் எலியும் இணைந்திடில்....

எப்போதும் வீட்டில் இலாததினால் ---- பின்னால்
எலிகள்  புகுந்து வி-  ளையாடியே  .
ஒப்பாத நாசங்கள் செய்தகதை ---- நான்
உரைத்திடில் கேட்டே இரங்குவிரோ!

அடுப்பினில்  வாயுக் குழாய்தனையே---- கடித்தே
அங்குமிங்  கும்சிதறச் செய்ததனால் 
கடுப்பினில் கம்பால் அடித்துத் துரத்துதல்
கால  மனைத்திலும்  பின்வருமோ?

மரத்துக் கதவினில் கை நுழைக்கும் ---- படி
மலைத்துக்  குலைந்திட ஓர் துளையே
அடைத்ததைச் சீர் செய ஐம்பது வெள்ளிகள்
ஆங்கவற்    றோடிணை  சேர்துயரே!

பாவம் பணிப்பெண் உழைப்பு மிகுந்தது
பண்ணினள் தூய்மை  அவட்குநன்றி
ஏவும்  அணியில் எலியும் இணைந்திடில்
என்னசெய்  வாள்  இதை   எங்க்குசொல்வோம் ?


பூ கவி பாடினால்.............

ஒரு தோட்டத்துப் பூ கவி பாடினால் இப்படிப் பாடுமா?



தோட்டத்தில் மலர்ந்திருந்தேன்
தொட்டிட வந்தாய் தோழி
காற்றென அசைத்தாள் என்னைக்
காத்தனள் கொஞ்சநேரம்;
ஆட்டமோ என்னைக்கண்டே
அசையாதே என்றவாறு
பூட்டினாய் விரல்கள் என்மேல்;
பூவெனைப் பறித்தேவிட்டாய்!

வருடினாய் விருப்பம்போலே
வகைகெட மாட்டிக்கொண்டேன்
நெருடினாய் நிமிர்த்திமோந்து
நேர்ஒரே முத்தம்தந்தாய்!
குருடியே` என்றேவையக்
கொதித்திட வலிமையில்லை.
மருள்தரக் கசக்கிப்பின்னே
மாய்ந்திடக் களைந்திடாதே!

கவியை உருக்குலைத்து .......

சீரும் தளைமற்றும் சேராக் கவிதைக்குள்
ஊறும் அழகை உருக்குலைத்து --- வாருமே
வெண்பா விளைந்திடக் காண்போம்; வெளிறிய
மண்பாவா னாலும்    மதி


செவ்வாய், 8 மார்ச், 2016

ஆஸ்திகம்

ஆஸ்திகம் -   இது அருமையாக அமைந்த சொற்களில் ஒன்று. அதன் பொருள் இறையுண்மை என்பதாகவே இதுபோது வழங்குகிறது.  "இல்லை  என்பார் யாரையா ? என் அப்பனைத் தில்லையில் போய்ப்  பாரையா !"   என்று சுத்தானந்த பாரதியார் பாடினார் . தில்லையில் பற்றரைக் கவர்பவனாய்  அவன் உள்ளான். ஆனால் எங்கும் இருப்பவன் இறைவன்.

யாண்டும் உளனால் பற்றுடையானுக்கு வேண்டிய வேண்டியாங்கு உதவி புரிபவனாய்  அவன் இலங்குகின்றான்.  இறைப் பற்றனுக்கு இல்லைஎன்பானுக்கு  இல்லாத பற்றுக்கோடுகளெல்லாம்  இயல்கின்றன. அவன் நேரில் வாராதபோதும்,  அவன் உள்ளான்,வந்து  உதவுவான் என்ற நம்பிக்கை உள்ளது.  இதுவே  "ஆசு "   என்பது.

ஆதல் என்ற வினையிலிருந்து ஆசு என்கிற சொல் அமைகிறது. சு என்ற விகுதி அல்லது  இறுதிநிலை  வினையாக்கத்திற்கும்  உதவும் .  ஏய் !  என்று
விளித்துத்  திட்டுவதற்கும் உதவும்.  ஏ >  ஏசு . (ஏசுதல் ).  குகை மாந்தன் அவ்வளவு பேசத்தெரியாதவன்.  அவன்   பே !  பே!  பே !  என்று ஒலி  எழுப்பவே தெரிந்தவன், அதனோடு  -சு  விகுதி இணைந்து பேசு  என்னும் சொல் அமைந்தது.  சொற்கள் அமைதற்கும்  விகுதிகள் அமைதற்கும்   காலம்  தேவைப்பட்டிருக்கும்   மொழியானது மெதுமெதுவாக வளர்ந்து வந்த கலை.
Rome was not built in a day!  எவ்வாறாயினும்,   இப்போது அறிய வேண்டியது  -சு விகுதி வினையிலும் பெயரிலும் வந்துறும் எனற்பாலதே,  ஆசு  என்பதால் துணையாதல், உதவியாதல்,  பக்கம் நின்று நடைபெறுவித்தல் என்று இன்னும் யாம்  சொல்லாத  பல ஆக்க  நிலைகளைக் காட்டுதலால்  அஃது எத்துணை இனிமையாய் அமைந்த  சொல்  என்பது புலப்படும் .

ஆத்திகனுக்கு அதிகமான பற்றுக்கோடு  உள்ளது.  உண்மையான அல்லது மன நிலை சார்ந்த ஓர் ஊக்கம் தருவதாக அது இருக்கிறது.  ஆகவே -

ஆசு  +  அதிகம் = ஆசதிகம் >  ஆஸ்திகம்.

அல்லது:

ஆசு  + திகை + அம் >   ஆசு  +  திகம் >  ஆஸ்திகம்.

திகை அம்   என்பதில்  ஐ கெட்டது .  கெட்டால்    திக் + அம்  =  திகம்.

