புதன், 30 அக்டோபர், 2024

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

 இயற்கை  காட்டினை மயக்குறக் கொளுத்தி 

எரித்தது வெண்மையில் பொரித்தும் உயிர்களை!

அயற்கை  நின்றவன் அறியான் மாந்தனே

மாந்தன்  பின்னாள் தீயினை அறிந்து

தான்தன் செயற்குப் பயன் விளைத்  தனனே

அகத்தின் இருளை அகற்றிடத்  தீபம்

மிகத்திற னுடனே ஒளிதர  வைத்தான்.

தீப ஒளிஎன மகிழ்ந்தனன்  ஆடி

நாபயன் கூட்ட நாமமும் சார்த்தினன்.

இயற்கைச் சூழலில் எழுந்த பண்டிகை

மயக்கம் தவிர்ப்பீர் பின்வர விணைய

இயைத்தனர் நயந்தரு ஏற்படு நிகழ்வே.

அன்றிருந்  தனவாம் அருஞ்சம  யங்கள்

ஒன்றுபட்  டொளியின் ஒண்மை கூட்டின.

நீள்வர லாற்றின் நேர்வன இவையாம்

கேள்கதை யாவும் நாள்தொறும் மகிழ்த்தும்.

அத்தீ பாவளி  இத்தரு   ணந்தனில்

முத்தம்  இட்டதே  முன்கத வதனை.

வருகவ   ருக தீ  பத்தொளிப் பண்டிகை.

இன்பநல் உணவு இனியப  லகாரம்

அன்புடன் கூடி அனைவரும் உண்போம்

நமது நேயர்கள் யாவரும் மகிழ்க

யாவர்ஆ யினுமே மகிழ்க இனியே

தாவறு தீபா வளிவாழ்த்  திதுபல.

காரமும் உணவும்  கொண்டு

சீர்பல பெறவே சீமையர் மிகவே. 


அரும்பொருள்:

மயக்குற -  உயிர்கட்கு மயக்கம் வருமாறு;

வெண்மையில் - சாம்பலில்

சதைகள் வேகுமாறு;

அயற்கை -  பக்கத்தில்  , அயலில்.

பயன் விளைத்தனன் -  பிறகாலத்தில் தீப்பயன் அறிந்தான்

நா பயன் கூட்ட -  ( பெயரிட்டு)  நாக்கு பயன் உண்டாக்க

சார்த்தினன் -  பெயரிட்டான் ,  நாமம்

பின்வரவிணைய  - பின்னால் வந்த நிகழ்வுகளும் கதைகளும் இணைய;

அகத்தின்  -  வீட்டின்

பிற்காலத்தில் பல கதைகள் நிகழ்வுகள் தீபஒளிப் பண்டிகையில் சென்று இணைந்தன.அவற்றைத் தம்மவை என்று சொல்லிக்கொள்ள  அவற்றுட் கதைகளைக் கொண்டு  இணைத்தல் என்பது இயற்கை (அல்லது உள்ளதுதான்).

கால நீட்சியில் கதைகள் இணைதல் எல்லா நாடுகளிலும் உண்டு.

தாவறு -  குற்றமற்ற,  தவறுகள் இல்லா.

பெறவே என்பதைப் பெறுகவே என்று இணைக்க. இது கவிதையில் தொகுத்தல்.

மிகவே என்றது மகிழ்வு கூடும்படியாக என்றவாறு.

இங்கனம் பொருள் கூட்டாமல் முன் முடிந்த வரியுடன் இணைத்தும் பொருள் கொள்ளலாம்.

யாவரும் மகிழ்க என்ற நம் நேயரல்லாத நொதுமலரும் மகிழ்க என்றவாறு.

சீர்பல - நலம் பல

சீமையர் - நாட்டினர்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

திருத்தம் 03112024

திங்கள், 28 அக்டோபர், 2024

அங்கீகரித்தல்

 இந்தச் சொல்லை வேறு சொற்களால் பொருளொப்புமை செய்தல் வேண்டுமானால் அதற்குச் சில சொற்களைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்:

சுமத்தல், தரித்தல், தாங்குதல், எடுக்குதல், எடுத்துதல், ஏற்றுக்கொள்ளுதல், தூக்குதல், வேய்ந்துகொள்ளுதல், வாங்கிக்கொள்ளுதல், பற்றுதல், பொருந்துதல், தொடக்குதல், தெரிந்துகொள்ளுதல் என இவை எல்லாவற்றையும் அங்கீகரித்தல் என்பதற்கு இணையாக வல்லவர்கள் ஆளக்கூடும். போதுமான பயிற் சியில்லாதவர்க்கு இயலாமை ஏற்படலாம். ஒருபொருட்சொல் அகரவரிசைகளின் மூலம் இன்னும் பலசொற்கள் கிட்டலாம்.

