திங்கள், 21 அக்டோபர், 2024

தானை என்ற சொல்லமைவு

 இன்று தானை என்ற சொல்லின் தோற்றம் அறிவோம்.

ஒரு சொல்லை அறிவதற்குத் தேவையில்லாத குப்பைகளை எல்லாம் கிண்டி எடுக்க வேண்டியதில்லை,   சொல்லின் பகுதி, இடைநிலை, விகுதி என்ற மூன்றையும் ஆராய்ந்தால் போதுமானது.  இவற்றை  அறிந்த பின் இந்தச் சொல் பயன்பாடு கண்ட இலக்கியங்களை எடுத்து ஆய்வு செய்யலாம்.  இதைச் செய்தால் சொல் எப்படி உண்டானது என்பதைவிட அதற்கு என்ன என்ன பொருள்களில் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம்.  சொல்லின் தோற்றத்துடன் ஒப்பிட்டால் பொருள் வேறுபட்டிருக்கிறதா என்று கண்டுபிடித்துவிடலாம்,.

அகராதிகளை இதை வாசிப்போர் எடுத்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

தானை என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் இதன் பொருள் நீங்கள் அறிந்ததுதான்,  படை என்பதே பொருள். இதே பொருளில் இது கழிபல ஊழிகளாய்த் தமிழில் வழங்கிவந்துள்ளது,  ஊழி என்றால் உள்> ஊழ் > ஊழி, அதாவது கணக்கில் உள்ளடங்கிய ஆண்டுகள் என்று பொருள். இதன் அடிச்சொல்லை அடிச்சொல் அகரவரிசையில் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.

சேனைக்கும் தானைக்கும் பொருள் எவ்வாறு வேறுபடுகிறது?  அரசன் ஒருவன் போர் தொடங்கு முன்பே பலரையும் சேர்த்துப் பயிற்சி கொடுத்துத் தயார்ப்படுத்தி அவர்களுக்கு வில்லும் வாளும் கொடுத்துச் சீருடையும் கொடுத்துப் போரிட வைக்கிறான் என்றால்,  அது சேர்த்துக்கொள்ளப்பட்ட படை என்ற பொருளில் " சேனை" எனப்பட்டது..

சேர்தல் வினைச்சொல்.

சேர் + இன் + ஐ >  சே + ன் +   ஐ > சேனை ஆகும்.

சேர் என்பதில் ர் ஒழிந்ததற்குக் கடைக்குறை என்று இலக்கணத்தில் பெயர்.

இன் என்ற இடைநிலையில் இ ஒழிந்ததற்கு முதற்குறை என்று இலக்கணத்தில் பெயர்.

இவற்றை அடிப்படை இலக்கண நூலில் கண்டுகொள்க. இவை இங்கு சொல்லப்பட மாட்டா. இவை எல்லாம் ஏபிசிடி போன்றவை. இவற்றுக்கெல்லாம் பாடல்கள் சொல்லவேண்டியதில்லை.

இவைபோலும் சொற்குறைகள் சொல்லாக்கத்திலோ, கவிதையிலோ வேறேங்கும் பயன்பாட்டிலோ வரலாம்.

குறைச்சொல்லுக்குத் தொகை என்றும் பெயருண்டு,  சொல்லைத் தொகுத்தல்.

சேமித்தல் என்ற சொல்லில் சேர்மித்தல் என்று நீளாமல் சேமித்தல் என்றே குறுக்கி அமைக்கப்பட்டது.