திகை > திசை;
(திக் )   >  திக்கு.  (திக்குத் தெரியாத காடு)  திக்கு = திசை.
(திக் )  >  திகம்   ( அம் - விகுதி.)
(திக் )     திகை.   (திக்​ ஐ.)    ஐ - விகுதி,

ஆதரவான போக்கு  ஆத்திகம்  என்பது பொருள்.   கடவுளுக்கு (அவன் உண்மையை)  ஆதரிக்கும் போக்கு;   மனிதனுக்குக் கடவுள் ஆதரவு கிட்டும் போக்கு.  பொருள் விரித்தல் கூடும்.

ஆசு+  திகம்  என்பதில் ஓர்  எழுத்தை மாற்றி  ஆஸ்திகம்  ஆயிற்று.

இது இருபிறப்பி  அல்லது  இரட்டுறல் அமைப்பைக் கொண்டது.




மெய்ப்பு நிகழ்ந்தது. திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை.
29122020. No errors noted in our prepost draft (before posting). If errors appear in our
finished post in your screen , these may be owing to third party interference.( 
e.g. hacking or autochanges introduced into screen appearances not residing
in our system. Kindly report.

போர்த் தந்திரங்கள்


http://sivamaalaa.blogspot.sg/2016/03/blog-post_6.html

இதன் தொடர்பில் "He who runs away stays to fight another day"   என்பது ஆங்கிலப் பழமொழி ." Tactical withdrawal"  என்பதுமுண்டு .

"Tah tan;  tan tah"  என்பது சீனப் பழமொழி ."தயங்கு  தாக்கு; தாக்கு தயங்கு."

"பகைவனுக்கு  அருள்வாய் "  என்பது பாரதி பாடல்.

  -      

பகைப்போர்

புகை இல்லாமல்  நெருப்பு இலை என்பார்கள்.1 இப்போது எரிவாயு  அடுப்பைப் பற்றவைத்தாலே எந்தப் புகையும் இல்லாமல் அழகாக நீல நிறத்துடன்  எரிகின்றது. நீர் புகையைப் பார்க்கவில்லையே தவிர புகை ஒளிந்து கொண்டிருந்து பின் மறைந்து எரிந்தது என்று நீங்கள் கூறக்கூடும்! இருக்கலாம் .......எனக்குத் தெரியவில்லை.

பகை இல்லாமல் போர் இல்லை எனலாமா? போர்கள் பகை ஒன்றாலேயே ஏற்படுவதில்லை.  மூல காரணம் என்பது பொருளியலாக இருக்கலாம்.  அதனால் மனக்கசப்பு வளர்ந்து பகையாக முற்றிப்   போராய் முடியலாம். தொடக்கத்தில் பகை இல்லாவிட்டாலும், அது பின் ஏற்படலாம் என்று தெரிகிறது.

இது பற்றி நன்கு அறிந்த பட்டறிவாளராக  நீங்கள்  இருக்கக்கூடும்.

இப்போது பகைப்போர் என்ற சொல்லைக் காண்போம்.  \

பகை +  போர்  =  பகைப்போர் எனில்  பகையின் காரணமாகிய போர் என்று பொருள்படும்.

பகைப்போர் -   பகை கொள்வோர்  என்றும்  பொருளாகும்,

இவற்றை  அறிந்து பயன்படுத்துதல் உங்கள் பொறுப்பு..


1  நெருப்பு இல்லாமல் புகை இல்லை. ( நெருப்புக்குச் சான்று புகை) .  பழமொழி .

ஞாயிறு, 6 மார்ச், 2016

புறப்பொருளில் தோற்றவர்க்கு இரக்கம்.



இந்தப் புறப்பொருட் கொளுவைச் சற்றுக்  காண்போம்.

அழிகு நர் புறக்கொடை அயில்வாள் ஓச்சாக்
கழிதறு கண்மை காதலித் துரைத்தன்று.

என்பது 20-ம் பாடல்.  வஞ்சித் திணையில் இது ஒரு துறை ஆகும்.

சரணடைந்தவர்களைக் குண்டுவீசித் தாக்கிய கொடியவர்க்கும் அதற்குத் துணைபோன அடுத்தார்க்கும் உண்மையில் தெரியவேண்டிய ஒரு பண்பாட்டை இக்கொளு எடுத்துக்கூறுகிறது. தோற்றவர்க்கு இரங்கிய தூயபண்பினன் இறுதியில் ஒழிக்கப்பட்டது  எத்தகு கேடு!

போரில் வன்மை அழிந்தவர் இரு கைகளையும் உயர்த்தித் தம் முதுகையும் காட்டுகின்றார். அந்த நிலையில் வெற்றி பெற்றவன்  தன் கூரிய வாளைச் சரணடைந்தோனின் முதுகில் குத்திவிடுவது எளிதுதான்.   ஆனால் குத்தக்கூடாது என்கிறது தமிழர் பண்பாடு. வாளைக் குத்தாமையே வீரப் பண்பாடு என்கிறது.  இதைப் பக்கலில் நின்று கண்டோர் அந்த வீரப் பண்பினைக் காதலிக்கின்றனர் என்கிறது நம் புறப்பொருள் இலக்கணம்.

சரணடைந்தோனைக் குத்துதல் கோழைமை.  அவனைக் காப்பாற்றுவதே  வீரம்.

வஞ்சியில் இது தழிஞ்சித் துறை ஆகும்.


