செவ்வாய், 14 செப்டம்பர், 2021

வினாயகற்குரிய தினத்தில் பிறந்தநாளும் வந்தது.

 


பிறந்தநாள் வாழ்த்து விநாயகர்க்கும் மற்றுமே

சிறந்தவா  சிரியர்  குமரன்பிள் ளைக்குமே

திருவார்க்குக் கிடைத்தது  மோதகம் வடைகளே

திறலார்க்குச் சர்க்கரைத்  திண்சீமை அப்பமே.

திருவார்  அருள்தரப் பொருள்தந்த பிள்ளையே.

பிள்ளையார் காக்கப் பிள்ளையவர் வாழ்கவே.


[ கோவிட் காரணமாக பிறந்த நாள் விழாவிற்கு ஒருவரே அழைக்கப்பட்டு,  அவரும் முதியவர் ஆனதால்,  பச்சைவெள்ளம்  பருகினார், சீனி அதிகம் அதனால் திண்ணப்பத்தைக் குமரன் பிள்ளைக்கே ஊட்டினார் .  கோவிட்காலம்  ஆனாலுமே சிறப்பாய்   முடிந்தது, ]

குறள்வெண்பா:

விழாவை ஒடுக்கியே கொண்டாடின் வாழ்வோம்

பலாப்போல் சுளைப்பயன் பெற்று.


பொருள் :  விநாயகற்கும் -- ( இது விநாயகனுக்கும் என்பதை

சுருக்கும் முறை.   0ன்+ கு  = ற்கு. ).  விநாயகர்க்கும் எனின் அது

பலர்பால் வடிவம் .

குமரன் பிள்ளை -  பிறந்த நாள் கொண்டாடியவர்.

திருவார் - திருவுடையவர்,  விநாயகர்.

திறலார் -  திறன்கள்  உடைய  பிறந்தநாள் கொண்டாடும் திரு குமரன்.

சர்க்கரைத் திண்சீமை அப்பம்:   "கேக்". இது படத்தில் உள்ளது.

திருவார் அருள்தரப் பொருள்தந்த பிள்ளையே -   இது  பூசை செய்யப் பொருள் தந்ததைத் குறிக்கிறது.  தந்தவர் பிறந்த நாள் கொண்டாடியவர்.

பச்சைவெள்ளம் -  வெறும் பச்சைத்தண்ணீர்.  தண்ணீரைப் பச்சைவெள்ளம் என்று வேடிக்கையாகக் குறிக்கின்றார் கவி. வழக்கில் வெள்ளம் என்பது நீர்ப்பெருக்கு.  ஆனால் தமிழினமொழி வழக்கு வேறுபடுகிறது.

குறள்வெண்பாவின் பொருள்:

பலாப்பழம் அப்பெயர் பெற்றது பல சுளைகள் உடைமையால், 

பல் ( பல) + ஆ = பலா.   ஆவென்பது இங்கு விகுதி. இன்னொரு காட்டு: 

தல்+ ஐ = தலை

தல் + அம் = தலம்

தல் + ஆ =  தலா.  

உல் + ஆ >  உலா.  உல் என்பது சுற்றுதல் குறிக்கும் சுட்டடிச் சொல்.

பலாப்போல் சுளைப்பயன் என்பது:  பலாப்பழம் சுளைகள் பாதுகாப்பாக  உள்ளே கட்டமைக்கப் பட்டுள்ளன.  ஒன்றுக்கு ஒன்று தடுப்புகள் உள்ளன.  வெளித்தோலும் பாதுகாப்புத் தருகிறது.    எனவே, இதன் அமைப்பு,  பழங்களுக்குப் பாதுகாப்பாகும். அதுவே பயன். கோவிட் காலத்தில் பலர் இருக்க, பலாவுக்குப் போல் பாதுகாப்பு வேண்டும்.


அறிக மகிழ்க

மீள்பார்வை செய்யப்படும்.

 







திங்கள், 13 செப்டம்பர், 2021

நாயைச் சிறைத்த வேலையற்றவர்.

அறுசீர் விருத்தம் 

வேலை இல்லை என்றால்

விழைந்தன செய்தல் கூடும்;

காலை மாலை நன்றே

செயவோ தடையே தையா!

சோலை அகத்துச் சென்று

நாயைச் சிறைத்தல் நன்றோ?

வாலாம்  சிறுவன் போல

வந்ததைச் செய்தல் வேண்டா.



உரை:  விழைந்தன செய்தல் -- தனக்கு விரும்பியதைச்  (எதையும்)  செய்வது  ,  கூடும் - இயலுவதே;    காலை மாலை நன்றே செய்யவோ தடை ஏதையா --  காலையாயினும் மாலையாயினும்  விரும்பிய நல்லதையே செய்வதற்குத்  தடைகள் இல்லையாம்; ஐயா - விளி;  சோலை அகத்துச் சென்று நாயைச் சிறைத்தல் நன்றோ -  மரம் செடி கொடிகள் வளர்ந்து உலவ ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்று நாய்க்கு முடிவெட்டுதல் நன்றோ?  நல்லதன்று;  வாலாம் -- அடங்காத , சிறுவன் போல,  வந்ததை -  நினைப்பில் தோன்றுவதையெல்லாம்,  செய்தல் வேண்டா(ம்),  என்றவாறு.