சேட்டன் என்ற சொல்லில் குடும்பத்தில் முன் பிறந்து சேர்ந்தவன் என்ற பொருளில் சே(ர்)+( இ)ட்ட{வ}ன்> அடைப்புக் குறிகளுக்குள் உள்ள எழுத்துக்கள் மறைந்து,  சேட்டன் என்றானது. சேரிட்டன் என்று அமைத்து ரி என்பதை நீக்கிவிட்டாலும் வகரம் ஒழிய, - சேட்டன் என்றாகி அண்ணனையே குறிக்கும். இட்டவன் என்பதில் வகரம் குறுக்கக் காரணியாவது,  அன் என்பதும் அவன் என்பதும் ஒன்றுதான்.  அ + அன் என்பதுதான் அவன்.  வ என்பது வகர உடம்படு மெய். அது சொல்லின் ஓர்  உட்பகுதி அல்லாமல் புணர்ச்சியில் உண்டானது. இனி, இடு என்பதில் இகரம் களைந்து, டு என்பதை இணைத்தாலும்,  சே+ டு :  சேடு> சேடி  (சேடு+  இ)  என்று பெண்பாலாகும்.  சேடு+ அத்து+ இ > சேட்டத்தி என்று ஆகும்  இடைக்குறைந்தும்  சேத்தி> சேச்சி என்று தகரம் சகரமாகத் திரிந்து சொல் அமைந்துவிடும்,  சேத்தி எனபது மொழியில் மறைந்துவிட்ட சொல்.

தானை என்ற சொல்., சூழப்பட்ட அரசன் எதிரிக்குத் திருப்பித் தரும் அடியில் சேவை தரும் படை என்று பொருள். திருப்பித்தருதலால் தானை என்று வந்தது, தருவது என்ற சொல்லே தா> தான் இன் அம் >  தானம் என்றும் ஆனது,  தா என்ற வீட்டுமொழிச் சொல்லை ஐரோப்பிய மொழிகளிலும் திருடிக்கொண்டனர்.  இதைத் தான் மீண்டெழுந்த தார் (தரும்) நிலை என்று சொன்னார் தொல்காப்பியனார்.  இது தரு என்றும் தா என்றும் வரும் சொல்லிலிருந்து வந்தது என்பதற்கு உரிய சொற்களின் வழியாக மூலத்தைக் காட்டியுள்ளார் தொலகாப்பிய முனிவர்.

தமிழிலே பலவாறு தா என்ற சொல் திரியும்,  தந்து ( தன் து ), தருவான் ( தரு), தாரான் ( தார் ),  தாடா ( தா அடா) என்பவற்றை நோக்கி அறிக. தந்தை என்ற சொல்லும் பிள்ளைகளைத் தருவோன் என்ற பொருள் உடையதுதான்.   தந்து ஐ என்றால் தருகின்ற ஐயன். இதுதான் தந்தை என்பது,

மொய்த்தவழி யொருவன் தான் மீண்டெறிந்த தார்நிலை (தொல். பொ. 72) என்றார் தொல்காப்பியர்.  பூசைக்குத் தானையும் சேனையும் தொடர்பற்றவை.  ஆகவே தானை என்பது பூசைமொழிச் சொல் அன்று. போர்பற்றிய கருத்துகள் பூசைமொழியில் பிற்காலத்து நுழைவுகள் ஆகும். பூசைகட்குத் தானை தேவையில்லை.  அரசர்களும் போர்மறவர்களும் பூசைமொழிக்குரியவர்கள் அல்லர்.  பூசைக்குரியவன் இறைவன் மட்டுமே.

சேட்டன் என்பது சேஷ்டன், ஜேஷ்டன்   என்றும் பூசப்படும். இவை வேய்வுகள் ஆகும்.

இவற்றைத் தொல்காப்பியர் மட்டுமே கூறியுள்ளார்.  வேறு எவனும் சொல்லவில்லை.  ஆதாலால் வேறு மேற்கோள்கள் இல்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

எகரத்தில் தொடங்கி அகரத்தில் திரியுமா?

 இன்று இதனைத் தெரிந்துகொள்வோம். ஆனால் யாம் தலைப்புக்குள் அடங்கி எழுதப்போவதில்லை.