You may continue reading on this topic . Click for more:


வென்றபின் பகைவனுக்கு அருள்செய்
http://sivamaalaa.blogspot.sg/2014/07/blog-post_24.html


சேரனுடன்  மோதாதே
http://sivamaalaa.blogspot.sg/2014/07/blog-post_39.html


போர்த் தந்திரங்கள்
http://sivamaalaa.blogspot.sg/2016/03/blog-post_91.html


சனி, 5 மார்ச், 2016

"விற்பன்னர்"

ஒரு பொருளை விற்பதற்குச் சில வேளைகளில் வணிகர் சிலர் மிக்கத் திறமையுடன் பேசுவர்.  மந்திரங்கள் சொல்லி, பாம்பு  விளையாட்டும் காட்டி அது கடித்தால் இந்த மருந்தைப் போடுங்கள்  விடம் ஏறாது,  ஏறின விடமனைத்தும் இறங்கிவிடும் என்றெல்ல்லாம் விளக்கம் தருவதற்குப்  பேச்சுத் திறன் முதன்மை  யானது ஆகும்.  இவர்கள் விற்பனைக் கலைஞர்கள்

அறிஞர்  சிலர்க்கும் இத்தகு திறன் காணப்படுகிறது.

ஒரு சமயம் ஒரு சீன நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.  இவர் சிங்கப்பூர் வானூர்தி நிலையத்தில் அறிஞர்  நெல்சன் மெண்டெலா  அவர்களின் உரையை நேரில் கேட்டவர்.  "இது அன்றோ  உரை! சிலர்  எழுதி வைத்துக்கொண்டு பேசுகிறார்களே! அதிலும் கூட தடுமாறுகிறார்களே "   என்றார்.   நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்  அரசியல் அறிஞர் லீ குவான்  யூ அவர்களும் சிறந்த உரைவலர் ஆவார்.

இவர்கள் திறம் ஒரு வகையில் விற்பனைத் திறத்துடன் ஒப்பீடு செய்யத் தக்கது ஆகும்.  செலச் சொல்லும் செந்நாப்போதார் சீர்மிக்க இம்மாமனிதர் .

இது தொடர்பில் "விற்பன்னர்" என்ற சொல்லை அலசுவோம்.

விற்பு  =  விற்பனை . விற்பனைக் கலை குறிக்கிறது.

அன்னர்  =  போன்றவர்கள்.

கலை குறித்த "விற்பு"    அதன் கலை உடையாரைக் குறித்தது.   இது ஆகுபெயராய் நின்றது.

முழு விரிப்புடன் சொல்லின்  "விற்பரன்னர் " எனல் வேண்டும்.  இரண்டு "அர் "
இன்றி  ஒரு அர்  வரச்  சொல் அமைந்தது சொற்புனை புலமை ஆகும்.  ஒரு ரகரம் மறைந்த இடைக்குறை எனினுமாம்.

வில் போல் குறிவைத்துப் பன்னுவோர் என்று கூறுவதும் கூடும் .  பன்னுதல்  -  சொல்லுதல்.

அறிவோம்  மகிழ்வோம்.


வெள்ளி, 4 மார்ச், 2016

இராத்திரி

இரவு  இரா என்பன தமிழ் .   ஆனால் இராத்திரி என்ற சொல்வடிவமும் தொன்று தொட்டு தமிழ்ப் பேச்சில் இடம்பெறத் தவறுவதில்லை. இரவு என்பது தலை கிள்ளப்பட்டு ராவு என்றும் தோற்றரவு  (அவதாரம் )  செய்யும்.  சில வேளைகளில் ரா என்றுமட்டும் வரும்.  ராவிலே படுக்கும் போது கால் கை மூஞ்சி எல்லாம் கழுவிவிட்டுப் படு என்று அம்மா சொல்வதைப் பிள்ளைகள் கேட்டிருப்பார்கள்.  இரவு குறிக்கும் இச்சொல் ஏன் இத்துணை உருவுகள்  கொள்கின்றன ? எல்லாம் நம் தமிழரின் சொல் பல்வடிவப் புலமைதான் !

இனி இராத்திரி என்பதனை உற்று நோக்குவோம்.

இரா+   அத்து + இரி

அத்து  என்னும் சாரியை இங்கு வந்துள்ளது.

இவர் நடனத்தில்  புலி  என்கையில்  நடனம்+  அத்து + இல் என்று அத்துச் சாரியை வரும்.  அத்து என்பதை விட்டு, நடனமில் புலி என்று புணர்த்தினால்  அது நடனம் இல்லாத புலி என்று கொள்ளவேண்டி வரும்.

ஆங்கு, பொருள் கெடுமன்றோ?

இருத்தல்  என்பது மலயாளத்தில் இரி என்று வரும்.  அன்றேல் இரு என்னும் தமிழ் இகர விகுதி பெற்றது எனினுமாம்.

இதை ஒரு வாக்கியமாமாக  எழுதின்,  இரவு நேரமாக இருத்தல் என்று விரிக்க.

அத்து + இரி

அத்து  என்னும் சாரியை இங்கு வந்துள்ளது.


இதை ஒரு வாக்கியமாமாக  எழுதின்,  இரவு நேரமாக இருத்தல் என்று விரிக்க.

இரவில் தூங்கு.
இராத்திரி தூங்கு.
இரவு நேரமாய்........

 இருக்கையில் தூங்கு.

இதிற் சிறக்கும் பொருள் விரிப்பு யாதுமில்லை எனினும் இதுபோலும் விரிப்புகள் பேச்சில் வருவனவே. இயல் நூலை ஏந்தி உசாவிக்கொண்டு யாரும் உரையாடுவதில்லை.

திரி என்பதை திரி என்னும் தனிச்சொல்லாகக் காணின்,

இரா + திரி    இராத்திரி  ஆகும்.

இரவாகிய திரிபு,    இரவாகிய மாற்றம்  எனல் பொருந்தும்.

இப்படி இவ்வழக்கு எங்கும் பரவி நிற்பது தமிழன் ஒரு காலத்து யாண்டு பரவி இருந்ததைக் காட்ட வல்லது.

