திங்கள், 22 அக்டோபர், 2018

தீனர் என்ற சொல். (திரிசொல்)

தின்,   தீன் என்ற சொற்களை இன்று அறிந்துகொள்வோம்.

மக்கள் சாப்பிடுவது, " உண்பது"  என்று  சொல்லப் படும்.  பெரும்பாலும் விலங்குகளின் உட்கொள்ளுதலே தின்பது என்ற சொல்லால் குறிக்கப்பெறும்.என்றாலும்  சில வேளைகளில் மனிதனையும் "தின்னு" என்று ஏவுதல் உண்டு  .

ஏழைகளின் உணவு இரங்கத் தக்க தரத்தினதாய் உலகெங்கும் இருப்பதனால் அதற்கு ஏழ்மை என்ற பொருள் ஏற்பட்டது.

தின் + அம் =  தீனம்.  எளிமை, வறுமை இன்ன பிற.

இது முதனிலை திரிந்து அம் என்னும் விகுதி பெற்ற பெயர்ச்சொல் ஆகும்.  இது தின்னுதல் (  விலங்குபோல் உட்கொள்ளுதல் )  என்னும் கருத்தினின்று  அமைந்ததே ஆம். இதைப் போல முதனிலை நீண்டு அமைந்த இன்னொரு சொல்:

படு >  பாடு. (  இது விகுதி பெறவில்லை.)

விகுதி பெற்றது:

நடி  +  அகம் =  நாடகம்.  ( இங்கு ந  என்பது  நா என்று நீண்டது.   அகம் என்ற
விகுதி பெற்றது.   நடி என்பதன் இறுதி    இகரம் கெட்டது , அல்லது வீழ்ந்தது ).

இவை போல்வன பழைய இடுகைகளில் ஆங்காங்கு காட்டப்பெற்றுள்ளன.

இவற்றையும் அறிக:

தின் + இ =  தீனி.   (முதனிலைத் திரிபு;  இகரம் விகுதி ).
தின் + இ  =  தின்னி.   ( ஒருனகர ஒற்று தோன்றல்;  இகரம் விகுதி. முதனிலை  இயல்பு ஆனது ).   "இவன் ஒரு பலகாரம் தின்னி." (  வாக்கியம் )
தின் + அர் =  தீனர்.  ( முதனிலை நீட்சித் திரிபு;  அர் விகுதி).  ஏழைகள்.
தின் > தீன்:   உட்கொள்பொருள்.

தின் > தீனன்:  விலங்குட்கொள்வது போன்றவை  உட்கொள்ளும் ஏழை,
பின் பொதுப்பொருள்:  ஏழை, வறியோன்.

தீனி

மக்கள் என்பது உயர்திணையாகவும் மாக்கள் அஃறிணையாகவும் கொள்ளப்படும்.  மாக்களாவர்,  மக்கள் போல் உருவில் மக்கள் அல்லாதவர்.   தீனி என்பது மாக்கள் உட்கொள்வதும் விலங்குகள் உட்கொள்வதும் ஆகிய தாழ்ந்த பொருள்.  இம்மாக்கள் பலர் ஏழைகளும் ஆவர். இவர்களே தீனரும் ஆவார்கள்.
.

இறைவன்முன் தன்னைத்  " தீனன்" என்று பற்றன் சொல்லிக்கொள்வது  ஓர்
அடக்கமாகும்

அடிக்குறிப்புகள்:

1.   தீனரைத் தியக்கறுத்த திருவுடையார்:  தேவாரம், 477.
2.    தீனன் : மிகுதியாய் உண்போன் என்பதுமாம்.
3.   தீனம்:  நோய்.( என்பதுமாகும்)
4     தீனவத்சல, எளியோர்க்கிரங்குதல்;  தீனநுகம்பன.
5.   தின்பண்டம் - தீன்பண்டம் என்பதும் ஆகும்.
6     உணவு என்ற அடிப்படையில் எழுந்து பின்னர் பொருள்மாற்றமடைந்து  ஏழை என்று பொருள்கொண்டதனால் இது திரிசொல் ஆகிறது.  (  இயற்சொல் அன்று ).

7. "ஞானகுருபரன் தீனர்க்கருள் குகன்"   ( இசைப்பாடல்)

8 தீன தயா பரனே தேவனே (பாட்டு ) :  விலங்குணவுபோலும் உட்கொள்ளும் ஏழையர்க்கு அருள் தந்து  காப்பாற்றும் தீபோலும் தூயவனே - இறைவனே என்று விரிந்த பொருளைச் சொல்லாய்வின் மூலமே கூறலாம்.  பிறவழிகளிட் பொருள் குறுக்கம் பெறும்.