தமிழ்ப் பையன்கள்  ஒரு நடைப்பயிற்சிக்கு செல்லவேண்டி யிருந்தது.  ஆனால் அவர்களில் ஒருவன் இன்னும் உறங்கிக்கொண்டிருந்தான்.  ஒருவர் சொன்னர்: அந்தப் பையனை "ஒழுப்பி " விடு என்று!  இதன் காரணமாக மிகுந்த சிரிப்பொலி எழுந்துவிட்டது.  எகரம் ஒகரமாகத் திரியுமா என்பது திரிபுகளைக் கற்போர் அறிந்துகொள்ளவேண்டியதாகும். அந்தப் பையனைக் கேட்டபோது,  அவனுடைய சிற்றூரில் அப்படித்தான் சொல்வார்களாம்.

இவ்வாறு நாமறியாத திரிபுகளும் உலகில் தமிழிலும் ஏனை மொழிகளிலும் இருக்கும்.  எந்தக் கேள்விக்கும் யானே அறிந்தவன் என்று பதிலிறுத்துவிட இயலாது,

சீனக் கிளைமொழிகளில் எண்ணிறந்த திரிபுகள் உள்ளன.  இந்தோனேசியக் கிளைமொழிகளிலும் பற்பல. இந்தோ திரிபுகளின் அட்டவணை நூலென்றை நூலகத்தில் கண்டு சிலமணி நேரம் அதில் யாம் ஆழ்ந்துவிட்டோம்.

நாவு எப்படியும் திரும்பும்.  திரும்பாதது பேச்சில் பல்மட்டும் தானோ?

பகவனின் கீதைதான்  பகவத் கீதை. இங்கு பகவன் என்பது பகவத் என்று வந்து சிறப்பாகவே உள்ளது, 

பகவனதுகீதை.

இதில் அன் விகுதி குன்றி,

பகவது கீதை > ( இதில் உகரம் குன்றி )  > பகவத் கீதை,

இதற்குத் தமிழின் மூலம் சந்தியைச் சொல்லாமல் சமஸ்கிருதம் மூலம் சொல்லலாம்.

பகவத்  என்பது வேறுமொழி என்று சொல்கையில்,  தமிழ் இலக்கணத்துக்கு அங்கு வேலை இல்லை.

இன்னொரு சொற்றொடர்:  அதுலன் முதலி.

அதுலனது முதலி,  அதுலது முதலி,  அதுலத் முதலி.  இங்கு அன் கெட்டு, உகரமும் கெட்டது.

அதுலன் என்றால் இறைவன்.

இனி எகரம் அகரமாய்த் திரியுமா என்று பார்ப்போம்.

கெல்லுதல் என்ற வினைச்சொல் கல்லுதல் என்று திரியும். கெ>க = எ> அ.

இனி இவற்றைக் கவனிக்கவும்:

கத்து >  கது > காது,   ( ஒலி கேட்கும் உறுப்பு)

கத்து>  கது > கது+ ஐ > கதை.  ( ஒரு புனைசொலவு)

கது>  கதம்.  ( சங்கதம்:  இணைப்பாகச் சொல்லப்படுவது,  சமஸ்கிருதம்).

கது > கதி  ( சங்கதி)  சேர்த்துச் சொல்வது.

கது > கதறு   ( ஒலியெழுப்பல்).

கத்து > கது > கதை > காதை  ( கதைப்பகுதி)

காது> காதிப்.   (அல்காதிப்  -   அரபுச் சொல்லறிஞர் )

காது> கடைக்குறைந்து: விகுதி பெற்று   காப்பு>  காப்பியம்

சொல்லப்படும் நிகழ்வு அல்லது ஒலித்தொடர்.

எனப் பல திரிபுகள் காண்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்




சனி, 19 அக்டோபர், 2024

கேவலம் சொல்

 கேவலம் எனும் சொல்லை அறிவோம்.  இதற்குக் கேடு, கேதாரம் என்பனவும் ஒப்பீடு செய்வோம்.