இராத்திரி என்பது இருவேறு வகைகளிலும்  பொருந்தி வரும் சொல் அமைப்பு.

edited on 21.10.2022











இடையில் நின்ற அதுவும் இதுவும்

சொற்கள் பலவற்றைப்  பிரித்து  ஆய்வு செய்வோர் பிரிக்கப் பட்ட துண்டுகளுக்கு இடையில்  அது  இது   என்பன  நிற்றலைக் காண்பர்.
எடுத்துக்காட்டாக  பருவதம் என்ற சொல்லைப் பார்ப்போம்.

பருத்தல் என்பது தமிழ் .  உள்ளது பரிது ( பெரிது ) ஆவதைக் குறிக்கிறது இந்தச் சொல்.  சிறு சிறு மேடுகளையும் குன்றுகளையும் பார்த்துப் பழக்கப்பட்ட ஒருவன்  ஒரு பெரிய மலையைக் கண்டவிடத்து  வியக்கிறான்;  பெருத்தது, பருத்தது என்று அவன் அதை வருணிக்கிறான். இப்படி அமைந்ததே பருவதம் என்ற சொல்.

பரு +  அது + அம் =  பருவதம்.

இதில் அது என்னும் சுட்டு இடையில் நின்று சொல்லமைப்புக்குத்  துணை புரிந்தது.  மலை என்ற சொல்லும் கண்டு வியத்தல் என்னும்  மலைவு என்பதனோடு தொடர்புடைய கருத்தே ஆதலின் இவற்றின் கருத்தொருமை நன்கு புலப்படுவதாகும்.

இடையில் நின்று சொல் அமைப்புக்குத் துணைசெய்வனவற்றை இடை நிலை என்றனர் இலக்கணியர் .  ஆனால் வினைமுற்றுக்களை ஆய்வு செய்த காலையே அவர்கள்  அங்ஙனம் கூறினர் .  வினைமுற்று அல்லாத பெயர்களிலும் இது காணப்படுகின்றமையின்  தமிழில் வினைமுற்றுக்கள் அமைந்த விதத்தினைப் பின்பற்றியே  பருவதம் முதலிய சொற்கள் பிற்காலத்துப் புனைவுற்றன என்று முடித்தல் பொருத்தமே.

இடையில் அது என்னும் இடைநிலை  நிற்றல் தேவை ஆயிற்று.   இன்றேல்  பரு+ அம்  =  பரம் என வந்து  பர+ அம் =  பரம் என  உருக்கொண்டு இறைவனைக் குறிக்கும் சொல்லுடன்   மலைவு  (குழப்பம் )   நேர்தல் காண்க.


தெய்வதம் என்ற சொல் இப்படியே புனைவு பெற்றது என்பது தெளிவு.

தெய்வம் + அது + அம் =  தெய்வ + அது + அம்  = தெய்வ +  து + அம் >   தெய்வ + த் + அம் >   தெய்வதம்.

இரண்டு அகரங்கள் வரின் ஓர் அகரம் வெட்டுப்படும். அது நிலைச்சொற்பாகத்தினது ஆயினும்  வருஞ்சொற்பாகத்தினதாயினும்  முடிபு வேறுபடுதல் இல்லை.

இடை நிலை இறுதி உகரமே மறையு,ம்,  இறுதி விகுதி அகரத் தொடக்கத்தினதாயின்

அப்தெய்வத என்ற சங்கதச் சொல்லில்   அது என்பது நின்று அம் என்பது  வாலிழந்த நிலையில் முற்றுப்பெற்றமை காண்க.   அப்தெய்வத எனின் நீரைத் தெய்வமாய்க் கும்பிடும் கொள்கையர் என்பதாம்.  இவர்களை வேறுபடுத்திக் காண ஒரு சொல் தேவைப் பட்டதுபோலும். அக்கினியை வணங்குதலினின்று  வேறுபாடு இதனால் அறியப்பட்டது. இக்காலத்து இரண்டும் இணைப்புற்றமை காணலாகும்.

பெரிது  சிறிது என்பவற்றில்  இகரம் வந்தமை காண்க.  வேறு சொற்களில்  " இது"   இடைநிலை  வந்தது பின் ஓர் இடுகையில் காண்போம்.

"  அது" இடை நிலையை  விரியப் பயன்படுத்திச்  சமஸ்கிருதமும் பெருவெற்றி அடைந்தது --  சொல்லமைப்புக் கலையில்.






சிவனுக்கு ஒரே ராத்திரி - நம் கடமை

சிவனில்லா இராத்திரிதான் எங்கே தம்பி -----அந்தச்
சிவனின்றிப்   பகலில்லை இரவுமில்லை
அவனில்லா உலகில்லை என்னும்காலை ----- பகல்
அவற்கில்லை  இரவொன்றே என்னலாமோ

அனைத்தினையும் விட்டு  நாமும் அவன்நினைந்து ----உள்ளம்
அவனிற்போய் மூழ்கிவிட  இரவும் ஒன்றே !
நினைத்தபடி வீண்பேச்சு பயன்இல் காலம் ----- வேண்டா
நேரியதோர் பண்பாட்டின் இராத்திரியாமே! 

புதன், 2 மார்ச், 2016

அபத்தம்

அபத்தம்

எதிரிகட்குப் பற்றலர் என்றும் கூறுவதுண்டு.  எவ்வாற்றானும் பொருந்திவராதவர்களுக்கு அந்தச் சொல் மிக்கப் பொருத்தமுடையதே. பானையில் உள்ளது பத்தாது ‍  அரிசி கிளைந்து வைக்கவேண்டும் என்று பேசுவர். பற்றாது என்பதே பத்தாது என்று பேச்சில் மாற்றம் பெற்று வரும். என்ன நடந்தது என்பதை எந்து பற்றி என்பர் மலையாள மொழியில்! எதைப் பற்றிப் பேச்சு நடக்கிறது என்று கேட்பதுண்டு.