இதற்கு மிக்க நேரான பொருளொருமை  " அதற்கு இணையாக ஈர்கரித்துக்கொள்ளுதல்"  என்ற சொற்றொடராக இருக்கக்கூடும்.

"அண் கு ஈர் கு அரித்துக்கொள்ளுதல்''

இதனை வாக்கியப்படுத்தினால் "அண்மிச் சேர்ந்து  ஈர்ப்பில் இணைந்து அருகில் கொணர்தல்"  என்பது பொருளொற்றுமையைச் சிலர்க்குத் தரக்கூடும். சிலருக்கு புரியாமலும் இருக்கலாம்.

இங்கு கரித்தல் என்ற சொற்பகவு ( அங்கீ - கரித்தல் ) : கரித்தல் என்ற முழுச்சொல் அன்று.  கு அரு இ - த்தல் என்ற பகவுகளின் சேர்க்கையான பகுதிச்சொல்லே ஆகும்.  அரு இ> அரி> அரித்தல் என்பது அருகிற்கொணர்தல் என்று பொருள்படுவதே  ஆகும்.  கு அரி> கரி என்பதை இதுபோன்ற சொற்புனைவுகளில் ஒரு துணைவினையாக ஏற்றுக்கொள்ளலாம். கரி என்பது ஒருவகைச் தமிழ்ச் சொற்புனைவுகளில் உண்டான ஒரு துணைவினை அமைப்பு ஆகும்.

இச்சொல்லில் அங்கு என்பது அண்மிச் சேர்ந்து என்ற பொருளாகும். அங்கு என்ற இடச்சுட்டினைத் தவிர்த்துள்ளோம், இடச்சுட்டுப் போல் தோன்றினும் இது இடச்சுட்டுடன் தொடங்கிய சொல் அன்று.  அண் கு =  அண்மிச் சேர்ந்து என்பதுதான்.

அண்குஈ  என்பது அங்கீ என்றாகும். ஈர் ( ஈர்த்தல்) என்பதில் உள்ள ரகர ஒற்று மறையும்.  அண்கீ  > அங்கீ.

இதில் மீண்டும் கு சேர்ந்துள்ளது.

பின் அரு இ என்பவும் சேர்ந்துள்ளன.

+கு+ அரு+ இ >  கரி என்றாகும்.

இப்போது அங்கீகரி என்ற முழுவுருவும் கிடைத்துவிட்டது,

இப்போது எல்லாத் துண்டுகளையும் இணைக்க:

அண் கு ஈ( ர் ) கு அரு இ > அங்கீகரி என்றாகும்.

இப்போது இச்சொல்லை எவ்வாறு அமைத்தனர் என்பதை அறிந்து கொண்டோம்.

எது சரி என்பதைவிட, எது சொல்லமைப்பாளனின் மூளையில் வேலை செய்த பகவுகள் என்பதே முதன்மையாகும். இவை நீங்கள் அறிந்துகொண்டவற்றுடன் வேறுபடலாம்,

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

 

ஞாயிறு, 27 அக்டோபர், 2024

காவிடமும் திறவிடமும் (பஞ்ச திராவிடம்)

.திறவிடம் என்றால் திறப்பான அல்லது கடலைக் காணக்கூடிய இடம். இச்சொல்லுக்கு வேறு பொருள் இருப்பின் அவற்றை நாம் இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை. பிராமணர்கள் கடலைக் கடத்தலாகாது என்பது பண்டை இருந்த ஒரு விதி ஆகும். இந்தப் பொருள் கட + அல் > கடல் என்பதிலே உள்ளது. கடல் என்ற சொல் அமைந்த காலத்தில் இந்த விதி பிராமணர்களுக்கு இருந்து, பிறருக்கும் ஒரு கடைப்பிடியாக இருந்ததா என்பதை இப்போது கூறுதற்கில்லை. கடலிலே தம் வாழ்க்கையை முழுதும் செலவிட்ட மீனவர்கள் போன்றோர் பண்டைக் கால முதலே தமிழருள் இருந்தனராதலால்,  இவ்விதி எல்லாரும் பற்றி ஒழுகியது என்று கூறவியலாது. இதனை நாம் இங்கு மேற்கொண்டு ஆராயவில்லை.

