செவ்வாய், 19 செப்டம்பர், 2017

chAsvatham சாஸ்வதம் ( நிலையானது)



ஒரு பொருளைச் சுவைத்தல் என்பது அப்பொருளை நுகர்தல். நுகர்தலெனின் அதனைப் பயன்படுத்திக்கொள்ளுதல். முன் காலத்தில் சுவைத்தலென்பதற்குக் குறுகிய பொருண்மையே இருந்திருக்கக்கூடும்.  அது நாவாற் சுவைத்தலையே குறித்திருத்தல் கூடும்.  எனினும் இதுபோலும் பதங்கள் நாள் செல்லச்செல்ல பேசுவோனின் எண்ண விரிவால் பொதுப்பொருளை உணர்த்தத்தொடங்கிவிடும். இது எம்மொழிக்கும் பொதுவான இயல்பே.  இரசம் ( ராஸ ) என்ற மலாய்க்சொல், நாச்சுவையினைச் சிறப்பாகக் குறிப்பினும் நாளடைவில் மனவுணர்வினையும் குறிக்கத் தொடங்கிற்று. தமிழிலும் இரசம் என்பது உண்ணும் வேவித்த சாற்றைக் குறிப்பதோடு, நவரசம் என்கையில் தொண்சுவைகளையும் குறிக்கின்றது. ரசனை, ரசித்தல், ரசிகன், ரசிகை முதலிய சொற்களையும் அலசுவீர். அரைத்துச் சமைக்கப்பட்ட அரைசம் என்னும் ரசம் எங்கே,  ரசிகமணி எங்கே? பொருள்விரிவு வெகுதொலைவை எட்டிவிட்டது!  அரை(த்தல்)  >  அரைசல் > அரைசம் > அரசம் (  ஐகாரக்குறுக்கம் ) > ரசம் ( தலையிழப்பு ) > இரசம் (பிறதலை பெறுதல் ) .

இப்போது “சாஸ்வதம்” என்பதற்கு வருவோம். ஒருபொருளைச் சுவைப்போன் செத்தபின் அவனால் சுவைக்க இயலாவிடின், அது சாசுவதமில்லை.  அவனும் அழிவோன்.  பொருளும் அழிதக்கது.  நிலையற்றது. என்றுமில்லாதது.  சுவைபொருள் அழியினும் சாஸ்வதமில்லை;  சுவைப்போன் அழியினும் சாஸ்வதமில்லை. இது இருகூர் உடைய கத்தி.

நிலையானதெனின், இறப்பின்பின்னும் சுவைதக்கதாய் இருக்கவேண்டுமே!
சுவை :   ---   சா+ சுவை + தம் =  சா + சுவ + தம் = சாசுவதம்.
தம் அழிவின்பின்னும் தாம் சுவைக்கத் தக்க நிலையுடையது.
சுவை என்பது ஐகாரம் குறுகி சுவ என்றானது.

தம் என்பதைச் சொல் இறுதிநிலையாயும் “தம்” என்ற சொல்லின் சேர்க்கையாயும் கருதலாம்.  தாம் – தம்;  அல்லது து (விகுதி)+ அம்(விகுதி ).= தம்.  எங்ஙனமாயினும் பொருளில் வந்துற்ற மாறுபாடு ஒன்றுமில்லை.
இச்சொல் தமிழ் மூலத்தது.

குறிப்பு:ch
முன் காலம் என்பதைச் சேர்த்தெழுதினால் கணினி அதை “முங்காலம்”  என்று “தன்-திருத்தம்”  செய்துவிடுகிறது.  ஆகவே முன் காலம் என்று இடைவெளி தந்து எழுதவேண்டியுள்ளது. இவைபோல்வன பிறவும் இங்கனம் பாதிக்கப்படுகின்றன.  படிக்கும்போது கவனமாய்ப் படிக்க.  “தன்மாற்று” என்று எழுதின் பொருத்தம் என்று தோன்றுகிறது. இது கவனத்தில் உள்ளது. முன் காலம் – முற்காலம் எனில் மாற்றம் நிகழ்வதில்லை.

திங்கள், 18 செப்டம்பர், 2017

சயனம் சயனி அனந்த சயனம்




சயனம், சயனித்தல் என்பன நம் கவனத்தை ஈர்ப்பன.
சிலர் உட்கார்ந்துகொண்டே உறங்குதலும் உண்டு; நின்றுகொண்டே தூங்கி விழுந்துவிடுதலும் உண்டு. நல்லபடி தூங்க வேண்டுமானால் சாய்ந்துகொண்டு (அல்லது படுத்துக்கொண்டு ) தூங்குவதே சரி.
எனவே சாய் என்ற வினையினின்று “சயனித்தல்”   “சயனம்” என்பன அமைவுற்றது மிக்கப் பொருத்தமென்போம்.
பல சொற்களில் இப்போது நாம் கண்டுவருவதுபோல சாய் என்பதன் முன் நிலை நெடில் குறிலானது. சாய் -  சய் > சயனி.
சாவு+அ,ம்  -   சவம் என்று குறுகினாற்போலவே  இங்கும் குறுகியுள்ளது. இங்கனம் குறுகினவை பல. பண்டைத்தமிழிலிருந்து  உதாரணம் ஓன்று   சொல்லவேண்டின்,  காண் > கண் என்பதுகாண்க. எச்சவினை நிலையிலும் காண் எனற்பாலது கண்டு, கண்ட என்று குறுகவில்லை? இத்தகு குறுக்கங்கள் இயல்பு என அறிக.
இனி அனந்த சயனம் காண்போம்.
அனந்தம் :  அன் + அந்தம் .அந்தம் அல்லாதது.  அந்தம் – முடிவு. அல் > அன் திரிபு.
ஆகவே முடிவு அற்ற உறக்கம் என்பது பொருள்.

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ஏமாற்றும் மழை



வலியதோர் இடி முழக்கம்
வருமழை நெடிதென் றேனா
தொலியிலே குளிரு ணர்ந்தேன்!
துவண்டுபோய்ச் சாயந்து கொண்டேன்

சடசட கொஞ்ச நேரம்,
சலிப்பில்லை இன்னும் வேண்டும்.
கொடகொட என்றே ஊற்றி
குளிர்விக்க நிலத்தை என்ன,

கடுமழை கனவாய் ஆகி
கண்மூடு முன்னே ஓய
விடுவிடு எனைஏ மாற்றும்
வீண்படை  எனவெ ழுந்தேன்!