பற்று என்ற சொல் பற்றி என்றாகிப் பின் பத்தி என்றாகி இறுதியில் பக்தி என்று விளைந்தது. "பத்தி செய்து பனுவலால் வைத்ததென்ன வாரமே!"  என்ற தாயுமானவரின் வரிகள் நினைவுக்கு வருகிறது.
தேவாரத்தில் "பத்தி" என்றே வரும்.  ஆனால் பக்தியைத்தான் பத்தி என்று பாடியுள்ளனர் என்று தமிழாசிரியன்மார் சொல்லிக்கொடுப்பர்.
ஆனால் பற்று > பற்றி > பத்தி பின் பக்தி என்பது இப்போது மிக்கத் தெளிவு பெற்றுள்ளது.  முத்தி  முக்தி ஆனாற்போல்.  முது >  முத்து > முத்தி > முக்தி;  முற்று > முத்து > முத்தி .

எமது எழுத்து அதைப்பற்றி அன்று.   அபத்தம் என்பது பற்றியே.

பற்றுதல் என்பது பொருத்துதல் என்றும் பொருள்தரும்.  இரும்புத் துண்டுகளைப் பற்றவைத்தல்  என்பதுண்டு,  அதாவது தீயினால் உருக்கிப் பொருத்துதல்  என்பதே இது.

அபத்தம் என்பது பொருந்தாதது.   பற்று >  பத்து > பத்தம்   அல்  >  அ .  அல்லாதது.   அ + பத்தம்  = அபத்தம்.

இதன் மூலமும் தமிழ் தான்.  இந்தோ ஐரோப்பியம் அன்று,

திங்கள், 29 பிப்ரவரி, 2016

ஐ and high

நீர்  (தண்ணீர், வெந்நீர்  என்பவை) தமிழில்போல் சங்கத மொழியிலும் உள்ளது.  சமஸ்கிருதத்தில் 1/3 பகுதி திராவிடச் சொற்கள்.   ஏறத்தாழ  1/3  மேலை மொழிகளுடன் தொடர்பு காணக்கூடியவை.  இறுதி 1/3  எங்கிருந்து  வந்தன என்று தெரியாதவை என்றார் டாக்டர் லகோவரி. தெரியவில்லை என்பவற்றில் பல தமிழில் காணக்கூடியவை.  நாமும்பல  சொற்களை எடுத்துக்காட்டியுள்ளோம். தமிழினின்று போந்தவை என்றால் அவற்றுக்கு மதிப்புக் குன்றுமென்பதால்,  ஒப்புக்கொள்ள வெட்கப்படுவான் வெள்ளைக்காரன்.

சமம்+மதி >  சம + மதி >  சம்+மதி = சம்மதி.  இதை இப்படிக் காட்டாமல் சம் என்பதை முன்னொட்டு என்றும் மதி என்பது வினைச்சொல் என்றும்  கூறுவான்  சங்கத ஆசிரியன்.

சம் எங்கிருந்து கிட்டியதென்றால், தமதென்பார்.

அமை> சமை > சம்  என்பது தெளிவித்துள்ளோம்.

ஒரு சீனனிடம் போய் சமஸ்கிருதப் பாட்டைப் பாடினாலும் தமிழ்பாட்டுப் பாடினாலும்  எல்லாம் ஒருமாதிரியாய் இருப்பதாகச்
சொல்கிறான்.   ஆகவே  மொழி நூல் அறிஞர் சட்டர்ஜி , ச‌மஸ்கிருத  ஒலிமுறை திராவிட மொழிகளின் அமைப்பைத் தழுவியது என்று உண்மையைச் சொல்லவேண்டியதாயிற்று.

சமஸ்கிருதம் தென்மொழி சார்ந்ததே. தமிழ் உள்ளிட்ட முன்னிருந்த‌
பாகதங்களிலிருந்து சொற்களைப் பெற்று இனிதாக அமைக்கப்பட்டதே
சமஸ்கிருதம்.

சமஸ்கிருதம் வளர்க்கத் தமிழ் மன்னர்கள் பலர் கடினமாக உழைத்துள்ளனர்.  தமிழ்ப் புலவர்களும்தாம்.  வேதம் பாடியோரில் பல தமிழர் இருந்தனர்.  தமிழ்ச்சொற்களை ஆண்டுள்ளனர். தென்கிழக்காசியா எங்கும் அதைப் பரப்பினான் ராஜ ராஜ சோழன்.

ஆரியன் என்று யாரும் வந்ததற்கு ஆதாரம் இல்லை. ஆர்ய என்பது தமிழ்ச்சொல் என்று ஆதாரம் காட்டியுள்ளார் தேவ நேயப் பாவாணர்.
ஆர்தல்,  அறிவு என்பன தமிழ்ச் சொற்கள்.  அரிவ் என்று அது அரபியிலும் சென்று வழங்கியது உண்மை.

Garden of Eden என்னும்  எழில் தோட்டம் தமிழ் நாட்டில் இருந்ததென்று சில அரபு  நூல்கள் சொல்வதாக ஓர் இஸ்லாமிய அறிஞர் எழுதியுள்ளார்.

சமஸ்கிருதத்திலிருந்து பல சொற்களை  மேலை மொழிகள்  மேற்கொண்டன.  தமிழிலிருந்து நேரடியாகவும் மேற்கொண்டன.

ஐ என்பது தமிழில் மேன்மை குறிப்பது.  ஐயன், தமையன்.
ஹை என்ற மேன்மை குறிக்கும் சொல் ஏன் ஒலியொத்து வருகிறது.

ஏர்   -  arable  என்ன தொடர்பு ?

ஆராயலாமே!

will  edit. enjoy the post first.

மோட்ச‌மும் மேலகமும். வாழ்க,!

மேலகம் என்ற சொல் இத்போது பெரிதும் வழங்குவதில்லை. இதற்குப் பதிலாக மோட்சம் என்ற சொல்லே பேச்சு வழக்கில் உள்ளது . எட்டாம் துக்கம், பதினாறாம் நாள் என்றெல்லாம் வருங் காலங்களில் மோட்சம் என்ற சொல் காதில் வந்து சேர்கிறது.