தீ > தே > தேவன்:   தீ என்ற சொல்லினின்று தே என்று திரிபு ஏற்பட்டதால் தேவன் என்பதற்கு இவ்வாறு விரித்துப் பொருள் கூற இயல்கின்றது. தே எனற்பாலதற்கு தீ போலும் தூயவன் என்றே பிறரும் கோடி காட்டுவர்.





   

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

ஆறுமோ ஆவல் ஆறுமுகனைக் காணாமல் (பாட்டு)

இது ஓர் அழகிய கர்நாடக சங்கீதப் பாடல்:

பாடலை முழுமையாகத் தருகிறேன். இசைவட்டில் உள்ள பாடல்தான்:


ஆறுமோ  ஆவல்
ஆறுமுகனை நேரில் ----  காணாமல்   (ஆறு)

ஏறுமயில் ஏறிக் குன்று
தோறும் நின்றாடியவன்
பேரும் புகழும் தெரிந்தும் அவன்
பேரழகைப் பருகாமல்                               (ஆறு)

ஞான குருபரன்
தீனர்க் கருள் குகன்
வானவரும் தொழும்
ஆனந்த வைபோகன்

காணக் கிடைக்குமோ
கூறுதற் கில்லாத
அற்புத தரிசனம்
கற்பனை செய்தால் மட்டும்                   (ஆறு )

இதை  அமரர் எம். எல். வசந்தகுமாரி கச்சேரிகளிலும் பாடியுள்ளார்.
கேட்டு மகிழவும்.

இயற்கை எல்லாம் அழகுதான்.  அதுவே அழகு.  அதுவே முருகு என்பார்
திரு வி.க.    "பேரழகைப் பருகாமல்"  என்ற வரியை  நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  இயற்கை அழகெல்லாம் காணுங்கள்.  முருகு என்றால் அழகு,    பின்  முருகு நிலைகொள்ளும் முருகனையும் காணுங்கள்.  அதுவே "ஆனந்தம்" என்பது.  அவன் ஆனந்த வைபோகன்.  மகிழ்வனைத்தையும் ஒருசேர ஆங்குக் காணலாம்.  நுகரலாம்.   அற்புத தெரிசனமே அது. வானின் அனைத்தும் அவ்வழகைத் தொழுகின்றது.  அதைக் கற்பனை செய்து கொண்டிருந்தால்மட்டும் காணுதற் கியலாது.  சென்று வணங்க வேண்டும்.

அழகைப் பெண்ணாக உருவகம் செய்கிறார் பாரதிதாசன். 

காலை இளம் பரிதியிலே அவளைக் கண்டேன்
கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன் அந்தச்
சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில்
தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்
மாலையிலே மேற்றிசையில் இலங்கு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்  ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டம்
தனிலந்த அழகென்பாள் கவிதை தந்தாள்

எங்கெங்கு காணினும் சக்தியடா -- தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா!

பின் சொந்தமாகப் பாடி  உவகை கொள்ளுங்கள்.

அம்மையும் ஆறுமுகனும் ஒன்றே,  எல்லாம் அழகுதான். தூணிலும்
துரும்பிலும் இருப்பது இறைமை ஆகும்.  சிவம் வேறு முருகன் வேறன்று என்பார் அருணகிரிநாதர்.

சனி, 20 அக்டோபர், 2018

சற்றிருப்பதும் வைத்திருப்பதும்.

இக்காலத்தவர் வேலையிலிருந்து விடுப்பு எடுத்தமகிழ்வுடன் பயணச்சீட்டையும் வாங்கிக்கொண்டு தாம் எங்கு சென்று ஓய்வெடுக்க முடியுமோ அங்கு பறந்து சென்றுவிடுகின்றனர். வானூர்திகள் இல்லாத பழங்காலத்தில் எங்காவது போகவேண்டுமென்றால் இவ்வளவு வசதிகள் இல்லை. யாரிடமும் பயணச்சீட்டுகள் வேண்டிப் பெறவேண்டியதுமில்லை; அவர்கள் இல்லையென்று சொல்லி அதனால் மனம் தொல்லைப் பட வேண்டியதும் இல்லை. இப்போது கிடைப்பவைபோல் தூக்குப் பெட்டிகளும் அப்போது இல்லை.  மாட்டு வண்டிகள் மட்டும் இருந்தன. அவற்றுள்ளும் பல சொந்தப் பயன்பாட்டுக்கே கிட்டின.