ஒவ்வொரு மனிதனும் பிற மனிதருடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டவனாய் ஒரு வலிமை பொருந்திய நிலையில்தான் இருக்க (வாழ) விரும்புகிறான், ஏதேனும் தாழ்வான செயல்களில் ஈடுபட்டு அதனால் பேர்கெட்டுப் போனவனும் அது பிறருக்குத் தெரியாதவாறு தன்னை மறைத்துக்கொள்கிறான். தன்னைத் தாழ்வாக நினைப்பவன் இல்லாமற் போய்விட்டாலும் அவனுக்கு அதனால் மகிழ்ச்சியே. தனது முன் கெடுவினைகளை அறியாதவனுடன் பழகும்போது அவனுக்கு மகிழ்ச்சிதான். இதைத்தான் வலிமை பொருந்திய நிலை என்று நாம் கூறுகிறோம். இந்த நிலைக்கு ஒரு கெடுதல் வந்தால் இதுதான்  வலம் கெட்ட நிலை ஆகும்.  இது "கெடு வலம்" மேவிய நிலை ஆகும்,   கெடுவலம் என்பது பின்னர் கேவலம்  என்று திரிந்து ஒருசொன்னீர்மை பெற்றது.  டுகரம்  (டு) வல்லொலி ஆகும்.. சொல்லை மென்மைப்படுத்த  ( மெலித்தல் மேவ)  டுகரம் வீழ்கிறது. கெடுவலம் >  கேவலம்.  இதுபோல் வல்லொலி கெட்ட இன்னொரு சொல்: கேது,  அதாவது 

வானத்தில் பார்த்தால் ஏழு கிரகங்கள் தாம் தெரிகின்றன.  சோதிடத்தைச் சரியாகச் சொல்வதற்கு ஒன்பது கிரகங்கள் வேண்டும்.  இரண்டு தெரியவில்லை,  இவற்றுக்குக் காரணப்பெயர்களைக் கொடுத்தார்கள்.  ஒன்று இராகு.  இன்னொன்று கேது,  பெரும்பாலும்  ( எப்போதும் நிகழ்வதில்லை)  கெடுதல் செய்வது கேது.  கேது கெட்டிருந்தால் மங்களம் இல்லை. திருமணம் தொடர்பானவை நிகழவில்லை என்றால் கேது கெட்டிருக்கிறது என்று சொல்வர். மணவாழ்வு கெட்டிருந்தால் கெட்டிருப்பது கேது,  இதற்குப் பெயரே கேது -  கெடுவது  என்பதிலிருந்து வந்த பெயர். கெடுப்பது எனினுமது,  கெடு என்பது கே என்றே திரிந்தது.  கேடாவது என்பதில் டாவ என்ற எழுத்துகள் மறைந்தன என்றும் கூறுதல் கூடும். இப்போது கேவலம் என்ற சொல்லின் திரிபுடன் ஒப்பீடு செய்து அறிந்துகொள்ளவும்,

கேது மங்களம் தருவோன் எனப்படுவதால்,  கே என்பது கேடிலது என்பதன் சுருக்கமாகவும் கொள்ளலாம்,  சிலசொற்கள் இருநிலையும் குறிக்கும்,  இதற்குக் காரணம் ஓரெழுத்தே முதலில் வந்தமை. இன்னொரு சொல்: கேதாரம் - கேடின்மை தருவது அல்லது கெடுதலை நீக்குவது.  கே - கேடின்மை; தாரம் - தரும் தொழுதலம். இதுபோல் வருவதால் இச்சொற்கள் முற்றிலும் இடுகுறிகளாகி விடுகின்றன.  அதனால் மொழிக்கு ஒரு தொல்லையும் இல்லை,  வேறு மொழிகளில் வெறும் ஒலிக்குறிப்புகள் மட்டுமே சொற்களாகிவிட்டன. தமிழில் இயற்சொற்கள் அல்லாதன விலக்குறுதல் வேண்டுமென்பது  புலவர் வாதம்.  இவ்வாதம் காலத்திற்கு ஏற்றதன்று.  ஒரு சொல் தமிழா அன்றா என்பதற்குக் காரணம் அறியாமை ஒரு பொருட்டன்று. ஏனெனில்  " மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா" என்றார் தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில். எல்லாச் சொற்களும் காரணம் அறியப்பட்டன என்பர் தமிழ்ப்புலவர்.   பலசொற்கள் ஆய்வின்றி அறியப்படாமையின்!

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்