 மேல் என்ற சொல் மோள் என்று மலையாளத்தில் வழங்குகிறது. மோள்+ சு+ அம் என்ற விகுதிகள் இணைந்தால், மோட்சம் என்ற சொல் பிறக்கிறது. சு விகுதி பரிசு என்ற சொல்லில் இருக்கிறது,  அம் விகுதி பெறு பதங்கள் பற்பலவாம்.  அறம் என்ற சொல்லில் அறு+அம் என்ற இணைப்பில் நிறு நயம் செய்யப்பட்ட  ( நிறுவி நயம் ஆக்கப்பட்ட ) வாழ்க்கை விதிகள் என்ற சொற்பொருளமைப்பில் அம் வருகிறதன்றோ!. மலையாளப் பேச்சில் தோன்றிய  மோள்,  விண்கலம் செவ்வாயில் சென்றிறங்கினாற்போல யாண்டும் பரவி, தமிழில் தழைத்து, சமத்கிருதமொழியில் உழைத்து  மேலகம் எய்தியது வரவேற்கப்படவேண்டியதே ஆகும்.

மோட்ச‌மும் மேலகமும். வாழ்க,

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

முந் நீர் - சமுத்திரம்.

சமுத்திரம்  என்ற சொல்லைச்  சில ஆண்டுகட்கு முன்னரே  ஓர்  இடுகையில் அணுக்கமாகக் கவனித்திருந்தேன்.   இது   எங்ஙனம் உருவானது என்று மீண்டும் சிந்திப்பது நல்லது.

அமை -   அமைத்தல்.

இது பின்    இன்னொரு சொல்லைப் பிறப்பித்தது.

அமைத்தல் -  சமைத்தல்.

 அகரம்  சகரமாய்த்  திரியம் .   அமண்  -   சமண் ,

அகபதி  (அகத்துப் பதிவாய் விளங்கும் இறைவன் )  -  சகபதி.

அகர வருக்கத்துப் பிற எழுத்துக்களும் இங்கனம் திரியும்.


உக > சுக > சுகம்     உகந்த நிலையே சுக நிலை..

முன் இடுகைகளில் தந்த எடுத்துக்காட்டுகள் அங்குக் காண்க.

சமைத்தல் என்பது  வேகவைத்தோ  பொரித்தோ  அல்லது  வேறு வகையிலோ சூட்டினால் உணவு உண்டாக்குதலைக் குறிக்கும் சொல்லாயிற்று.  நுண்பொருள்  வேறுபாட்டு  விரிவு  இது ஆகும்.

சமை என்ற சொல்லில் இருந்து  இந்தோ ஐரோப்பியத்துக்கு  சம் என்ற அடிச்சொல்  கிட்டியது.   சமை என்பதிலிருந்து  வினையாக்க விகுதியாகிய ஐ பிரிவுண்டு விடுமாயின்  மிச்சமிருப்பது சம் அன்றோ?

சீரகம்  சோம்பு     ஏனை   மசாலைப் பொருள்கள்  முதலிய  இட்டுக்  கறி சமைத்து  உண்டவர் தமிழர் . ஆகவே சமைத்தல் என்பதற்குப்   பல பொருள்களை ஒன்று சேர்த்துக் கூட்டுதல், என்ற  பொருள் அமைந்தது  பொருத்தமே. இப்பொருள் ஒரு பின்வரவு ஆகும்.  குழந்தை  சமைந்தது  என்ற வழக்கும் உள்ளது    சமைதல் - தன் வினை;  சமைத்தல் -  பிறவினை.

இனிச்  சமுத்திரம் என்ற சொல்லுக்கு வருவோம்.  

இது முந்நீர் என்ற  தமிழ்ச்சொல்லைப் பின்பற்றியது.    சமுத்திரம்  என்பதன் பின்பகுதி முத்திரம்  -  இது உண்மையில் முத்திறம்  ஆகும். சம் என்பது ஒன்று சேர்தல், கூடுதல்;  (>  சமை).,  திரை (கடல்)  என்பதிலிருந்து  இந்தத் திரம்  வந்திருத்தல் கூடும் என்று  கூறுவர் சிலர்,

இங்ஙனம்  புதிய சொல் ஒன்று அமைக்கப்பட்டது.

முந் நீர்  -  சமுத்திரம்.

இப்போது முந்நீர் போல  சமுத்திரமும் பொதுவாகக் கடல் குறிக்கும் ,  மூன்று கடல் கூடுவதென்பது  சொல்லமைப்புப் பொருள் .  இப்போது அது  மங்கிவிட்டது.


முந் நீர்   -   முத்திறம் /      முத்திரம்
சம்  +  முத்திரம்  -   சம்முத்திரம் >   சமுத்திரம்

இப்படிச் சொற்களைப்  படைத்தவர்கள்  சிறந்த படைப்பாளிகள் என்பதில் ஐயமில்லை. சொற்களின் படைப்பு வழிகளைக் கண்டின்புறும்  இவ்வேளையில்  அவர்களையும் பாராட்டுவோம்.


சி-போதம் 6ம் பாடல் பொருளுரை

http://sivamaalaa.blogspot.sg/2016/02/6.html     இங்கிருந்து தொடர்வோம்.

ஆறாம் பாடலை இங்கு நினைவு கூர்வோம்:


உணர் உரு  அசத்து எனின் உணராது இன்மையின்
இரு திறன் அல்லது  சிவ சத்து  ஆமென‌
இரண்டு வகையின் இசைக்குமன்  னுலகமே.