திறவிடம் என்ற   சொல் பல்வேறு வழிகளில் பொருள் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. முந்திய காலத்தில்  இது  பயன் பட்ட  ஏடுகளைக்         காட்டினாலும் இது பயன்பாட்டில் இருந்த ஏடுகள்  இவை என்பதைக் காட்டுமே அன்றிச் சொற் பொருளை விளக்க மாட்டா.

திரை என்பது கடலைக் குறிக்கலாம் ஆதலால்  இச்சொல்லும்  திரவிடம் என்ற சொல்லமைய அடியாய் இருந்திருக்கக் கூடும். ஐகாரம் இறுதியில் வந்து அகரமாகித்   திர என, இடம் என்ற சொல்லுடன் கூடி, திர + இடம் > திரவிடம் என்ற சொல் அமைந்திருத்தலும் கூடும்.

தமிழும் இனமொழிகளும் இந்தியாவெங்கும் வழக்கில் இருந்தன என்பதும் வரலாறான காரணத்தால் ,  தமிழ்ச்சொல்லடியாய் ஒரு சொல் சமஸ்கிருதத்துக்கு அமைதலும் இயல்பானதே. சமஸ்கிருதம் வெளிநாட்டு மொழி என்ற கருத்தை எல்லா வரலாற்றாசிரியர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. ரோமிலா தாப்பார் நூல்களை எடுத்துக்காட்டுவோம்.

சமஸ்கிருதம் பாணர் மொழி என்பது என் கருத்தாகும்.  இது எவ்வாறாயினும் சமஸ்கிருதத்தில் தமிழ் அடிச்சொற்கள் பல உள்ளன. வேதங்களிலும் எண்ணூறு முதல் ஆயிரம் தமிழ்ச்சொற்கள் உள்ளன என்பது ஆய்வாளர்களுக்கு ஒப்ப முடிந்த கூற்றாகும்.

ஆகவே திராவிடம்  என்ற சொல்லுக்கு அடி எம்மொழியிலிருந்தும் காணப்படுதலில் ஒரு வியப்பு இல்லை. 

முன்னாளில் எங்கும் பாணர்களே பரவி வாழ்ந்தனர்.  அவர்கள் பாதுகாப்பாக வாழ்ந்த இட.ம் பண்சார் காவிடம் [ pancha gauda ] என்று உயர்த்திக் கூறப்பட்டது.  இது "பஞ்ச கவுடா" ஆனது. பாணர் என்போர் பாடியவர்கள்.

பாதுகாப்பில்லாத  தென் திசை    பண்சார்  திறாவிட(ம் ) [ puncha dravida]  ஆயிற்று.

(முற்கால) மொழி வரலாற்றுக் காலத்தில்  தமிழில் ரகர றகர வேறுபாடின்றியும் பல சொற்கள் வழங்கின  ஆகவே  திற திர என்பவை வேறுபடக் கருதற்குரியவை அல்ல .  சமஸ்கிருதத்தில் ற ர வேறுபாடு இல்லை.


பஞ்ச கவுடா, பஞ்ச திராவிட

பஞ்ச என்பது பின்னாளில் ஐந்து என்ற பொருளுடையதாயிற்று. 

இவை பிராமணர்களுக்குள் உண்டான ஒரு வகைப் பிரிவினைப் பெயர்கள்.

பிரிவினை அல்லது "புத்தகம்"(புது அகம்) புகுதல்: இதனால் உண்டானதே திறவிடம் > திராவிடம் என்பது.  இவர்கள்  திராவிடப் பிராமணர்  ஆயினர்.

பிராமணர் என்போர் பாடகர்கள்.  வேதங்கள் பாடல்களே.  நாகரிகம்    பாண நாகரிகமே.

பிராமணரைக் குறித்த "திராவிட" என்ற சொல்  (அடைமொழி ) மற்றவர்களை எவ்வாறு தழுவிற்று என்பது ஒரு வியப்பு என்றே சொல்லவேண்டும்.

அக்ரஹாரங்கள் தென்திசையில் இவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தன.

திராவிடம் என்பது  மற்ற  மக்களை எப்படிச் சென்று தழுவிற்று என்பது வியப்புக் குரியதே ஆகும்.

ஒருசொல் சம்ஸ்கிருத மொழிக்காகப் படைக்கப்பட்ட தானால் அது எந்த அடிச்சொல்லால் அமைந்திருந்தாலும் அது சமஸ்கிருதம் என்றே சொல்லப்படும். அதாவது வழக்கால் அல்லது பயன்பாட்டினால் அது அம்மொழிக்குரியது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின். 

சில திருத்தங்கள்: 30102024  0253