Man shaves dog at S’pore walkway, gets called out for ‘irresponsible behaviour’

Pl click for news::-

https://theindependent.sg/man-shaves-dog-at-spore-walkway-gets-called-out-for-irresponsible-behaviour/

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

மக்கள் தொண்டு, கிருமித் தொல்லை

 இங்கு யாம் தருவன  இரண்டு  சிறு கவித் துளிகள்.  வாசித்து மகிழ்வீர்.  வாசித்தல் என்ற சொல்லே மிக்க அழகான சொல்.  இது மலையாள மொழியில் "வாயித்தல்" என்றே வழங்குகிறது.  வாய் என்பது சினைப்பெயர்  அல்லது ஓர் உறுப்பின் பெயர்.  இ~த்தல் என்னும் வினையாக்கத்தை இணைக்க வாயித்தல் ஆகிறது.  யகர சகரப் போலியில் வாயித்தல் > வாசித்தல் ஆகிவிடுகிறது. நீங்கள் வாயித்து மகிழுங்கள்,  இல்லாவிட்டால் வாசித்து மகிழுங்கள்.  ஆனால் வாசித்தல் என்பதற்கு மணம் வீசுதல் என்ற பொருளும் இருக்கிறது . அது வாய் என்னும் நீட்சிக் கருத்தினடிப்படையில் எழுகிறது.  இதன் ஆக்கத்தினை "கால்வாய்",  "வாய்க்கால்" என்னும் சொற்களில் கண்டு மகிழலாம்.

இப்போது கவிதைகள்:


மக்கள் தொண்டு


மக்களுக்குத் தொண்டுசெயும்

தக்கஉன்ன  தத்தொழிலே

எக்கணமும் வருமிடரே

பக்கமிலை ஓர்துணையே

நக்கசார  ணர்கள்வந்து

நலமிலவை தாம்செயினும்

ஒக்குமொரு  நிலையறிந்த

உயர்ந்தனவே  செயுமிவரே.


உன்னதத்தொழிலே  -  சிறப்புக்குரிய வேலையாகும்.

எக்கணமும்  -  எந்த நேரத்திலும்

இடரே  --- துன்பமே

பக்கமிலை  ---   அருகில் இல்லை

துணையே  -  ஆதரவு செய்வோரே,

நக்கசாரணர்  --  நகைக்கத் தக்க நிலையைச் சார்ந்தவர்கள்

நலமிலவை  -  நல்லன அல்லாதவற்றை;

ஒக்குமொரு - எல்லோருக்கும் ஒப்பமுடிந்த,

நிலை -   உள்ளுறைவு, சுற்றுச்சார்பு முதலியவை

அறிந்த -  தெரிந்துகொண்டு;

உயர்ந்தன - மேலானவற்றை

செயும் - செய்யும்.

( இது மருத்துவத்துறையில் மக்களுக்குத் தொண்டு செய்யும் நல்ல உள்ளங்கள்

அண்மையில் அடைந்த தாக்குதல் முதலிய துன்பங்களைக் கருத்தில் கொண்டு

பாடியது )



கிருமிகள் தொல்லை


காற்றினிலே கீதங்கள் வருதல் உளதே

காற்றினிலே நோய்நுண்மி வருதல் நிலவின்

ஏற்றனரோ,    ஏமாந்து விழலின் மக்கள்

தோற்றனரோ,  யாமாழ்ந்தோம் உழந்ததே துன்பம்.


உளதே -   இருக்கிறதே,

நிலவின்  -  நடைபெறுமானால்

ஏற்றனரோ -  அவ்வாறு வருமென்று ஒத்துக்கொண்டனரோ;

ஏமாந்து -  அவ்வாறு வராது என்று எண்ணி,

விழலின் -  வாழ்க்கையை முறையற்று நடாத்தி,

மக்கள் தோற்றனரோ  -  மக்கள் நோயினை வெற்றிகொள்ளவில்லையோ,

யாமாழ்ந்தோம் உழந்ததே துன்பம். --  நாம் துன்பம் அனுபவித்து

உள்ளிறங்கிவிட்டோம்.


கவிதையில் ஓர்துன்பம் என்று வரும். உரைநடையில் ஒரு துன்பம்

என்றே வரும்.  இவ்விலக்கணம் மாறி எங்காவது இவ்வலைப்பூவில்

அமைந்திருந்தால் அதனைத் திருத்தி வாசித்துக்கொள்ளுங்கள்.  

திருவுள்ளம் இருக்குமாயின் பின்னூட்டமிட்டு உதவி செய்யுங்கள்.



மகிழ்க.

மறுபார்வை செய்வோம்.  இப்போது தட்டச்சுப் பிழைகள்

உளவாகத் தெரியவில்லை.