சிவஞானபோதம் 6ம் பாடல் பொருளுரை

மன்னுலகு ‍  =  இவ்வுலகத்துள் வாழ் மெய்யறிஞர்கள்; பெரியோர் ,
உணர் உருவெனின் ‍=  சுட்டி அறியத்தக்க வெளிப்பாடாயின்;
அசத்து =  ( சிவமானது )  அது இவ்வுலகமே என்று கூறுவார்கள்.
உணராதெனின் =   உணரப் படாததென்றால் அதாவது சுட்டி
அறியத்தக்க பொருளன்று சிவம் என்று கூறுவார்களாயின்;
இன்மையின் =  அச் சிவமானது சூன்யம் என்று கூறுவார்கள்;

இரு திறன் அல்லது =  இவ்விரண்டும் சிவம் அன்று.
அதாவது உலகமும் சிவம் அன்று; இன்மை எனும் சூன்யமும் சிவம் அன்று.

இரண்டு வகையின் இசைக்கும் =  இப்படி இரண்டு விதமாக
சிவத்தை அறிய ஏதுக்களைக் கூறுவார்கள் என்றபடி.

எதையாவது சுட்டிக்காட்டி ஒருவற்குச்  சிவத்தை அறிவிக்க வேண்டுமாயின் என்ன செய்யலாம்?  வேறுவழியில்லை. இவ்வுலகத்தைக் காட்டவேண்டும். உலகத்தைப் பார்,உலகம் இருக்கிறது; ஆகவே சிவம் உண்டு என்று அறிக எனலாம். ஆனால்
அதன்காரணமாக உலகமே சிவம் ஆகிவிடாது; உலகம் வேறு; சிவம் வேறு.  ஆகவே உலகம் அசத்து என்போம். உலகத்தைச் சுட்டலாம் ஆனால் அதுவே சிவம் அன்று.

உலகத்தைக் காட்டாமல் இன்மையைச் சுட்டலாம். படைத்தனவன்றி வேறொன்றுமற்ற அகண்ட ஆகாய வெளியின் சூன்யத்தைச் சுட்டலாம்;  ஆனால் அதுவும் அசத்து அன்றோ?  சிவத்தை அறிய அது ஒரு காரணமன்றி அதுவே சிவம் ஆகிவிடாது.

உலகமும் சடப்பொருள்; இன்மையும் சடப்பொருள். ஆகவே சிவமன்று, இரண்டும் அசத்து; சிவமே சத்து என்பதாம்.

1சத்து: இதை சத் சித் ஆனந்தம்; சச்சிதானந்தம் என்பர். உலகிற்கும் இன்மைக்கும் விலட்சணமாய் ‍  அதாவது விலக்கணமாய்;  விலக்குண்டு தனியே நிற்பதான  சிவமாகிய‌ ஒருமையாம். அதற்கு நிகர் அதுவே. அதையறியப்  பிற பொருள்கள் உதவலாமே அன்றி அவை அது ஆகிவிடமாட்டா ,.

விலக்கணம்  விலட்சணம் இவற்றின் விளக்கம் இங்கு அறிக:  http://sivamaalaa.blogspot.sg/2016/02/blog-post_26.html

உணராதெனின் :  உணராததெனின் என்று இயைத்துக் கொள்க. செய்யுளில் த மறைந்தது.  இப்படியே அல்லது என்ற சொல்லை அல்லாதது என்று விரித்துக்கொள்க‌. இதுவும் செய்யுளின் வடிவச்சொல் ஆகும்.

--------------------------------------------------------------------------------------------------------------


1 சத்து - that which exists through all times, the imperishable.


அசத்து - of material or illusory nature. opposite of sattu. a matter of transitional form, perishable.


சனி, 27 பிப்ரவரி, 2016

சிங்கப்பூரின் பிடிவாதத் தூய்மை Thejakartapost

சாக்கடை நீர் சாலையில் ஆறுபோல் ஓடுகிறது, மாநகராட்சி வேலைக்காரர்கள் ஒன்றும் செய்யவில்லை!  என்ற செய்தி தொலைக்காட்சி வாயிலாக சிங்கபூரிலும் கேட்கப்படுகிறது.  சென்னை மாநகராட்சி  பற்றிய வேதனைக்குரல்தான் அது.  1

அண்மையில் மாட்சிமை தங்கிய ஜொகூர் சுல்தான்  அவர்கள் ஒன்று கூறினார்.  சிங்கப்பூரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிரம்ப உள்ளது என்றார்/  2 அவற்றுள் தூய்மை எனப்படுவதும் ஒன்று ஆகும்.


சிங்கப்பூர் மிகத் தூய்மையாக வைத்துக்கொள்ளப்படுகிறது.  அதனால் இங்கு வேலை தேடி வந்த பல இந்தியக் குடும்பங்கள் எல்லா நிறுவாக மேன்மையையும் அறிந்துகொண்டு,இங்கேயே தங்கிவிட முடிவுசெய்துவிட்டதாகக் கூறும்போது தேன்வந்து பாயுது காதினிலே என்றன்றோ பாடவேண்டியுள்ளது!


இப்போது  அண்டை நாட்டினர் தம் தாளிகையில் வரைந்த ஒரு கட்டுரையை வாசிக்கலாமே!  இதை அங்கு அப்ஸஸ்ஷன்
என்றனர். இருக்கட்டுமே! அந்தப் பிடிவாத உணர்வு இல்லையென்றால் தூய்மை முயற்சியில் தளர்வு ஏற்பட்டுவிடுமே!

http://www.thejakartapost.com/news/2005/09/24/singapore039s-cleanliness-obsession.htmlSingapore's cleanliness obsession

Singapore's cleanliness 

obsession


...........................................................................................................................................................
personal and environmental hygiene has become an even more serious issue in an already cleanliness-conscious Singapore. The country, long-known for its tough penalties on littering, chewing gum and spitting in public, is now getting tougher on public toilet contractors and food stall owners. This is the last in a series of five articles prepared by The Jakarta Post's Damar Harsanto who took a look at the city-state's most recent sanitation drive following his visit to the country at the invitation of Far East Organization Ltd. - See more at: http://www.thejakartapost.com/news/2005/09/24/singapore039s-cleanliness-obsession.html#sthash.FewQGYas.dpuf
For more click the above link.