ஔவையார் போன்ற புலவர்கள் பாவம். பயணம் செல்கையில் தங்குவதற்கு இடமின்றி, கேட்டறிந்துகொண்டு, ஒரு பாழடைந்த வீட்டில் சென்று தங்கினார்.  இரவில் முதல் யாமம்,  இரண்டாம் யாமம், மூன்றாம் யாமம் என்று ஒவ்வொரு யாமத்துக்கும் பேய் வந்து தொல்லைகொடுக்க,  "எற்றோமற் றெற்றோமற் றெற்று" என்று முடியும் சில அழகிய வெண்பாக்களைக் கொண்டு பேயினிடத்தும் பேசினார்.   அந்த வெண்பாக்கள் இன்னும் நம்மிடை உள்ளன. இவை சுவையான வெண்பாக்கள். 

யாமம் என்ற சொல் யாத்தல் என்ற சொல்லினின்று வருகிறது.  யாத்தலாவது கட்டுதல்; பிணித்தல்; இறுக்கித் தொடர்புறுத்தல் ஆகும்.  இந்த யாமங்களில் உயிர்கள் உறக்கத்தில் இறுகப் பிணிக்கப்பட்டுக் கிடக்குமாதலால் , யாமம் என்ற சொல் அதைக் காட்டப் பிறப்பிக்கப்பட்டது.   யா (பகுதி) + ம்+ அம் =  யாமம் ஆனது.   அது பின்னர் அயல்திரிபுகளும் அடைந்தது.  உங்கள் வீட்டு ஆட்டுக்குட்டி அடுத்தவீட்டில் கட்டிக் கிடந்தால் -  அவ்வீட்டானும் கொடுக்க மறுத்தால் -  நீங்களும் காவல்துறையிற் புகார் கொடுத்தால் -  அவர்கள் எப்படி முடிவு செய்வார்கள்.  இருவருக்கும் பொதுவான ஒரு நடு இடத்தில் ஆட்டுக் குட்டியை விட்டு அது எங்கு போகிறது என்று பார்த்து அப்புறம் அந்த வீட்டில் ஒப்படைத்தார்களாம்!!  அதுவே சொல்லாக இருந்தால்....?

யாமம் என்பதில் ம் ஒற்று ஓர் உடம்படு மெய் என்றே சொல்லவேண்டும், இது எப்படித் தோன்றி   உள்வந்தது?   யாக்கும் + அம் =  யா(பகுதி மட்டும் எடுக்கப்பட்டது ) + ( உ ) ம் + அம் =  யா+ ம் + அம் = யாமம்.  மகர ஒற்று இப்படிச் சிந்தித்துத்தான் பெறப்பட்டது.   உம்மையில் (  உம் இடைச்சொல்லில்) பெற்றதே இந்த மகர உடம்படு மெய் ஆகும்.  அம் என்பது அமைப்பு என்பதன் தரவு,   அல்  அன் என்பனவும் அம் என்று திரியும். எல்லாம் தமிழில் உள்ளனவே.

 புகார் என்ற சொல்:  https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_31.html
அரண்மனைக்குள் புகுவார் அனுமதி உடையவர்.  அரசன் வீற்றிருக்கும்போது உள்ளுக்குப் போகலாம்.  புகார் -  அனுமதி கிட்டினன்றிப் போக முடியாதவர்கள்.  அவர்கள் கொடுக்கும் மனு புகார்மனு.  நாளடைவில் புகார் என்பதற்கு நடவடிக்கை கோரும் மனு என்ற பொருள் ஏற்பட்டுவிட்டது.

இவை நிற்க.

பயணம் போகும் போது  ஓர் இரவு அல்லது கொஞ்ச காலம் தங்கிச் செல்லுமிடமே சத்திரம்.  இது சற்று இரம் என்பதன் திரிபு.  சற்று :  சத்து. இரு என்பது அம் விகுதி பெற்று  இரம் ஆகிற்று.   சத்து இரம் --  சத்திரம்.

இவர்கள் பெரும்பாலும் ஒரு சிறு மூட்டை துணியுடன் சென்றனர்.  அவர்கள் வைத்திருந்தது அந்தத் துணிமூட்டைதான்.  அதையே தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கினர்.  அதுவே வைத்திரம் எனப்பட்டது.   வைத்து இருப்பது வைத்திரம்.  வைத்திரம் >  வத்திரம் > வஸ்திரம்.

இந்த வத்திரம் என்பது இப்போது இலத்தீன் மொழிமுதல் பல மொழிகளிலும் பரவி மருட்டுகிறது.    vest. invest. investiture. divest.  இன்னும் பல.  பெரும்பாலும் இந்தப் பயணிகள் சிறிய துணிமூட்டையே வைத்திருந்ததால் உலக மொழிகள் அடைந்த ஊதியம் பெரிதே.

உலகம் வாழ்க!