Notes

1  Sun TV News -  27/2/2016

2  www.straitstimes.com/.../johor-sultan-says-much-to-learn-from-singapor... Dec 27, 2015

Johor Sultan says much to learn from Singapore, talks about ...

www.straitstimes.com/.../johor-sultan-says-much-to-learn-from-singapor...

Dec 27, 2015 - Sultan Ibrahim Ibni Almarhum Sultan Iskandar, the ruler of Malaysia's state of Johor, has said there is much to learn from Singapore's success.




Ponmudi song: கெடுமதிப் பெற்றோர்

பொன்முடி என்ற  பெயரில் வெளிவந்த ஒரு பழைய திரைப்படத்தைப் பற்றிச் சிறிது தெரிந்துகொள்வோம்.  இது ஒரு காதல் கதை.  இந்தப் படத்தின் இயக்குநர்  எல்லிஸ் டன்கன் என்னும் ஆங்கிலேயர். இப்படத்தில் பல இனிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன, அவற்றுள் ஒன்று இப்போது நம்முன் உள்ளது.  அது இது:

வான்மழை இன்றி வாடிடும் பயிர்போல்
நானுனைப் பிரிந்தே வாடுகிறேன்
சூழ் நிலையாலே கூண்டினில் வாடும்
பைங்கிளி போலிங்கு வாழுகிறேன்

வெளியில் விடாமல் வீட்டினுள் வைத்தே
கெடுமதியால் என்னைப் பூட்டினரே
வளர்காதல் ஜோதி உனையன்றிப் பாரில்
ஒளியுமே எதென் வாழ்விலே


காதல்மொழி பாவாய் கனவோ நம்வாழ்வு
கணமும் இனி  உயிர் நான் தரியேன்;
நாதமில்லாத யாழ்போலும் ஆனேன்
நானே உன் பிரிவால் காதலி.

என் அளி நீ ஒன்றாக இணையாய்
முன்போலவே நாம் சேர்ந்திடுவோமோ என்னுயிரே
என் அளி நீ ஒன்றாக இணையாய்
முன்போலவே நாம் சேர்ந்திடுவோமோ இன்னமுதே


இப்பாடல் நல்ல இலக்கிய நடையிலேதான் அமைந்துள்ளது. எதுகை மோனை எல்லாம் சிறப்புடன் இலங்குகின்றன . இப்பாடல் புனைந்த கவி பாடல்கள் பல இயற்றிய  பட்டறிவும் உடையவர் என்று தெரிகிறது. உவமை நயம் பாடலில் நம்மை ஈடுபடுத்துவதாய் உள்ளது.  வான்மழை இல்லாமல் வாடும் பயிர், கூண்டினில் வாழும் கிளி, நாதமில்லாத யாழ் என வருபவை காண்க. என் அளி என்பது என் அன்பே எனல் பொருட்டு. வளர்காதல் ஜோதி என்று காதலனை வருணிக்கிறாள் காதலி. அவனின்றி வாழ்வில் ஒளி இல்லை என்கிறாள். இருண்ட வாழ்வாகிவிட்டதென்கிறாள்.

 காதலன்  ஒருபடி மேல் சென்று  கணமும் இனி உயிர்வாழ மாட்டேன் என்கிறான்.  இந்த  முடிவு  அவன் திண்ணிய உள்ளத்தைக் காட்டுவது .இறுதியில் எண்ணிய எண்ணியாங்கு எய்தி இன்புறுவான் அவன் .

காதலிக்கப் புறப்பட்ட பெண்ணை அறைக்குள் போட்டுப்  பூட்டிவிட்டால்  பார்ப்போருக்கு உடனே சோக உணர்ச்சி வந்துவிடுவதில்லை.  சிலர் கேட்டு நகைக்கவும் செய்வர்.  பார்த்து,  அப்படித்தான் வேண்டும் அவளுக்கு என்பர். சிலர் . இப்படியெல்லாம் பல கோணங்களில் கருத்துகள் எழாமல், இப்பாடல் படம் பார்ப்பவர்களை ஒருமுகப் படுத்தி  சோகத்தைத் தூண்டி அழவைக்க முற்படுகிறது. இப்போது சோகப் படங்கள் வெளிவந்தாலும்  சோகப் பாடல்கள் வருவதில்லை.  துயரில் பாடல் எழாது என்ற ஆங்கில ஆசிரியர்களின் கருத்தாட்சி மேலோங்கியுள்ளது.  எனினும் காதல் இழந்து வாடும் துயரப்பாடல்கள் ஏனை மொழிகளில் இல்லாமலில்லை. காதலன் காதலி ஒரு திடலில் ஓடிக்கொண்டு இருகுரலிசை  வழங்குவது உண்மை நிலை ஆகிவிடுமா என்ன ? ஒரு வீரன் பதின்மரை நையப் புடைப்பது  உண்மை நிலை ஆகாது.  திரைப்படம் காண்போர் அழாமல்  காக்கப்படுவதாகக் கூறலாமே தவிர துயரப்  பாடல்களை  விலக்குவதால் வேறு நன்மை யாது  என்பதை நீங்கள்  கண்டுபிடியுங்கள்.  இதுபோலும் துயரப் பாடல்களைக் கேட்டால் மக்கள் காதலர்களைப் பிரிக்கலாகாது என்ற உணர்வைப் பெறக்கூடும் என்று சொல்லலாம் .

காதலைப் பிரிக்க நினைத்தது பெற்றோரின் கெடுமதி என்கிறாள் காதலி.

சங்க இலக்கியங்களின் தாக்கம் பாடலில் உள்ளது.